“நாங்க எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்தான்!” (மகளிர் பக்கம்)
தமிழ்த்திரையுலகில் ஆச்சி மனோரமா, கோவை சரளா வரிசை யில் நகைச்சுவை நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் ஆர்த்தி. சிறுவயதில் இருந்தே மக்களிடம் அறிமுகமானவர் என்பது இவரது கூடுதல் தகுதி. இவரது கணவர் கணேஷ்கரும் மக்களிடம் நன்கு அறிமுகமான நகைச்சுவை நடிகர். அவர்களது மண வாழ்க்கைக் குறித்து ஆர்த்தி நம்மோடு இயல்பாக பகிர்ந்து கொண்டார். “ஆறு வருடங்களுக்கு முன்பு எங்களுக்குத் திருமணம் ஆனது. நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே பல படங்களில், பல டிவி ஷோக்களில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறோம். தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறோம். ‘என் தங்கை கல்யாணி’ படத்தில் சிறு வயது டி.ராஜேந்தராக கணேஷ்கரும், சிறு வயது கல்யாணியாக நானும் நடித்திருப்போம்.
நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். வளர்ந்த பிறகு ‘சூப்பர் டென்’ நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தோம். படங்களை ