பணத்துக்காக பெற்ற குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்!!(உலக செய்தி)
பெண் என்பவள் பூவுக்கு ஒப்பிடப்படுகிறாள். அழகு, மென்மை, அன்பு போன்றவற்றுக்கு உதாரணமாக பேசப்படுபவள் பெண் என்றால் மறுப்பதற்கில்லை. ஆனால், இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என கேட்கச்செய்யும் சில பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எதற்கெல்லாம் பெண் போற்றப்படுகிறாளோ, அவற்றிலெல்லாம் கூட, மோசமான உதாரணமாக சொல்லப்பட்ட சில பெண்களும் வரலாற்றில் இருந்துள்ளார்கள். அப்படி ஒரு கொடூரப் பெண்மணி பற்றிய பதிவு தான் இது.
பெல்லே குன்னஸ் எனும் இயற்பெயர் கொண்ட இவள், உலகையே நடுங்கச்செய்த ஒரு கொலைக்காரி. பணத்துக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் தன் கணவர்மார், பெற்ற குழந்தைகள், காதலர்கள் மற்றும் வளர்ப்பு பிள்ளைகள் என, 25 – 40 பேர் வரையிலும் கொன்று குவித்திருக்கிறாள்.
நோர்வேயின் செல்பு நகருக்கு அருகிலுள்ள ஓர் கிராமத்தில், வறுமையான குடும்பத்தில் பிறந்த இவள், தன் இளவயதில் அமெரிக்காவிற்கு வேலை தேடிச்சென்றிருக்கிறாள். ஆனால் அங்கே சென்ற பிறகு தான், பெல்லேவின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வருகிறது. பணப் பிசாசு பிடிக்கும் என்பார்களே. பெல்லேவுக்கும் அதே பணப்பிசாசு பிடித்துக்கொள்கிறது. பணம் மீது தீரா தாகம் உருவாகிக்கொண்டே செல்கிறது.
பணம்… பணம்… பணம்… அவள் மூச்சு, பேச்சு, செயல் என அனைத்திலும் பண வெறி ஆட்டிப்படைக்கிறது. எப்படியாவது பணத்தை அடைய வேண்டும், பணக்காரியாக வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவள் கண்முன்னால் தெரிந்தது தான் காப்புறுதி பணம்!
காப்புறுதி பணத்திற்காக சிறுசிறு தவறுகளை செய்ய ஆரம்பித்தவள், காலப்போக்கில் மாபெரும் அநியாயங்களையும் இழைக்கத் தொடங்குகிறாள். அவள் செய்த மிகப்பெரிய தவறுகளும், விபத்தாகவே வெளி உலகுக்கு தென்பட்டது அவளின் கைங்கரியத்தால்.
ஒவ்வொரு செயலையும், பெல்லே திட்டமிட்டு நடத்தியிருக்கிறாள் என்பது, நீண்ட காலத்திற்குப் பிறகு தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரோக்கியமாக இருந்த கணவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறப்பது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு திடீரென வைரஸ் காய்ச்சல் தாக்கி இறப்பது, பல மில்லியன் டொலருக்கு காப்புறுதி செய்திருந்த விவசாய நிலம் திடீரென்று தீப்பிடித்து எரிவது என, எதாவது நிகழ்ந்து கொண்டேயிருந்தது. இப்படியாக அவள் கொன்றது மொத்தம் நாற்பது பேரை என சொல்லப்படுகிறது.
1893ஆம் ஆண்டு மேட்ஸ் சோர்ன்சன் என்பவரை திருமணம் செய்து கொள்ளும் பெல்லே, கணவருடன் சேர்ந்து, ஓர் உணவகத்தை ஆரம்பிக்கிறாள். நாளடைவில் வியாபாரம் பெருகிக் கொண்டே செல்கிறது.
