ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 28 Second

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது

அழகிய கூந்தலுக்கு
கண்டதும் கண்களில் படும் கூந்தலின் தோற்றத்தை, எந்தெந்த இயற்கைப் பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கிய வளர்ச்சிக்கு சிறப்பு சேர்க்கலாம் என்பதைத் தொடர்ந்து கடந்த மூன்று இதழ்களில் பார்த்தோம். எந்தெந்த ஆரோக்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம், முடி வளர்ச்சிக்கான தூண்டுதலை ஏற்படுத்தலாம் என்பதை தோழி வாசகர்களுக்கு தருகிறார் அழகுக் கலை நிபுணர் ஹேமலதா.

குழந்தை பிறந்ததுமே பிறந்த குழந்தையினை குளிப்பாட்டி சுத்தம் செய்து தான் உறவினர்களின் கைகளில் செவிலியர்கள் தருவார்கள். தாயின் வயிற்றில் பத்து மாதமாக இருந்ததன் விளைவாய், தாயின் உடலுக்குள் இருந்த அழுக்குகள் மற்றும் சின்னச் சின்ன ரத்த துணுக்குகள் கட்டாயம் நம் கண்களுக்குத் தெரியாமல் குழந்தையின் தலையில், மயிர்கால்களுக்கு நடுவில் படிந்திருக்கும். குழந்தையின் முடி வளர வளர உள்ளிருக்கும் அழுக்கும், முடிக்கால்களுக்கு இடையில் படிந்திருக்கும் கசடும் குழந்தையின் தலையில் பரவத் தொடங்கும். எனவே கண்டிப்பாக பிறந்த குழந்தைக்கு விரைவில் மொட்டை அடித்து முடியினை நீக்குதல் வேண்டும்.

அதனால்தான் இஸ்லாமிய சமூகத்தினர் குழந்தை பிறந்ததும், விரைவிலே மொட்டை அடிப்பார்கள். ஆனால் இந்துக்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் என நாட்கள் கடத்தி, காது குத்தும்போது மொட்டை அடிக்க நினைப்பார்கள். இது மிகவும் தவறான செயல். எவ்வளவு விரைவில் குழந்தைக்கு மொட்டை அடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது குழந்தையின் முடி வளர்ச்சிக்கான ஆரோக்கியம் சார்ந்தது. அதேபோல், பிறந்ததில் இருந்து, பத்து வயதுக்குள் வளரும் இளம் பருவத்தினருக்கு, மூன்று அல்லது நான்கு முறையாவது முடியினை முழுவதுமாக நீக்கிவிட்டு, மீண்டும் வளர்க்க வேண்டும். இதுவே குழந்தையின் உடலுக்குள் இருக்கும் அழுக்கை முடியில் பரவாமல் முழுவதுமாக நீக்கும் முறை.

பெரியவர்களுக்கும் தலையில் அரிப்பு, புண், பொடுகு போன்றவை இருந்தால் முடியோடு அதற்கான மருத்துவ நிவர்த்தி முறையினை மேற்கொள்ளக் கூடாது. முடியோடு செய்தால் விரைவில் தீர்வு கிடைக்காது. முடியினை முழுவதும் நீக்கி, மொட்டை அடித்துவிட்டு அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது சிறந்தது. சிலர் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு முடி கருகருவென நன்றாக நிறைய இருக்கும். அவர்களின் பரம்பரை காரணமாக முடி நன்றாக வளரும்.

சிலர் நன்றாக உடல் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் முடி மெல்லியதாக ஆரோக்கியமற்று இருக்கும். அவர்களுக்கு என்னதான் முயற்சி செய்தாலும் ஆரோக்கியமான கூந்தலாக சிறப்பாக மேம்படுத்த முடியுமே தவிர, விளம்பரங்களில் காட்டுவதைப் போல முடியினை மிக நீண்ட கூந்தலாக வளர வைப்பது என்பது ஏமாற்று வேலை. ஏனெனில் சிலரின் முடி வளர்ச்சி பரம்பரை தொடர்பானது.

முடி வளர்ச்சிக்கான உணவுகள்

* கறிவேப்பிலை
முடியின் வளர்ச்சிக்கு கறிவேப்பிலை மிகமிகச் சிறந்த உணவு. உணவில் சமைக்கும்போது சேர்க்கும் கறிவேப்பிலை உணவிற்கு வாசனையைத் தருவதைத் தாண்டி, ஆரோக்கியத்தை வலுவாக்குவது. இதன் முக்கியத்துவத்தை உணராத பலர் உணவில் இருக்கும் கறிவேப்பிலையினை தூக்கி எறிவார்கள். கறிவேப்பிலையினை அப்படியே உண்ண பிடிக்காதவர்கள், பொடி செய்து உணவில் கலந்து உண்ணலாம்.

காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு கொப்புக் கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, மென்று உண்டால் அது கருமை நிறமான கார் மேகக் கூந்தல் வளரக் கட்டாய கேரண்டி. கறிவேப்பிலையை தொக்கு செய்தோ அல்லது அதன் இலைகளை நிழலில் நன்றாக உலர்த்தி, பொடியாக்கி சாதத்துடன் இணைத்தோ அல்லது சட்னியாக்கியோ, ஏதோ ஒரு வடிவத்தில் உணவாக உட்செலுத்தினால் முடிகள் வெள்ளையாவதிலிருந்து தப்பிக்கலாம். கொத்தமல்லியையும் பச்சையாகவும், உணவிலும் சேர்த்து உண்டால் முடி வளர்ச்சிக்கு நல்லது.

* நெல்லிக்காய்
நெல்லிக்காய் முடிக்கு நல்ல வளர்ச்சியும், கருமை நிறமும், ஆரோக்கியமும் தரவல்லது. எனவே நெல்லிக்காயினை அரைத்து பானமாகவோ அல்லது திட உணவாகவோ, காய வைத்து பொடியாகவோ உணவாக எடுக்கலாம்.

* பனங்கிழங்கு
இது நார்ச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவு. பனம் பழம், பனங்கிழங்கு இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. பனங்கிழங்கை வேகவைத்து, சிறு சிறு துண்டாக்கி வெயிலில் காய வைத்து, பொடியாக்கி தினமும் காலை ஒரு ஸ்பூன் உண்டால் முடி வளர்ச்சியினைத் தூண்டும்.

* கீரை வகைகள்
எல்லாக் கீரை வகையும் ஆரோக்கியம் சார்ந்ததே. ஏதாவது ஒரு கீரையினை தினமும் பொரியல் செய்து உணவோடு சேர்த்தால், அதில் கிடைக்கப்பெறும் சத்து, முடி வளர்ச்சிக்கும் சிறப்பானதாக அமையும். ராஜ கீரை என அழைக்கப்படும் முருங்கைக்கீரையில் அனைத்து சத்தும் நிறைந்துள்ளது. இதை அடிக்கடி உணவாக எடுக்க வேண்டும். முருங்கை மரத்தில் இருந்து வரும், கீரை, காய், பூ, அதன் குச்சி எல்லாமே ஆரோக்கியம் சார்ந்தது. வாரத்தில் நான்கு நாளாவது கீரைகளைத் தவிர்க்காமல் உணவாக எடுத்தல் வேண்டும்.

* காய்கறிகள், பழங்கள்
இருப்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் சத்து நிறைந்த பழங்களை தினமும் உணவில் மாற்றி மாற்றி உட்கொள்ள வேண்டும்.மீனும் முடி வளர்ச்சிக்கு உகந்தது. முடி தொடர்பான சென்ற இதழ் கேள்விகளுக்கான பதில்கள்…

* முடி ஏன் கொட்டுகிறது?
முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது தானாகவே முடி கொட்ட துவங்கும். முடிக்குத் தேவை இரும்புச் சத்து மற்றும் கரோட்டின். இதில் குறைபாடு ஏற்படும்போது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் துவங்கும். முடி கொட்டுதல் நிகழும்போது, முடிக்குத் தேவையான சத்து நிறைந்த உணவு களை தேடி உண்ண வேண்டும்.

* யார் யாருக்கெல்லாம் முடி கொட்டுகிறது?
பிறந்த குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மாருக்கு குழந்தை பிறந்ததும் கட்டாயமாக முடி கொட்டும். பெண்கள் தாய்மைப் பேறை அடைந்தது முதல் இரும்புச் சத்து, புரதச் சத்துக்கள் நிறைந்த மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி குழந்தையின் வளர்ச்சிக்காக தினமும் எடுப்பார்கள். இது குழந்தையின் வளர்ச்சி மட்டுமின்றி, தாயின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே மேம்படுத்தி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு முடி நன்றாக, செழிப்பாகக் காணப்படும். ஆனால் குழந்தை பிறந்த பிறகு மருந்து மாத்திரைகளை உண்பதை தாய்மார்கள் நிறுத்தியதும், தானாகவே பெண்களுக்கு முடி கொட்டத் துவங்குகிறது.

