ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)
கர்ப்பத்தின் ‘வசந்த காலம்’ என வர்ணிக்கப்படும் இந்த இரண்டாவது ட்ரைமஸ்டரில் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்த்து வருகிறோம். 21வது வாரம் முதல் இரண்டாம் ட்ரைமஸ்டரின் இறுதி வாரமான 25ம் வாரம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும் என இந்த வாரம் பார்க்கலாம்.
வாரம் 21
குழந்தை உடலில் கொழுப்பு உற்பத்தி அதிகமாக நடைபெறுவதால் தசை வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கும். முழுதாய் வளர்ந்த உடலின் உறுப்புகள் முதிர்ச்சியடையத் தொடங்கும். குழந்தையின் உடலில் எண்ணெய் சுரப்புகள் உற் பத்தியாகி மெழுகு போன்ற வழுவழுப்பான ‘வெர்னிக்ஸ் கேசியோசா’ (Vernix Caseosa) எனும் படலம் உருவாகும். ஈறுகள் உருவாகி வலுப்பெறத்தொடங்கும். தாயின் எடை சராசரியாக 5 கிலோ வரை அதிகரிக்கும்.
வாரம் 22
குழந்தையின் உடலில் உள்ள தசைகள் வலுவாகத் தொடங்கும். குழந்தையின் செவித்திறன் மேம்பட்டிருக்கும் என்பதால் தாய் ஏதேனும் பாடினாலோ குழந்தையுடன் பேசினாலோ குழந்தைக்கு அது கேட்கத் தொடங்கும். குழந்தை வயிற்றில் அதிகமாக அசையும் காலம் இது. குறிப்பாக, ஓசை கேட்கும்போது, ஒளி அளவுகள் மாறுபடும்போது குழந்தை அதற்கு ஏற்ப எதிர்வினை செய்யும். தாய்க்கு அதிகாலையில் தோன்றும் மார்னிங் சிக்னெஸ் நீங்கியிருக்கும்.
கால் வீக்கம், மூட்டு வீக்கம் இருக்கும். கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பால், மீன், முட்டை, முருங்கைக்காய் உள்ளிட்ட வெள்ளை நிற உணவுப் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு போன்ற மஞ்சள் வண்ண காய்கறிகள், பழங்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
வாரம் 23
குழந்தைக்கு சருமம் வளர்ந்திருந்தாலும் தசை வளர்ச்சி முழுமையாக நிறைவடைந்திருக்காது என்பதால் சுருக்கங்களோடுதான் இன்னமும் இருக்கும். எடை அதிகரித்துக்கொண்டிருக்கும். லேனுகோ (Lanugo) எனும் மென் ரோமங்கள் சில குழந்தைகளுக்கு அடர்த்தியாக வளரத்தொடங்கியிருக்கும். குழந்தையின் உடலில் எண்ணெய் சுரப்புகள் வளரத்தொடங்கியிருக்கும். தாயின் பிறப்புறுப்பில் இருந்து சிறிய அளவிலான நிறமற்ற அல்லது வெளிர் மஞ்சள் திரவம் சுரக்கும்.
இந்த திரவத்தின் அளவு அதிகமாக இருந்தாலோ, சகிக்க முடியாத துர்நாற்றம் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். கர்ப்பத்தால் வயிற்றுப்பகுதி விரிவடைவதால் தோலில் சிலருக்கு அரிப்பு இருக்கக்கூடும். சருமம் உலராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கை முறையிலான, ஆரோக்கியமான லோஷன்களைப் பயன்படுத்தி சருமத்தின் மாய்ஸ்சரைசரைப் பராமரிக்கலாம்.
