தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!!(மகளிர் பக்கம்)
கடந்த இருபது ஆண்டுகளில் நாம் தூங்கச் செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க் கொண்டே
யிருக்கிறது. எட்டு மணிக்குள் இரவு உணவு உண்டு முடித்து, எட்டரைக்கு வெளிச்சம் அணைத்து, பேசிக் கொண்டே படுக்கையில் விழுந்தால் ஒன்பது மணிக்குள் உறங்கிப் போவோம். அது ஒரு காலம்!ஒன்பது மணி தூக்கம் என்பது பத்து மணியாகி, நள்ளிரவாகி, இப்பொழுது அதிகாலை வரை வந்து விட்டது. அதிகாலை மூன்று மணி, நாலு மணி வரை கூட விழித்திருக்கிறார்கள் இன்றைய மக்கள்.
இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒரு நாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது என்பதெல்லாம் தனிக்கதை. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக் கொண்டேயிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த இருபது ஆண்டுகளில் புதிது புதிதாக பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப் போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு.தவறான வாழ்வியல் முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய், பக்கவாத நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் அனை வருக்கும் தூக்கம் தள்ளிப் போவதற்கு காரணம் பலரும் ஸ்மார்ட்போனில், ஃபேஸ்புக்கில், வாட்ஸ் அப்பில் மூழ்கி உள்ளதுதான் காரணம். சமூக வலைத்தளங்கள் எனும் உலகத்திற்குச் சென்றுவிட்டால், அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகி விடுகிறார்கள்.முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து, பேசி விட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை ‘வாட்ஸ் அப்’ ஆகி ‘வாட்ஸ் அப்’ உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை. சொந்த வீட்டில் இருப்பவர்களுடன் கூட வீட்டில் இருந்துக் கொண்டே, சமூக வலைத்தளங்களின் வழியே தொடர்பு கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
தினமும் நள்ளிரவை தாண்டிய ‘சாட்டிங்கிற்கு’ பிறகு ‘குட் மார்னிங்’ சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குப் போகிறார்கள். இரவு உறங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து ‘ஃபேஸ்புக்கில்’ போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்..? ‘வாட்ஸ் அப்’பில் மெஸேஜ் வந்திருக்கிறதா..? என அடிக்கடி ‘செக்’ செய்து கொண்டிருப்பதை ‘கம்பல்சிவ் பிஹேவியர்’ எனச் சொல்லும் ஒரு வகையான மனநலப் பிரச்சனை என்றும், ‘கண்டிஷனல் இன்சோம்னியா’ என்னும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை, தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து ‘இன்டர்நெட்டை’ ஆன் செய்து, ‘வாட்ஸ் அப்’பில் ஏதேனும் மெஸேஜ் வந்திருக்கிறதா என பார்ப்பதுதான். இரவு தூக்கம் தடைபடுவதால், நமது உடலுக்குள் இருக்கும் மனசுழற்சி கடிகாரத்தின் வேலையும் தடைபடுகிறது.
பொதுவாக சூரிய உதயத்தின் போது எழுந்து உற்சாகமாக வேலை செய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்து விட்டு உறங்கச் செல்வதும் தான் இயற்கையோடு இணைந்த வாழ்வு.
நாம் சூரிய வெளிச்சத்தில் இயங்க காரணம் அறிவியலிலும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு இருட்டு நேரத்தில் தான் ‘மெலட் டோனின்’ முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராக சுரக்கும். நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போது தான் ‘மெட்டபாலிஸம்’ என்னும் வளர் சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும். நமது உடல் வளர்ச்சிக்கு தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ‘ஈஸ்ட்ரோஜன்’, ‘டெஸ்டோஸ்ரோன்’ போன்ற பிரத்யேக செக்ஸ் ஹார்மோன்கள் சமச்சீராக சுரக்கும். முறையற்ற இரவு தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்தி செய்யப்படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பொதுவாக இரவு ஒன்பது மணிக்குள் உறங்குவதும், காலை ஐந்து மணிக்குள் எழுவதும் தான் சிறந்தது. அதிக தூக்கம் எப்படி ஆபத்தோ, அது போல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரம் எழுந்து விடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி வரை தூக்கம் அவசியம். நாம் அவசியம் நன்றாக தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்து விட்டோம். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி.க்கு என நேரம் ஒதுக்குவதோடு, கடைசி காலம் வரை ஆரோக்கியத்துடன் இருக்கும் உடலுக்கும் சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
Average Rating