மொழி கற்றுத்தரும் ஓவியர்!!(மகளிர் பக்கம்)
தமிழ் மக்களுக்கு இந்தியையும், வட இந்தியர்களுக்கு தமிழையும் வெகு சுலபமாகவும், துரிதமாகவும் கற்றுக் கொடுக்கிறார் துளசி. அது மட்டுமில்லாமல் இயற்கை வாழ்வியல் சார்ந்த பயிற்சிகளையும், அக்குபங்சர் மருத்துவத்தையும் மேற்கொள்கிறார். தன்னுள் இயல்பாக எழுந்த ஓவிய ஆர்வத்தின் மூலம் தொடங்கிய துளசியின் பயணம் இன்றைக்கு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் சென்றிருக்கிறது. துளசியிடம் பேசினேன்…
‘‘கோபிச்செட்டிப்பாளையம்தான் என் சொந்த ஊர். ஓவியம் வரையுற ஆற்றல் என் இயல்பிலேயே இருந்தது. விதம் விதமா நிறைய ஓவியங்களை வரைஞ்சிருக்கேன். ஓவியத்துல பல வகைகள் இருக்கு. அதுல என்னோட தனித்தன்மையைக் காட்டுற முயற்சியா எழுத்தோவியங்கள் வரைய ஆரம்பிச்சேன். காந்தியுடைய வாழ்க்கை வரலாற்றை எழுத்தாலேயே ஓவியமாக வரைஞ்சேன். அதே போல அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றின் முக்கியமான பகுதிகளை எடுத்துக் கொண்டு அதையும் எழுத்தோவியமாக வரைஞ்சேன்.
காந்தி தேசத் தலைவர் என்பதால் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் எழுதி வரைய வேண்டும் என நினைத்தேன். இந்தி தெரிந்தவரைக் கொண்டு எழுதி வாங்கி அதை ஓவியமா வரைஞ்சேன். ஓவியத்தைப் பத்தின விளக்கத்தை சொல்ல இந்தி தெரிஞ்சுக்க வேண்டிய தேவை வந்தது. அதுக்காக இந்தி கத்துக்கிட்டேன். கோபிச்செட்டிப்பாளையத்தில் ஜெயபாரதம் கலாக்ஷேத்திரா என்கிற பள்ளியைத் தொடங்கி அதன் மூலம் இந்தி, ஓவியம், பாடல் ஆகியவற்றுக்கான பயிற்சிகளைக் கொடுத்தேன்.
அப்துல் கலாம் அவர்களின் விஷன் 2020 திட்டத்திற்கு ஈரோடு மாவட்டத்திலிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதற்கான சுற்றுப்பயணத்தின் இறுதி நாளன்று அப்துல்கலாமைச் சந்தித்தோம். என்னுடன் வந்திருந்த மற்றவர்கள் எல்லோரும் மாணவர்கள், நான் மட்டும் ஆசிரியை. ஆசிரியப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்கிற ஊக்கத்தை அவர் எனக்குக் கொடுத்தார். அவர் கோவை வந்திருந்த போது அவரைச் சந்தித்து எனது எழுத்தோவியத்தை அவருக்கு பரிசாகக் கொடுத்தேன்’’ என்கிறவரிடம் குறைவான காலத்தில் எப்படி மொழியைக் கற்றுக் கொடுக்கிறீர்கள்? என்றேன்.
‘‘கோவையில் Hin-d என்கிற பயிற்சி நிறுவனத்தை நடத்திக்கிட்டிருக்கேன். 30 மணி நேரத்தில் இந்தி பேச, எழுத, படிக்கக் கத்துக்கொடுக்கிறேன். 24 மணி நேரத்தில் சரளமாக இந்தியில் பேசுறதுக்கான பயிற்சி, 60 மணி நேரத்தில் தமிழ் எழுத படிக்க பேச பயிற்சி கொடுக்குறேன். ஒரு மொழியைப் பேசுறதுக்குரொம்பத் தூய்மையான இலக்கணம் தெரிய வேண்டிய அவசியமில்லை. மூன்று காலங்களுக்குமான சொற்களை தெரிஞ்சுக் கிட்டாலே போதுமானது. அந்த வகையில் எளிதாகவும், வேகமாகவும் மொழியைக் கத்துக்கிற பயிற்சியைக் கொடுக்கிறேன். மொழியைக் கற்றுக் கொள்வதற்கான தேவை உள்ளவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்வார்கள்’’ என்கிறார்.
இயற்கை வாழ்வியல் மற்றும் அக்குபங்சர் மருத்துவம் சார்ந்து இயங்க வந்தது குறித்துக் கூறுகிறார்…‘‘எனது 13 வயதிலிருந்து 26 வயது வரைக்கும் ஆஸ்துமா பிரச்னையில் அவதியுற்றேன். ஆஸ்துமா பிரச்னைன்னே கண்டறியாம சளிக்கான மாத்திரைகளைக் கொடுத்தாங்க. தொடர்ச்சியா அதை சாப்பிட்டதோட விளைவா எனது உள்ளுறுப்புகள் எல்லாம் பலவீனப்பட்டு போச்சு. பற்சொத்தை, கால் வலி, முடி உதிர்வு, தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுன்னு பல பிரச்னைகளுக்கு ஆளானேன். தோல் பிரச்னை, ஆஸ்துமா இந்த ரெண்டும் மாறி மாறி என்னை சிரமப்படுத்துச்சு. அப்பா ரப்பர் ஸ்டாம்பு தயாரிக்கிற கடை வெச்சிருக்கார். அங்க பயன்படுத்துற கெமிக்கல்களோட புழங்குனதாலதான் ஆஸ்துமா வந்திருக்குன்னு ஒரு மருத்துவர் கண்டறிஞ்சு சொன்னார்.
ஆனா அவர்னாலயே குணப்படுத்த முடியலை. அக்குபங்சர் மருத்துவம்தான் என்னை இந்தப் பிரச்னைகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துச்சு. சிகிச்சை போய்க்கிட்டிருக்கப்பவே நல்ல மாற்றத்தை உணர முடிஞ்சுது. 2012ம் ஆண்டுல நான் முழுமையாக குணமடைஞ்சேன். எனக்கு சிகிச்சையளித்த மருத்துவரிடமே அக்குபங்சர் மருத்துவ முறைகளையும் கத்துக்கிட்டேன். முதலுதவி செய்ய ஆரம்பிச்சு இன்னைக்கு முழுமையான சிகிச்சைகள் கொடுத்துக் கிட்டிருக்கேன். என் அம்மாவுக்கு மூட்டில் வீக்கம் இருந்தது. ஜவ்வு விலகியிருந்தது. நான் அக்குபங்சர் மூலம் அவங்களை சரிப்படுத்தினேன். அப்போதான் எனக்கு இந்த மருத்துவத்தின் மேல முழு நம்பிக்கை வந்தது.
இயற்கை வாழ்வியல் சார்ந்த விழிப்புணர்வு களையும் ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கு. ஏன்னா இன்றைக்கு நாம எதிர்கொள்ளுற உடல் நலப் பிரச்னைகளுக்கு நமது வாழ்வியல் மாற்றம் கண்டதுதான் பிரச்னை. பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகளின் தீங்குகள் பத்தியெல்லாம் அவசியம் பேசனும். அவைகளுக்கு மாற்றாகஇயற்கை வாழ்வியலை முன்னிறுத்தனும்’’ என்கிறார் துளசி.
Average Rating