கலங்கடிக்கும் ஹைப்பர்டென்ஷன்!!(மருத்துவம்)
கர்ப்ப காலத்தில் மருத்துவரிடம் செல்லும்போதெல்லாம் கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படுவது வழக்கம். எல்லோருக்கும் எல்லா வயதிலும் ரத்த அழுத்தம் சரியாக இருக்க வேண்டும் என்பது ஆரோக்கியத்தின் அவசியம். அதிலும் கர்ப்பத்தின்போது ரத்த அழுத்தம் மிகச் சரியாக இருக்கவேண்டியது இன்னும் அவசியம்.
எது ரத்த அழுத்தம்?
ரத்தக்குழாய்களில் ஆற்றுநீர் போல ரத்தமானது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ரத்த ஓட்டத்தின் வேகம் ரத்தக் குழாய்ச்சுவர்களை மோதும்போது ஏற்படுகிற அழுத்தத்தையே ரத்த அழுத்தம்(Blood pressure) என்கிறோம்.பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்று இருந்தால் அது நார்மல். இதில் 120 என்பதை சிஸ்டாலிக் அழுத்தம்(Systolic pressure) என்கிறோம்.இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம் இது. 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம்(Diastolic pressure). இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, உடலில் இருந்து ரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும்போது ஏற்படுகிற ரத்த அழுத்தம் இது.
சரி… எது உயர் ரத்த அழுத்தம்?
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 120/80 மி.மீ.மெர்க்குரி என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். ஆனால், இது எல்லோருக்குமே சொல்லிவைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் உடலமைப்பு, எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல சிஸ்டாலிக், டயஸ்டாலிக் அழுத்தங்களும் சிறிது வித்தியாசப்படலாம்.
ஆகவேதான் உலக சுகாதார நிறுவனம் ஒருவருக்கு 100/70 முதல் 139/89 வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90-க்கு மேல் அதிகரித்தால் அதையே உயர் ரத்த அழுத்தம்(Hypertension) என்கிறது.பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் 120/80 அல்லது அதைவிட குறைவாகவே இருக்கும். ஒரு கர்ப்பிணிக்கு ஆறு மணி நேர இடைவெளியில் தொடர்ந்து ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும்போது இரண்டு, மூன்று முறை 140/90 அல்லது அதற்குமேல் இருந்தால் அந்த கர்ப்பிணிக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். சிலருக்கு டயஸ்டாலிக் அழுத்தம் மட்டுமே தொடர்ந்து 90 அல்லது அதற்கு மேல் இருக்கும். அப்போதும் உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகவே கொள்ள வேண்டும்.
கர்ப்ப கால ஹைப்பர்டென்ஷன் கர்ப்பிணிக்கு கர்ப்ப காலத்தில் 20 வாரங்களுக்குப் பிறகு ரத்த அழுத்தம் முதன்முறையாக அதிகரித்தால், அதை கர்ப்பம் தூண்டிய உயர் ரத்த அழுத்தம்(Pregnancy Induced Hypertension-PIH) அல்லது கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம்(Gestational Hypertension) என்கிறோம். பொதுவாக, இது குழந்தை பிறந்த பிறகு மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். இவர்களுக்கு சிறுநீரில் வெண்புரதம் வெளியேறாது என்பது ஒரு முக்கியமான தடயம்.பெண்களில் 100-ல் 5 பேருக்குக் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதை நாட்பட்ட உயர் ரத்த அழுத்தம்(Chronic Hypertension) என்கிறோம். 100 கர்ப்பிணிகளில் சுமார் 8 பேருக்கு கர்ப்ப காலத்தில் மட்டும் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இரண்டுமே ஆபத்தானவை. உயர் ரத்த அழுத்தம் எவ்வழியில் வந்தாலும் அது கர்ப்பிணியையும் குழந்தையையும் பல வழிகளில் பாதிக்கும். ஆகவே, கர்ப்ப காலம் முழுவதும் ரத்த அழுத்தத்தை மிகச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
பாதிப்புகள் என்னென்ன?
கர்ப்பிணியின் ரத்த அழுத்தம் சரியாக இருந்தால்தான் குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜனும் உணவுச்சத்துகளும் நச்சுக்கொடி மூலம் சரியாகச் செல்லும். ரத்த அழுத்தம் அதிகரித்தால் நச்சுக்கொடி இயல்பாக இருக்காது. அப்போது குழந்தைக்குப் போதிய உணவும் ஆக்ஸிஜனும் கிடைக்காது. இதனால் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.பிறக்கும்போதே குழந்தை குறைவான எடையுடன் பிறக்கும்.கர்ப்பிணிக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதைச் சரியாக கவனிக்கவில்லை என்றால், குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புண்டு. இவர்களுக்கு வழக்கமான 37 வாரங்களுக்கு முன்பே பிரசவம் ஆகிவிடும். இப்படி பிறந்த குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு மற்றும் செரிப்ரல் பால்ஸி(Cerebral palsy) போன்ற மூளை சார்ந்த வளர்ச்சிக் குறைபாடுகளும் காணப்படும்.
