வெளிநாட்டு இளம்பெண் மர்ம மரணம் சகோதரியின் அதிரடியால் நெருக்கடியில் கேரள போலீஸ்!!
‘கடவுளின் சொந்த நாடு’ என்று கேரளாவுக்கு ஒரு பெயர் உண்டு. இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் கேரளாவுக்கு இந்த பெயர் வரக்காரணமாகும். கேரளாவின் மற்றொரு சிறப்பம்சம் ஆயுர்வேதம். இதற்காகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கேரளாவில் குவிந்து வருகின்றனர்.கேரளாவின் இந்த சிறப்புகளை அறிந்து தான் லாத்வியா நாட்டை சேர்ந்த லிகா, இலீஸ் என்ற இளம் சகோதரிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்தனர். லிகாவுக்கு மனரீதியாக சிறிது பாதிப்பு உண்டு. இவருக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறவும், இலீசுக்கு யோகா கற்கவும் திட்டமிட்டிருந்தனர். இதன்படி திருவனந்தபுரம் அருகே போத்தன்கோடு என்ற இடத்தில் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் லிகா அனுமதிக்கப்பட்டார்.
அப்பகுதியிலுள்ள ஒரு ஆசிரமத்தில் இலீஸ் யோகா பயிற்சி பெற்று வந்தார். கடந்த மார்ச் 14ம் தேதி லிகா மருத்துவமனையிலிருந்து திடீரென மாயமானார். இதில் அதிர்ச்சியடைந்த இலீஸ் உடனடியாக போத்தன்கோடு போலீசில் புகார் செய்தார். ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் லிகாவை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாததால் வேதனையடைந்த அவரது சகோதரி இலீஸ், தனது சகோதரியை கண்டுபிடிப்பதற்காக அவரே களத்தில் குதித்தார். கேரளா முழுவதும் பயணம் செய்து மக்கள் அதிகமாக கூடும் பஸ்நிலையம் உட்பட பல இடங்களில் லிகாவின் படத்துடன் கூடிய நோட்டீஸ்களை ஒட்டினார். மேலும் லிகாவை கண்டுபிடிப்பவர்களுக்கு ₹1 லட்சம் பரிசும் அறிவித்தார். லிகாவின் கணவர் ஆன்ட்ரூஸ் திருவனந்தபுரத்திற்கு வந்து அவரும் மனைவியை தேடும் பணியில் ஈடுபட்டார். கடைசியில் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ராவை சந்தித்தனர். அவரோ இலீஸ் மற்றும் ஆன்ட்ரூசிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் கோவளம் அருகே ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் லிகாவின் உடல் தலை வேறுபட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது தன்னுடையை சகோதரி லிகாவின் உடல் தான் என்று இலீஸ் உறுதி செய்தனர். உடலை கண்டுபிடித்த உடனேயே அது தற்கொலை தான் என கூறி பைலை மூட போலீசார் தீர்மானித்தனர். ஆனால் தனது சகோதரி லிகா எந்தக் காரணம் கொண்டும் தற்கொலை செய்ய மாட்டார் என்றும், உடல் கிடந்ததை வைத்து பார்க்கும் போது அது கொலையாகத் தான் இருக்கும் என்றும் இலீஸ் உறுதியாக கூறினார். ஆனால் முதலில் இதை ஏற்கும் மனநிலையில் போலீஸ் இல்லை. எப்படியாவது இந்த பைலை மூடிவிட வேண்டும் என்ற திட்டத்தில் போலீசார் உறுதியாக இருந்தனர்.ஆனால் இலீசும் விடுவதாக இல்லை. அவருக்கு உதவி புரிந்த சமூக நல அமைப்பினரின் உதவியுடன் திருவனந்தபுரத்தில் நிருபர்களை சந்தித்து தனது சகோதரி லிகா கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், கேரள போலீசாரின் அலட்சியம் தான் லிகாவின் மரணத்திற்கு காரணம் என்றும் அவர் அதிரடியாக கூறினார். லிகாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்காமல் நான் கேரளாவை விட்டு செல்ல மாட்டேன் என்றும் அவர் கூறினார்.
இலீசின் இந்த அதிரடி கேரள போலீசுக்கும், கேரள அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உரிய விசாரணை நடத்த டி.ஜி.பி.க்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். லிகா மரணத்தில் உண்மை நிலையை கண்டுபிடிக்காவிட்டால் சர்வதேச அளவில் கேரளாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கேரள போலீசார் இந்த மரணத்திலுள்ள மர்ம முடிச்சை அவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Average Rating