இவர்களுக்கு கரோலின், ஆக்சல், மைர்டல் மற்றும் லக்கி என நான்கு குழந்தைகள் பிறக்கிறார்கள். இவர்களைத் தவிர ஜென்னி ஓல்சன் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். கணவர் மற்றும் பிள்ளைகள் என அனைவரின் பெயரிலும், ஏராளமான காப்புறுதிகளை வாங்குகிறாள்.
இப்படியிருக்கையில் அவள் முதலில் தன் கைவரிசையை காட்டியது, அவர்களது கடையில் தான். ஒரு நாள் இரவு அவர்களது கடை திடீரென தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. அந்த நேரத்தில் கடையில் யாருமில்லை என்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதற்கான காப்புறுதிப் பணம் கிடைக்கிறது. குறுகிய நாட்களில் கை நிறையக் கிடைத்த பணம் அவளை திக்குமுக்காடச் செய்கிறது.
தொடர்ந்து இப்படியே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று மனதுக்குள் தீர்மனித்துக்கொள்கிறாள். அடுத்து அவளின் அடுத்த இலக்கு குழந்தைகள். வீட்டில் இவர்களுக்கு கொடுக்கவென்றே விஷச்செடியை வளர்க்கிறாள். முதலில் கரோலின் மற்றும் ஆக்சலுக்கு அதை உணவில் கலந்து கொடுக்க இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழக்கிறார்கள். ஆனால், உடல் நலக்குறைவினால் தன் குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக அழுது தீர்க்கிறாள் பெல்லே.
பெருங்குடல் பாதிப்படைந்தவர்களின் அறிகுறிகளும், இந்த விஷத்தை உண்டவர்களின் அறிகுறிகளும் ஒன்றாக இருக்குமென்பதால் சட்டத்தின் பிடியிலிருந்தும், எளிதாக தப்பித்துக் கொள்கிறாள். இரண்டு குழந்தைகளின் காப்புறுதி பணமும் கையில் கிடைக்கிறது. அதோடு தான் செய்த தவறினை எளிதாக சமாளித்து விடலாம், அதனை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்றதும் இன்னும் தைரியம் அதிகமாகிறது. அடுத்த 1900ஆம் ஆண்டு பெல்லேவின் கணவரும் உயிரிழக்கிறார். அவர் பெயரில் இரண்டு காப்புறுதி வைப்புகள் போடப்பட்டிருந்தன. இரண்டின் பணமுமே பெல்லேவிற்குக் கிடைக்கிறது.
ஆனால் இந்த திடீர் மரணம் சந்தேகத்தை கிளப்பவே, வழக்கு பதியப்படுகிறது. அரசாங்கம் சார்பாக கணவரின் உடலை சோதனையிட்டவர்கள் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள். ஆனால் பெல்லே சுதாகரித்துக் கொண்டு, தனக்கு சார்பாக ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்கிறாள். அவரோ, பெல்லேவின் கணவருக்கு நீண்ட நாட்களாக இதயப் பிரச்சினை இருந்திருக்கிறது என்றும், ஆனால் அதனை அவர் சரிவர கண்டுகொள்ளவில்லையென்பதால், இதயம் பலவீனமடைந்து இறந்துவிட்டார் என வாதாடி சாதிக்கிறார். இந்த முறையும் பெல்லேவுக்கே வெற்றி.
இப்படி அடுத்தடுத்து மூன்று மரணங்களும் நிகழ்ந்துவிட்டதால், இனியும் அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த அவள், தன்னுடைய குழந்தைகளுடன் 1901ஆம் ஆண்டு இண்டியானாவுக்கு குடிபெயர்கிறாள்.
அங்கே 42 ஏக்கரில் விவசாய நிலம் வாங்கி, அதற்கும் காப்புறுதி செய்கிறாள். திடீரென்று ஒரு நாள் நிலத்தில் விளைந்திருந்த செடிகள் எல்லாம் பற்றி எரிகிறது. குழந்தைகளுடன் அங்கிருந்த வீட்டில் தங்கியிருந்த பெல்லே அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள். அவளின் எண்ணப்படியே, விரைவில் எரிந்த நிலத்துக்கான காப்புறுதி பணமும் கிடைக்கிறது.
