குற்றங்களின் சாட்சி – கடவுள்!!(மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 56 Second

பெண் மைய சினிமா

இன்றைக்கு கூட்டு வன்புணர்வு என்கிற கொடூரம் வெளி உலகுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கிறது. இது சம்பந்தமான நம் எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களோடு நின்றுவிடுகின்றன. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சொல்லும் கூட்டமும் அதிகரித்துவிட்டது இன்னுமொரு அவலம்.

மனித சமூகத்துக்கே மாபெரும் இழிவான பாலியல் வன்புணர்வைத் தடுக்க நாதியற்றவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு நிகழ்கின்ற குரூர நிகழ்வின் ஊடாக கடவுளை நோக்கி கேள்வி எழுப்பிய முக்கியமான படம் பர்க்மன் இயக்கத்தில் வெளியான ‘தி வர்ஜின் ஸ்ப்ரிங்’. படத்தின் கதை மிகவும் எளிமை யானது. ஒரு பெண் காட்டின் வழியாக தேவாலயத்துக்குச் சென்று கொண் டிருக்கிறாள். அப்போது காட்டுக்குள் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவர்களால் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்படுகிறாள்.

கொலையாளிகள் அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த ஆடையை எடுத்துக் கொண்டு ஒரு வீட்டில் தஞ்சமடைகின்றனர். அந்த வீடு அந்தப் பெண்ணின் வீடு. அந்த ஆடையை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் விலை பேசும்போது, தன் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையை ஜீரணிக்க முடியாத தந்தை கொலையாளி களைக் கொன்று பழி தீர்த்துக்கொள்கிறார். பழிவாங்குதல் மதத்திற்கு எதிரான செயல் என்பதால் தந்தை தன் குற்றத்திற்காக வருத்தப்பட்டு மகள் கொலையுண்ட இடத்தில் ஒரு தேவாலயம் எழுப்புவேன் என்கிறார். அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து ஒரு நீரூற்று பெருக்கெடுத்து ஓடுகிறது.

அந்த நீரூற்றுதான் கன்னி நீரூற்று. அந்த ஊற்று அந்தப் பெண் கொலை செய்யப்பட்டதற்கு அடையாளமாக என்றைக்கும் இருக்கும் என்பதோடு படம் நிறைவடைகிறது. இறுதியில் அப்பெண் கொலையுண்ட இடத்திலிருந்து பெருக்கெடுக்கும் அந்த ஊற்று அந்தப்பெண் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கிறாள். அக்கொலையின் அடையாளமாகவும், அப்பெண்ணின் புனிதத்தின் அடையாளமாகவும் நான் இருக்கிறேன் என்று சொல்வதைப் போல படத்தில் அமைந்திருக்கும்.

தன் மகளைப் பறிகொடுத்த தந்தை இறுதியாகக் கடவுளை நோக்கி இவ்வாறு கூறுகிறார். ‘‘நீ பார்த்தாய் கடவுளே! நீ பார்த்தாய்! என் மகள் கொல்லப்
படுவதையும், நான் கொலையாளிகளைப் பழி வாங்குவதையும் நீ பார்த்தாய். இதெல்லாம் நடக்க நீ அனுமதிக்கிறாய். என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இருந்தாலும் நான் உன்னிடம் என் பாவத்திற்காக மன்னிப்பு கேட்கிறேன். நான் அமைதியாக வாழ இதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை. என் பாவத்திற்குப் பிராயசித்தம் தேடிக்கொள்ள இந்த இடத்தில் உனக்கு ஒரு கோவில் கட்டுவேன். சுவர்களும் கற்களும் கொண்டு அல்ல. என் கைகளால்…’’ என்று வருத்தத்துடன் புலம்புகிறார்.

இளம் பெண்ணை ஆடு மேய்ப்பவர்கள் குரூரமாக பாலியல் வன்புணர்வு செய்ததையும், பின்னர் கொன்றதையும் கடவுள் பார்த்துக் கொண்டு இருந்தார் என்றால் அவர் மௌனமாகத்தான் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். கடவுள் கருணையை முற்றிலும் நம்பியிருந்தவர் கடவுள் கண் முன்னே எந்த அக்கிரமும் நடக்க முடியாது. பின் இவையெல்லாம் எப்படி நடைபெற்றன? கடவுள் சம்மதத்தோடு இவை நடந்திருக்க முடியாது. தன் மகள் மீது கடவுளுக்கு எந்த வகையிலும் கோபம் இருந்திருக்கவும் முடியாது. அப்படியானால் கடவுள் ஏன் மௌனமாக இருந்தார் என்பது அவர் கேள்வி.

கடவுள் அறவே இல்லை என்று அவரால் எண்ணிப் பார்க்கவே முடிய வில்லை. முற்றான கடவுள் நம்பிக்கை உடையவர் அவர். கடவுள் நம்பிக்கையை தனக்குள் இருந்து அவரால் வெளியேற்றிக் கொள்ள இயலவில்லை. இந்த இளம்பெண் கொல்லப்பட்டதிலும்கூட கடவுளுக்கு ஏதேனும் நோக்கம் இருந்திருக்க வேண்டும் என்று அவர் கருதினாரா? தெரியவில்லை. எப்படியோ அவர் கடவுளோடு ஒரு சமரசத்திற்குத் தான் வந்து சேர்கிறார்.

‘கடவுளே நீரே எமக்கு கதி’என்று தான் அவர் கதறுகிறார். ‘இதே இடத்தில் ஒரு கோவில் எழுப்புவேன்’ என்கிறார். மதமும் கடவுளும் இப்படித்தான் மனிதர்களுக்குள் நுழைந்து அவர்களை முற்றாக ஆட்கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு கடவுளோ மதமோ இருக்க முடியுமா, இவர் கடவுளா அல்லது சாத்தானா என்றெல்லாம் அவர் எண்ணவில்லை. ஒருவேளை பர்க்மன் இத்தகைய சித்தரிப்பின் மூலம் கடவுளையும் மதத்தையும் ஓர் ஆழமான
கேள்விக்கு உட்படுத்துகிறார்.

‘‘கடவுள் இல்லை என்றாலும் அவரை கண்டுபிடிக்க வேண்டும்…’’ என்றார் வால்டேர். ‘‘கடவுள் இறந்து விட்டார் அந்த இடத்தில் மனிதன் தன்னை வைத்து கொள்ள வேண்டும்…’’ என்றார் நீட்சே. இதே பயணத்தில்தான் பர்க்மனும் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அப்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்படும் காட்சியும், கொலையாளிகளையும், அவர்களுடன் இருக்கும் அப்பாவி சிறுவனையும் தந்தை கொலை செய்யும் காட்சியும் நம்மை நிலைகுலைய வைக்கக் கூடியவை. மனிதர்களின் மனதுக்குள் பதுங்கிக் கிடக்கும் குரூரங்களையும் கொடூரங்களையும் அவர்களுக்குள் இருக்கும் பழி வாங்கும் உணர்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடியாக அக்காட்சிகள் அமைந்து இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களின் போது கடவுள் மட்டுமா மௌனமாக இருக்கிறார்? மனிதர்களும் தானே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சும்மா இரு ஒரே ஒரு முத்தம் | இளைஞனை வற்புறுத்தும் பெண்!!(வீடியோ)
Next post டோல்கேட்டில் நடக்கும் இந்த அநியாயம் நீங்களே பாருங்கள் மக்களே!!(வீடியோ)