முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: பருவகால விளையாட்டல்ல!!(கட்டுரை)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் முட்டல் மோதல்கள் உருவாகியிருக்கின்றன. அனைத்துத் தரப்பினரையும் இணைத்துக் கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்து சில வாரங்களுக்கு முன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டது. அத்தோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியது.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கூடிய வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், முள்ளிவாய்க்கால் நிலைவேந்தல் நிகழ்வினை வழக்கம்போல, மாகாண சபையே ஒழுங்குபடுத்தி நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த முடிவினை, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை நேரடியாக அழைத்து முதலமைச்சர் அறிவித்தார். அத்தோடு, நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தலின் போது, பொறுப்பொன்றை ஏற்றுக்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும், அதனை ஏற்றுக்கொள்ளாத பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அன்று மாலையே கட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றது.
கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வினை ஒழுங்குபடுத்தி நடத்தி வருகின்றது. ஆனாலும், அந்த நிகழ்வில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. கடந்த வருடம் மாகாண சபை ஒழுங்குபடுத்திய நினைவேந்தல் நிகழ்வு முற்பகல் நடைபெற்றது. அதனைப் புறக்கணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அன்று மதியம் இன்னொரு இடத்தில் அஞ்சலி நிகழ்வினை நடத்தியது. சிவில் சமூக அமைப்பொன்று, அன்று மாலை அஞ்சலி நிகழ்வினை நடத்தியது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கான ஏகபோகத்தினை எந்தவொரு தரப்பும் எடுத்துக் கொள்ள முடியாது என்கிற அடிப்படைகளை ஏற்றுக்கொண்டு இந்தப் பத்தி சில விடயங்களைப் பேச விளைகின்றது.
காலநிலை மாற்றங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு சமூகமும் தமக்கான பருவகால கொண்டாட்ட நிகழ்வுகளை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கோடையோ, குளிரோ குறித்த பருவகாலத்துக்குத் தகுந்த மாதிரியான விளையாட்டுக்களையும், நிகழ்வுகளையும் ஒழுங்குபடுத்தி நடத்துகின்றன. ஒவ்வொரு பருவகாலத்துக்குமான தயார்ப்படுத்தல்களையும் சில சமூகங்கள் பெரும் ஆரவாரத்தோடு முன்னெடுக்கும். அந்தச் சீசன் (பருவகாலம்) முடிந்ததும் வழக்கமான பணிகளுக்கு திரும்பிவிடுவார்கள். பூகோள மயமாக்கல் அனைத்துச் சமூகங்களையும் ஆட்கொண்டு விட்டாலும், பெரிய பாதிப்புக்கள் இன்றி பருவகால நிகழ்வுகள் இன்னமும் சில சமூகத்திடம் கோலொச்சிக் கொண்டிருக்கின்றன.
முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான தமிழ்த் தேசிய அரசியலும் பருவகாலத்துக்கு (சீசனுக்கு) தகுந்த மாதிரியாக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டு விட்டது. கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரை முன்னிறுத்திய ‘ஜெனீவா’ சீசனும், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை’ முன்னிறுத்திய சீசனும் முக்கியமானவை. புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தினத்தை முன்னிறுத்திய சீசன் ஒன்றும் வருடாந்தாம் திறக்கும்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவை என்றைக்குமே வீழ்ந்துவிடாமல் பேணுவதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், மாவீரர் தினமும், (ஜெனீவா அமர்வுகளும்) அவசியமானவை. நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்ற சமூகமாக இவற்றின் வழி, அடுத்த தலைமுறைக்கு போராட்டத்தின் பின்னாலுள்ள நியாயப்பாட்டையும் உறுதிப்பாட்டையும் நாம் கடத்த முடியும். எமக்காக மாண்டவர்களின் தியாகங்களை உயர்நிலையில் வைத்துப் பேண முடியும். அஞ்சலிக்க முடியும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உண்மையில் நடப்பது என்ன என்கிற கேள்வி மக்களை அலைக்கழிக்கின்றது.
