தோல்நோய்களை குணப்படுத்தும் செங்கொன்றை!!(மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சிறுநீர்தாரை தொற்றுக்களை போக்க கூடியதும், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், தோல்நோய்களை சரிசெய்யவல்லதுமான செங்கொன்றையின் நன்மைகளை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். கோடைகாலத்தில் பூத்துக்குலுங்கும் மரம் செங்கொன்றை. பல்வேறு நன்மைகளை கொண்ட இதன் பாகங்கள் காசநோய், புற்றுநோய் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. வீக்கத்தை வற்றச்செய்ய கூடியது. வலியை தணிக்கும் தன்மை கொண்டது. உள், வெளி மருந்தாகி பயனாகிறது.
செங்கொன்றை மலரை பயன்படுத்தி சிறுநீர்தாரையில் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செங்கொன்றை மலர்கள், பனங்கற்கண்டு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் செங்கொன்றை பூவின் இதழ்களை 10 முதல் 15 வரை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் அழற்சி, தொற்றுநோய் குணமாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் அடைப்பு, வலி சரியாகும். சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரகம் பழுதுபடாமல் பாதுகாக்கும். மிகவும் அழகாக காட்சி தரும் செங்கொன்றை மரத்தின் மலர்கள் சிவந்த வண்ணத்தில் மரம் முழுக்க இருக்கும். பூக்களை விட இலைகள் மிகவும் சிறியது. செங்கொன்றை பூக்களை பயன்படுத்தி பூஞ்சை காளான்களால் தோலில் ஏற்படும் தொற்று, சேற்றுப் புண்களை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செங்கொன்றை பூக்கள், தேங்காய் எண்ணெய்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் செங்கொன்றை பூக்களின் பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி சேற்று புண்கள் மீது பூசிவர புண்கள் ஆறும். பூஞ்சைகாளான்களால் தோலில் ஏற்படும் படை, சொரி, சிரங்கு, சொரியாசிஸ் ஆகியவை சரியாகும். தோலுக்கு பழைய ஆரோக்கியத்தை கொடுக்கும். விரல் இடுக்கில் ஏற்படும் அரிப்பை போக்கும்.செங்கொன்றை இலைகளை பயன்படுத்தி தசை, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செங்கொன்றை இலைகள், விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் ஊற்றவும்.
இதில் செங்கொன்றை இலைகளை போட்டு வதக்கவும். இதை இளஞ்சூட்டுடன் கட்டி வைத்தால் மூட்டுவலி, வீக்கம் குறையும். செங்கொன்றை அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. இதன் இலைகள், பூக்கள் மருந்தாகிறது. எளிதில் கிடைக்க கூடிய செங்கொன்றையை பயன்படுத்தி நாம் நலம்பெறலாம்.உயர் ரத்த அழுத்தத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். மனசிக்கல், மலச்சிக்கல் போன்றவற்றால் உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுகிறது. மனதில் ஏற்படும் சிக்கல் ஹார்மோன் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது. மலச்சிக்கல் உடலுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னைக்கு மோர், எலுமிச்சை சாறு மருந்தாகிறது. மோர் உடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர ரத்த அழுத்தம் குறையும்.
Average Rating