சிரியா: பேரரங்கின் சிறுதுளி!!(கட்டுரை)
போர் சிக்கல்களைத் தீர்ப்பதில்லை. அது சிக்கல்களுக்கு இன்னொரு வடிவத்தைக் கொடுக்கிறது. போர்கள் தொடுக்கப்படுவதற்குச் சொல்லப்படும் காரணங்கள், பெரும்பாலும் தொடுக்கப்பட்ட போருக்கான உண்மையான காரணமாக இருப்பதில்லை. இதை வரலாறெங்கும் கண்டு வந்திருக்கிறோம். அதன் இன்னோர் அத்தியாயம், இப்போது அரங்கேறுகிறது.
கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி, சிரிய இராணுவத்தினர், தமது மக்கள் மீது, ‘இரசாயன வாயு’ பயன்படுத்தித் தாக்குதல் நடாத்தினார்கள் என்று அமெரிக்காவும் அதன் ‘நேட்டோ’க் கூட்டாளிகளும் குற்றஞ்சாட்டினார்கள்.
இதன் அடிப்படையில், சிரியாவின் மீது, தாக்குதல் நடாத்துவதன் ஊடு, அம்மக்களைக் காப்பது தமது கடமை என அறிவித்து, ஏப்ரல் 14ஆம் திகதி, சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட பகுதிகள் மீது, தாக்குதல் நடாத்தப்பட்டது. இவை, சிரியாவை மையப்படுத்திய இன்னொரு போருக்கு, வழிவகுத்துவிடுமோ எனப் பலரும் அஞ்சுகிறார்கள்.
அண்மைய தாக்குதல்கள், இரண்டு நிகழ்வுகளை நினைவுபடுத்துகின்றன. முதலாவது, பேரழிவு ஆயுதங்களை, ஈராக் கொண்டுள்ளது என்று நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, ஈராக் மீதான போர் தொடுக்கப்பட்டது.
அதேபோலவே, லிபியாவின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பும் ஆட்சிக்கவிழ்ப்பும் நடந்தது.
இரண்டும் ஆட்சிமாற்றத்தையும் இயற்கை வளங்கள் மீதான கவனத்தையும் பிரதான காரணிகளாகக் கொண்டிருந்தாலும் கூட, சொல்லப்பட்ட கதை அதுவல்ல.
‘மக்களைக் காக்கும் கடப்பாடு, சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது’ என்ற அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டது.
சிரியா மீதான, அமெரிக்க-பிரித்தானியத் தாக்குதல்களுக்கும் இதுவே காரணமாகச் சொல்லப்பட்டது. இத்தாக்குதல்களுக்கான பின்புலத்தையும் அத்தோடு சேர்ந்து நடந்தேறிய சில விடயங்களையும் அவதானித்தால், இத்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதன் காரணங்களை, அறிந்து கொள்ளவியலும்.
முதலாவது, ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி, நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இரசாயனத் தாக்குதல் பற்றிப் பரப்பப்பட்ட செய்திகளை நோக்க வேண்டும்.
இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகப் படங்களை வெளியிட்டு, உலகுக்கு அறிவித்தது, ‘வெள்ளைத் தொப்பிகள்’ (White Helmets) என்ற தொண்டு நிறுவனமாகும். கடந்தாண்டு, சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இவ்வமைப்பு, மேற்குலகு சார்பான அமைப்பாகும்.
இது அமெரிக்காவின் உளவுத்துறையினரால் உருவாக்கப்பட்டு, நடாத்தப்பட்டு வருகிறது என்பது சான்றாதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.
இவ்வமைப்பால் வெளியிடப்பட்ட புகைப்படங்களின் அடிப்படையிலேயே, இரசாயனத் தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்பட்டது. ரஷ்யாவின் புகழ்பெற்ற புலனாய்வுச் செய்தியாளரான ரோபேட் பிஸ்க், தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு விஜயம் செய்து, பார்வையிட்டு, “இரசாயனத் தாக்குதல் நடைபெறவில்லை; இது வெறுமனே இட்டுக்கட்டப்பட்ட கதை” என்பதை நிறுவியுள்ளார்.
அதேபோல, ‘வெள்ளைத் தொப்பி’ நிறுவனத்தால் வௌிப்படுத்தப்பட்ட, தாக்குதலுக்குள்ளான சிறுவன் ஒருவனின் படம், மிகுந்த ஊடகக் கவனத்தைப் பெற்றது.
இரசாயனத் தாக்குதல் தொடர்பில், செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள், குறித்த சிறுவனைத் தேடிக் கண்டுபிடித்தனர்.
