வட – தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை!!(கட்டுரை)
மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது.
அண்மையில், வட கொரியா மற்றும் தென் கொரியத் தலைவர்கள் சந்தித்தமை, வட, தென் கொரியா இணைவின் வாய்ப்புக்கு, புத்துயிர் அளித்துள்ளது. வட கொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் வந்திறங்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை, தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் வரவேற்றார். இரு நாடுகளதும் எல்லையிலுள்ள அமைதிக் கிராமமான பான்முனஜொமில் இடம்பெற்ற இரு தலைவர்களதும் சந்திப்பு, ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இரு நாடுகளும் ஒன்றிணைவதற்கான சாத்தியங்கள் குறித்து, இங்கு பேசப்பட்டன. இதில், தனது நல்லெண்ணச் சமிக்ஞையாக, தென்கொரிய நேரத்தினும் அரை மணிநேரம் பிந்தியதான வடகொரிய நேரத்தை, தென்கொரியாவின் நேரத்துடன் இசைவாக்கும் வகையில் தங்கள் நேரத்தை மாற்றுவதாக, வடகொரியா ஜனாதிபதி தெரிவித்தார். இந்நகர்வுகள் அனைத்தும், வடகொரியா தன்னிச்சையாக முன்னெடுத்த நகர்வுகளாகும். இவை ஒன்றுபட்ட கொரியக் குடாநாட்டு தீபகர்ப்பத்தை, மக்கள் வேண்டுவதன் அங்கிகாரமாகும்.
தென் கொரிய அழைப்பை ஏற்று, கடந்த பெப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வட கொரியா பங்கேற்றபோது, வட கொரிய வீரர்களுக்கு அமோக வரவேற்புக் கிடைத்தது. கொரியா, ஒரே நேரமண்டலத்துக்கு மாறியதை, அனைத்துக் கொரியர்களும் மகிழ்வுடனும் ஆரவாரத்துடனும் நெகிழ்ச்சியுடனும் ஏற்றமை, இணைவுக்கு அவர்கள் ஏங்குவதன் வெளிப்பாடாகும்.
இப்போது எழும் கேள்வி யாதெனில், இணைவுக்குத் தடையாக இருப்பது எது என்பதேயாகும். இரண்டாம் உலகப் போரில், ஜப்பானுக்கு எதிரான சண்டையில், சோவியத் படைகள் கொரியாவிலிருந்து ஜப்பானியப் படைகளை வெளியேற்றத் தொடங்கிய வேளை, தென் கொரியாவில் கம்யூனிஸ்ட்டின் செல்வாக்கு வலுவாயிருந்தது. இதனால் அச்சமடைந்த அமெரிக்கா, தனது படைகளை, கொரியாவில் இறக்கி, 38ஆவது அகலாங்கு வழியான கோட்டால், கொரியாவை இரண்டாகப் பிரித்தது. இது, கொரிய மக்களின் விருப்புடனன்றி, கொரியாவின் மீதான அமெரிக்க ஆதிக்க ஆவலால் நடந்தது.
வடக்கு – சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டுப் பகுதியாகவும் தெற்குக் கொரியா – அமெரிக்காவின் கட்டுப்பாட்டுப் பகுதியுமானது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, அமெரிக்க எடுபிடியான சிங்மன் றீயின் தலைமையில், தென் கொரியச் சீண்டலால், 1950இல் தொடங்கி 1953 வரை நீடித்த கொரிய யுத்தம், கொரியாவை நிரந்தரமாகப் பிரித்தது. அன்றிலிருந்து, கொரிய இணைப்புக்கு பெரிய தடையாக, அமெரிக்கா இருந்து வருகிறது.
இன்றும், தென் கொரியாவினது பாதுகாப்பின் பெயரால், அமெரிக்கத் தளங்கள் அங்குள்ளன. கொரியாவையும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலும், அமெரிக்க இருப்பை உறுதிசெய்ய இத்தளங்கள் பயன்படுகின்றன. கொரிய இணைப்பு தவிர்க்கவியலாது. அதனால், தமது தளங்களை, அங்கிருந்து அமெரிக்கா அகற்றும். எனவே, தென் கொரியாவில் நிலைகொண்டிருக்க அமெரிக்காவுக்குள்ள ஒரே சாட்டு ‘வட கொரிய அச்சுறுத்தல்’ மட்டுமேயாகும்.