அதேபோல் குழந்தை பால் குடியினை மறக்கும்போதும் பெண்களுக்கு நிறைய முடி கொட்டும். ஏனெனில் பால் கொடுக்கும்போது குழந்தைக்காக ஆரோக்கிய உணவுகளை தேடித்தேடி உண்ணும் தாய்மார்கள் பால் கொடுப்பதை நிறுத்தியதும், ஆரோக்கியத்தை கண்டுகொள்வதில்லை. செடிக்கு உரம் போட்டு, தண்ணீர் விடுவதை நிறுத்தி விட்டால் எப்படி வாடத் துவங்குமோ அதுமாதிரியான ஒரு நிகழ்வுதான் இது.

படிக்கின்ற வயதில் இருக்கும் இளம் பருவத்தினர் சிலர், படிப்பில் அதிக கவனம் செலுத்தும்போது சரியான சரிவிகித உணவை எடுப்பதில்லை. அவர்கள் முடியையும் சரியாகப் பராமரிப்பதில்லை. குறிப்பாக அரசுத் தேர்வுகளை எழுதப்போகும் மாணவர்களுக்கு படிப்புச் சுமை காரணமாக, சரியான தேக பராமரிப்பின்மை காரணமாக முடி கொட்டத் துவங்குகிறது. உடல் ஆரோக்கியத்திற்காக அல்லாமல் நோய் எதிர்ப்பிற்காக மருந்துகளை அதிகமாக எடுப்பவர்களுக்கும் முடி அதிகமாகக் கொட்டும். வயது முதிர்ச்சி காரணமாகவும் முடி தானாகக் கொட்டும்.

* ஷாம்புவால் ஏற்படும் பாதிப்பு?
பொடுகு இல்லாமல் பொடுகை கட்டுப்படுத்தும் ஆன்டி டான்ட்ரஃப் ஷாம்புகளைப் பயன்படுத்துவது, முடி கொட்டாமலே ஹேர் ஃபால் கன்ட்ரோல் ஷாம்பு களைப் பயன்படுத்துதல், தரமற்ற விலைக் குறைவான ஷாம்புக்களைப் பயன்படுத்துதல் போன்றவைகளால் முடி கொட்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும் அதில் உள்ள ரசாயன மாற்று முடி கொட்டுதலை ஏற்படுத்தும். ஷாம்புவை பயன்படுத்தும்போது, தலையினை அழுத்தித் தேய்த்து மசாஜ் கொடுத்து அழுக்கை வெளியேற்றாமல், நுரை வந்ததும் அலசி விடுவதாலும் முடி கொட்டத் துவங்கும்.

உடம்பில் உயிர் இருக்கும் வரை ரத்த ஓட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நமது உடலை அழுத்தி தேய்த்து, மசாஜ் கொடுப்பதன் மூலமே இறந்த செல்களை வெளியேற்றி புது செல்களை உயிர்ப்பூட்டி ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். நமது உடலில் செல்கள், புதிதாக உருவாகும் தன்மையும், பழைய செல்கள் இறக்கும் தன்மையும் கொண்டது. ரத்த ஓட்டம் இல்லாத இடங்களில் உள்ள இறந்த செல்களால் நமது தோலில் கருமை நிறம் தானாகத் தோன்றும். அதேபோல் தலைகளிலும் டெட் செல் எனப்படும் இறந்த செல்கள் இருக்கும்.

எனவே தலையில் அழுத்தம் கொடுப்பதன் மூலமே ரத்த ஓட்டம் சரியாகி புது செல் உருவாகும். அதுவே முடி வளர்ச்சிக்கான தூண்டுதல். நமது அம்மாக்கள் வீட்டில் தயாரித்து கொடுக்கும் இயற்கை மூலிகைகளான சீகைக்காயைப் பயன்படுத்தி நமது தலையில் அழுத்தம் கொடுத்து அழுக்கை வெளியேற்றுவது என்பது இயல்பாகவே ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதற்கான மசாஜாகத் தானாகவே மாறுகிறது. இயற்கையே ஆரோக்கியமான, கருமையான முடிவளர்ச்சிக்கு உகந்தது.

இனிவரும் கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…

* சிலருக்கு மட்டும் தலை முடியில் வாடை ஏன் வருகிறது? அதை எப்படி சரி செய்வது?
* முடியை எப்படி மினுமினுப்பாக வைத்துக்கொள்வது?
* தலை முடியை எப்படி முறையாக அலசுவது?
* வீட்டிலே தலைக்குத் தேவையான ஹென்னா பேக்கை எப்படித் தயார் செய்து பயன்படுத்துவது?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் வேடத்தில் நயன்தாரா!! (சினிமா செய்தி)
Next post பெண்களின் முத்தம் குறித்து சிறு அலசல்….!!(அவ்வப்போது கிளாமர்)