ராஜபக்ஷர்களைக் குழப்பும் கேள்வி!!(கட்டுரை)
அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலில், இந்தத் தேர்தலில் யார் போட்டியிடுவதென்று, கட்சிகள் பிடுங்குப்படத் தொடங்கி விட்டன.
ஐ.தே.க தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் ஆர்வத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர போன்றவர்கள், மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தமது கட்சியின் சார்பில்வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டுன்று, ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.
கடந்த மேதின நிகழ்வுகளில், ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என மூன்று கட்சிகளுமே, அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யாரென்பது பற்றிய விடயங்களுக்கே முன்னுரிமை அளித்திருந்தன. இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு, ஒன்றிணைந்த எதிரணியை உள்ளடக்கிய பொதுஜன பெரமுன, ஜனாதிபதித் தேர்தலில், யாரை வேட்பாளராக நிறுத்தப் போகிறதென்பது, பலமான கேள்வியாக இருக்கிறது.
மஹிந்த ராஜபக்ஷவினால் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது. எனவே, அவருக்கு விசுவாசமான ஒருவரை, அவருக்குக் கீழ் செயற்படக்கூடிய ஒருவரைத் தான், வேட்பாளராகக் களமிறக்கும்.
இன்னமும் அரசியலுக்கு வராத போதிலும், கோட்டாபய ராஜபக்ஷ, ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்படக் கூடுமென்ற ஊகங்கள், நீண்டகாலமாகவே நிலவி வருகின்றன.
கோட்டாபய ராஜபக்ஷவிடம், அரசியலுக்கு வருவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டால், வேண்டா வெறுப்பாகவே பதிலளிப்பார். தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லாதது போலவும் ஆனால், நாட்டுக்கு ஏதையாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வம் இருப்பதாகவும் கூறுவார்.
அதேவேளை, தனக்கு அரசியல் ஒன்றும் புதியதல்ல என்பதையும் அதில் இறங்கினால் சாதிப்பேன் என்பதையும், அவர் கூறத் தயங்கவில்லை. தமது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட அழைத்தால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாரென்றும் அதற்காக, அமெரிக்கக் குடியுரிமையை இழப்பதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும், அண்மையில் கூட அவர் கூறியிருக்கிறார்.
உலகம் முழுவதும் இப்போது, மரபுசார் அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கிறார்கள். மரபுசாரா அரசியல்வாதிகளைத் தான் விரும்புகிறார்கள் என்று, அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை, தன்னால் மட்டுமே நிரப்ப முடியுமென்பது போலவும் கூறிவருகிறார். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றாரா என்பது தான், முக்கியமான கேள்வி. இதுவரையில், மஹிந்த ராஜபக்ஷ அதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தவில்லை. காரணம், அவர் இப்போதும் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றவராகவே இருக்கிறார். இன்னொன்று, கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தும்போது, தனக்கான செல்வாக்கு உடைந்துபோகுமோ என்ற கவலையும், அவருக்கு இருக்கிறது.
போரை வெற்றிகொள்வதற்கு, கோட்டாபய ராஜபக்ஷ, முக்கியமான காரணியாக இருந்தவர். அவருக்கு, பாதுகாப்பு மட்டத்திலும் செல்வாக்கு உள்ளது. அதுபோலவே, சிங்களக் கடும் போக்காளர்கள் மத்தியிலும், அவருக்கு அதிகம் செல்வாக்கு இருக்கிறது.
இத்தகைய நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும் போது, பல்வேறு காரணிகளை கவனத்திற்கொள்ள வேண்டிய நிலையில், மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறார்.
வேட்பாளர் ஒருவரை நிறுத்தும்போது, அவருக்கான செல்வாக்கு மற்றும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளையும் கருத்திற்கொள்ள வேண்டியநிலை உள்ளது,
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருந்தாலும், சிறுபான்மையின மகக்களின் ஆதரவை, அவரால் பெற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியங்கள் மிகக்குறைவு.
தமிழர்களுக்கு எதிரான போரை முன்னெடுத்ததால், தமிழ் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவர். முஸ்லிம்களுக்கு எதிராக, சிங்கள பௌத்த இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகளினால், முஸ்லிம்கள் மத்தியிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, நல்ல பெயர் இல்லை.
ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மையின மக்களின் வாக்குகள் மிகமுக்கியம். அந்த வாக்குகள், எப்படி அளிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான், ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி – தோல்வி தீர்மானிக்கப்படும். சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவரக்கூடியவராக இல்லாமல் இருப்பது, கோட்டாபய ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் பலவீனமான நிலைமையே ஆகும். இதனால், கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்துவதை விட, வேறு தெரிவுகள் குறித்து, மஹிந்த ராஜபக்ஷ, அதிகம் யோசிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அதைவிட, கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்துவதில், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் உடன்பாடு இல்லையென்ற கருத்துகளும் உள்ளன.
ஜனாதிபதியாக அதிகாரம் பெற்றுவிட்டால், மஹிந்தவை விட உயரமான இடத்துக்கு கோட்டாபய ராஜபக்ஷ சென்றுவிடுவார். அது, மஹிந்த ராஜபக்ஷவினதும் அவரது பிள்ளைகளினதும் அரசியல் எதிர்காலத்துக்குச் சவாலை ஏற்படுத்தும். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்திலேயே, கோட்டாபய ராஜபக்ஷ வைத்தது தான் சட்டம் என்ற நிலை காணப்பட்டது. பல சமயங்களில் அவர், மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சைக் கேட்பவராகக் கூட இருக்கவில்லை என்ற பேச்சுகளும் அடிபட்டன.