என்ன சிகிச்சை?
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகள் சாப்பிட்டு, அதை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் குழந்தைக்கும் சரி, கர்ப்பிணிக்கும் சரி, எவ்வித பாதிப்பும் ஏற்படாது.மருத்துவரை முதன்முறையாகப் பார்க்கும்போதே கர்ப்பிணி எடுத்துக்கொள்ளும் மாத்திரை பாதுகாப்பானதா என்று மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பாதுகாப்பானது என்றால் அதைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், மாத்திரையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பிரசவ முன் வலிப்பு
சில கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் கட்டுப்படாமலேயே இருக்கும். அப்போது அவர்கள் சிறுநீரில் வெண்புரதம்(Albumin) வெளியேறும். இந்தப் பிரச்னைக்கு பிரசவ முன்வலிப்பு(Pre-eclampsia) என்று பெயர். இது கர்ப்ப காலத்தில் 20 வாரங்களுக்குப் பிறகு தொடங்கி, பிரசவத்துக்குப் பிறகு 6 வாரங்கள் வரை தொடர்கிறது.
அறிகுறிகள் என்ன?
கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, கீழ்க்காணும் அறிகுறிகளும் சேர்ந்திருந்தால் அவருக்குப் பிரசவ முன்வலிப்புப் பிரச்னை இருக்கிறது என கொள்ளலாம்.
* சிறுநீரில் வெண்புரதம் வெளிப்படுவது.
* விடாத தலைவலி.
* தொடர்ச்சியான வாந்தி.
* பார்வை மங்குவது; இரண்டுஇரண்டாகத் தெரிவது.
* உடல் எடை மிக வேகமாக அதிகரிப்பது.
* கைகால்கள் மற்றும் முகம் வீங்குவது.
* மேல் வயிற்றில் வலி.
* மூச்சுத் திணறல்.
யாருக்கு வாய்ப்பு அதிகம்?
முதன்முறையாக கர்ப்பம் தரித்தவர்கள், நீண்ட காலம் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், முந்தைய கர்ப்பத்தில் இந்தப் பிரச்னையைச்சந்தித்தவர்கள், 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரக நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள், பனிக்குடநீர் அதிகம் உள்ளவர்கள், பாஸ்போ லிப்பிட் கொழுப்பில் பிரச்னை உள்ளவர்கள், பொய் கர்ப்பம், இரட்டை குழந்தைகளைச் சுமப்பவர்கள், பரம்பரையில் இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஆகியோருக்கு பிரசவ முன்வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
கட்டுப்படுத்துவது எப்படி?
இந்தக் கர்ப்பிணிகளுக்கு முழுமையான ஓய்வு அவசியம். காலை ஒரு மணி நேரம், மதியம் 2 மணி நேரம், இரவு முழுவதும் படுக்கையில் ஒரு பக்கமாகப் படுத்து ஓய்வெடுக்க வேண்டும். ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால், உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முகம், கைகால் வீக்கத்துக்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியமும் ஏற்படலாம்.
தொடர் கண்காணிப்பு அவசியம்!
இவர்களுக்கு தினமும் 2 முறை ரத்த அழுத்தம் பரிசோதிப்பது அவசியம். தினமும் சிறுநீரில் வெண்புரதம் பரிசோதிப்பதும், வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் டாப்ளர் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதும், குழந்தையின் இதயத் துடிப்பைக் கண்காணிப்பதும் அவசியம். ரத்தம் உறைதல் உள்ளிட்ட முழுமையான ரத்தப் பரிசோதனைகள், கல்லீரல் செயல்பாடு பரிசோதனைகள்(LFT) மற்றும் கண் பரிசோதனைகள் தேவைப்படும்.வாரந்தோறும் உடல் எடையைக் கண்காணிப்பதும் உண்டு. இவற்றின் மூலம் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா, ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா, அதன் ஆரோக்கியத்துக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா, கர்ப்பிணியின் ஆரோக்கியம் நீடிக்கிறதா என்பதைக் கவனித்து, குழந்தைக்கும் கர்ப்பிணிக்கும் ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.
பிரசவ வலிப்பு
சமயங்களில் இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடந்து, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம் சிலருக்குக் கட்டுப்படாது.அப்போது கர்ப்பிணிக்கு வலிப்பு வந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.இதற்குப் பிரசவ வலிப்பு(Eclampsia) என்று பெயர். இதனால் கர்ப்பிணி, குழந்தை இருவரின் உயிருக்கும் ஆபத்து நெருங்குகிறது. இந்த ஆபத்துகளைத் தவிர்க்க, பிரசவ தேதிக்கு முன்னரே, பிரசவத்தைத் தூண்டி குழந்தையைப் பிரசவித்து விடுவார்கள். குறைப் பிரசவத்தைவிட பிரசவ வலிப்பினால் ஏற்படும் பாதிப்புகள் அபாயகரமானவை என்பதால், இந்த முடிவை மருத்துவர்கள் எடுக்கிறார்கள்.
Average Rating