பழமை மாறாத மழைவாழ் பழங்குடியினர் !!(மகளிர் பக்கம்)

Read Time:20 Minute, 8 Second

நகர வாழ்வில், நாகரிகத்தின் உச்சத்தில், வீட்டுக்குள் வந்து கடை விரிக்கும் விளம்பரங்கள் வழியே ஈர்க்கப்பட்டு, அழகு சாதனப் பொருட்கள், நவநாகரிக உடைகள் என, இருபாலரையும் ஈர்க்கும் உற்பத்தியாளர்கள்.. நுகர்வுக் கலாச்சாரத்துக்கான ஃபேஷன் ஷோக்களை ஒரு பக்கம் நடத்திக் கொண்டிருக்க… நம்மோடு, நம் மண்ணில், நமக்கு மிக அருகில் வசிக்கும் ஓர் இனமே…நாகரிக வாழ்க்கையின் எந்த எல்லையினையும் தொடாமல், அது பற்றிய சிந்தனையற்று, திரும்பிப் பார்க்க சற்றும் விரும்பாமல், கட்டுப்பாடு என்ற வட்டத்திற்குள் இன்றைய தலைமுறைவரை சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். எங்கே எனக் கேட்கத் தோன்றுகிறதா? இயற்கை எழில் கொஞ்சும் உதகை மாவட்டத்தில்தான் இந்த தவ வாழ்வை வாழ்கின்றனர் கோத்தர் பழங்குடியின மக்கள்.

புகை மூட்டமாகச் சூழும் பனி மூட்டத்திற்கு நடுவே, பூமி பச்சைக் கம்பளத்தை தன்மீது போர்த்திக்கொள்ள, சுற்றிலும் குளுமை சூழ்ந்து, மலைக் குன்றுகளும், மரங்களும், அத்துடன் சற்றே சாரலும் இணைய, கண்ணுக்கெட்டிய தூரம்வரை, வனாந்தர காடுகள் நிறைந்த உதகையில்… பச்சை வண்ணங்களுக்கு நடுவே வெள்ளை நிறக் கொக்குகள் கூட்டமாய் நின்றால் எத்தனை அழகாய் இருக்குமோ… அதைப்போன்றதொரு அழகில், பளீர் வெள்ளை நிற உடைகளில், கூட்டம் கூட்டமாய், ஆண்களும் பெண்களுமாய் நீலகிரி மாவட்ட மலைகளின் மேடுகளின்மேல், தங்கள் பழமையினை சற்றும் கைவிடாமல் ஆழ்த்தி நம்மை வரவேற்றுப் பேசினர்.

தேவராஜன்
இங்கு கோத்தர், தோடர், இருளர், குரும்பர், பனியர், தொதவர், காட்டுநாயக்கர் என 12 இனங்கள் உள்ளன. அவரவர் இனத்துக்கு என தனி தனி பாஷைகள், உணவுப் பழக்கம், வழிபாடு, திருமண சடங்குகள், திருவிழா, ஆட்டம் பாட்டம், தொழில், இறப்புக்கென சடங்குகள் எனத் தனித்தனியாக உள்ளன. நீலகிரி மலைப் பகுதிகளில் 7 ஊர்களில் கோத்தர்கள் இருக்கிறார்கள். எங்கள் பகுதி பெயர் குந்தா கோத்தகிரி. நாங்கள் கோவ் பழங்குடியினர். எங்களிடம் ஊருக்கு ஒரு நாட்டாமை உண்டு. 7 ஊர்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரு நாட்டாமையும் இருக்கிறார். நாட்டாமையோடு இணைந்து ஊர் பெரியவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்படுவோம்.

