திருடன் என நினைத்து சரமாரி கல்வீச்சு : கல்லூரி மாணவன் கொலை!!( உலக செய்த)
பைக்கில் சென்றவர்களை திருடர்கள் என நினைத்து கிராம மக்கள் கல்லால் தாக்கியதில், கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி மாணவரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் செய்யாறு அருகே இன்று சாலைமறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு, விவசாயி. இவரது மகன் சதாசிவம்(19). அனக்காவூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை சேர்ந்தவர் அனந்தன்(20), கேட்டரிங் தொழிலாளி. இருவரும் நண்பர்கள்.
நேற்று ஆனந்தன் கேட்டரிங் வேலையாக வெம்பாக்கம் கிராமத்திற்கு சென்றார். வேலை முடிந்து இரவு 11 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் அந்த நேரத்தில் பஸ் இல்லாததால் ஆனந்தன், நண்பர் சதாசிவத்திற்கு போன் செய்து அழைத்துள்ளார். அதன்படி சதாசிவம், அவரது நண்பர்கள் மாதவன், யுவராஜ் ஆகிய 3 பேர் ஒரே பைக்கில் வெம்பாக்கத்திற்கு சென்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மோரணம், சுமங்கலி, திருப்பனமூர், வெங்கட்ராயன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மர்மநபர்கள் சிலர் கார் மற்றும் பைக்குகளில் வந்து சிறுவர்களை கடத்தி செல்வதாகவும், சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களின் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ் புக்கில் தகவல் பரவியது.
இதனால் அப்பகுதி மக்களிடையே அச்சமும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், பகல் மற்றும் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படி வரும் புதிய நபர்களை பிடித்து விசாரித்த பின்னர் அவர்களை அனுப்பி விடுகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் சதாசிவம் உள்ளிட்ட 3பேர் வந்த பைக்கை, சுமங்கலி கிராமம் அருகே அதே கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8பேர் நிறுத்த முயன்றனர். ஆனால் சதாசிவம் உள்ளிட்ட 3பேர் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் 6பேர், 2பைக்குகளில் சத்தம்போட்டபடி, அவர்ளை விரட்டி சென்றனர்.
இந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும் வெளியே வந்து சிலர் அவர்களை விரட்டினர். அப்போது சிலர் சதாசிவம் சென்ற பைக் மீது கற்களை வீசியுள்ளனர். இதில் நிலைத்தடுமாறிய சதாசிவம் உள்பட 3பேரும் கீழே விழுந்தனர். தலையில் காயமடைந்த சதாசிவம் மயங்கி விழுந்தார்.
பொதுமக்கள் தொடர்ந்து விரட்டி வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாதவன், யுவராஜ் ஆகியோர் சதாசிவத்தை பைக்கில் ஏற்றிக்கொண்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு சதாசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இவர்களை பின்தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள், மாதவன், யுவராஜ் ஆகிய இருவரையும் சரமாரி தாக்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதாசிவத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் சதாசிவத்தை அடித்து கொன்ற சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் செய்யாறு அண்ணா சிலை எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சதாசிவத்தை அடித்து கொன்றவர்களை கைது செய்து உரிய விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Average Rating