காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்!!(கட்டுரை)
தேர்தல் விஞ்ஞாபனங்களும் கொள்கைப் பிரகடனங்களும், வாக்குறுதிகளும், உரிய காலத்தில் நிறைவேற்றப்படுவதை, நமது யதார்த்த அரசியல் சூழலில் மிகக்குறைவாகவே காண்கின்றோம். ஏதோ ஒரு உற்சாகத்தில், உணர்ச்சி பிரவகித்து வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் அதன்பின்னர், உற்சாகம் அடங்கிவிட்டப் பிறகு – காரியம் முடிந்துவிட்டப் பிறகு, வாக்குறுதிகளை மறந்துவிடுவதும் சர்வ சாதாரணமாகவே நடந்துகொண்டிருக்கின்றது. முஸ்லிம், தமிழ் மற்றும் சிறு கட்சிகள் தொடங்கி, பெருந்தேசியக் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள் வரை, எல்லா மட்டங்களிலும் இந்தப் பண்பியல்பைக் காணமுடிகின்றது.
சொல்வதைச் சொல்லுதல், சொல்வதைச் செய்தல் என்றநிலை மாறி, வாய்க்கு வந்ததை வாய்மொழியாகச் சொல்லி, இயலுமானதை மட்டும் நிறைவேற்றி, நிலைமையை சமாளித்துவிடுகின்ற அல்லது எதுவுமே செய்யாமல் காரணம் கற்பித்துவிட்டுத் தப்பித்துவிடுகின்ற அரசியலாகவே, முஸ்லிம்களின் அரசியல், தன்னை முன்னிறுத்தியிருக்கின்றது.
பொதுமக்களாகிய நாம், சில விடயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அரசியல் என்பது மிகச் சிரமமான ஒரு பணியாகும். உறங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் நேரமில்லாமல், ஓடியோடி உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு வேலைப்பழுவான செயற்பாடு எனலாம். முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள், தமது மக்களுக்கு என்ன செய்தார்கள்? எந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஓடிக்கொண்டிருக்கின்றார்கள்? எதனைச் சாதித்திருக்கின்றார்கள்? என்ற கேள்விகளுக்கு, அவர்களிடமே விடையில்லை என்றாலும், அதிகமான அரசியல்வாதிகள், நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கண்கூடு. இது, பெருந்தேசியக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவ்வப்போது ஆட்சிபீடத்தில் இருப்போருக்கும் பொருந்தும்.
மறுபுறத்தில், அரசியல் தலைவர்களும் ஒரு நிதர்சனத்தைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது. இலங்கையின் முஸ்லிம் அரசியல் சூழலில், கணிசமான முஸ்லிம் கட்சித் தலைவர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ, அவர்களது திறமையை மட்டும் மூலதனமாகக் கொண்டு அரசியலில் முன்னேறவில்லை. அவர்களுடைய திறமைக்காகவோ சமூக சேவையைக் கருத்திற்கொண்டோ, முஸ்லிம் மக்கள் எல்லோரும், நீங்கள்தான் எங்களது தேசியத் தலைவராக இருக்கவேண்டும் என்று, எந்த முஸ்லிம் தலைமையையும் வலுக்கட்டாயமாகப் பதவியில் அமர்த்தவில்லை. செயல்வீரன் என முன்னுணர்ந்து, எந்த முஸ்லிமையும் எம்.பி.யாக ஆக்கினோமென, முஸ்லிம் மக்கள் கூறுவதும் கடினம்.
மாறாக, சில முஸ்லிம் அரசியல்வாதிகள், அதிர்ஷ்டத்தால் இப்பதவிக்கு வந்தார்கள், சிலர், சந்தர்ப்பச் சூழ்நிலையால் வந்தார்கள். சிலர், தந்திரமாக வந்தனர். சிலருக்கு, இந்தப் பதவியை மக்கள் பிச்சையாகப் போட்டிருக்கின்றார்கள். சிலர், மக்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, இல்லாத வாக்குறுதிகளை எல்லாம் வழங்கி, இந்தப் பதவியைப் பெற்றிருக்கின்றார்கள். சிலர், தலைவர்களுக்கு கூஜா தூக்கி அரசியல் பதவிகளைப் பெற்றிருக்கின்றார்கள். சிலரிடம் இருந்த பணம், அவர்களை அரசியல்வாதிகளாக ஆக்கியிருக்கின்றது.
விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே, சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கொண்டுள்ள அக்கறைக்காக, மக்களது சிபாரிசுடன் அரசியலுக்குள் வருகின்றார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய ஓரிருவர் மட்டுமே, தாம் அரசியலுக்கு வந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்து, வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட்டுக்கு கொண்டிருக்கின்றனர். மற்றவர்கள் எல்லாரும், பதவிக் கதிரைகளைச் சூடாக்கிக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் கூறவேண்டும்.