பூமி பிரச்சனை, அடிதடி பிரச்சனை, வீட்டுக்குள் நடக்கும் பிரச்சனை, சொத்துப் பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சனை எல்லாவற்றுக்கும் ஊர் நாட்டாமைதான் தீர்வு சொல்வார். எங்கள் இனத்திற்குள் நடக்கும் பிரச்சனைகளுக்கு காவல் நிலையம், நீதிமன்றங்களை அணுகுவதில்லை. பெரும்பாலும் நாங்கள் விவசாயம், கைவினைப் பொருட்கள், கால்நடை வளர்ப்பு, தச்சு, நகை வடிவமைப்பு என எல்லாத் தொழிலும் செய்வோம். இன்றைய தலைமுறை படித்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வேலைக்குச் சென்றாலும், எங்களின் இனக் கட்டுப்பாட்டுக்குள்ளே இருப்பார்கள். எங்களை மீறி அவர்கள் விருப்பத்திற்கு திருமணம் செய்ய முடியாது. திருமணமுறை எங்கள் 7 ஊர்களுக்குள்ளேயே நிகழும். எங்கள் இனத்தை மீறி திருமணம் செய்தால் அவர்களை நாங்கள் எங்கள் இனத்துடன் சேர்த்துக் கொள்வதில்லை. அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள
மாட்டோம்.

எங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. இயற்கை வழிபாடுதான். நீர், நெருப்பு, சூரியன் இவற்றை வணங்குவோம். எங்கள் வழிபாட்டு தெய்வங்கள் அய்னோர், அம்னோர், குனைனோர் என அழைக்கப்படுவர். வழிபாட்டில் பூஜை, புனஸ்காரம் இல்லை. தேங்காய் பழம், பத்தி, பூ போன்ற பூஜைப் பொருட்கள் வைத்து வணங்குவதும் இல்லை. வெறும் வார்த்தை வழிபாடுதான். கோயில் உண்டு. உருவம் இல்லை. கோயிலுக்குள் பெண்களுக்கு சுத்தமாக அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்வோம். ஆண்கள் கோயிலில் வழிபடும் நேரத்தில், பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வரமாட்டார்கள். வாசலில் அவர்கள் விளக்கு வைத்து வழிபடுவார்கள். கோயில் திருவிழாவின்போது ஆண் பெண் இருவருமே விரதம் இருப்போம்.

ஊர் கூடி நடத்திய திருமணத்தில் விரிசல் ஏற்பட்டு வாழ விருப்பம் இல்லை என்றால், மணமகன் மணமகள் வீட்டிலிருந்து பெற்ற ஒன்றேகால் ரூபாய் காணிக்கையினைத் திருப்பிக் கொடுத்து உங்கள் பெண்ணுடன் வாழ விருப்பமில்லை எனக் கூறி பெண்ணைப் பெற்றவர்களின் வீட்டில் விட்டுவிடலாம். இருவரில் யார் மறுமணம் செய்ய விரும்பினாலும் மீண்டும் திருமணம் செய்து வைப்போம். கணவன் மனைவி இருவரில் யார் இறந்தாலும், அவர்கள் விரும்பினால் மறுதிருமணம்செ ய்து வைக்கும் வழக்கம் உண்டு. இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை நாங்கள் கொண்டாடுவதில்லை. பரம்பரை பரம்பரையாக நாங்கள் கால்நடை வளர்ப்பதால், கால்நடைகளை பெரிதும் கொண்டாடுவோம். பெரிய பண்டிகை என்பது ஊர் கூடிக் கொண்டாடுவது. தேய்பிறையில்தான் எங்கள் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இருக்கும்.

லெட்சுமி
எனக்கு வயது 42. நாங்கள் எப்போதும் வெள்ளை வண்ண உடைதான் உடுத்துவோம். கலர் உடைகள், ஜாக்கெட், பாவாடை போன்றவைகளை அணிவதில்லை. வெள்ளை நிற துண்டை மார்பில் இருந்து கணுக்கால் வரை சுற்றிக் கட்டிக் கொள்வோம். மேலே ஒரு வெள்ளை துண்டால் சுற்றி போர்த்திக்கொள்வோம். அதற்குப் பெயர் துப்பட்டி. தலைமுடியை சுற்றிவளைத்து ஒரு கொண்டை போடுவோம். கொண்டையினை குத்தூசி கொண்டு முடிந்து வைப்போம். இப்போது உள்ள தலைமுறைப் பெண்கள் படிப்பு, வேலை தொடர்பாக வெளியில் போனால் கலர் உடையான சேலை, சுடிதார் அணிகிறார்கள். ஆனால் எங்கள் குடியிருப்புக்குள் வரும்போது வண்ண உடைகளைக் களைந்து வெள்ளை நிற உடைதான் அணிவார்கள். ஆண்களுக்கும் வெள்ளை உடைதான். அவர்களும் வெள்ளை வேட்டி அணிந்து, மேலே வெள்ளை துண்டால் போர்த்திக்கொள்வார்கள்.

