வெளிநாடு போறீங்களா !! (மகளிர் பக்கம்)
சென்ற ஆண்டு வெளிநாட்டுக்கு அடிக்கடி பிஸினஸ் தொடர்பாக பயணிக்கும் பெண் ஒருவரின் பணம், பாஸ்போர்ட், செல் அடங்கிய பையை மலேசிய ஏர்போர்ட்டின் அருகில் யாரோ திருடிச் சென்றுவிட, அந்தப் பெண் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்.. இது நடந்து கிட்டதட்ட நான்கைந்து மாதங்கள் ஆன பிறகுதான், அதுவும் அந்தப் பெண் செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் எப்படியோ நாடு வந்து சேர்ந்துவிட்டார். அப்படியெல்லாம் நிகழாமல் இருக்க, புதிதாக வெளிநாடு பயணிப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கலாம்.
பொதுவாக அனைவருமே விரும்பும் விஷயம் வெளிநாட்டு பயணம். வெளிநாட்டுப் பயணம் என்பது ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம். புதுப்புது இடங்களை ரசிக்கலாம். புதிய மனிதர்கள் மற்றும் புதிய அனுபவங்களை சந்திக்கலாம். புதிய கலாச்சாரங்கள் மற்றும் புதிய பொருட்களை பார்க்கலாம். வாழ்வின் மகிழ்ச்சியான, மறக்கமுடியாத தருணமாக வெளிநாட்டுப் பயணங்கள் இருக்கும். ஆனால் அதற்கு முறையான திட்டம் அவசியம். சரியான முன் ஏற்பாட்டோடு பயணித்தால் பல சங்கடங்களை தவிர்க்கலாம். வெளிநாடு போகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உண்டு.
பாஸ்போர்ட் மற்றும் விசா- வெளிநாட்டு பயணத்திற்கான மூல முதல்வர்கள் இவர்கள் தான். வெளிநாடு சென்று சொந்த நாடு திரும்பும்வரை இவற்றை பத்திரமாக பாதுகாக்க வேண்டும். பாஸ்போர்ட் இல்லையேல் நாடு திரும்புவது கடினமாகிவிடும். எனவே இவற்றை யாரிடமும் ஒப்படைக்கக்கூடாது. நமது கண்காணிப்பிலே இருக்க வேண்டும். நீங்கள் தனியாக பயணம் மேற்கொண்டாலும் வெளிநாடுகளில் கழிப்பறைகளில் கூட கொக்கி இருக்கும். அங்கு உங்களது பையை மாட்டிக்கொள்ளலாம். வரும்போது ஞாபகமாக பையை எடுத்துக்கொண்டு வரவேண்டும்.
வெளிநபர்களிடம் ஒப்படைத்துவிட்டு கழிவறை செல்ல வேண்டியது இல்லை. ஆண்கள் பாஸ்போர்ட் வைக்க வசதியாக இருக்கும் பெல்ட்டை பயன்படுத்தலாம்.
அடுத்தது மணி டிரான்ஸ்ஃபர், நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ அந்த நாட்டுப் பணத்தை இங்கேயே மாற்றிச்செல்லலாம். ஆனால் அதற்குரிய ரசீதுகளை நீங்கள் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் அந்தப் பணம் குறித்த சந்தேகங்கள் அதிகாரிகளுக்கு வந்து ஆராய வாய்ப்பு உண்டு. அயல்நாட்டுக்குச் சென்றவுடன் விமானநிலையத்திலே மாற்றிக்கொள்ளவும் வசதி உண்டு. எங்கே மாற்றினாலும் ரசீது அவசியம்.
வெளிநாட்டில் இருக்கும் உங்கள் உறவினர்கள் தாங்கள் பணத்தைத் தருவதாக கூறினாலும் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வரையிலாவது கொஞ்சமாவது உங்களிடம் அந்த நாட்டு பணம் கையிருப்பில் இருக்க வேண்டும். அடுத்த முக்கியமான விஷயம் எடை. டிக்கெட் எடுத்த உடனே இருப்பதை எல்லாம் அள்ளி பையில் திணிக்காதீர்கள். அந்த டிக்கெட்டில் எவ்வளவு எடைக்கு பொருட்களை எடுத்துச் செல்லலாம் என குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அளவு என்ன என்பதைப் பொறுத்துப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் 20 கிலோவுக்கு அனுமதி அளிக்கலாம்.
சில ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் வெறும் ஏழு கிலோவுக்குக் கூட அனுமதி அளிக்கலாம். அவற்றைப் பார்த்துக்கொள்வது நல்லது. அதிலும் ஒருவருக்கு ஏழு கிலோ அனுமதி எனும்போது நீங்கள் நான்கு பேர் என்றால் ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் ஏழு கிலோ எடுத்துச் செல்ல வேண்டும். ஒரே பையில் 20 கிலோ இன்னொரு பையில் 8 கிலோ என எடுத்துச் செல்லக் கூடாது. அதுமட்டுமின்றி கேபின் லக்கேஜில் கத்திரிக்கோல், சேவிங்செட் மருந்துகள், கிரீம்கள் போன்ற ஒரு சில பொருட்கள் தடை செய்யப்பட்டிருக்கும். அவற்றை லக்கேஜ் பையில் எடுத்துச்செல்வது சிறந்தது.
