கார்ல் மார்க்ஸ் 200: உழைப்பை நினைவு கூர்தல்!!(கட்டுரை)
சில மனிதர்களின் வாழ்வு மகத்தானது. அம்மனிதர்கள் தங்களுக்காக வாழ்ந்தவர்கள் அல்லர். மாறாக, உலகெங்கும் வாழும் எளிமையான மக்களுக்காக, ஒடுக்கப்படும் மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.
அவர்களது வாழ்வும் நினைவும் என்றென்றும் நிலைத்திருக்கிறது. எப்போதும் நினைவுகூரப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்வு, மனிதகுல வரலாற்றின் திசைவழியையே மாற்றியிருக்கிறது. அம்மனிதன், உலக வரலாற்றில் செல்வாக்குச் செலுத்திய அளவுக்கு, வேறு யாருமே செல்வாக்குச் செலுத்தவில்லை.
உலகின் ஒவ்வொரு மூலையிலும் அம்மனிதனின் தடம், ஆழப் பதிந்துள்ளது. அம்மனிதனைத் தவிர்த்து, கடந்த இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றை எழுதவியலாது.
மே மாதம் ஐந்தாம் திகதி, உலகின் தலைசிறந்த சிந்தனையாளரும் உழைக்கும் மக்களின் வழிகாட்டியுமான கார்ல் மார்க்ஸின் 200ஆவது பிறந்த தினம், உலகெங்கும் நினைவுகூரப்படுகிறது.
மார்க்ஸ், உலகை இயங்கியல் அடிப்படையில் விளக்கியதன்படி, இன்று உலகம், உழைக்கும் சக்திகளுக்கு வாய்ப்பானதாக மாறிவரும் சூழலில், மார்க்ஸை நினைவுகூர்கிறோம்.
மார்க்ஸை நினைவுகூர்வது என்பது, உழைக்கும் மக்களை நினைவுகூர்வது; புரட்சிகரச் சிந்தனைகளை, செயல்களை நினைவுகூர்வது; ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நினைவுகூர்வது ஆகும்.
1818ஆம் ஆண்டு மே ஐந்தாம் திகதி பிறந்த மார்க்ஸ், 65 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். மார்க்ஸ் மறைந்து, 135 ஆண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் மார்க்ஸ், இன்றும் உலகில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற சிந்தனையாளராக உள்ளார்.
முதலாளித்துவ சமூக – பொருளாதார அமைப்புப் பற்றி, மார்க்ஸ் முன்வைத்த கருத்துகளும் ஆய்வுகளும் முக்கிய விவாதங்களுக்கு, இன்றும் அடிநாதமாகத் திகழ்கின்றன.
பொருளியல், வரலாற்றியல், தத்துவவியல், அரசியல் என்று அனைத்து முக்கிய சமூக அறிவியல் சார்ந்த துறைகளில், மார்க்ஸ் தனது ஆய்வுகள் மூலமும் படைப்புகள் மூலமும் மிக முக்கிய சிந்தனையாளராக இன்றுவரை திகழ்கிறார்.
1848இல் 30 வயது கூட நிரம்பியிராத கார்ல் மார்க்ஸ், தனது தோழரான பிரட்ரிக் ஏங்கல்ஸ் உடன் இணைந்து, ‘கொம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை வெளியிட்டார்.
‘கொம்யூனிஸ்ட் அறிக்கை’ என்பது, வெறும் சொற்கோவை கொண்ட வெற்றுப் பிரகடனம் அல்ல. மாறாக, உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விடுக்கப்பட்ட போராட்ட அறைகூவலாகும்.
அந்த மகத்தான வரலாற்று அறைகூவல், ஒவ்வொரு நாட்டிலும் எதிரொலித்தது. முதலாளித்துவ உலகை நோக்கித் தத்துவார்த்த கோட்பாட்டு நிலையிலும் பாட்டாளி வர்க்கப் போராட்ட நிலையிலும் தொடுக்கப்பட்ட முதலாவது தாக்குதல் ஆயுதமாகவும் அமைந்தது.
அதிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள், ஒவ்வொரு நாட்டிலும் விழுந்தன. தொழிலாளி வர்க்கத்தையும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களையும் விழித்தெழவும் போராட்டப் பாதையில் பயணிக்கவும் செய்தது.
