ஹேப்பி ப்ரக்னன்ஸி : பிரசவ கால கைடு – 16!!(மகளிர் பக்கம்)
ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரின் கிளைமேக்ஸை நெருங்கிவிட்டோம் நாம். இதுவரை கர்ப்பத்தின் ஒவ்வொரு வாரத்திலும் குழந்தையின் நிலை எப்படி இருக்கும்… தாய்க்கு என்னென்ன உபாதைகள் ஏற்படும் என்று பார்த்து வந்தோம். இந்த இதழில் மூன்றாவது ட்ரைமஸ்டரின்போது என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும், பிரசவம் எனும் அற்புதம் எப்படி நிகழும் என்று பார்ப்போம்.
குரூப் பி ஸ்ட்ரெப்டோ கோஸ் பரிசோதனை (Group B streptococcus screening) தாயின் பிறப்புறுப்பு மற்றும் மலக்குடலில் பி ஸ்ட்ரெப் பாக்டீரியா தொற்று ஏதும் உள்ளதா என்பதற்கான பரிசோதனை எடுக்கப்படும். பொதுவாக, 35 முதல் 37 வாரத்துக்குள் இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. சராசரியாக 30 சதவிகிதம் வரை ஆரோக்கியமான பெண்களுக்குக்கூட இந்த பாக்டீரியா உடலில் இருக்கவே செய்கின்றன.
ஆனால், பிரசவ காலத்தில் இந்த பாக்டீரியா அன்னையின் உடலில் இருக்கும்போது அது குழந்தைக்கும் தொற்றாக மாற வாய்ப்புள்ளது. மூளை வளர்ச்சி பாதிப்பு, பார்வையிழப்பு, கேட்கும் திறன் இழப்பு உட்பட குழந்தையின் உயிரையே பறிக்கும் அளவுக்கு மோசமான பிரச்சனையாக இது மாறக்கூடும் என்பதால் இந்தப் பரிசோதனை அவசியமானதாகிறது. இந்த பாக்டீரியா தொற்று தாய்க்கு இருந்தால் தேவையான ஆன்டி பயாட்டிக் மருந்து தரப்படும்.
ஸ்கேன் பரிசோதனை
மூன்றாவது ட்ரைமஸ்டரின் தொடக்கத்தில் வயிற்றில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை எப்படி உள்ளது, குழந்தை எப்படி தங்கியுள்ளது, பனிக்குடத்தின் தன்மை எப்படி உள்ளது என்பது உட்பட பல்வேறு விஷயங்களை மதிப்பிட ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. சில சமயங்களில் அன்னையின் உடல் பக்குவத்துக்கு ஏற்ப இரண்டு மூன்று ஸ்கேன் பரிசோதனைகள்கூட எடுக்கப்படலாம்.
குழந்தையின் இதயத் துடிப்பு பரிசோதனை (Electronic fetal heart monitoring)
குழந்தை உருவான 20வது வாரம் முதலே குழந்தையின் இதயத்துடிப்பை மருத்துவர் கண்காணித்து வருவார் என்றாலும் மூன்றாவது ட்ரைமஸ்டரின்போது இந்தப் பரிசோதனையைச் செய்வதன் மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு என்ன நிலையில் உள்ளது. இயல்பான பிரசவத்துக்குக் குழந்தை தயாராக உள்ளதா போன்றவற்றை அறியலாம்.
நான்ஸ்ட்ரெஸ் டெஸ்ட் (Nonstress test)
கர்ப்ப கால சிக்கல்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இந்தப் பரிசோதனை வாரம் ஒருமுறை செய்யப்படும். இரட்டைக் குழந்தை உடையவர்கள், டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது இந்தப் பரிசோதனை செய்வது அவசியமாகிறது. இந்தப் பரிசோதனையின் போது, தாயின் அடிவயிற்றில் ஃபெடல் மானிட்டர் கருவியைக் கொண்டு அன்னையின் வயிற்றில் உருளும் குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படுகிறது.
கான்ட்ராக் ஷன் ஸ்ட்ரெஸ் டெஸ்ட் (Contraction stress test)
இதுவும் சிக்கல் அதிகம் உள்ள கர்ப்பிணிகளுக்குச் செய்யப்படும் பரிசோதனை தான். ஆக்ஸிடோசின் அல்லது நிப்பிள் தூண்டுதல் கொடுக்கப்படும்போது வயிற்றில் உள்ள குழந்தையின் எதிர்வினை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிவதன் மூலம், அந்தக் குழந்தைக்கு பிரசவத்தை எதிர்கொள்ளும் திறன் உள்ளதா இல்லையா என்பது மதிப்பிடப்படுகிறது.
பயோபிசிக்கல் ப்ரொபைல் (Biophysical profile)
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலமாகவோ நான் ஸ்ட்ரெஸ் பரிசோதனையுடன் இணைந்தோ இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் குழந்தை உடல் நிலை, எடை, உயரம் ஆகியவை மதிப்பிடப்படுகிறது.
பிரசவத்தின் மூன்று நிலைகள்
பத்து திங்கள் சுமந்தது எல்லாம் சுமையே அல்ல பிரசவம் எனும் அற்புதமான தருணம்தான் தாயாகப் போகும் பெண்ணுக்கு முக்கியமான காலகட்டம். பிரசவத்தை பெண்ணின் மறு ஜென்மம் என்று சொல்வார்கள். போதுமான மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறு ஜென்மமாகத்தான் இருந்தது. நவீன மருத்துவம் நன்கு வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் அப்படி இல்லை. பிரசவம் என்பதும் சுகமான சுமைதான்.