அப்படியான நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், உயர் அதிகாரம் படைத்தவராக மாறிவிடுவார். அது மஹிந்த ராஜபக்ஷவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும். கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு, மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தயங்குவதற்கு, இது மாத்திரம் காரணங்களல்ல. மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் இடதுசாரிகள், கோட்டாபய ராஜபக்ஷவை தமது வேட்பாளராக ஏற்கத் தயாராக இல்லை.
கோட்டாபய ராஜபக்ஷவின் கடந்தகால செயற்பாடுகளை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். மஹிந்த ராஜபக்ஷவை, கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கத் தயாராக இருக்கும் அவர்களால், கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் உள்ளது. சிறுபான்மையின மக்களின் ஆதரவை, அவரால் பெறமுடியாது என்றும், அவர்கள் நம்புகிறார்கள்.
அதைவிட, ஒருவேளை அவர் ஜனாதிபதியாக வந்துவிட்டால், தமது கருத்துகளை செவிமடுக்க மாட்டார். இராணுவப் பாணியில் ஆட்சியை நடத்துவாரென்ற அச்சங்களும், இடதுசாரிகள் மத்தியில் உள்ளன.
எனினும், தேசிய சுதந்திர முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற சிங்கள கடும்போக்குவாத பங்காளிகளைப் பொறுத்தவரையில், கோட்டாபய ராஜபக்ஷவையே விரும்புகிறார்கள். ஆனாலும், மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில், அவரது முதல் தெரிவாக, கோட்டாபய ராஜபக்ஷ இருக்கிறாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.அவ்வாறாயின், யாரை நிறுத்தப் போகிறார் மஹிந்த ராஜபக்ஷ?
கோட்டாபய தவிர, அவருக்குள்ள தெரிவுகள் மூன்று தான். ஒன்று – பசில் ராஜபக்ஷ. இன்னொன்று – சமல் ராஜபக்ஷ. மூன்றாவது – நாமல் ராஜபக்ஷ.
பசில் ராஜபக்ஷ, அரசியல் நெழிவு சுழிவுகளை அறிந்தவர். கோட்டாபய ராஜபக்ஷவை விட, மஹிந்தவுக்கு நெருக்கமானவர். ஆனால், அவருக்கு உள்ள முக்கியமான பிரச்சினை, தற்போது எதிர்கொண்டிருக்கும் ஊழல், மோசடி வழக்குகளாகும். இவற்றிலிருந்து முதலில் அவர் வெளியே வரவேண்டும்.
பசில் ராஜபக்ஷவினால் தான், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைய நேர்ந்ததென்ற குற்றச்சாட்டு, பங்காளிக் கட்சிகள் மத்தியில் உள்ளது. மஹிந்தவின் தோல்விக்கு, தாமே காரணமென்று, பசில் ராஜபக்ஷ கூட ஒப்புக்கொண்டிருந்தார்.
அரச நிர்வாகத்தில் தலையீடுகளைச் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள், பசில் ராஜபக்ஷ மீது இருக்கின்றன. இப்படியான நிலையில், பங்காளிக் கட்சிகள் அவரை, ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் உள்ளது. அதேவேளை, நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கு உள்ள தடைகள் இரண்டாகும். கடந்த ஆட்சியில் செய்த முறைகேடுகள் மற்றும் குற்றங்கள் குறித்த வழக்குகள் – முதலாவது தடையாகவும் இரண்டாவது தடையாக, போதிய அரசியல் அனுபவம் இன்மையும் காணப்படுகின்றது.
தனக்குப் பின்னர், நாமல் ராஜபக்ஷவே இந்த நாட்டை ஆளவேண்டும் என்ற விருப்பத்தைக் கொண்டிருந்தாலும், இப்போது அவரை, ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்த, மஹிந்த ராஜபக்ஷ முற்படுவாரா என்பது சந்தேகம்தான்.
இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்குப் பொருத்தமானவராக, சமல் ராஜபக்சவே எஞ்சியிருக்கிறார். மஹிந்தவின் பேச்சைத் தட்டாத அண்ணன் அவர். அமரச் சொல்லும் இடத்தில் அமருவார், எழும்பச் சொன்னால் எழுந்து நிற்பார். அவரை பொம்மை ஜனாதிபதியாக வைத்து ஆட்சி செய்வது, மஹிந்தவுக்கு இலகுவானது. அதைவிட, மஹிந்த, பசில், கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய மூவருக்கும், சிறுபான்மையின மக்களிடம் உள்ள வெறுப்பு, இவர் மீது கிடையாது. எனவே, சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சிகளில், இடதுசாரிகள் தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
இதை, வாசுதேவ நாணயக்கார உறுதிப்படுத்தி இருக்கிறார். ராஜபக்ஷ குடும்பத்துக்குள்ளே தான், ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு இடம்பெறுமென்பது உறுதி. ஆனால், அவர் யார் என்பது தான் கேள்வி. எனினும், இந்த விவகாரத்தில் எடுக்கப்படும் முடிவுகளால், ராஜபக்ஷ குடும்பத்துக்குள் குழப்பங்கள் வரக்கூடும். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அவசரப்பட வேண்டாமென, பங்காளிக் கட்சிகளிடம் மஹிந்த ராஜபக்ஷ கோரியிருப்பதற்கான காரணம், இதுவாகத் தான் இருக்கக்கூடும்.
Average Rating