‘மார்க்சியம்’ என்ற தத்துவத்தை, மார்க்ஸ் முழுவதுமாகத் தனது மூளையிலிருந்து உருவாக்கவில்லை. தான் பிறந்த காலத்துக்கு முன்னரேயே வளர்ந்து வந்ததும் ஓர் இளம் அறிவுஜீவி என்ற முறையில், தான் கற்றறிந்ததுமான புரட்சிகர சித்தாந்தங்களிலிருந்து, அவற்றை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர் வாழ்ந்த காலத்தின் முக்கிய முற்போக்குச் சக்திகளுடன், அவற்றைப் பொருத்துவதற்கு மார்க்ஸ் முயன்றார்.
அவ்வாறு, உயிரற்ற இயற்கைக்கும் உயிருள்ளவற்றுக்கும் சிந்தனைக்கும் மனிதனின் சமூக அமைப்புகளுக்கும் ஒன்றாகப் பொருந்தக்கூடிய ஒருங்கிணைந்ததொரு பார்வையையும் விதிகளையும் உருவாக்க, மார்க்ஸால் முடிந்தது. இதுதான், மார்க்ஸ் மனித சமுதாயத்துக்கு ஆற்றிய அதி முக்கிய பணியாகும்.
“எதுவும் என்றும் நிலையாக இருப்பதில்லை. எல்லாம் இடைவிடாமல் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு பொருளிலும் பரஸ்பரம் முரண்பட்ட சக்திகள் உள்ளடங்கியுள்ளன. அவை, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த மோதல்களின் விளைவாக அந்தப் பொருள் அழிகிறது. அதனுடைய அழிவிலிருந்து அதைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த இன்னொரு பொருள் உருவாகிறது. இவ்வாறு புதிதாகத் தோன்றுகிற பொருளுக்குள்ளும் முரண்பாடான சக்திகள் இருக்கின்றன.அவற்றுக்கு இடையே மோதல் நடைபெறுகிறது. இவ்வாறு நிரந்தரமான மாறுதல்கள் அல்லது ஒன்றின் அழிவும் அதைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த இன்னொன்றின் தோற்றமும் நடைபெறுவதன் மூலமாகத்தான் உலகம் இயங்கி வருகிறது. எனவே, உலகை விளங்குவதற்கு ‘இயக்கவியலை’ விளங்க வேண்டும்” என்று மார்க்ஸ் வாதிட்டார்.
மார்க்ஸை நாம், ஏன் நினைவுகூர வேண்டும் என்ற கேள்விக்கு, நான்கு அடிப்படைகளில் பதிலளிக்க இயலும்.
முதலாவதாக, மனிதகுல வரலாற்று வளர்ச்சி, மனித சமூகங்கள் தங்களை உற்பத்தி, மறு உற்பத்தி செய்த வழிகளை ஆய்வு செய்வதன் மூலம், அறிவியல் பூர்வமாக அறிந்துகொள்ளப்படலாம் என்பதை உலகுக்குக் காட்டியவர் அவரே.
இதன்மூலம், வரலாறு என்பது அரண்மனைச் சதிகள், அரசர்கள், அவர்களின் வம்சங்கள், அவர்களது வீரசாகசங்கள், சாம்ராஜ்யங்கள் என்ற புரிதலுக்குச் சாவுமணி அடித்து, ‘வரலாறு ஓர் இயல்’ என்று தெளிவுபடுத்தினார்.
மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மார்க்ஸ், மனிதர்களையும் அவர்களது உணர்வுபூர்வமான, நோக்கம் சார்ந்த உழைப்பையும் மையப்பொருளாக முன்வைத்தார்.
மானுட உயிரினத்தின் தனித்தன்மை, தனது சிந்தனைபூர்வமான உற்பத்திசார் நடவடிக்கைகளால் இயற்கையை மாற்றி, தனது தேவைகளை உற்பத்தி செய்துகொண்டதுதான் என்று அவர் நிரூபித்தார்.
இவ்வாறு செயற்பட்டு, மனிதர்கள் புதிய அறிவைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருந்தனர். புதிய திறன்களை வளர்த்துக் கொண்டே இருந்தனர்.
இயற்கை எவ்வாறு செயற்படுகிறது என்பது பற்றி, மேலும் மேலும் அறிந்தனர். இந்த அறிவைப் பயன்படுத்தி, சமூகத்தின் உற்பத்திச் சக்தியை வளர்த்தனர். இத்தகைய ஓய்வற்ற உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்பதுதான், மானுட வரலாற்று வளர்ச்சியின் நிரந்தர அம்சம். இதைத் தனது ஆய்வுகளின் ஊடு, உலகுக்குத் தந்தவர் மார்க்ஸ்.
