தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தோல்வி!!(கட்டுரை)
1983 ‘கறுப்பு ஜூலை’யின் முதலாவது ஆண்டு நினைவையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டம், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் தலையீட்டால் தோல்வியைத் தழுவியிருந்தது. அங்கு கூடிய தமிழ் இளைஞர்களின் அழுத்தத்தால், சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் விரைவில் வௌியேறத் தொடங்கியதும், திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே, உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நிச்சயமாக, இது தோல்வியைச் சுட்டி நிற்பினும், அமிர்தலிங்கம் அதை, அவ்வாறு பொருள் கொள்வதைத் தவிர்த்தார்.
மாறாக, “நாங்கள் எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பாகவே, உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம்; அவ்வளவு தான்” என்பது அமிர்தலிங்கத்தின் பதிற்கருத்தாக இருந்தது.
ஆனால், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களைப் பொறுத்தவரை, இது அவர்களது நிகழ்ச்சிநிரலின் வெற்றியே. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு மட்டுமல்லாது, மறுபுறத்தில் ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்துக்கும், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கும் கூட, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி, சத்தியாக்கிரகத்தின் தோல்வியை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முடிவாக அல்லது மரணமாகக் கருதிக் குதூகலம் கொண்டதாக, தன்னுடைய கட்டுரையொன்றில் மேவின் டி சில்வா குறிப்பிடுகிறார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அரசாங்கத்தின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸ், “தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு இது பாதையின் முடிவாகும். தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் கதை முடிந்துவிட்டது” என்று குறிப்பிட்டதோடு, “இந்தச் சூழ்நிலையில் தமிழர் பிரச்சினை பற்றி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியோடு, பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் என்ன பயன் ஏற்படப்போகிறது, என்கிற ஐயம் உருவாகிறது” என்ற கருத்தையும் பதிவு செய்தார்.
சத்தியாக்கிரகப் போராட்டத்தின் தோல்வி குறித்த செய்திக்கு, தெற்கில் ஊடகங்கள் பெரும் பிரசித்தம் வழங்கின. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், சர்வதேச அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு நிறையவே இருந்தது.
குறிப்பாக, இந்தியாவிடமிருந்து சர்வதேசமானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியையே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கருதியிருந்தது. ஆகவே, அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழுத்தம் இருந்தது. தமிழ் மக்களின் ‘தலைநகர்’ என்று கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சத்தியாக்கிரகப் போராட்டமானது தோல்வியடைந்ததானது, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின், ‘தமிழர் பிரதிநிதிகள்’ என்ற நிலையைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது,
ஆகவே, அவர்களுடன் பேசுவதில் பயனில்லை என்று ஜே.ஆர் அரசாங்கம் நிறுவ முயன்றதன் வௌிப்பாடுதான், ஆனந்ததிஸ்ஸ டி அல்விஸின் கருத்தின் சாரம்.
இந்தச் சாரத்தின் அடிப்படையிலான அரசியல் பத்திகள், தெற்கில் பத்திரிகைகளில் பிரசுரமாயின. இதன் பின்னணி பற்றிக் கருத்துரைக்கும் ரீ.சபாரட்ணம், ‘தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையென்றால், அவர்களோடு பேசத்தேவையில்லை என்பதோடு, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி எழும். அதற்கான பதில், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் என்றால், முதலாவதாக, ஆயுத வழியில் தனிநாடு கோரும் அவர்கள் சமரசத் தீர்வுக்கு வரப்போவதில்லை, இரண்டு, ஆயுத வழியில் பயங்கரவாதத்தை முன்னெடுப்பவர்களை, மேற்கின் பங்கரவாத ஒழிப்பு நிகழ்ச்சி நிரலோடு ஒத்திசைந்து, ஆயுதரீதியில் அடக்குவதை நியாயப்படுத்தலாம். ஆகவே, இந்த இரண்டு நடந்தாலும், பேச்சுவார்த்தை என்ற ஒன்றுக்கு இடமில்லை. பேசுவதற்கு ஒரு தரப்பு இல்லையென்றால், சர்வதேசம் கூடப் பேச்சுவார்த்தைக்கு தன்னுடைய அழுத்தத்தை தரமுடியாது’ என்று குறிப்பிடுகிறார்.
பேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஜே.ஆரும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களும் விரும்பவில்லை. ஆகவே, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு ஏற்பட்ட இந்தப் பின்னடைவானது, ஒன்றுக்கொன்று முரண்பாடான, இந்த இருதரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கும் சாதகமானதாகவே அமைந்தது.
பிரித்தானிய அழுத்தம்
இதேவேளை, இலங்கை அரசாங்கத்துக்குப் பிரித்தானியாவிலிருந்து இன்னொரு வகையிலான அழுத்தம் ஏற்பட்டிருந்தது. 1983 ஜூலை 28ஆம் திகதி பிரித்தானியாவின் ‘த காடியன்’ பத்திரிகையில், ‘தமிழ் மக்களுக்கெதிரான ஜூலை 1983 வன்முறையை நினைவுகூரல்’ என்ற தலைப்போடு பிரசுரமாயிருந்த செய்தியானது, ‘கறுப்பு ஜூலை’ வன்முறையை நினைவுகூர்ந்ததுடன், அதற்குக் காரணமான, இலங்கை அரசாங்கத்தைக் கண்டிப்பதாக அமைந்ததுடன், அந்தக் கண்டனத்தில் ஏறத்தாழ 80 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டிருந்ததாகவும் பதிவு செய்திருந்தது.
