மனதை மயக்கும் சில்க் த்ரெட் ஜூவல்லரி !!(மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 4 Second

கடை கடையாக ஏறி இறங்கி, மேட்சிங் மேட்சிங்காகப் பார்த்து உடைகளையும், அதற்கேற்ற அணிகலன் களையும் அணியும் பெண்களா நீங்கள்..? பாரம்பரிய உடைகள் மட்டுமின்றி, நவநாகரீக ஆடைகளுக்கேற்ற அணிகலன்களையும் பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் தேடுபவரா நீங்கள்..? இதோ உங்களுக்காகவே இருக்கிறது இந்த ‘சில்க் த்ரெட்’
ஆபரணங்கள்…பிடித்த நிறத்தில் உடை எடுத்ததுமே பெண்கள் அடுத்ததாகத் தேடுவது தாங்கள் வாங்கிய உடையின் வண்ணத்திற்குப் பொருந்திப்போகும் அணிகலன்களைத்தான். எவ்வளவுதான் கடைகடையாக ஏறி கடைந்தெடுத்துத் தேடினாலும், சரியான பர்ஃபெக்ட் மேட்சிங் ஆபரணங்கள், உடைக்கேற்ற வண்ணத்தில் கிடைப்பது சற்றே கடினம்தான். அதற்காகவே கைகொடுக்கின்றன சில்க் த்ரெட் அணிகலன்கள்.

வளையல்கள், தோடு, ஜிமிக்கி, நெத்திச்சுட்டி, நெக்லெஸ், அங்கி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், கால்களில் அணியும் கொலுசுகள், நவநாகரிக ஹேங்கிங் மாடல் அணிகலன்கள் என எல்லாவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும் இந்த ஆபரணங்கள் கடைகளில் கிடைக்கின்றன. இந்தவகை ஆபரணங்கள் பற்றியும் அதன் தயாரிப்பு வழிமுறைகள் குறித்தும் தோழி வாசகர்களுக்காக, நம்மோடு பேசத் துவங்கினார் வனிதா பிரபு.

“சில்க் த்ரெட் அணிகலனின் வெற்றியே பளபளக்கும் பட்டு நூலில் சரியான வண்ணத்தில் பளிச்சென பர்ஃபெக்ட் மேட்சாக அணியப்போகும் உடைக்கு அப்படியே பொருந்திப் போவதுதான். நீங்கள் அணியும் உடை எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கேற்ற சரியான நிறத்தில் ஆபரணம் கிடைக்க வேண்டுமே என்ற ஐயமே இல்லாமல், உங்கள் உடையில் உள்ள நிறத்தில், அணிகலன்களை பட்டு நூல்களைக் கொண்டு அழகான வண்ணங்களில் கண்ணைக் கவரும் விதத்தில் தயார் செய்யப்பட்டு சந்தைகளில் கிடைக்கின்றன.

விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கி அணிவதும், பாதுகாப்பதும் மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களிலும், ஜன சந்தடியான‌ இடங்களிலும் அவ்வளவு எளிதானதல்ல. பெருநகரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும், திருமணம் போன்ற நிகழ்ச்சிக்குச் செல்பவர்களாக இருந்தாலும், விலை உயர்ந்த ஆபரணங்களை பெண்கள் அணிந்து செல்வது பாதுகாப்பில்லைதான். இந்தக் கவலைகளை எல்லாம் மறந்து ஈஸியான ஒரு ஆக்ஸசரிஸ் பொருளாக இந்த சில்க் த்ரெட் ஆபரணங்கள் நவீன மங்கையர்க்கு கை கொடுக்கின்றன.

நீங்கள் எடுக்கும் பட்டுச் சேலைகள் மற்ற உடைகளுக்கு பொருந்திப்போகும் அளவிற்கு இந்த ஆபரணங்களை நன்றாகவே மேட்சிங் பண்ணலாம். உங்கள் பட்டுச் சேலையின் உடல் வண்ணத்தில் இருந்து பார்டர் வண்ணம் வரை, நீங்கள் எடுக்கும் உடைக்கு நூறு சதவிகிதமுமே இவை பொருந்துகின்றன. இரண்டு கலர்களை மேட்ச் பண்ணி, டபுள் கலர் அணிகலன்கள் மற்றும் சிங்கிள் நகைகளில் டிரிபிள் கலரும் கிடைக்கும். திருமணம் என்றால் பட்டுச் சேலையும், பட்டு ப்ளவுஸ் மட்டுமல்ல, பட்டு நகைகளும் வரப்பிரசாதம்தானே?அணிகலன்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இவற்றில் இல்லை. மற்றபடி சில்க் த்ரெட் ஆபரணங்களை தண்ணீர் மட்டும் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சில்க் த்ரெட் ஆபரணங்களின் சூட்சுமம்

ரெடிமேட் பேஸ் மோல்ட்கள் சந்தைகளில் மொத்தமாக, கொள்முதல் விலைக்கே மலிவாகக் கிடைக்கும். பல வண்ணங்களில் பட்டு நூல்கள், தோடு செய்யத் தேவையான கம்மல், ஜிம்காஸ், ப்ளாஸ்டிக் மோல்ட் வளையல்கள், நம் கற்பனைக்கேற்ற பல வடிவ குந்தன்ஸ், கோல்டன் பீட்ஸ் அல்லது ஸ்டோன்ஸ், ஒட்டுவதற்கு ஃபெவிக்கால் இவைகளே அணிகலன் தயாரிப்பின் மூலப் பொருட்கள்.