மீண்டும், 1902ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பீட்டர் என்பவரை பெல்லே, மறுமணம் செய்துகொள்கிறாள். பீட்டருக்கு முதல் மனைவி மூலமாக இரண்டு பெண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். மனைவி விபத்தில் உயிரிழந்துவிடவே பெல்லேவை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் அவர்.
சேர்ந்து வாழ ஆரம்பித்த சில நாட்களிலேயே, பீட்டரின் இரண்டாவது குழந்தை மர்மமான முறையில் உயிரிழக்கிறது. இதனால் சந்தேகப்பட்ட பீட்டர், பெல்லே குறித்த பழைய தகவல்களை எல்லாம் அறிந்துகொள்கிறார். எதோ சரியில்லை என்பதை உணர்ந்தவர் மூத்தமகளான ஸ்வான்ஹில்டை, உறவினர் வீட்டில் தங்கி படிக்க அனுப்பி விடுகிறார். பெல்லேவிடம் பழகி உயிர் தப்பிய ஒரே குழந்தை ஸ்வான்ஹில்ட் மட்டும் தான்.
1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாவது கணவரான பீட்டரையும் கொலை செய்கிறாள் பெல்லே. பெல்லேவின் குற்றங்களை ஓரளவுக்கு யூகித்துவிட்ட பீட்டர், பெல்லேவிடம் சண்டையிடுகிறார். என்ன செய்து கொண்டிருக்கிறாய் ஏதோ தவறு செய்கிறாய் என்று மிரட்டுகிறார். பெரும் விவாதமாக சண்டை மாறிய நிலையில், இறைச்சி வெட்டுவதற்கு பயன்படுத்தும் அரிவாளை எடுத்து பீட்டரின் தலையிலேயே போடுகிறார். அங்கேயே பீட்டர் சுருண்டு விழுந்து உயிரிழக்கிறார்.
விசாரணையில், சமையலறையில் இருந்த க்ரைண்டர் தவறி அவர் தலையில் விழுந்து விட்டது என்று கூறி நம்ப வைக்கிறாள். உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பீட்டருக்கு விஷம் கொடுத்திருப்பது உறுதியாகிறது ஆனாலும் சரியான ஆதாரங்கள் இல்லையென்பதால், அதிலும் தப்பித்துக் கொள்கிறாள்.
ஆறே மாதத்தில் பீட்டர் பெயரிலிருந்த காப்புறுதி பணமும் கைக்கு வருகிறது. இப்போதும் பெல்லேவுக்கு பணத்தாசை விட வில்லை. இம்முறை தன்னை மறுமணம் செய்து கொள்ள ஆட்கள் வேண்டுமென்று விளம்பரம் கொடுக்கிறாள். பலரும் விருப்பம் தெரிவிக்கிறார்கள். பெல்லேவை சந்திக்க வருகிறார்கள் ஆனால் ஒருவர் கூட உயிருடன் திரும்பவேயில்லை.
மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து வந்தவர்களிடம், ஆசை வார்த்தை கூறி அல்லது பேசி மயக்கி பணத்துடன் வரச் சொல்லுவாள். அப்படி வருகிறவர்களிடமிருந்து பணத்தை பறித்து முடித்ததும், அவர்களை கொன்று, எரிந்து பயனற்றுப் போன நிலத்திலேயே புதைத்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள். அப்படியில்லையென்றால் தான் வளர்த்த பன்றிகளுக்கு வந்தவர்களின் உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிட கொடுத்துவிடுவாள்.
1908ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி, பெல்லேவின் வீட்டிலிருந்து புகை கிளம்பியது. அக்கம் பக்கத்தினர் பொலீஸுக்குத் தகவல் தர, அவர்கள் வந்து பார்த்த போது வீட்டிற்குள் பெல்லேவின் குழந்தைகள் லக்கி, மர்ட்டில் மற்றும் பிலிப் ஆகியோர் இறந்து கிடந்தனர். வெளியில் தலையில்லாத ஒரு பெண் உடலும் கிடந்தது. அந்த பெண் தான் பெல்லே என்று பொலீஸார் நினைத்தனர்.