இரண்டாவது, உற்பத்தி எனும் நடவடிக்கையில், மனிதர்கள் இயற்கையோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. மனிதர்கள் பரஸ்பரம் ஒத்துழைப்பதும் அவசியமாகிறது.
சமூகத்தில், உற்பத்தி தொடர்பான ஏற்பாடுகள், பல்வேறு மக்கள் தொகுதியினர் அந்த ஏற்பாட்டில் ஆற்றும் பங்கு போன்றவற்றை, ஆய்வுரீதியாக விளக்குவதன் ஊடு, மனிதகுலத்தின் இயங்கியலின் உற்பத்திக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அறிமுகம் செய்தார். இதை மார்க்ஸ் ‘உற்பத்தி உறவுகள்’ என்று குறிக்கிறார்.
உலகின் பல்வேறு நாடுகளையும் உள்ளடக்கி, மிக அதிக அளவில் செயல்படும் முதலாளித்துவ அமைப்பிலும் சரி, முந்தைய அமைப்புகளிலும் சரி, மானுட சமூகங்கள் உற்பத்தியை சமூக நடவடிக்கையாகவே மேற்கொண்டிருக்கின்றன.
நவீன முதலாளித்துவ உலகில், ‘தனி நபர்’ என்ற கருத்தாக்கத்தை முன்னிறுத்தி, எவ்வாறு சமூகங்களையும் மக்களையும் தனிநபர் நலன்சார்ந்ததாக உலகத்தை மாற்றியிருக்கிறது என்பதை அறிவித்தவர், மார்க்ஸ் ஆவார்.
இதன் மூலம், உற்பத்தியும் மனித வாழ்வும் எல்லாக் காலங்களிலும் சமூகம் சார்ந்தவையே என்ற உண்மை மறைக்கப்படுகிறது என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
மூன்றாவதாக, மனித சமூகத்தின் உற்பத்திச் சக்திகள், தொடர்ந்து தவிர்க்க முடியாமல் வளர்ந்துகொண்டே இருப்பதால், இவை ஒரு கட்டத்தில், நிலவும் உற்பத்தி உறவுகள் என்ற கூட்டை, சட்டகத்தை உடைத்துக்கொண்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதை மார்க்ஸ் விளக்கினார்.
இவ்வாறு வரலாற்றில் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான உறவு, குறிப்பிட்ட காலம் ஒற்றுமை மேலோங்கிய தன்மையிலும், பின்னர் முரண்பாடு முன்வரும் தன்மையிலும் அமையும் என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார்.
இதன் பொருள், மானுட வரலாற்று வளர்ச்சியில், உற்பத்தி அமைப்புகள் நிரந்தரமானவை அல்ல; மாறாக, அவை மாறிக்கொண்டே இருக்கும் என்பதும், உற்பத்திச் சக்திகளின் இடையறா வளர்ச்சியின் காரணமாகப் புதிய உற்பத்தி அமைப்புகள் உருவாகும் என்பதும் ஆகும்.
நான்காவதாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டியது, உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி அடைவதால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மானுட சமூகம், தனது வழக்கமான மறுஉற்பத்தியை உறுதி செய்துகொள்வது மட்டுமல்லாமல், உபரி உற்பத்தியும் சாத்தியம் ஆகும் என்பதாகும்.
உபரி உற்பத்தி ஏற்படும் நிலைக்கு, ஒரு சமூகம் வளர்ந்து விட்டால், அந்தச் சமூகத்தில் உழைக்கும் தகுதியுள்ள அனைவரும் உழைக்க வேண்டியதில்லை. உற்பத்தி அமைப்பைக் கைப்பற்ற முடிந்தால், பிறரை உழைக்க வைத்து, அவர்களால் உருவாக்கப்படும் உபரி உற்பத்தியில், ஒருசாரார் உழைக்காமல் உயிர் வாழலாம் என்ற வாய்ப்பு ஏற்படுகிறது.
வேறுவகையில் சொன்னால், உபரி உற்பத்தி உருவாகும் நிலையில், ஒரு சமூகம் இரண்டு அடிப்படை வர்க்கங்களாகப் பிரிந்து நிற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான மக்கள் உழைப்பது, அவர்களால் ஏற்படும் உபரி உற்பத்தியில் ஒரு சிறிய பகுதியினர் வசதியாக வாழ்வது என்பது சாத்தியமாகிறது.
இத்தகைய வர்க்க சமூகம், இயல்பாக ஏற்பட்டு விடாது. உற்பத்தியின் மீதான ஆதிக்கம், ஒரு சிலர் கையில் வரும்பொழுது, அவர்கள் பிறரைத் தங்களுக்காக உழைக்க வைக்க முடியும்.