தேர்தல் அரசியல் என்கிற ஒற்றைவழியில் பயணிக்க ஆரம்பித்துவிட்ட தமிழ்த் தேசிய அரசியல், இவ்வாறான நிகழ்வுகளிலிருந்து தமக்கான ஆதாயங்களை எவ்வாறு அடைவது என்றே சிந்திக்கின்றன. “கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை தோலுரிக்க வேண்டும். தன்மை புனிதராக்கி மக்களின் அபிமானத்தைப் பெற்றுவிட வேண்டும்” என்பதற்காக எந்தவிதமான பொறுப்புணர்வும் இன்றி கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்ய எத்தணிக்கின்றன. அவை, அம்பலப்படும் போது, சமாளிப்புகளைச் சொல்லி அந்தத் தரப்புக்கள் தப்பியோடுகின்றன.
2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான நாட்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முள்ளிவாய்க்காலிலேயே நடத்துவதற்கான கட்டத்திற்கு மாகாண சபை வந்தது. அதற்கு, பல்வேறு தரப்புக்களும் ஆரம்பத்தில் ஆதரவளித்தன. ஆனால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, மக்களின் அபிமானத்தை அடைவதற்கான ஒரு சந்தர்ப்பமாக கையாள முடியும் என்கிற சிந்தனை பல தரப்புக்களை வேறு முடிவுகளை எடுக்க வைத்தது. சீசன் கால நிகழ்வுக்கு ஒப்பான கட்டமொன்றை அடைவதற்கு அதுவே அடிப்படையாகவும் அமைந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது சில மணி நேரங்களில் முடிந்துபோகும் அஞ்சலி நிகழ்வு மாத்திரமல்ல. அது, 70 ஆண்டுகளுக்கும் மேலான தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயப்படுகளை இந்த உலகம் எவ்வாறெல்லாம் தட்டிக்கழித்து, பௌத்த சிங்கள மேலாதிக்கத்தைக் கொண்டு, தமிழ் மக்களுக்கான இழப்புகளை ஏற்படுத்திய களம். தமிழ்த் தேசிய அரசியலை தேர்தல் அரசியலைத் தாண்டியும் பெரும் நியாயப்படுகளோடு முன்னெடுப்பதற்கான தார்மீகங்களை முள்ளிவாய்க்காலின் ஒவ்வொரு தருணமும் உணர்த்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், அதனை உண்மையிலேயே உள்வாங்கி, அதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றோமா என்றால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபியொன்றை அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் சில ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்மானமொன்று நினைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்கிற விடயம் தொடர்பில் யாருக்கும் தெளிவில்லை. மத்திய அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்கிற பதிலை, முதலமைச்சரும், மாகாண சபையும் ஒப்புவிப்பதற்கான வாய்ப்புக்களே அதிகமுண்டு. எனினும், பொது நிதியமொன்றினூடு காணியைக் கொள்வனது செய்து நினைவுத் தூபியை அமைப்பதற்கு தடைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கான ஆலோசனைகள் கடந்த சில வருடங்களாக பல தரப்பினராலும் முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் நோக்கி வைக்கப்பட்டும் விட்டது. ஆனால், நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
வழக்கம்போல, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினக்குக்கு சில நாட்களே இருக்கின்ற நிலையில், நிலைவேந்தல் நிகழ்வுகளை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக மாகாண சபை கூடிய முடிவெடுத்திருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்குபடுத்துவதற்கும், நினைவுத்தூபி அமைப்பதற்குமாக சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், முன்னாள் போராளிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களை இணைந்து புதிய அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டது. அவ்வாறான அமைப்பினால், வடக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு வகையில் சமநிலையுடன் பேணி விடயங்களை எந்தவித விட்டுக்கொடுப்பும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் உதவும்.
சி.வி.விக்னேஸ்வரனுக்குப் பின்னரான வடக்கு மாகாண சபையினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது என்கிற சந்தேகத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்போது எழுப்பியிருக்கின்றது. அதன்பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஒழுங்குபடுத்தல் பொறுப்பை தம்மிடம் வழங்குமாறு கோரியிருக்கின்றது.
Average Rating