எனவே, கொரிய இணைப்பை, அமெரிக்கா என்றும் ஏற்காது.
மறைக்கப்படும் வரலாற்று நிகழ்வொன்றை இங்கு கூறத் தகும். தென் கொரியப் பாதுகாப்பின் பெயரால், அங்கு குடிகொண்டுள்ள அமெரிக்கா தான், தென் கொரியாவின் மிகப்பெரிய மனிதப் படுகொலையை நிகழ்த்தியது. இக்கதையை ஊடகங்கள் சொல்வதில்லை.
இரண்டாம் உலகப் போரில், ஜப்பான் தோற்றுச் சரணடைந்ததும், அதன் கொலனியாக இருந்த கிழக்கு, தென் கிழக்காசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிறுவ, அமெரிக்கா முனைந்தது. அதற்குத் தடையாக, வியட்நாம், இந்தோனேசியா, மலாயா, கொரியா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து, கொலனிய எதிர்ப்புத் தேச விடுதலைப் போரில் முன்னேறி, சுதந்திர அரசுகளை நிறுவ முற்பட்டனர்.
அவற்றுக்கெதிராக, ஆங்கிலேய – அமெரிக்கக் கூட்டு ஆக்கிரமிப்புப் போர்கள் மூலம், கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப் பற்றாளர்களையும் படுகொலை செய்து, தமது பொம்மை ஆட்சிகளை நிறுவி, நவ-கொலனி ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.
கொரியாவின் வடக்கில், கம்யூனிஸ்டுகளும் நாட்டுப் பற்றாளர்களும் இணைந்து ஆயுதமேந்திப் போராடி, அப்பிராந்தியத்தை விடுதலை செய்திருந்தனர். தெற்கில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் இறங்கமுன், கொரியாவின் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து, தேச விடுதலை முன்னணியின் தலைவரான லியூ வூன் கியாங் என்பவர் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களோ, தென் கொரியாவைக் கைப்பற்றிக்கொண்டு, தேச விடுதலை முன்னணியை ஒடுக்கி, லியூ வூன்-ஹியுங்கையும் இதர தலைவர்களையும் படுகொலை செய்து, அமெரிக்க ஆதரவுப் பொம்மையான சிங்மன் றீயின் கீழ் சர்வாதிகார ஆட்சியை நிறுவினர்.
அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள், தென் கொரியாவில் நிறுவிய பொம்மையாட்சியின் சீண்டுதலால் மூண்ட போரில், சீனப் படைகளின் குறுக்கீடு, அமெரிக்க ஆதரவுடன் போரிட்ட பொம்மையாட்சிக்குத் தோல்வியான பின்பு, அமைதியை நிராகரித்த அமெரிக்கா, ஐ.நாவின் பெயரில், வட கொரியா மீது போர் தொடுத்தது.
வியட்நாமில் அமெரிக்காவின் போர் வலுக்கும் வரை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய மிகக் கொடிய போர் இதுவேயாகும். அதன் பிறகு, சமாதான ஒப்பந்தம் உருவாகி, கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வட கொரியாவும் அமெரிக்கக் கைக்கூலிகளின் தலைமையிலான தென்கொரியாவுமென, கொரியாவின் பிரிவினை தொடர்ந்தது.
மூன்றாண்டுகள் நீடித்த கொரியப் போரின் போது, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கட்டவிழ்த்த பயங்கரவாதமும் படுகொலைகளும், வட கொரியாவில் நடந்த பேரழிவுகளுடன் நிற்கவில்லை. தென் கொரியாவின் கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும், தொழிற்சங்க விவசாய இயக்கத்தினரையும், சிங்மன் றீ ஆட்சி, ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தது.
தென் கொரியத் தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில், 1 இலட்சத்துக்கும் 2 இலட்சத்துக்கும் இடைப்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்த ஆட்சி, அவர்களைப் பெருங்குழிகளில் புதைத்தது. போரில் வட கொரியப் படைகள் பின்வாங்கிய போது, கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்களுக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள், அங்கிருந்த அப்பாவி மக்களை விசாரணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்று குழிதோண்டிப் புதைத்தன.
