ஹேப்பி ப்ரக்னன்ஸி!!(மகளிர் பக்கம்)
இரண்டாவது ட்ரைமஸ்டரில் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை ஒவ்வொரு வாரமும் எப்படி இருக்கும். தாயின் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும். அதற்கான எளிய தீர்வுகள் என்னென்ன என்பதை எல்லாம் கடந்த இதழ்களில் பார்த்தோம். இந்த இதழில் இரண்டாவது ட்ரைமஸ்டரில் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன என்று பார்ப்போம்.
இரண்டாவது ட்ரைமஸ்டர் என்பது தாய்க்குதான் தொடக்க கால கர்ப்பப் பிரச்சனைகள், பதற்றங்கள் எல்லாம் நீங்கி, ஓரளவு தன்னம்பிக்கையோடும் தெம்போடும் இருக்கும் பருவம். வயிற்றில் உள்ள கருவுக்கோ அது ஒரு குழந்தையாக உருப்பெறும் முக்கியமான காலகட்டம். இதனால், கரு வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் ஸ்கேன் பரிசோதனை மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
பொதுவாக, இரண்டாவது ட்ரைமஸ்டரில்தான் குழந்தையின் மூளை வளர்ச்சி, இதய வளர்ச்சி போன்றவற்றையும் டவுன் சிண்ட்ரோம் எனப்படும் வளர்ச்சிக்குறைபாடு உள்ளதா என்பதையும் ஸ்கேன் மூலம் கண்டறிவார்கள். சிலருக்கு கருவின் வளர்ச்சியில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மேலும் இரண்டொரு முறை ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால், கருவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் பதற்றப்பட வேண்டாம். பரிசோதனைகளுக்கான தாயின் முழுமையான ஒத்துழைப்பே குழந்தையின் ஆரோக்கியத்துக்கான நல்ல வழி.
Maternal Serum Alpha-Fetoprotein (MSAFP) and multiple marker screening:
எம்.எஸ்.ஏ.எஃப்.பி என்பது கருவின் சீரம் ஆல்பா-ஃபீட்டோபுரோட்டீன் அளவு எவ்வாறு உள்ளது என்பதை அளவிடும் பரிசோதனையாகும். இந்த புரோட்டீன் கருவில் இருந்து வெளிப்படுகிறது. இந்த அளவு அதிகமாக இருந்தால் கருவுக்கு டவுண் சிண்ட்ரோம் எனும் வளர்ச்சிக் குறைபாடோ ஸ்பினா பிஃபிடா (Spina bifida) போன்ற நியூட்ரல் ட்யூப் பிரச்சனைகள் இருக்கக்கூடும். எம்.எஸ்.ஏ.எஃப்.பி பரிசோதனைக்கு ரத்தம் சேகரிக்கும்போதே அதே சாம்பிளில் ஹார்மோன்ஸ் எஸ்ட்ரியோல் (Hormones estriol) மற்றும் ஹெச்.சி.ஜி பரிசோதனைகளும் செய்யப்படும். இதைக்கொண்டு டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்புகள் ஏதும் இருந்தால் அறியலாம்.
Non-Invasive Prenatal Testing (NIPT) screening:
இது ஒரு டி.என்.ஏ பரிசோதனை. கருவுற்ற 10 வாரங்கள் கழித்துச் செய்யப்படும். தாயின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுத்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனை மூலம் 99 சதவிகிதம் டவுண் சிண்ட்ரோம் பாதிப்புகளைக் கண்டறியலாம். இதைத் தவிர வேறு ஏதேனும் குரோமோசோம் குறைபாடுகள் இருந்தாலும் இந்தப் பரிசோதனை மூலம் அறியலாம்.
அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள்
சோனோகிராம் எனப்படும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை பொதுவாக 20வது வாரம் செய்யப்படுகிறது. அவசியப்பட்டால் கர்ப்ப காலத்தின் எந்தத் தருணத்திலும் மருத்துவர் இந்தப் பரிசோதனையை மேற்கொள்வார். ஏனெனில், சோனோகிராம் பல்வேறு காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது. பிரசவ தேதியை நிர்ணயிக்க, ஒன்றுக்கும் மேற்பட்ட கரு இருந்தால் கண்டறிய, ப்ளெசன்டா ப்ரீவியா எனும் நஞ்சுக்குழாய் பிரச்னையைக் கண்டறிய, குழந்தையின் மந்தமான வளர்ச்சி, தவறான இடத்தில் கருத்தங்குவது, குழந்தையின் பால் மாறுபாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக சோனோகிராம் மேற்கொள்ளப்படலாம்.