பிரசவம் என்ற முக்கியமான நிகழ்வை மருத்துவ ரீதியாக மூன்று கட்டங்களாகப் பிரிக்கிறார்கள் நிபுணர்கள். பொதுவாக, முதல் பிரசவம் எனும் லேபர் என்பது 12-24 மணி நேரம் நீடிக்கும். அடுத்தடுத்த பிரசவங்கள் என்றால் நேரம் குறையக்கூடும். பிரசவத்தின் மூன்று கிளைமேக்ஸ் கட்டங்கள் என்னென்ன… அப்போது தாய்க்கும் குழந்தைக்கும் என்னென்ன உடலியல் மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.
பிரசவத்தின் முதல் நிலை
முதல் நிலைதான் பிரசவம் எனும் நிகழ்வின் மிக நீண்ட காலம். இது சுமார் 20 மணி நேரம் வரைகூட நீடிக்கக்கூடும். தாயின் கர்ப்பப்பைவாய் விரிவடையத் தொடங்கியது முதல் அது முழுமையாக சுமார் 10 செ.மீ. அளவுக்கு விரிவடைவது வரை உள்ள காலகட்டத்தை இது குறிக்கிறது. அன்னையின் கர்ப்பப்பைவாய் மூன்று அல்லது நான்கு செ.மீ. வரை விரிவடைந்ததுமே பிரசவ வலி தொடங்கிவிடும்.
நேரம் செல்லச் செல்ல வலி மெலிதாக அதிகரிக்கும். 15 முதல் 20 நிமிடங்களுக்குள் தொடங்கும் பிரசவ வலி ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சுமார் 60-90 விநாடிகள் நீடிக்கும். இதை லேடண்ட் பேஸ் என்பார்கள். அதாவது வலியின் தொடக்க நிலை இது. கர்ப்பப்பைவாய் நான்கு முதல் எட்டு செ.மீ. வரை விரிவடையும்போது வலியானது சராசரியாக மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை தோன்றி சுமார் 45 விநாடிகள் நீடிக்கும்.
முதுகுவலி ஏற்பட்டு பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கும். இந்த நிலையை ஆக்டிவ் பேஸ் என்பார்கள். சில சமயங்களில் அம்னியோட்டிக் சவ்வு பாதிக்கப்பட்டாலோ பனிக்குடம் உடைந்தாலோ வலி மேலும் அதிகமாகக்கூடும். கர்ப்பப்பைவாய் எட்டு முதல் பத்து செ.மீ. வரை விரிவடைவதை ட்ரான்சிசன் பேஸ் என்பார்கள். இந்தக் கட்டத்தில் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை தோன்றும் வலி சராசரியாக ஒரு நிமிடம் நீடிக்கும்.
தாயின் மலக்குழாயில் அதிக அழுத்தம் ஏற்படும். முதுகுவலி வலிமையாக இருக்கும். ரத்தக் கசிவும் அதிகரித்திருக்கும். உங்களின் ஒவ்வொரு வலியும் உங்கள் குழந்தையை உங்களிடம் கொண்டு வருகிறது என்பதை கவனியுங்கள். மனதை வலியில் இருந்து திசை திருப்ப இசை கேட்பது, மூச்சை ஆழமாக உள்ளே இழுத்துவிடுவது போன்றவற்றைச் செய்யலாம்.
பிரசவத்தின் இரண்டாம் நிலை
பிரசவத்தின் இரண்டாம் நிலை என்பது அன்னையின் கர்ப்பப்பைவாய் 10 செ.மீ. வரை விரிவடைந்த பிறகு தொடங்குகிறது. குழந்தை நல்லபடியாக பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை பிரசவத்தின் இரண்டாம் நிலை என்றே சொல்கிறார்கள். முதல் நிலையில் இருந்ததைப் போன்று பிரசவ வலி தீவிரமாக இருக்காது. வலி மெல்ல குறைந்து வருவதை உணர முடியும். இரண்டு முதல் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை சுமார் 60-90 விநாடிகள் நீடிப்பதாக வலி இருக்கும்.
குழந்தையை வெளித்தள்ளிவிட வேண்டும் என்பதற்கான தீவிரமான மனநிலை ஒன்று தாய்க்கு ஏற்பட்டிருக்கும். உண்மையில் பிரசவத்தின் இரண்டாம் நிலைதான் கிளைமேக்ஸ். இந்த நிலை நிறைவடையும்போது உங்கள் செல்லக் குழந்தை இந்த உலகத்துக்கு வந்திருக்கும். எனவே, மருத்துவர் சொல்வதை கவனமாகப் பின்பற்றுங்கள்.
பிரசவத்தின் மூன்றாம் நிலை
குழந்தை பிறந்த பிறகு மூன்றாம் நிலை தொடங்குகிறது. இதுதான் பிரசவகட்டத்தின் குறுகிய நிலை. அதிகபட்சமாக 20 நிமிடங்கள். குழந்தை பிறந்த பிறகும் சிலருக்கு மெல்லிய இடுப்பு வலி இருக்கும். இந்த நிலையில் குழந்தையின் தொப்புள் கொடி கத்தரிக்கப்படும். நுரையீரலில் பனிக்குட நீர் ஏதும் இருந்தால் வெளியேறுவதற்காக மருத்துவர் குழந்தையை தலை கீழாகப் பிடிப்பார். இதனால், நுரையீரல் சீராகத் செயல்படத் தொடங்கியதும் ஏற்படும் அசெளகர்யத்தால் குழந்தை வீறிட்டு அழும். இப்படியாக பிரசவத்தின் மூன்று நிலைகளும் முடிவுக்கு வந்து, ஒரு புதிய உயிர் இம்மண்ணுக்கு வந்திருக்கும்.
Average Rating