அமராவதி
எனக்கு வயது 60. சோலைகளில் இருக்கும் மண்டு பூவை பறித்து வந்து துணியில் வைத்துக் கட்டி, அதை தலையில் போடும் கொண்டையில் வைத்துக் கட்டுவோம். இந்தப் பூவை தலையில் வைக்காமல் எங்கள் கணவருக்கு உணவு பறிமாற மாட்டோம். இது எங்கள் மூதாதையர் பழக்கம். அதை, தொடர்ந்து நாங்கள் செய்கிறோம். அதன் காரணம் எனக்குத் தெரியாது. காட்டு வேலை, அருகில் உள்ள டீ எஸ்டேட் வேலைகளுக்கு பெண்களும் செல்கிறோம். ஒரு நாளைக்கு எங்களுக்கு 150 கூலி.

மல்லிகா
எனக்கு வயது 49, பிறந்து வளர்ந்து திருமணம் நடந்தது எல்லாம் எனக்கு இங்குதான். எங்களுக்கு குழந்தைப் பேறு எல்லாம் கணவன் வீட்டில்தான். குழந்தைப்பேறு அடைந்தால் அம்மா வீட்டில் இருக்கக் கூடாது. ஊரில் பெண்களுக்கென்றே பிரத்யேகமாக ஒரு தனி வீடு உள்ளது. அதில் குழந்தை பெற்ற பெண், குழந்தையுடன் மூன்று நாட்கள் தனியாக இருக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து, கணவன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்.

குழந்தைக்கு பெயர் வைக்கும்போது மாமன் வந்து முறை செய்வார். மாமன் முறைக்கு கொண்டு வரும் குழந்தைக்கான சீர்கள் விலாக்கு, பால்மணி எனப்படும். 40 நாட்கள் கழித்துத்தான் அம்மா வீடு செல்வோம். குழந்தை பிறந்த வீட்டில் உணவு, சாப்பாடு, தண்ணீர் யாரும் எடுக்க மாட்டார்கள். அந்த வீட்டுக்கு போகவும் மாட்டார்கள். எங்களில் வரதட்சனை கேட்டு வாங்கும் பழக்கம் இல்லை. பையன் வீட்டில்தான் போடுவார்கள். 7 ஊருக்குள் அதுவும் மாமன் வீட்டில் மட்டும்தான் கல்யாணம் செய்வோம். எங்கள் இனத்துக்குள் விரும்புவோர், முறை இருந்தால் மட்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

பெண் குழந்தைகள் பருவம் அடைவதற்கு முன்பாகவே பத்து பதினோறு வயதில் மாமன் வீடு பெண்ணிற்கு முறை செய்வார்கள். அப்போது அந்த 3 நாட்கள் பெண்களுக்கான தனி வீட்டில் இருக்க வேண்டும். 10 வயது 11 வயது பெண் பிள்ளைகள் ஒரே வயதில் இருந்தால் ஒன்றாக அங்கே தங்க வைக்கப்பட்டு அவரவர் மாமன் வீட்டில் வந்து முறை செய்வார்கள். அப்போது பெண் குழந்தைகளை திருமணப் பெண்போல் அலங்காரம் செய்து வைப்பர். மாமன் மகன் வந்து பெண்ணிற்கு முறை செய்வான். இரண்டு இரவு, மூன்று பகல் என மூன்று நாள் தனி வீட்டில் அப்பெண் தங்கி, அங்கிருந்து நேராக மாமன் வீட்டுக்குச் சென்று அங்கு தங்கிவிட்டு பிறகுதான் அம்மா வீட்டிற்குச் செல்ல வேண்டும்.

இந்த முறையினை கட்டாயம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் அவர்களின் 10 வயதில் பெண் பருவம் அடைவதற்கு முன்பே செய்ய வேண்டும். செய்யவில்லை என்றால் அதை எங்கள் இனத்தில் மிகவும் கேவலமாக நினைப்பார்கள். முறையினை செய்யாமல் பெண் பருவம் அடைந்துவிட்டால், மூன்றுமாதங்கள் அப்பெண், ஊரில் உள்ள தனி வீட்டுக்குள் இருக்க வேண்டும். மூன்று மாதங்களும், வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து பெண்ணைத் தொடாமல் தனி தட்டில் உணவு கொடுப்பார்கள். ஒவ்வொரு மாதவிடாயின்போது இந்த தனி வீட்டில்தான் மூன்று நாட்கள் பெண்கள் இருக்க வேண்டும்.

முன்பெல்லாம் பெண்ணிற்கு அவர்களின் 12, 13 வயதிலே திருமணம் செய்து வைப்போம். படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும், வசதியாக எங்கு வாழ்ந்தாலும், எங்களுடைய கோத்தர் மக்கள் இருக்கும் இந்த 7 ஊருக்குள்தான் திருமணம் முடிப்போம். எங்களுக்கு தாலி அணியும் பழக்கம் இல்லை. திருமணத்தின் அடையாளமாக இஸ்லாமியர்கள் மாதிரி கருக மணிதான் போடுவோம்.

மாதி
எனக்கு வயது 72. எங்கள் பிள்ளைகள் படிக்க பிக்கட்டி, மஞ்சூர் போன்ற இடங்களில் பள்ளி உள்ளது. பெண்பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால் கட்டுப்பாடுகள் எங்களுக்கு நிறைய உண்டு. அவர்களைத் தனியாக எங்கும் அனுப்ப மாட்டோம். இப்போதுள்ள பெண்கள் படிக்க, வேலைக்கு என வெளியூருகளுக்குச் செல்வதால், தனியாகச் செல்கின்றனர். ஆனால் ஊருக்குள் வந்துவிட்டால் எங்கள் கட்டுப்பாட்டில்தான் எப்போதும் இருப்பார்கள். எங்களை மீறி எதுவும் செய்ய மாட்டார்கள்.

சூரியா
நான் எம்.பி.எம்.பட்டதாரி. கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. கல்லூரியில் பிஸினஸ் மேனேஜ்மென்ட் முடித்து, தனியார் நிறுவனம் ஒன்றில் ஊட்டியில் பணியில் இருந்தேன். எஃப்.எம் ஒன்றில் ஆர்.ஜே.வாகவும் வேலை செய்தேன். எனக்குத் திருமணம் முடிந்ததும் வேலைக்குச் செல்லவில்லை. நாங்கள் வெளியூர்களில் சென்று படித்தாலும் எங்கள் இனத்துக்குள்தான் திருமணம். மற்றபடி எங்கள் வீடுகளில் டி.வி. மொபைல், கேஸ், நெட் வொர்க் என எல்லா நவீன வசதிகளும் வீடுகளில் உண்டு. நாங்கள் எப்போதும் எங்கள் ஊர் கட்டுப்பாடுகளை மீறுவதில்லை. மீறவும் நினைப்பதில்லை.

– மகேஸ்வரி
படங்கள்: கவின் மலர்

கோத்தர் என்போர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியினர். நீலகிரியைச் சுற்றியுள்ள அடர்ந்த காடுகளை ஒட்டி, கோக்கால், குந்தா கோத்தகிரி, திருச்சிக்கடி, கோத்தகிரி, கொல்லிமலை குந்தா, கூடலூர் கோக்கால், கீழ் கோத்தகிரி என ஏழு இடங்களில் பரவி உள்ளனர். கோத்தர் பேசும் மொழி கோ மொழி ஆகும். வரிவடிவம் இல்லாத தென் திராவிட மொழிப்பிரிவைச் சேர்ந்தது. இவர்கள் மொழியில் தங்கள் வாழ்விடத்தை கோகால் என்றும், வீட்டை பய் என்றும், தெருக்களை கேரி என்றும் அழைக்கின்றனர். இவர்கள் இறந்தவர்களை எரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இவர்கள் எதற்காகவும் பிற மக்களைத் தேடிச் செல்வதில்லை. தங்களுக்குத் தேவையான பொருட்களை தாங்களே செய்து கொள்கிறார்கள்.

