கர்ப்ப கால தொற்றுநோய்களை தவிர்க்கலாமே!!(மருத்துவம்)
கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் சில தொற்றுநோய்கள் நஞ்சுக்கொடி வழியாக கருவில் இருக்கும்போதோ, பிறக்கும்போதோ குழந்தையையும் பாதிக்கலாம். இதனால், சாதாரண காய்ச்சலிலிருந்து குறைப்பிரசவம், பிறப்பு கோளாறு, பிரசவ மரணம் போன்ற பல ஆபத்துகள் ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் பற்றியும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்…
வைரஸ், பாக்டீரியாக்கள் மனிதனுக்குப் பல்வேறு தொற்றுநோய்களை வரவழைப்பவை. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் உள்ள Antibodies இந்த தொற்றுகளை எதிர்த்து போராடும் வல்லமை கொண்டிருப்பினும், ஆன்ட்டிபாடிகளின் உற்பத்தி குறைவாக உள்ள நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவதால் எளிதில் நோய்வாய்ப்படக் கூடும்.
இயல்பாகவே கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெண்களுக்கு தொற்றுநோய்களும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது.
ஹெபடைடிஸ் பி
கர்ப்ப காலத்தில் கல்லீரலை பாதிக்கும் தொற்றுநோய்தான் ஹெபடைடிஸ் பி. இந்த தொற்றினால் தாய்க்கு ஏற்படும் மஞ்சள் காமாலை கருவிலுள்ள குழந்தைக்கும் பரவுகிறது. இறப்பு, எடை குறைவான குழந்தை மற்றும் குறைப்பிரசவத்துக்கு ஹெபடைடிஸ் பி தொற்று வழி வகுக்கிறது. எனவே, கருவுறுவதற்கு முன்பே ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.
ஹெபடைடிஸ் சி
ஹெபடைடிஸ் சி தொற்று இருப்பதை குமட்டல், வாந்தி போன்ற அறிகுறி மூலம் கண்டறியலாம். கர்ப்ப காலத்தில் வாந்தி, குமட்டல் சாதாரணமானது என்ற குழப்பத்தால் இந்த பாதிப்பை கண்டறிவது கடினமாக இருக்கிறது. எனவே, கருவுறுவதற்கு முன்பே தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.
சிறுநீர்ப்பாதை தொற்றுநோய்கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி வரும் தொற்று நோய் இது. சருமம், பிறப்புறுப்பு மற்றும் மலக்குடலில் இருந்து பாக்டீரியாக்கள், வடிகுழாய் வழியாக உடலுக்குள் நுழைகின்றன. இந்த பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பையில் தங்கி, பெருகி பின்னர் சிறுநீரகத்துக்குள் நுழைந்து சிறுநீரகத் தொற்றையும் ஏற்படுத்திவிடும்.
சின்னம்மை
தாய், சேய் இருவருக்குமே பல்வேறு சிக்கல்களைத் தருகிறது கர்ப்பிணிப் பெண்களைத் தாக்கும் சின்னம்மை. கர்ப்பிணிகள் ஆரம்பத்திலேயே சின்னம்மைத் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது நல்லது.
ஹெர்பஸ்
கர்ப்ப காலத்தில் ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ்(Herpes simplex) எனும் வைரஸால் பிறப்புறுப்பில் தொற்றுநோய் ஏற்படுகிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட துணையுடன் உடலுறவில் ஈடுபடும்போது மனைவிக்கும் இந்நோய் பரவிவிடுகிறது. முதல் மூன்று மாதங்களுக்குள் ஏற்படும் தொற்றுநோயை குணப்படுத்திவிடலாம். ஆனால், மீதமுள்ள மாதங்களிலும் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தால் குழந்தையை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம்தான் வெளியே எடுக்க வேண்டி வரும். நார்மல் டெலிவரி என்றாலும் பிறக்கும் குழந்தைக்கும் ஹெர்பஸ் பரவிவிடும் சிக்கல் உண்டு.
தட்டம்மை
தட்டம்மை என்கிற ருபெல்லா வைரஸ் தாக்கப்பட்டிருந்தால் ஃப்ளூ காய்ச்சலைப்போல கண்கள் சிவத்தல், மிகுதியான காய்ச்சல், நிணநீர் கணுக்களில் வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும், கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் தட்டம்மையால் கருவில் உள்ள குழந்தையின் பார்வை மற்றும் கேட்கும் திறன் பாதிப்படையலாம். குழந்தையின் மூளை மற்றும் இதயம் பாதிக்கவும் வாய்ப்பு அதிகம்.
குரூப் பி ஸ்ட்ரெப்டோகாக்கஸ்பெண்களின் சிறுகுடலிலும், பிறப்புறுப்பிலும் இருக்கும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாக்கள் கர்ப்பத்தில் இருக்கும்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், பிரசவத்தின்போதோ பிரசவத்துக்கு நெருங்கிய நிலையிலோ பாதிப்பு ஏற்பட்டால் குழந்தை பாதிக்கப்படும். ஏற்கெனவே முதல் பிரசவத்தில் இந்தப் பிரச்னை இருந்திருப்பின் இரண்டாவது குழந்தையும் பாதிக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே, பிரசவ நேரத்தில் இதற்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். இதனால் குறைமாத பிரசவம், முன்னதாகவே பனிக்குடம் உடைதல் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.
கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுகளை நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்கலாம்
* ஒவ்வொருமுறை பாத்ரூம் போய்விட்டு வந்தபிறகும் கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். இதேபோல் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுடன் விளையாடிய பிறகும், சமையலுக்கு மீன், மாமிசம் மற்றும் காய்கறிகள் நறுக்கிய பிறகும் கைகளை அலம்புவது அவசியம்.
* நன்றாக சமைத்த பிறகே உண்ண வேண்டும். பாதி வெந்தவற்றை உண்ணக்கூடாது. குறிப்பாக அசைவ உணவுகள்.
* பதப்படுத்தப்படாத பால் பொருட்கள், காய்ச்சாத பால் போன்றவை ஆரோக்கியத்துக்குக் கேடு.
* கர்ப்பிணிகள் தாங்கள் பயன்படுத்தக்கூடிய தட்டு, டம்ளர் போன்ற பாத்திரங்களை மற்றவர்களுடன் பகிராமல் இருப்பது நல்லது.
* வீட்டில் செல்லப் பிராணிகளுக்கு வைக்கும் தட்டு போன்றவற்றை கர்ப்பிணிகள் சுத்தம் செய்யக் கூடாது. அதனுடன் நெருங்கிப் பழகுவதும் கூடாது.
* கணவர் ஏதேனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் பாதுகாப்பான, சுகாதாரமான உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். இதன்மூலம் தேவையற்ற பால்வினை நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
* முறையான கால இடைவெளிகளில் மருத்துவரின் அறிவுரைப்படி தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். அந்தந்த காலத்துக்கு தவறாமல் மருத்துவ பரிசோதனைகளும் அவசியம்.
* சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படாமல் இருக்க தண்ணீர் போதுமான அளவு அருந்த வேண்டும்.
* ஏதேனும் உடல்நலக்குறைவு இருப்பது தெரிந்தால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் சென்றுவிட வேண்டும்.
Average Rating