உற்பத்திக் கருவிகள், ஒரு பகுதியினரின் தனிச் சொத்தாக மாற்றப்பட்டு, பெரும்பகுதி மக்கள் இவற்றை இழந்து நிற்பதால், உடைமையாளர்களிடம் அண்டி, உழைத்துப் பிழைக்கும் நிலை ஏற்படுவது, வர்க்க சமூகத்துக்கு அவசியம்.
இத்தகைய ஏற்றத்தாழ்வான, சமூக ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த வன்முறையும் தேவை. உழைக்க நிர்ப்பந்திக்கப்படும் மக்கள், இந்தச் சமூக ஏற்பாட்டை, நியாயம் என்றோ, ஆண்டவன் செயல் என்றோ, இன்ன பிற வாதங்களின் அடிப்படையில், ஏற்றுக்கொள்ள வைப்பதும் அவசியம்.
வன்முறை மட்டுமே போதாது. உடைமையாளர்களையும் அவர்களின் சொத்தையும் நலனையும் பாதுகாக்கும் வன்முறை அமைப்பாகத்தான், ‘அரசு’ என்ற அமைப்பு வரலாற்றில் உருவாகிறது.
உழைப்பாளி மக்கள், இந்த ஏற்பாட்டை ஏற்க மதம், பண்பாடு, இலக்கியம் என்று பலதளங்களில் தத்துவ ஆயுதங்களும் நிறுவன ஆயுதங்களும் பயன்படுகின்றன. இதை விரிவாகவும் தெளிவாகவும் மார்க்ஸ் விளக்கினார்.
மார்க்ஸின் 200ஆவது பிறந்ததினத்தை நினைவுகூரும் இந்தவேளை, கொம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னுரையில், கார்ல் மார்க்ஸ் சொல்வது போல, ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும் தவிர்க்க முடியாதபடி, அதிலிருந்து எழும் சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன.
ஆகவே, (புராதன பொதுவுடைமை அமைப்பு சிதைந்த காலந்தொட்டு) வரலாறுகள் அனைத்தும், வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகின்றன.
அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது.
எனினும், இப்போராட்டம் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் அதிமுன்னேறிய வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும் ஒடுக்கு முறையிலிருந்தும், ஈற்றில் வர்க்கப் போராட்டத்திலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும்.
அவ்வாறு விடுவியாமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவிக்க இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது.
மார்க்ஸ் விட்டுச் சென்ற தத்துவத்தின் அடிப்படையிலான நம்பிக்கையின் விளைநிலங்கள், இந்த 21ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் பரவியுள்ளன.
மார்க்ஸ், என்றென்றும் மக்களால் நினைவுகூரப்படுவார். ஒடுக்குமுறையும் போராட்டமும் இருக்கும்வரை, மார்க்ஸ் என்றும் வாழ்வார். இக்கட்டுரையை மார்க்ஸின் மேற்கோளுடன் நிறைவு செய்வதே பொருத்தம்.
தனது 17ஆவது வயதிலேயே, மானுடத்தின் மீதான தனது அக்கறையை, மானுடத்தை நேசிப்பவர் என்ற தனது தன்மையை, ‘ஒரு இளைஞன் தனது தொழிலைத் தேர்வு செய்வது பற்றிய சிந்தனைகள்’ (Reflections of a young man on the choice of a Profession) என்ற அற்புதமான கட்டுரையில் மார்க்ஸ் வெளிப்படுத்தினார். அக்கட்டுரையை அவர், இவ்வாறு நிறைவு செய்கிறார்:
‘மானுடத்துக்காக நாம் சிறப்புற செயலாற்றிடப் பொருத்தமான ஒரு வாழ்க்கையைத் தேர்வு செய்தோமென்றால், எந்தச் சுமையும் நம்மை வீழ்த்தாது. ஏனெனில், அவை அனைத்தும், அனைத்து மக்களின் நலனுக்கான தியாகங்கள். இத்தகைய வாழ்க்கையில் குறுகிய சுயநலம் சார்ந்த மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பதற்குப் பதிலாக, நமது மகிழ்ச்சி, கோடிக்கணக்கான மக்களின் சொத்தாக அமையும். நமது நற்பணிகள் சத்தமின்றி, ஆனால் நிரந்தரமாக வேலைசெய்துகொண்டே இருக்கும். நமது மறைவுக்குப்பின் நமது சாம்பலின் மீது, நன்மக்களின் கண்ணீர் சிந்தப்படும்”.
Average Rating