உங்கள் உடைக்குத் தேவையான ஒரு செட் முழுவதையும், கழுத்தில் அணியும் செயினில் துவங்கி, தோடு, ஜிமிக்கி, ஆரம், நெக்லெஸ், பெண்டன்ட், டாலர், கம்மல், வளையல், பிரேஸ்லெட், டசல்ஸ் என எல்லாவற்றையும் விரும்பிய வடிவங்களில், வண்ணங்களில் செய்து முடிக்க 100 முதல் 150 ரூபாய் வரைதான் செலவு ஆகும். 2 முதல் 3 மணி நேரத்திற்குள் உடைக்குத் தேவையான முழு செட்டையும் தயாரித்து முடித்து விடலாம். இதை வெளியில் விற்பனைக்கென கொண்டு வரும்போது தயாரிப்பின் ரிச்னெஸ் பொருத்து 500, 1000, 1200, 1500 வரை கிடைக்கும்.ஒரு பொருளை நாமே தயாரிக்கும்போது, அதில் தரம் மற்றும் உறுதி இருக்கும். நீண்ட நாட்களுக்கும் உழைக்கும். நமது உடைக்குத் தேவையானதை நாமே டிசைன் செய்வதும் அணிவதும் ஒருவித மகிழ்ச்சிதானே.

– மகேஸ்வரி
படங்கள் : ஆர்.கோபால்

வனிதா பிரபு

ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஆசிரியர், சென்னை
“சின்ன வயதில் இருந்தே எனக்கு ஆர்ட் அண்ட் கிராஃப்ட் வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டு. கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்தேன். திருமணம் ஆன பிறகு வேறு வேலைக்குச் செல்வதைவிட எனக்குப் பிடித்த இந்த ஆர்ட் அண்ட் கிராஃப்ட் வேலைகளிலே கவனம் செலுத்தத் தொடங்கினேன். அது தொடர்பாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து, அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டேன். கற்றது மறக்காமல் இருப்பதற்கும், அதில் மேலும் நிறைய தேடல்களைப் பூர்த்தி செய்வதற்கும் நானே எனது வீட்டில் வகுப்புகளை எடுக்கத் தொடங்கினேன். இதோ 10 வருடங்களை இத்துறையில் கடந்து விட்டேன்.

தஞ்சாவூர் பெயின்டிங்கில் 150 விதமான டிசைன்கள் எனக்குத் தெரியும். கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்களுக்கு இதனையும் கற்றுக் கொடுக்கிறேன். இவை தவிர்த்து டிராயிங், பெயின்டிங், கிராஃப்ட் வேலைப்பாடுகள், மெஹந்தி வகுப்புகள், ஹோம் மேட் சாக்லெட் தயாரிப்பு, கோடைகாலத்திற்கான ஸ்குவாஷ் கிராஷ் வகுப்புகள் பலவிதமான மூலப்பொருட்களில் இருந்து தயாராகும் ஆபரணங்கள் தொடர்பான வகுப்புகளையும் எடுக்கிறேன். நான் தயாரித்த ஆபரணங்கள் மற்ற தயாரிப்புகளை முக்கியமான இடங்களில் காட்சிப்படுத்தி விற்பனையும் செய்கிறேன். இவை தவிர்த்து திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பகுதி நேர ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஆசிரியராகப்
பணியில் உள்ளேன்.

சில தனியார் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு பொறுப்பேற்று பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறேன். வீட்டில் வந்து கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும் பயிற்சி கொடுக்கிறேன்.ஒவ்வொரு கோடை விடுமுறையிலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து 10 நாட்கள் இருக்கும். இவை தவிர்த்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான தொடர் வகுப்புகளும் உண்டு.வருடத்தின் 365 நாளும் ஏதாவது ஒரு வேலையில் என்னை பிஸியாக வைத்துக் கொள்வேன். எனக்கு தெரிந்த விசயமும், என் திறமையும் நான்கு பேருக்கு போய்ச் சேர வேண்டும் என்பதே என் எண்ணம். என்னிடம் கற்றவர்கள் இதில் முன்னேறி அவர்களும் இதில் வருமானம் ஈட்ட வேண்டும்’’.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமா வேலை நிறுத்தத்துக்கு பிறகு நட்சத்திர படங்கள் மோதல்!! (சினிமா செய்தி)
Next post கர்ப்ப கால காச நோய்!!(மருத்துவம்)