கோடை காலம் நலமாகட்டும்!!(மருத்துவம்)
தட்ப வெப்பநிலைக்கும் நமது உடல்நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப நம்முடைய வாழ்வியல் முறையையும், உணவுப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாக, முதுமை அடைந்தவர்கள் காலச்சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்கிறார் முதியவர் நல மருத்துவர் டேவிட் விஜயகுமார்.
‘‘முதியவர்களுக்கு கோடை காலத்தில் அவர்களின் உடல்நிலை மி்குந்த உஷ்ண நிலையை அடையும். அதனால் அவர்களின் உடலில் நீர்ச்சத்து, பொட்டாசியம், சோடியம் குளோரைடு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறையும் நிலை ஏற்படும். இதனால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம், ஹீட் ஸ்ட்ரோக், டென்ஷன், மூச்சுத்திணறல், தலைவலி போன்ற பிரச்னைகள் உருவாகும்.
இதுவே அவர்கள் நீரிழிவு, இதய மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றால் பாதிப்புக்குள்ளானால் அவர்கள் மேலும் பிரச்னைக்கு ஆளாவார்கள். இதனால் தக்க மருத்துவரை முன்கூட்டியே சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. முதியவர்களைக் கொண்ட குடும்பத்தினருக்கும் இந்த பொறுப்பு அதிகம் இருக்கிறது.
சுற்றுச்சூழலில் வெப்பம் அதிகரிப்பதால் முதியவர்கள் உட்கொள்ளும் மருந்துகளின் திறனும் குறைய வாய்ப்பிருக்கிறது. முக்கியமாக, இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் தங்களுடைய மருந்துகளை குளிர்ந்த நிலையில் வைத்து பாதுகாத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால் அவர்களின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் வெளியேறிவிடும்.
இதனால் தாங்கள் வசிக்கும் இடம் காற்றோட்டமாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு முறை குளிப்பதும் நல்லது. மேலும் உடலை ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பது அல்லது ஈரத்துணியால் உடலை அடிக்கடி துடைப்பது போன்ற செயல்கள் உடலை குளிர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள உதவும்.
வெயில்காலம் வருகிறது என்பதற்காக நடைப்பயிற்சியையோ, உடற்பயிற்சியையோ தவிர்க்க வேண்டாம். வெயில் இல்லாத நேரமான காலை
5 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
வெயில் அதிகரிக்கும் நேரமான 11 மணிக்கு மேல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியில் செல்ல நேர்ந்தால் குடை, தொப்பி, கூலர் கிளாஸுடன் வெளியில் செல்லலாம். மருத்துவ அவசர தொடர்பு எண்களை எப்போதும் தங்களுடைய கையில் வைத்துக் கொள்வதும் பாதுகாப்பானது. கூடவே வாட்டர் பாட்டிலும் இருக்கட்டும். அணியும் ஆடை தளர்வாக இருக்க வேண்டும், முக்கியமாக காட்டன் உடைகளை அணிவதும் அவசியம்.
அடிக்கடி சிறுநீர் போவதைத் தவிர்க்க தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பார்கள். ஆனால், வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்துவிடும். எனவே, நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்னை ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளதால் நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
முதியவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழிக்காமல், உட்கார்ந்த நிலையில் சிறுநீர் கழித்துப் பழக வேண்டும். நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கும்போது சுவாசிக்கும் திறனில் மாறுபாடு ஏற்படும். இதனால் மயக்கம் வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆகையால் உட்கார்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பதே நல்லது. நீர்ச்சத்து முதியவர்களுக்கு தேவையான எனர்ஜியை தருகிறது. அதிகமான திட உணவு, அசைவ உணவை தவிர்த்துவிட்டு நீர்ச்சத்துள்ள உணவு வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழம், ஆரஞ்சு, கொய்யாப்பழம், எலுமிச்சைப் பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், பனை நுங்கு போன்றவற்றையும், நீர்ச்சத்துள்ள காய்கறிகளான புடலங்காய், பூசணிக்காய், நூக்கல், முள்ளங்கி போன்ற காய்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மோர் அருந்துங்கள். சிறுதானிய உணவு வகைகளும் உங்கள் உணவில் கட்டாயம் இருக்கட்டும்.
Average Rating