சர்வதிகாரி சிங்மன் றீ தலைமையிலான அமெரிக்க பொம்மை ஆட்சி, கம்யூனிசத்தை ஆதரித்த 3 இலட்சம் விவசாயிகளை, அரசின் ‘தேசிய வழி காட்டுதல் கூட்டமைப்பில்’ கட்டாயமாகச் சேர்த்து, அவர்களுக்குக் கம்யூனிசத்துக்கு எதிரான கல்வி அளித்தது. போர் மூண்ட நிலையில், 30,000 பேரை சிங்மன் றீ சுட்டுக்கொன்றது.
வடக்கிலும் தெற்கிலும், இலட்சக் கணக்கான கொரிய மக்களைப் படுகொலை செய்த அமெரிக்க வெறியாட்டத்தைப் பற்றி, அலன் வின்னிங்டன் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர், அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ‘டெய்லி வோர்க்கர்’இல் அன்று எழுதியபோது, அது கம்யூனிஸ்டுகளின் அவதூற்றுப் பிரசாரம் என்று, அமெரிக்கா கூசாமல் பொய்கூறியது. மறுபுறம், வட கொரியாவும் சீனாவும், தான் அப்பாவிக் கொரிய மக்களைக் கொன்றதாக, இன்று வரை பொய்ப் பிரசாரத்தையே நடத்தி வருகிறது.
கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சியைத் தோற்றுவிக்கும் இக்கோரமான படுகொலைகளில், தமது உற்றார் உறவினர்களை இழந்தவர்கள், 1990 வரை தென் கொரியாவில் நீடித்த அமெரிக்க ஆதரவு பெற்ற ஃபாசிச சர்வாதிகார ஆட்சியாளர்களால், தொடர்ந்து துன்புறுத்தப்பட்டனர். அவர்களது குழந்தைகளும், ‘இடதுசாரிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டு, பள்ளிகளில் ஒதுக்கப்பட்டனர். அவர்களைப் பொலிஸ் தொடர்ந்துக் கண்காணித்ததோடு, விசாரணை என்ற பெயரில் அடிக்கடி கைது செய்து வதைத்தது. அதனால் அஞ்சிய அவர்கள், இப்படுகொலைகள் பற்றி வாய் திறக்கவில்லை.
2002ஆம் ஆண்டில், தென் கொரியாவில் வீசிய கடும் புயலுடன் பெய்த பெருமழையால், பல்லாயிரக் கணக்கானோரைக் கொன்று புதைத்த மிகப் பெரிய மரணக் குழி ஒன்றிலிருந்த எலும்புக் கூடுகள் வெளியே தெரியத்தொடங்கிய பின்னரே, அமெரிக்காவின் இனப் படுகொலை பற்றிய உண்மைகள் கசியலாயின.
இப்படுகொலைகள் பற்றி விசாரிக்க வேண்டுமென்று, தென் கொரிய மக்கள் தொடர்ந்தும் போராடியதால், தென்கொரிய அரசாங்கம், 2006ஆம் ஆண்டில், ‘அமைதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையம்’ ஒன்றை அமைத்து விசாரணையைத் தொடங்கியது. ஏராளமான மக்கள் அச்சத்தையும் தயக்கத்தையும் உதறித்தள்ளிவிட்டு, ஆணையத்திடம் சாட்சியளித்தனர். அதையடுத்து, புதைகுழிகளைத் தோண்ட, குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் வெளிவந்தன. தென் கொரியாவின் வடக்கில், வட கொரியாவை அண்டிய எல்லைப் பகுதியில் மட்டும், 160க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய மரணப் புதைகுழிகள் கண்டறியப்பட்டன.