அவர்கள், ஹசன் டியாப் என்ற இச்சிறுவன் நலமாக இருப்பதாகவும் உணவுக்காக, ‘வெள்ளைத் தொப்பி’க்காரர்கள் தயாரித்த வீடியோவில் பங்குபற்றியதாகவும் சொன்னான். இச்சிறுவனது தந்தையார், “இப்பகுதியில் இரசாயனத் தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை. எனது மகன் உணவுக்காகவும் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்தே, புகைப்படத்திலும் வீடியோவிலும் பங்கேற்றான்” எனச் சொன்னார்.
அதேவேளை, ‘வெள்ளைத் தொப்பி’க்காரர்களும் கிளர்ச்சியாளர்களும் வேறல்ல என்பதை, சிரிய இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பலர், ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர். எனவே, சிரியாவில் நடாத்தப்பட்ட தாக்குதலுக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட ‘இரசாயனத் தாக்குதல்’ நிகழவில்லை. ஊடகங்களின் வழி, அவ்வாறு ஒன்று நிகழ்ந்ததாக, நம்ப வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
இங்கு கவனிக்க வேண்டிய இரண்டாவது அம்சம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கர்களிடையே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ஏனெனில், அமெரிக்காவின் சரியும் செல்வாக்கும் ஜனாதிபதி ட்ரம்பின் மீதான அதிருப்தியும், அமெரிக்காவின் மீஉயர் நிலையை எடுத்துக் காட்ட வேண்டிய தேவையை உருவாகியுள்ளது. உலக விவகாரங்களில், அமெரிக்காவின் தவிர்க்கவியலாத பாத்திரம் என்ற நிலையை, மாயைகளின் ஊேடனும் செய்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
எனவே இத்தாக்குதல்கள், அவர் மீதான அமெரிக்கர்களின் நம்பிக்கையைத் தக்க வைக்கப் பயன்பட்டுள்ளன. இது, அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்கான ஆவலுடன் இரண்டறக் கலந்துள்ளது.
அமெரிக்காவின் உலக ஆதிக்க நோக்கம், முதலாம் உலகப் போர்க் காலத்திலேயே உருவாகிவிட்டது. அந்தப் போரால் பெரும் பொருள் இழப்பையும் உழைப்பாற்றல் உடையோரின் உயிரிழப்பையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகளை விட, வலிமைபெற்ற ஒரு பொருளாதார வல்லரசாக, அமெரிக்கா வளர்ந்தது.
இரண்டாம் உலகப் போரில், உலக மக்களின் நலன்காக்க, அமெரிக்கா பங்குபற்றவில்லை. பாசிஸத்துக்கு எதிரான அப்போரில், அதிகளவான தியாகங்களைச் செய்த நாடு, சோவியத் யூனியன் தான்.
அந்த உண்மை இப்போது, திட்டமிட்ட முறையில் மூடிமறைக்கப்பட்டு வருகிறது. மிகக் குறைவான உயிர்ச் சேதத்தையும் உடைமைச் சேதத்தையும் சந்தித்த அமெரிக்கா, உலகின் மிக வலிய பொருளாதார, ஆயுத வல்லரசாகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரின் விளைவாக, கொலனிய வல்லரசுகளான பிரித்தானியாவும் பிரான்ஸும் வலுவிழந்தன. அச்சூழலில் கொலனிகளில், விடுதலைப் போராட்டங்கள் வேகம் பெற்றன. ஆனால், அங்கெல்லாம் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், (வடவியட்னாம் நீங்கலாக) கொலனியத்துடன் பகைமையற்ற கொள்கைகளையே கடைப்பிடித்தன.
எனினும், ஐரோப்பாவின் ஒரு பகுதியும் ஆசியாவின் மிகப் பெரிய நாடான சீனாவும் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் கீழிருந்த கொரியாவும் வியட்னாமும் வெகுசனப் புரட்சிகர எழுச்சிகளால், ஆட்சி மாற்றம் கண்டன.
எனினும், ஆசியாவின் மூன்று நாடுகளிலும் அமெரிக்காவின் இராணுவக் குறுக்கீடுகள் இடம்பெற்றன. தனக்குச் சாதகமான ஓர் ஆட்சியை இந்த நாடுகளில் ஒன்றிலேனும் நிறுவ இயலாத நிலையில், மூன்று நாடுகளையும் அமெரிக்கா பிரித்தது. தனக்குச் சாதகமான ஆட்சிகளை, ஒவ்வொரு நாட்டினதும் பிரிக்கப்பட்ட பகுதிகளில் நிறுவியது.
இந்தப் பிரிவினைகளில் எதற்கும், ஒரு தேசிய இன வேறுபாடு, அடிப்படையாக அமையவில்லை; மக்களின் அரசியல் தெரிவுகள் அடிப்படையாக அமையவில்லை. மூன்று பிரிவினைகளையும் நிரந்தரமாக்குகிற முயற்சிகளில் ஒன்று, 1975இல் தோல்வி கண்டு, வியட்னாம் ஒன்றுபடுத்தப்பட்டது.