எது எப்படியிருப்பினும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அரசியல்தான் முழுநேரத் தொழில் என்றாகிவிட்டது. எனவே, ஒரு தொழில்பக்தி இருக்க வேண்டும். செய்யும் தொழிலை உயர்வாகச் செய்யவேண்டும் என்றுச் சொல்வார்கள். ஆனால், தாம் செய்கின்ற சேவைக்கு அதிகமான கௌரவத்தையும் புகழையும், வருமானத்தையும், அடையாளத்தையும் தந்துகொண்டிருக்கின்ற அரசியல் என்கின்ற தொழிலை, தமக்கு அளித்த மக்களுக்குச் சேவை செய்யவேண்டிய பொறுப்பை, நீங்கள் நிறைவேற்றியாக வேண்டும். வாக்குறுதிகள், விஞ்ஞாபனங்கள், மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்பட்ட சத்தியங்களை நிறைவேற்றுவது, உங்களது கடமை என்பதை, முஸ்லிம் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். இதில், எந்த விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமில்லை என்பதுடன், எந்த முஸ்லிம் அரசியல்வாதியும் இதற்கு விதிவிலக்கும் அல்லர்.
இலங்கைச் சோனக அரசியலில், வடக்கு, கிழக்குக்கு வெளியே பிறந்த எம்.எச்.மொஹமட், ஏ.சி.எஸ்.ஹமீட், பாக்கிர் மாக்கார், டி.பி.ஜாயா உள்ளிட்ட ஒரு சில அரசியல்வாதிகள், தனித்துவ முஸ்லிம் அடையாளக் கட்சிகளில் அரசியல் செய்யவில்லை என்றாலும், சொல்வதைச் செய்பவர்களாக, மக்கள் தொடர்பில் தம்மீதுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றியவர்களாக, சரித்திரக் குறிப்புக்களில் இடம்பிடித்திருக்கின்றார்கள்.
அதேபோன்று, கிழக்கில் பிறந்து – முஸ்லிம் அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, தனித்துவ அடையாள அரசியல் வழித்தடத்தில் இந்தச் சமூகத்தைப் பயணிக்கவைத்த எம்.எச்.எம்.அஷ்ரப், தனது சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது மட்டுமன்றி, சொல்லாததைக் கூட செய்து, மக்களையும் வெளியுலகையும் வியக்கவைத்தார். அவரது சேவைகளின் ஒரு துளியைக்கூட, இன்றுள்ள 21
எம்.பி.க்களாலும் செய்யமுடியவில்லை.
அதேபோல், அவர் விட்டுச்சென்ற தலைமைத்துவ இடைவெளியின் ஒரு அங்குலத்தைக் கூட, இன்றிருக்கின்ற முஸ்லிம் தலைமைகள் யாராலும், தனித்தோ கூட்டாகவோ நிரப்ப முடியவில்லை என்பதுதான், முஸ்லிம்களின் பட்டறிவாகும். இதுதான், மக்கள் அரசியல்வாதிகளுக்கும் சுயநல மாமூல் அரசியல்வாதிகளுக்கும், மக்கள் மனங்களில் வழங்கப்படுகின்ற அந்தஸ்துகளுக்கும் இடையிலான வித்தியாசமாகும்.
செய்ய முடியாதவற்றை செய்துமுடிக்கும் கலையே, அரசியல் என்று சொல்வார்கள். ஆனால், செய்யக் கூடியவற்றைக் கூட செய்து முடிக்காத நிலையே, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கொள்கைப் பிரகடனங்கள், தேர்தல்கால விஞ்ஞாபனங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை விட, தன்னை, தமது கட்சியை, தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் மிதமிஞ்சியதாக இருப்பதால், இந்நிலையே இந்தச் சமூகத்தின் அரசியல் ஒழுங்காக இன்று மாறியிருக்கின்றது.
அதற்காக, இன்றிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், எதுவுமே செய்யவில்லை என்று கூறமுடியாது. அவர்கள் தங்களால் இலகுவாக முடியுமானதை அல்லது வசதிப்பட்டதை செய்திருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை, உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உரிமை அரசியலையும் அபிவிருத்தி அரசியலையும் சரிக்கு சமமாக முன்னெடுப்பதற்காக, எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி இருக்கின்றார்கள் என்பதும், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எவ்வாறு கரிசனை காட்டியிருக்கின்றார்கள் என்பதுமே, இன்றுள்ள கேள்வி. முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமன்றி, ஆட்சி செய்பவர்களை நோக்கியும் இதனையொத்த கேள்விகள், மக்களால் முன்வைக்கப்படுகின்றன.