வெள்ளி தான் இம்மக்களின் அதிகபட்ச பயன்பாட்டு உலோகம். பெண்கள் கைகளில் இரண்டு வளையல் மற்றும் முழங்கைக்கு மேல் இரண்டு வளையல்களை அணிகின்றனர். மாதவிடாய் நேரங்களிலும், குழந்தைப் பேறுக்கு பின்பும் மூன்று நாட்கள் தேல்வாழ்’ என்ற ஊர் பொது வீட்டில் வசிக்கின்றனர். அப்போது ஆண்களைப் பார்க்கக் கூடாது. இவர்களின் குடியிருப்புகள் கீக்கேரு, மேக்கேரு, அமிர்கேரு, நடுக்கேரு, ஆக்கேரு, ஈக்கேரு என ஆறு பிரிவுகள் உண்டு. இதில் கீக்கேருவும், மேக்கேருவும் மாமன், மச்சான் வகையறா. மற்றவை சகோதர உட்பிரிவுகள். குடியிருப்புக்கு நடுவில் வாய்க்கால் ஒன்று ஓடும். அந்த வாய்க்காலுக்கு மேற்கே இருக்கும் வீடுகள் அனைத்தும் மேக்கேரு பிரிவினருடையவை. கிழக்கே இருப்பவை, கீக்கேரு பிரிவினருடையவை.

கோத்தர் மக்களின் நடனங்கள் பழமையானவை. நிறைய வாய்மொழிப்பாடல்கள் இவர்களுக்கு உள்ளது. `கொல்’ தபக், பர், குணர், தப்பட்டை, கொட்டு வடிவிலான தோல்கருவிகள், கொம்பு, ஜால்ரா போன்ற இசைக் கருவிகளை பயன்படுத்துகின்றனர். இவர்களின் திருவிழாக் காலங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்துகின்றனர். இசையின் தன்மைக்கு ஏற்ப நடனத்தினால் இவர்களின் வேகம் கூடும். இடையிடையே குரல் எழுப்பி ஓஹோ.. ஓஹோ.. என்ற சத்தங்களுடன், ஒருகாலை முன் வைத்து ஆடுவது அல்லது இரண்டு காலை மாற்றி மாற்றி வைத்து ஆடுவது, சுற்றிச் சுற்றி ஆடுவது, திரும்பிச் சென்று ஆடுவது என நடனத்தை அமர்க்களப்படுத்துகின்றனர்.

சேலமரம்
குந்தா கோத்தகிரியில், கோத்தர் இன மக்களின் வழிபாட்டுத்தல‌ம் அருகே மிகப் பெரிய பிரமாண்டமான மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தை கோத்தர்கள் தங்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள். பார்ப்பதற்கே மிகப் பிரம்மாண்டமாகக் காட்சி தரும் இம்மரத்தினை, நாம் குந்தாவைவிட்டு வெகு தொலைவில், பல கிலோ மீட்டர்கள் தாண்டிச் சென்றாலும், கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது, அம்மரம் தூரத்துக் காட்சியாய், அவ்வூரின் அடையாளமாய், நம் கண்களுக்குப் புலப்படுகிறது.

இம்மரம் குறித்து கேள்விப்பட்ட ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இம்மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகள் எனக் கணித்திருக்கிறார். கோத்தர்களால் இம்மரம் ‘சேலமரம்’ எனப்பட்டாளும், இதன் தாவரவியல் பெயர் ‘பைக்கஸ்’. தமிழில் இது அரச மரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த அதிசய மரத்தினைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வதாக கோத்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் இதுவரை பார்த்திடாத சில வித்தியாசமான கடல்வாழ் உயிரினங்கள்!!(வீடியோ)
Next post நீங்கள் இதுவரை பார்த்திடாத இப்பூமியில் வாழும் மிக பெறிய உயிரினங்கள் !!(வீடியோ)