இந்த சம்பவம் நடந்து, பல மாதங்கள் கழித்து, பொலீஸுக்கு ஒரு புகார் வருகிறது. தன்னுடைய சகோதரன் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அவரைக் காணவில்லை. இப்போது பத்திரிகையில் வந்திருக்கும் இந்த பெண் பெல்லேவைத் தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இப்போது இவரும் இறந்துவிட்டார். அப்படியானால் தன் அண்ணனை உடனே தேடித் தரவேண்டும் என்று புகார் கொடுக்கப்படுகிறது. வந்திருப்பவரின் அண்ணன் தான் கொலைக் குற்றவாளியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை ஆரம்பிக்கிறார்கள்.
மீண்டும் பெல்லேவின் வீட்டிற்குச் சென்று சோதனையிடப்படுகிறது. எதுவும் சிக்கவில்லை. பன்றிகள் இருந்த இடம் அதையொட்டிய நிலப்பகுதியை தோண்டினால் கிட்டத்தட்ட 11 பேரின் உடல்கள் கிடைக்கின்றன. அவற்றில், பெல்லேவின் தத்து மகளாக இருந்த ஜென்னியின் உடலும் இருந்தது. கடந்த 1906ஆம் ஆண்டு, அதாவது இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜென்னியைக் காணவில்லை என்று பொலீஸில் புகார் அளித்திருந்தாள் பெல்லே.
இந்நிலையில் பெல்லேவின் தோட்டத்தில் வேலை செய்த, ரே லேம்பெர் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடித்து பொலீஸ் விசாரித்ததில், பெல்லேவிடம் தான் உதவியாளராக இருந்ததையும், அப்போது பெல்லேவைப் பார்க்க தினமும் ஆட்கள் வருவார்கள் என்றும் மற்றபடி எதுவும் தெரியாது என்றும் கூறினார் அவர்.
ஆனால் மீண்டும் மீண்டும் விசாரித்ததில், வீட்டில் புகை கிளம்பிய சில தினங்களுக்கு முன்னர், பெல்லே சிகாகோவிற்கு பயணம் செய்யவிருப்பதாக சொன்னார் என்று தெரிவிக்க, தலையில்லாத பெண்ணின் உடல் பெல்லேவினுடையது தானா என்று சந்தேகம் கிளம்பியது.
ஏற்கனவே இந்த தலையில்லாத பெண் யார்? பெல்லே உயிருடன் இருக்கிறாரா என்று சந்தேகம் கிளப்பிய நிலையில் இந்த கொலை செய்தி அமெரிக்கா முழுவதும் பரவியது. இந்நிலையில் 1931 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் ஓர் வழக்கு வருகிறது. எஸ்தர் கார்லஸ்ன் என்ற பெண்மணி கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து அவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனை சந்தேகித்த போலீசார், பெல்லேவின் புகைப்படத்துடன் தற்கொலை செய்து கொண்ட எஸ்தரின் உடலில் அங்க அடையாளங்களை சோதனையிட்டிருக்கிறார்கள்.
ஆனால் இறுதி வரை சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. பிரேத பரிசோதனையிலும், உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. மாறாக பெல்லே உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு தற்போது எஸ்தருக்கு இருக்கும் வயதே இருந்திருக்கும். அவரது புகைப்படங்களை பார்க்கையில் அவர் எஸ்தரின் உடல்வாகுடன் இருந்திருப்பார் என்றே கூறப்பட்டது. ஆனால் எதையும் உறுதிப்படுத்த முடியவில்லை.
2008ஆம் ஆண்டு வரை முடிவே எட்டப்படாமல் இருந்த இந்த வழக்கு, இறுதியில் மர்ம வழக்கு என்று முடித்து வைக்கப்பட்டது.
Average Rating