இரண்டாவது சிறுபான்மை இனமான இலங்கை முஸ்லிம்கள், தமிழர்களோடும் சிங்கள மக்களோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்த போதும், அவர்களுடைய இனத்துவ அடையாளம், கலாசாரம், சமயம், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் தனித்துவமானவை என்பதைக் கவனிக்க வேண்டும். முஸ்லிம்களின் சில விடயங்கள் – தமிழர்களின் பிரச்சினைகளோடு அல்லது நாட்டின் பொதுவான பிரச்சினைகளோடு ‘இடைவெட்டு’ போல ஒருமித்த தன்மை கொண்டவையாக காணப்படுகின்றன என்றாலும், பெரும்பாலான விவகாரங்களில், பிரத்தியேகமான அணுகுமுறை தேவைப்படுகின்றது.
முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகள், அவை தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுகாலவரை வழங்கிய வாக்குறுதிகள் என்னவென்றும் அவற்றில் எந்த விடயங்கள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும், மீள்நோக்குச் செய்வோமேயானால், வெற்றிடங்களே அதிகமாகத் தெரியும். அத்தி பூத்தாற்போல, ஓரிரு வாக்குறுதிகள் தவிர, வேறெதனையும் நிறைவேற்றியதாகச் சொல்லமுடியாத நிலைமைகளே காணப்படுகின்றன. முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதாக, டுபாய் போலவும் பஹ்ரேன் போலவும், பெரும் பெரும் அபிவிருத்திகளைச் செய்வதாக, நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுப்பதாக, முஸ்லிம்களுக்கு தனிஅலகை, கரையோர மாவட்டத்தைப் பெற்றுத் தருவதாக, ஒலுவில் கடலரிப்பை நிவர்த்தி செய்வதாக, வட்டமடு உள்ளிட்ட காணிப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவதாக, சிலை வைப்பின் ஊடாகவும் வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் தொல்லியல் என்ற பெயரிலான நில ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்துவதாக, வடக்கு மக்களை முழுமையாக மீள்குடியேற்றுவதாக, முஸ்லிம் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்த கதைகளாகியுள்ளன.
முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும், எம்.பி.க்களும், இதில் தவறிழைத்திருக்கின்றனர். பொதுத் தளத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மேலதிகமாகத் தீர்மானங்கள் எடுக்கும் போது கூறிய கற்பிதங்களும் குறிப்பாக பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பல தடவை யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எடுத்த போது, அல்லது கட்சி மாறுவதற்கான அறிவிப்பை விடுத்த போது, அதற்கு ஒரு காரணத்தைச் செய்தது. அந்தக் காரணங்கள், பெரும்பாலும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கக் கண்டோம்.
உதாரணமாக, கரையோர மாவட்டம், காணிப் பிரச்சினை, முஸ்லிம்களின் உரிமைகள் என்ற கற்பிதங்கள், அப்போது சொல்லப்பட்டன. ஆனால், அந்த விவகாரங்கள், இன்னும் தீர்க்கப்படாமல், வாக்குறுதிகள் காப்பாற்றப்படாமல், அந்தக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சற்றுக் குறைவாகவேனும் மற்றைய காங்கிரஸ்களும் கிட்டத்தட்ட இதே ஸ்டைலையே பின்பற்றியது என்றும் கூறலாம். எனவே, இந்த நிலைமைகள் மாறவேண்டும். காரியம் முடிந்த பின்னர் மக்களைக் கைவிடாமல், ஆற்றைக் கடக்கும் வரை மட்டுமே அண்ணன் – தம்பி உறவு என்றிருக்காமல், மக்களுடனான தொடர்பை, முஸ்லிம் அரசியல்வாதிகள் பேணிக்கொள்ள வேண்டும். வாக்குறுதிகளை வழங்குவதாயின், அதை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்ற வக்கில்லை என்றால், வாயைத் திறந்து வாக்குறுதிகளையே வழங்கக்கூடாது.
இதேவேளை, அரசாங்கமும் முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் நலன், கலாசாரம் குறித்து, ஜனாதிபதி கூறியுள்ள கருத்து, மிகவும் மகிழ்ச்சியானதும் வரவேற்கத்தக்கதுமாகும். ஆனால், ஆட்சியை நிறுவியபோது, ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய வாக்குறுதிகள், இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள், முஸ்லிம்களுக்கு கவலை தருவதாக இருக்கின்றன.
எனவே, அரசாங்கமோ முஸ்லிம் அரசியல்வாதிகளோ, முஸ்லிம்களுக்கு வாக்குறுதிகளை வழங்குவது முக்கியமல்ல. அவற்றை நிறைவேற்றுவதே முக்கியமான விடயமாகும்.
Average Rating