பொதுவாகவே தேவையில்லாமல் அதிக பொருட்களை எடுத்துச் செல்வது பயணத்தை கடினமாக்கும். அதனால் முக்கியமான பொருட்களை தேவையான அளவில் எடுத்துச்செல்வது நல்லது. வெளிநாட்டு உணவு சாப்பிட கஷ்டமாக இருக்கும் என்கிற பட்சத்தில் சப்பாத்தி, எண்ணெய் இல்லாத தக்காளி தொக்கு போன்ற உணவுகளை தயாரித்து லக்கேஜ் பையில் வைத்து ஓரிரு நாட்களுக்கு எடுத்துச்செல்லலாம். லெக்கேஜில் இடம் இருக்கும் பட்சத்தில் கெட்டுப்போகாத உணவுகளான கேக், பிரெட், பிஸ்கெட் போன்றவற்றையும் எடுத்துச்செல்லலாம். போய் இறங்கியவுடன் உணவகத்தைத் தேடிச் செல்ல நேரம் இல்லாத பட்சத்தில் அவசரத்திற்கு இது உதவும்.
அடுத்தது ஆடம்பரமான நகைகளை தவிர்த்துவிடுங்கள். போகும் இடத்தில் அவை தொலைந்து போனாலோ, களவு போனாலோ அவற்றை தேடிக்கொண்டிருக்கவோ காவல் துறையில் புகார்கொடுத்து அலையவோ நமக்கு நேரம் இருக்காது. வீண் செலவும் ஆகும். அடிப்படையாக தேவையான நகைகள் அல்லது குறைந்தபட்ச நகைகளை அணிந்து செல்வது பாதுகாப்பானது. வெளிநாடு செல்லும்போது புதிதாக எதையாவது முயற்சிக்கிறேன் என்று வயிற்றுக்கு ஒப்புக்கொள்ளாததை சாப்பிட்டு வயிற்றை கெடுத்துக்கொள்ளாதீர்கள். சென்ற இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் வெளியில் சுற்றுவதற்கு பதிலாக மருத்துவமனையைத் தேடி அலைய வேண்டி இருக்கும்.
வெளிநாட்டு பயணி என்றால் மருத்துவமனை பில் பல மடங்கு கட்ட வேண்டிவரும் என்பது ஞாபகத்தில் இருக்கட்டும். உடன் வந்தவர்களுக்கும் தொல்லை. நாமும் வெளியே செல்ல முடியாது. அவர்களுக்கும் நம்மை விட்டுச்செல்ல சங்கடமாய் இருக்கும். நீங்கள் பேக்கேஜ் டூர் போகிறீர்கள் என்றால் எந்த எந்த இடம் கூட்டிச்செல்வது என்பது பயண ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு. ஆனால் நீங்கள் தனிப்பட்ட முறையில் செல்கிறீர்கள் என்றால் எங்கெங்கே போவது, எப்படிப் போவது என்பதை முன்னரே தீர்மானிக்க வேண்டும். அங்கு சென்று யோசித்துக்கொண்டிருந்தால் நமது பொன்னான நேரம் வீணாகும்.
அங்கு தெரிந்தவர்கள் இருந்தால் இங்கிருந்தே அவர்களிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது கூகுள். அதில் அலசி ஆராய்ந்து ஓரளவு விஷய ஞானத்தோடு செல்வது நல்லது. போன இடத்தில் டிவி பார்க்கிறேன் பேர்வழி என்று இரவில் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டால் மறுநாள் தாமதமாக புறப்பட வேண்டி இருக்கும். எங்கு சென்றாலும் காலையில் செல்வது பலவகையில் சிறந்தது. கூட்டம் இருக்காது. வெயில் தெரியாது. காலையில் கிளம்பினால் அன்று நிறைய இடங்களை பார்க்கலாம் லட்சங்களில் பணத்தை செலவழித்துச்செல்வதால் நாம் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் காசுதான் என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
செக் லிஸ்ட் போட்டு பொருட்களை எடுத்துச்செல்வது போல ஒவ்வொரு ஹோட்டலிலும் அறையைவிட்டு புறப்படும் போது அந்த செக்லிஸ்ட்டை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். புதிதாக வாங்கிய பொருட்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். புதிதாக பார்த்த ஆர்வத்தில், பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்க தோன்றலாம். வாங்குவது பெரிய விஷயமல்ல. அவற்றின் தரத்தை கவனித்து வாங்க வேண்டும். அத்துடன் அவற்றை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்க முறையான பேக்கிங் அவசியம்.
இல்லையென்றால் அங்கு வாங்கிய பொருட்கள் இங்கு வந்து சேர்வதற்குள் பல்லிளித்து விடும். எப்படி நீங்கள் வாங்கி வரும் சில பொருட்களுக்கு வரி விதிப்பார்களோ அது போல நீங்கள் வாங்கும் சில பொருட்களுக்கு பிடிக்கப்படும் வரியில் குறிப்பிட்ட சதவிகித வரிப்பணத்தை (ஜிபிஎஸ்) உரிய பில் மற்றும் அதற்கான விண்ணப்பத்தைக் காட்டி விமான நிலையத்தில் திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியும் உண்டு. இது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். அதையும் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தினசரி என்னென்ன செலவு செய்தோம் என்பதை ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொள்வது நல்லது. அசதியாக இருக்கிறது மறுநாள் எழுதிக்கொள்ளலாம் என்று தள்ளிப்போட்டால் நிறைய விஷயங்கள் மறந்து போகலாம். எவ்வளவு செலவு செய்தோம் என்று எழுதி வைத்தால் எதெல்லாம் வீண் செலவு எதையெல்லாம் அடுத்த முறை தவிர்க்கலாம் என்றும் தெரிந்து விடும். உரிய திட்டம், சரியான முன்னேற்பாடு, கவனம் இவை உங்கள் பயணத்தை மேலும் இனிமையாக்கும். வெளிநாட்டுப் பயணத்தை வெற்றியோடு முடிக்க இவை கட்டாயம் அவசியம்.
Average Rating