‘1983 ‘கறுப்பு ஜூலை’ வன்முறைகளானது, தமிழ் மக்கள் மீதான இனவெறியின் காரணமாக, தீக்கிரையாக்கப்பட்ட தமிழ் மக்களது வாசஸ்தலங்களும் வியாபாரங்களும் அடையாளம் காணப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டு தமிழ் மக்கள் மீது சொல்லொணாத் துன்பம் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிகழ்வாகும்’ என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, 53 தமிழ்க் கைதிகள், இலங்கைச் சிறையில் படுகொலை செய்யப்பட்டதையும் எடுத்துரைத்ததுடன், இந்தக் கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில், இதுநாள் வரை சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.
மேலும், தனிநபர்களை 18 மாத காலம் வரை, எதுவித நீதி விசாரணையுமின்றித் தடுத்துவைக்கும், படுபயங்கரமான அதிகாரத்தை, அரச இயந்திரத்துக்கு வழங்கிய ஜே.ஆர் அரசாங்கம், நிறைவேற்றியிருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைக் கண்டித்த, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டியிருந்ததுடன், தமிழ் மக்களின் பிரதிநிதிகளைப் பதவியிழக்கச் செய்த, அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தையும் கண்டித்திருந்தது.
அத்தோடு, ஏறத்தாழ 10 இலட்சம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள், இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த அவலத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தது. அதில் ஒப்பமிட்டிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இறுதியாக ஐந்து பிரதான அபிப்பிராய முன்மொழிவுகளை வௌிப்படுத்தியிருந்தார்கள்.
1. தமிழ் மக்களுக்கு எதிரான, 1983 கறுப்பு ஜூலை வன்முறைகள், மற்றும் அரசாங்கத்தின் பிடியிலிருந்த 53 தமிழ்க் கைதிகள், சிறைகளில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளப் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
2. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதோடு, பொதுமக்களைத் தன்னிச்சையாகக் கொன்று, எதுவித நீதிவிசாரணையுமின்றிப் புதைக்கும் அதிகாரத்தை, அரச படைகளிடமிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும்.
3. சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிரான வௌித்தொடர்பற்ற தனிக்காவல் தடுப்பு, சித்ரதிவதை என்பவற்றை இலங்கை உடனடியாகக் கைவிடவேண்டும்.
4. இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை மற்றும் வாக்குரிமை என்பன மீள வழங்கப்பட வேண்டும்.
5. இலங்கை அரசாங்கமானது அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை இல்லாதொழிப்பதோடு, தமிழ் மக்களுக்கான நியாயமாக உரிமைகளை வழங்குவதனூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு, அர்த்தமுள்ள நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று அபிப்ராய முன்மொழிவுகளை முன்வைத்திருந்தனர்.
1983 கறுப்பு ஜூலை இன அழிப்பு வன்முறை என்பது, மிகப் பாரதூரமான ஒரு விடயம். குறிப்பாக, இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின்னரான சர்வதேச அரசியலில், இத்தகைய இன மய்ய வன்முறைகளுக்கு எதிராகப் பெரும் வெறுப்பும் கடும் எதிர்ப்பும் இருந்தன.
இதன் பாரதூரத்தை ஜே.ஆர் நன்கறிந்திருந்தார். அதனால்தான், கவனத்தை அதிலிருந்து திசை திருப்ப, அவர் பல முயற்சிகளை முன்னெடுத்தார். அவரது அமெரிக்க விஜயத்தின் போது கூட, “கறுப்பு ஜூலையை மறக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
நாஸிப்படைகள் யூதர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட ‘ஹொலோகோஸ்ட்’ (பெரும் இன அழிப்பு)ஐ இன்றும் சிலர் மறுக்கிறார்கள். ஆனால், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், ‘ஹொலோகோஸ்ட்டை’ மறுத்தல் என்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது.
‘கறுப்பு ஜூலை’ என்பதை ‘ஹொலோகோஸ்ட்டோடு’ ஒப்பிட முடியாது என்று சிலர் வாதிடலாம். ஒரு சிலர், ‘கறுப்பு ஜூலை’ என்பது இன அழிப்பு அல்ல; இனச் சுத்திகரிப்பு என்று வாதாடுவார்கள். சிலர், அது இனச்சுத்திகரிப்பு கூட இல்லை; அது ஓர் இனக்கலவரம் என்பார்கள். இன்னும் சிலர், அது இனக்கலவரம் இல்லை; சில காடையர்கள் நடாத்திய, வன்முறைத் தாக்குதல்கள் என்பார்கள்.
