திட்டமிடாமலும் நிகழ்வதுதான் கர்ப்பம்!!(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 32 Second

கர்ப்பம் உறுதியானதும் என்னவெல்லாம் செய்யலாம், எவற்றை செய்யக்கூடாது என ஆயிரம் ஆலோசனைகளும், அறிவுரைகளும் தேடி வரும். அப்போது அவற்றில் பலவற்றை செய்வதோ, செய்யாமல் தவிர்ப்பதோ சாத்தியமாகாமலும் போகலாம்.எதையும் திட்டமிட்டு செய்கிற இந்த தலைமுறைப் பெண்கள், கர்ப்பத்தையும் திட்டமிடலாம்.கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.

குழந்தை வேண்டும் என முடிவு செய்த முதல் நொடியிலிருந்து நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தியாக வேண்டும். முதல் கட்டமாக தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது உங்கள் இதயத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். உங்களுக்கு விருப்பமும், வசதியும் இருந்தால் சைக்கிளிங், நீச்சல் போன்ற பயிற்சிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

கர்ப்பம் தரித்ததும் மசக்கையின் காரணமாக கண்டதையும் சாப்பிடத் தோன்றுவது இயற்கையே. ஆனால், இதுதான் நீங்கள் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் காலமும் என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்கள் உணவில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகமிருக்கும்படியானவற்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். நட்ஸ், பழங்கள், குறைந்த கலோரி கொண்ட பால் பொருட்களை எப்போதும் ஸ்டாக் வைத்திருங்கள். சிப்ஸ், சோடா, பேக்கரி உணவுகளைத் தற்காலிகமாகவாவது நிறுத்தி வையுங்கள்.

ஃபோலிக் அமிலத்தின் அவசியத்தை உங்கள் மருத்துவர் நிச்சயம் எடுத்துச் சொல்வார். ஃபோலிக் அமிலக் குறைபாடு இருந்தால் நீங்கள் கர்ப்பம் தரித்ததை நீங்களே உறுதி செய்வதற்குள்ளாகக்கூட அது கருவை பாதிக்கும், பிறவிக் கோளாறுகளுக்கு வழிவகுத்திருக்கும்.

எனவே, முன்கூட்டியே ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள காய்கறிகள், கீரைகள், பீன்ஸ் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது அவசியம். கர்ப்பம் தரிக்கிற திட்டத்திலிருக்கும் பெண்கள், மருத்துவரை சந்தித்து தினமும் எடுத்துக் கொள்ளும் வகையில் ஃபோலிக் அமிலம் மற்றும் மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளைக் கேட்டுப் பெறலாம்.

ரொம்பவும் ஒல்லியாக இருப்பதும், சராசரியைவிடவும் பருமனாக இருப்பதும் இரண்டுமே தவறுதான். பருமன் அதிகமுள்ள பெண்களுக்கு நீரிழிவுக்கான வாய்ப்புகள் அதிகம். உயர் ரத்த அழுத்தமும் சேர்ந்து கொள்ளலாம். கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் ஏற்படுத்துவதுடன், கர்ப்பம் தரித்த பிறகும் பிரசவ நேரத்தில் நீண்ட நேரம் போராடக் காரணமாகிவிடும்.

எனவே, குழந்தை வேண்டும் என முடிவு செய்ததுமே முதல் வேலையாக உங்கள் பி.எம்.ஐ-யை சரிபார்த்து அதற்கேற்ற சரியான எடையில் இருக்கிறீர்களா என பாருங்கள். இல்லாவிட்டால் சரியான எடைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.முடிந்தால் முன்கூட்டியே மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனைகள் பெறலாம்.

உதாரணத்துக்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய நடவடிக்கைகள், போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசிகள், ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளின் விவரங்கள், உடல் உபாதைகள் போன்றவற்றைப் பற்றிப் பேசி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கர்ப்பத்தின் போது தவிர்க்க வேண்டிய மருந்துகள் பற்றிய தெளிவு கிடைக்கும்.

உங்கள் குடும்பத்தில் பரம்பரையாகத் தொடரும் நோய்கள் இருந்தால் அது குறித்தும் நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே மருத்துவரைக் கலந்தாலோசிக்கலாம். உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் மரபணுக் கோளாறுகளுடன் பிறக்காமலிருக்க மருத்துவர் சில டெஸ்ட்டுகளைப் பரிந்துரைப்பார்.

கர்ப்ப காலத்தில் பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். கர்ப்பத்தின் சில மாதங்களில் பற்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ளக் கூடாது என்பார்கள்.

எனவே, கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பல் மருத்துவரைப் பார்த்து உங்கள் பற்களின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம். ஏதேனும் கோளாறுகள் இருந்தால் அவற்றுக்கான சிகிச்சைகளை முடித்துக்கொள்ளலாம். பற்களை சுத்தம் செய்வது, சொத்தைப் பற்களை அடைத்துக்கொள்வது போன்றவற்றை கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே மேற்கொள்வது பாதுகாப்பானது.

கர்ப்பத்துக்கான திட்டமிடலில் இருக்கும்போதே உங்கள் உணவு அடிமைத்தனங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு அதிக அளவில் காபி, டீ குடிப்பது, அதிக அளவில் ஃபாஸ்ட் ஃபுட் உண்பது போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளலாம் அல்லது நிறுத்திக் கொள்ளலாம். ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு இந்தப் பழக்கம் பெரியளவில் துணை புரியும்.

கர்ப்பம் தரித்த பிறகு உங்கள் உச்சி முதல் பாதம் வரை மாற்றங்களை சந்திக்கும். இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படலாம். எனவே, நீண்ட நாட்களாக செய்யாமல் நிறுத்தி வைத்திருந்த வேலைகளை எல்லாம் பட்டியல் போட்டு, நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக செய்து முடியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோனிக்காக மைதானத்தில் T-shirt கழட்டிய பெண் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!
Next post கடத்தப்பட்ட இந்திய இன்ஜினியர்களை மீட்க பழங்குடி மக்கள் உதவியுடன் ஆப்கான் படைகள் தேடுதல்!!(உலக செய்தி )