வாரம் 24
குழந்தையின் உடல் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தியாகத் தொடங்கியிருக்கும். குழந்தையின் உடல் தற்பாதுகாப்புக்குத் தயாராகிவிட்டது என்பதன் அறிகுறி இது. குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். நோய் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு எதிராக குழந்தையின் உடல் சுயமாகப் போராட ஆரம்பிக்கும் காலம். அன்னையின் தொடுதல், பேசுதல், அன்னைக்கு ஏற்படும் விக்கல் போன்றவற்றை குழந்தையால் உணர முடியும். குழந்தையின் வளர்ச்சி தீவிரமாக இருக்கும் காலம் என்பதால் தாய் உடல் எடை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் மாதம் இரண்டு கிலோ எடையாவது அதிகரிப்பது தாய் சேய் இருவரின் உடலுக்குமே நல்லது.
வாரம் 25
குழந்தையின் சருமம் முழு வளர்ச்சியடைந்திருக்கும். மெல்லிய ஊடுருவும் சருமத்திலிருந்து அடர்த்தியான இயல்பான சருமம் உருவாகியிருக்கும். கை, கால்களில் மடிப்புகள் இருக்கும். குழந்தையின் இதயத் துடிப்பை ஸ்டெதஸ்கோப் மூலம் நன்கு உணரலாம். கரு நன்கு வளர்ந்து கொண்டிருப்பதால் அன்னையின் வயிறு முன்புறம் மட்டும் இன்றி பக்கவாட்டிலும் பருக்கத் தொடங்கும். தாயின் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ரத்தநாளங்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக மலச்சிக்கல், மூலப்பிரச்சனை, அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மூலப்பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தலாம். எண்ணெய் பலகாரங்கள், ஜீரணிக்க கடினமானவற்றைத் தவிர்ப்பதன் மூலம் அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மலமிளக்கிகள் எனப்படும் லேக்ஸேட்டிவ் மாத்திரைகள், மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இன்றி எடுத்துக்கொள்ளவே கூடாது.
மொத்தத்தில் இந்த இரண்டாவது ட்ரைமஸ்டரில் தாயின் வயிற்றில் உள்ள கரு ஒரு முழு வடிவான குழந்தையாக உருப்பெற்று இருக்கும். தலை முதல் கால் வரை எல்லா உறுப்புகளும் உருவாகி இருக்கும். மூளை முதல் சிறுநீர் மண்டலம் வரை எல்லா உறுப்புகளும் செயல்படத் தொடங்கியிருக்கும். குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் உருவாகி இருக்கும். வெளியில் ஒலிக்கும் ஓசை, உருவாகும் வெளிச்சம் இரண்டுக்குமே குழந்தையின் உறுப்புகள் எதிர்வினை செய்யும்.
இவ்வாறு இந்த உலகத்தை காண்பதற்கான, எதிர்கொள்வதற்கான அடிப்படையான விஷயங்கள் எல்லாம் இந்த இரண்டாவது ட்ரைமஸ்டரில்தான் குழந்தைக்கு உருவாகும். மறுபுறம் தாயின் உடல் முதல் ட்ரைமஸ்டரில் இருந்ததைப் போன்ற பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதால் கர்ப்பத்தை எதிர்கொள்வதற்கான மனபலம் தாய்க்கு உருவாகி இருக்கும். தேவையற்ற பயங்கள், பதற்றங்கள் நீங்கியிருக்கும். ஆனால், வயிறு பெரிதாகிக்கொண்டேயிருப்பதால் அடிவயிற்றில் ஏற்படும் சிறுநீர்த்தொற்று போன்ற பிரச்சனைகள், ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மலச்சிக்கல், கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இந்தப் பிரச்சனைகளுக்கு முடிந்தவரை எளிய கை வைத்தியங்களை மேற்கொள்ளப் பாருங்கள். சில மருந்து, மாத்திரைகள் பக்கவிளைவை உருவாக்கலாம் எனபதால், மருத்துவரின் அனுமதியின்றி மருந்து, மாத்திரைகள் பக்கம் செல்ல வேண்டாம். பெரும்பாலான கர்ப்ப கால பிரச்சனைகள் பிரசவத்துக்கு பிறகு முழுமையாக நீங்கிவிடும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
Average Rating