இந்தத் தொழில்நுட்ப ரீதியான வாதப்பிரதிவாதங்கள் எவ்வாறிருப்பினும், மறுக்கமுடியாத உண்மை யாதெனில், 20 ஆம் நூற்றாண்டு கண்ட, ஓர் இனம் அடையாளம் காணப்பட்டு உயிர்களும், உடைமைகளும் வன்முறை கொண்டு, அழிக்கப்பட்ட, பாரதூரமான நிகழ்வுகளில் ‘கறுப்பு ஜூலை’யும் ஒன்று.
ஜனநாயகத் தமிழ்த் தலைமை, உண்மையில் இன்னும் வினைத்திறனாகச் செயற்பட்டு, சர்வதேச ரீதியில் ‘கறுப்பு ஜூலை’யையும் அதற்கு முற்பட்ட, அதன்பின் தொடர்ந்த இன வன்முறைகளையும் முன்னிறுத்தி, தமிழ் மக்களுக்கான நியாயத்தைக் கோரியிருக்க வேண்டும்.
அதில், ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் திருப்திகரமானச் செயற்பட்டிருக்கவில்லை என்ற விமர்சனங்கள் உண்டு.
அழுத்தத்தைச் சமாளிக்கும் தந்திரோபாயம்
கறுப்பு ஜூலை என்ற வன்முறையைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் பாலான சர்வதேசத்தின் அனுதாபம் நிறையவே இருந்தது. இதில் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளும் முக்கிய இடத்தை வகித்திருந்தன.
அதன்பாலாக ஏற்பட்ட சில அழுத்தங்களில் ஒன்றுதான், இந்தப் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்டனமும் அபிப்ராய அறிக்கையும் ஆகும். தமிழ் மக்கள் மீதான அனுதாபத்தை மீறி, தன்னிலையை நியாயப்படுத்த வேண்டுமானால், சர்வதேசத்துக்கு உவப்பற்ற பார்வையில், தமிழ் மக்கள் அமர்த்தப்பட வேண்டும்.
அதற்குப் பயங்கரவாதத்தை விட, வலுவானதொரு காரணம் இருக்க முடியாது. பயங்கரவாதம் என்ற கட்டுமானத்தைக் கொண்டு, தமிழ் மக்கள் மீதான வன்முறையை மட்டுமல்ல, பேச்சுவார்த்தைக்கான அவசியமின்மையையும் நியாயப்படுத்த முடியும். மேலும், எதிர்காலத்தில் பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச நிகழ்ச்சிநிரலைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதனூடாக, சர்வதேசத்தின் அனுதாபத்தைத் தம்மீது பதியச் செய்ய முடியும் என்பதே, ஜே.ஆரின் தந்திரோபாயமாகும்.
இதை ஜே.ஆர் முதல் ராஜபக்ஷ வரை நாம் காணமுடியும். இதனால்தான், தமிழர் அரசியலில், ஜனநாயகத் தலைமைகள் பின்தள்ளப்பட்டு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் முன்னிலை பெறுவது, தமிழ் மக்களை விடவும், ஜே.ஆருக்கு அவசியமானதாக இருந்திருக்கும்.
தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் அரசியல் பற்றிய அரசியல் பார்வை, புலமைத்தளத்தில் கூட ஆதரவுத் துதி, எதிர்ப்பு விமர்சனம் என்ற இருதுருவ நிலைகளை, இன்றும் கடந்து வராதது கவலைக்குரியது.
1984இலிருந்து 2009 வரை, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களே, தமிழர் அரசியலின் உந்து சக்தியாக இருந்தன என்பதுடன், போராட்டம் என்பதைத் தாண்டி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வரையறுத்ததிலும் அவர்களது பங்கு முக்கியமானது.
ஆயினும், தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டதானது, தமிழரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். எந்தவொரு போராட்டத்துக்கும், மய்யநிலை போராட்டத்திலிருந்து தனித்தமைந்த, ஒரு ஜனநாயக அரசியல் முகம் அவசியம். அது இல்லாதுபோனால், போராட்டம் – அரசியல் என்ற இரு நிலைகளின் சமநிலை தகர்ந்துவிடும். இதைத் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் உணர்ந்துகொள்ள, ஒன்றரை தசாப்தத்துக்கும் அதிகமான காலம் தேவைப்பட்டிருந்தது. ஜனநாயகத் தமிழ்த் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டுவிட்டால், போராட்டம் பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்டதும் தமிழ் மக்கள் அரசியல் சூனியத்துக்குள் நிற்க வேண்டிய நிலை உருவாகும்.
நிற்க, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா பயிற்சியும் ஆயுதங்களும் ஆதரவும் அடைக்கலமும் அளித்தது என்பது, அனைவரும் அறிந்த இரகசியமாக இருந்தது. இதை ஜே.ஆர் நேரடியாக இந்திரா காந்தியிடமே குறிப்பிட்டிருந்தார். பிரதமர் பிரேமதாஸ தொடர்ந்தும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்தநிலையில், 1984 ஆகஸ்ட்டில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே கொஞ்சம் அதிரச்செய்ததுடன், ஜே.ஆரின் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ கோசத்துக்கும் வலுச்சேர்ப்பதாக அமைந்தது.
Average Rating