சோனோகிராம் பரிசோதனையின் போது தாயின் வயிற்றில் ஒரு கருவியை வைத்துத் தடவுவார்கள். அதில் இருந்து உருவாகும் சப்த அலைகள் உடலுக்குள் சென்று எதிரொலிப்பதற்கு ஏற்ப அந்த அலைகள் படமாக வார்க்கப்படும். அதைக்கொண்டு கணிப்பொறி மானிட்டரில் வயிற்றில் உள்ள கருவைக் காணலாம். தற்போது முப்பரிமாண சோனோகிராம்கூட உள்ளன. இதைக்கொண்டு மேலும் துல்லியமாக கருவின் அசைவை, வளர்ச்சியை உணர முடியும்.
குளுக்கோஸ் ஸ்கிரீனிங் (Glucose screening)
கருவுற்ற 24வது வாரம் முதல் 28வது வாரத்துக்குள் இந்த குளுக்கோஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கணக்கிடப்படுவதால் தாய்க்கும் சேய்க்கும் டயாபடீஸ் ஏதும் இருந்தால் கண்டறியலாம். வயிற்றில் உள்ள கருவுக்கு டயாபடீஸ் இருக்கும்போது குழந்தை அதிக எடையுடன் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால், பிரசவம் சிக்கலாகக்கூடும். மேலும், பிரசவத்துக்குப் பிறகும் குழந்தைக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். கர்ப்பகால டயாபடீஸ் என்பது அலட்சியப்படுத்தக்கூடாத விஷயம். பரம்பரையாக டயாபடீஸ் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனையை அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
அமினோசென்டெசிஸ் (Amniocentesis)
பொதுவாக இந்தப் பரிசோதனை எல்லோருக்கும் செய்யப்படுவதில்லை. 35 வயதைக் கடந்த பெண்கள் கருவுறும்போது இயல்பாக அவர்களுக்கு சில கர்ப்பகால சிக்கல்கள் உருவாகக்கூடும். அதைக் கண்டறியவே இந்தப் பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். கருவின் உடலில் ஏதேனும் ஜெனடிக் டிஸ்ஆர்டர் இருந்தால் இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
எம்.எஸ்.ஏ.எஃப்.பி, மல்ட்டிப்பிள் மார்க்கர், செல் ஃப்ரீ டி.என்.ஏ பரிசோதனை போன்றவற்றில் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை என்றாலும் இந்த அமினோசென்டெசிஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில், தாயின் அடிவயிற்றில் ஊசியிட்டு அமினியோட்டிக் சாக்கிலிருந்து திரவம் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.
ஃபீட்டல் டாப்ளர் அல்ட்ரா சவுன்ட் (Fetal Doppler Ultra Sound)
டாப்ளர் அல்ட்ரா சவுண்ட் என்பது சப்த அலைகளை உடலில் செலுத்தி ரத்த ஓட்டம் எவ்வாறு உள்ளது எனக் கண்டறிவதாகும். ப்ளெசன்டாவுக்கும் வயிற்றில் உள்ள கருவுக்கும் போதிய ரத்த ஓட்டம் முறையாகச் செல்கிறதா என்பதைக் கண்டறிய இந்தப் பரிசோதனை மிகவும் உதவுகிறது.
ஃபீட்டோஸ்கோப்பி (Fetoscopy)
ஃபீட்டோஸ்கோப்பி எனும் மெலிதான, நெகிழ்தன்மையுள்ள கருவி மூலம் கருவின் நிலையைக் கண்டறியும் பரிசோதனை இது. மற்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலாத குறைபாடுகளை இந்தப் பரிசோதனையில் கண்டறியலாம். ஆனால், இந்தப் பரிசோதனை பொதுவாக, அனைவருக்கும் செய்யப்படுவதில்லை. மேலும், இந்தப் பரிசோதனையில் தாய்க்கும் கருவுக்கும் சிறிது பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால், மிகவும் அவசியம் என்றால் தவிர மற்ற நேரங்களில் இந்தப் பரிசோதனை செய்யப்படுவது இல்லை.
Average Rating