டேஜொன் (Dajeon) சிறைச்சாலையின் முன்னாள் சிறைக் காவலர் லீ ஜுன் யங், ‘கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார்கள் என்ற ஒரே குற்றத்துக்காக, அப்பாவி மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரை, இச்சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்’ என்றும் ‘பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பல்லாயிரக் கணக்கில், தென் கொரிய இராணுவத்தால் மிருகத்தனமாகக் கொல்லப் பட்டனர்’ என்றும், இந்த ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளார். கிம் மான் சிக் என்ற முன்னாள் தென் கொரிய இராணுவ அதிகாரி, அரசியல் கைதிகளை வரிசையாக நிற்கவைத்து, அவர்களது கைகளைப் பின்புறமாக மடித்து, இரும்புக் கம்பியால் அனைவரையும் பிணைத்துச் சுட்டுக்கொன்ற கொடூரத்தை, தற்போது மனச்சாட்சி அருட்டியதால் சாட்சியம் கூறியிருக்கிறார்.
அமெரிக்க இராணுவமும் அதன் தலைமையின் கீழ் அமைந்த தென் கொரிய ஃபாசிச இராணுவமும், வட கொரிய இராணுவத்தினரைப் போல உடை அணிந்து, கவச வண்டிகளில் செங்கொடியுடன் கிராமம் கிராமமாகச் செல்வார்கள். செம் படையினர் வருவதாகக் கருதி வரவேற்க ஓடிவரும் மக்களை, அங்கேயே சுட்டுக்கொல்வார்கள் என்று, ஆணையத்தின் முன் பலர் சாட்சியம் அளித்தனர்.
தென் கொரியாவை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகளுக்கு, அன்று தளபதியாக இருந்தவர் டக்ளஸ் மக்ஆர்தர். கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப் பற்றாளர்களையும், உழைக்கும் மக்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றொழிக்கும் அவரது பயங்கரவாத உத்தி, போரில் சிக்கி, வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்கு அகதிகளாக வந்தவர்களையும் சுட்டுக் கொல்லும் அளவுக்குப் போனது.
“அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாகக் கொன்றொழிப்பதையே, அமெரிக்கா தனது கொள்கையாகக் கொண்டுள்ளது” என்று, 1950களின் தென் கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர், அன்றைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் டீன் ரஸ்க் எழுதியுள்ள கடிதம், இதனை நிரூபிக்கிறது. இது தவிர, அன்றைய அமெரிக்கப் படையினர் படம்பிடித்த போர்க்களக் காட்சிகள், கடந்த ஆண்டு சில அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாயின. கைகள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளுடை அணிவித்த அரசியல் கைதிகளை, பெருங் குழிகளின் அருகில் வரிசையாக நிறுத்திச் சுட்டுக் குழிகளில் வீசும் காட்சிகளும் அவற்றில் இருந்தன. மேலும், அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான டொனால்ட் நிக்கொலஸ், தனது நினைவுக் குறிப்பு நூலில், தென் கொரியாவின் சுவோன் பகுதியில், 1,800 பேர், அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்டதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கதையின் பின்னணியிலேயே, அமெரிக்காவின் தென் கொரியா மீதான அக்கறையை நோக்க வேண்டும். இரு கொரியத் தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து, வட கொரியாவுக்குப் பயணம் செய்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், கொரிய தீபகற்பத்தில் போரை நிரந்தரமாக முடித்துவைக்கும் வகையில், அதிகாரப்பூர்வ சமாதான ஒப்பந்தத்தை, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளுக்கு, சீனா தனது முழு ஆதரவை அளிக்குமென்றும் தெரிவித்தார். கொரியப் போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆகியும், இரு நாடுகளுக்கும் இடையிலான போரை, அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிரந்தரப் போர் நிறுத்த ஒப்பந்தம், இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட கொரியா, தனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டே, அணு ஆயுதங்களைக் கைவிடுவதில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்றும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இது ஒருவகையில் இன்றைய நிதர்சனத்தை காட்டுகிறது. வட கொரியாவின் அணுவாயுதங்கள் அதன் பாதுகாப்புக்கானவை. அவையே அவற்றின் பெரிய கவசங்கள். அணு ஆயுதக் களைவு என்றும் முன்னிபந்தனையாக முடியாது. ஏனெனில் ஏமாந்த கதைகள் பலவற்றை நாமறிவோம்.
Average Rating