இன்றும் வடகொரிய மக்களும் தென்கொரிய மக்களும் ஒன்றிணைய ஆவலாக உள்ளனர். அதற்குத் தடையாக அமெரிக்கா உள்ளது. ஜப்பானும் அமெரிக்காவுக்கு உடந்தையாக உள்ளது.
தாய்வானைத் தனி நாடாக, நிரந்தரமாகவே சீனாவிலிருந்து பிரிப்பதில், அமெரிக்கா கடந்த ஐம்பது ஆண்டுகளாக முனைப்புடன் உள்ளது. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடுமாற்றங்களும் தத்தளிப்புகளும் சீனாவுடன் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துமாறு, தாய்வானைத் தூண்டுகின்றன.
உலகில் எத்தனையோ பிரிவினைவாத இயக்கங்களை, அமெரிக்கா உருவாக்கி ஆதரித்திருக்கிறது. அவற்றில் ஒன்றேனும் குறிப்பாக, ஒரு தேசிய இனத்தின் விடுதலையையும் விமோசனத்தையும் கருத்தில் கொண்டு, ஆதரவு பெறவில்லை.
ஓர் எதிரியையோ, போட்டியாளையோ, அடங்க மறுக்கும் ஆட்சியையோ தண்டிக்க அல்லது மிரட்டுவதற்கே, அமெரிக்கா பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டுள்ளது. அதன் பின்விளைவுகள், தேசிய இனங்கள் மீது ஏற்படுத்துகிற இன்னல்கள் பற்றி, அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை.
மனித உரிமைகளின் பேராலும் அமெரிக்கக் குறுக்கீடுகள் நடந்துள்ளன. ‘ஆட்சி மாற்றம்’ எங்கே, எப்போது, எப்படி நடக்க வேண்டும் என்பதைப் பற்றிய முடிவுகள், எங்கேயோ இரகசியமாக எடுக்கப்படுகின்றன. இதன் இன்னொரு காட்சியே, சிரியாவில் அரங்கேறுகிறது.
உலக அலுவல்களில், அமெரிக்காவின் சரியும் செல்வாக்கை, எப்படியாவது தூக்கி நிறுத்த வேண்டிய தேவை, அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கு உண்டு. இப்போது சிரியா, அதற்கு வாய்ப்பான களமாகியுள்ளது.
இன்னொரு வகையில் சொல்வதானால், சிரியாவில் தோல்விகண்ட அமெரிக்க-மேற்குலக நலன்கள், மிகப்பெரிய சவாலுக்குட்பட்டுள்ளன. எனவே எவ்வாறேனும், சிரியாவில் ஒரு வெற்றியைப் பெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கவலை, ரஷ்யா ஓர் இராணுவ வல்லரசாக மீள்வதையும், சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எழுவதையும் பற்றியது.
ஏனெனில், அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்குக் கடும் சவால்களாக அவை உள்ளன. பெரிய கடனாளி நாடான அமெரிக்கா, உலகின் அதி வலிய பொருளாதாரம் என்ற தகுதியைத் துரிதமாக இழந்து வருகிறது. அரசியல் செல்வாக்கால், தன் உலக ஆதிக்கத்தைத் தக்க வைக்க இயலாததால், அமெரிக்கா தன் இராணுவ வலிமையிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளது.
சீனாவும் ரஷ்யாவும் மேலும் வலிமையடைய முன்பே, அவற்றைத் தனிமைப்படுத்திப் பலவீனப்படுத்தும் அமெரிக்கத் திட்டத்தின் பகுதியாகவே, அமெரிக்காவின் ஐரோப்பிய – ஆசிய நகர்வுகளை நோக்க வேண்டும்.
அதேவேளை, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மூலதனம், பெரும் இலாப நோக்கில், மலிவான கூலி உழைப்புள்ள நாடுகளுக்கு இடம்பெயர்த்ததால், தனது உற்பத்தித் தளங்களை இழந்த மேற்குலகு, மூன்றாமுலக நாடுகளின் உற்பத்திகளில் பெரிதும் தங்கியுள்ளது.
சீனாவின் இன்றைய தொழில் வளர்ச்சி, இவ்வாறான ஏற்றுமதிப் பொருளாதாரத்தைச் சார்ந்து விருத்தி பெற்றது. அதன் பயனாகத் தனது மூலவளங்களுக்கு ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் மிகவும் தங்கியுள்ள சீனா, தென்னமெரிக்காவிலும் ஆபிரிக்காவிலும் நேரடி, மறைமுக முதலீடுகளில் மிகுந்த அக்கறை காட்டுகிறது.
அங்கு, மேற்குலக நாடுகளின் அணுகுமுறையிலும் பார்க்க, சீன அணுகுமுறை வெற்றியளிக்க முக்கிய காரணம், நாடுகளின் உள்விவகாரங்களில் சீனா குறுக்கிடாமை ஆகும்.
குறிப்பாக, சகாராவுக்குத் தெற்கான ஆபிரிக்க நாடுகளில், வலுவடையும் சீனச் செல்வாக்கு, அமெரிக்காவின் ஆதிக்க நோக்கங்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, சீனாவுடன் நல்லுறவு பேணும் நாடுகளை, அமெரிக்கா இலக்கு வைக்கிறது.
அதேபோல, சோவியத் ஒன்றியத்தின் உடைவின் பின்பு, ரஷ்யாவுக்கு அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா மீறி, முன்னாள் ‘வார்சோ உடன்படிக்கை’ நாடுகளை மட்டுமன்றி, முன்னாள் சோவியத் குடியரசுகளையும் தனது தலைமையிலுள்ள இராணுவக் கூட்டணியான நேட்டோவுக்குள் (NATO) இழுத்துள்ளது. இவை, இப்போது சிரியாவில் அரங்கேறுவதை, விளங்க உதவும் அடிப்படைகளாகும்.
இங்கு கவனிக்க வேண்டிய மூன்றாவது அம்சம் யாதெனில், அமெரிக்காவுக்கு சார்பாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் பிரித்தானியா எடுத்துள்ள நிலைப்பாடாகும். சிரியா மீதான குண்டுத்தாக்குதல்களுக்கு அமெரிக்காவுக்கு ஒத்துழைத்த நாடு பிரித்தானியா.
பிரித்தானியாவின் இந்நிலைப்பாட்டை, இரண்டு வகையில் விளங்க இயலும். முதலாவது, பிரித்தானியாவில் நஞ்சூட்டப்பட்ட, ரஷ்ய உளவாளி விடயத்தில், எதுவித ஆதாரமும் இன்றி, ரஷ்யா மீது பிரித்தானியா குற்றஞ்சாட்டியது.
இறுதியில் அச்சம்பவத்துக்கும் ரஷ்யாவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதோடு, பிரித்தானியா திட்டமிட்டே பழியை, ரஷ்யா மீது போட்டது என்பது தெளிவாகியது. இதனால், கேவலப்பட்ட பிரித்தானியாவுக்கு ரஷ்யாவைக் குற்றஞ்சாட்ட, ஒரு நிகழ்வு தேவைப்பட்டது. அதற்குச் சிரியாவில் ‘இரசாயனத் தாக்குதல்’ என்ற கதை இட்டுக்கட்டப்பட்டது.
பிரித்தானியாவின் செயலுக்கான இரண்டாவது காரணம், மிகவும் சுவையானது. இதனுடன் தொடர்புடைய நபர், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயின் கணவரான பிலிப் மே ஆவார். இவர், Capital Group என்கிற முதலீட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரியாவார்.
இந்நிறுவனம், Lockheed Martin மற்றும் British Aerospace ஆகிய இரண்டு நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது. Lockheed Martin அமெரிக்காவின் பிரதானமான வான்பாதுகாப்பு ஆயுதங்கள், கருவிகள், உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். British Aerospace பிரித்தானியாவின் இராணுவ உபகரண விமானப்படைக் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.
சிரியாவின் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முதல்நாள், Capital Group இவ்விரண்டு நிறுவனங்களின் ஏராளமான பங்குகளை வாங்கியுள்ளது. மறுநாள் (சனிக்கிழமை), சிரியாவின் மீதான தாக்குதல்களுக்கு, இந்நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்ட உபகரணங்கள், குண்டுகள், தொழில்நுட்பம் என்பன பயன்படுத்தப்படுகின்றன.
திங்கட்கிழமை, இவ்விரண்டு நிறுவனங்களின் பங்குகளுக்கு மிகுந்த கேள்வி உண்டாகிறது. இந்நிறுவனப் பங்குகளின் விலை, பலமடங்கு உயர்கிறது. அதேவேளை, அமெரிக்க அரசாங்கம், Lockheed Martin நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தமொன்றை வழங்குகிறது. போர் ஒரு வியாபாரம் என்பது, இன்னொரு முறை நிரூபணமாகிறது.
பொருளாதார நலன்கள் முன்னிலைக்கு வருகையில், போர் அதன் பகுதியாகும். ஏகபோகத்தை மெதுமெதுவாக இழக்கும் நிலையில், அதைத் தக்கவைக்கும் இறுதி ஆயுதமாகப் போர் பயன்படுகிறது.
சிரியாவில் நாம் எதிர்நோக்கியிருப்பதும் இதைத்தான்.
ஆதிக்கத்துக்கான பேரரங்கில், களங்கள் பல; களமாடிகள் பலர்; சிரியா ஒரு சிறுதுளி.
Average Rating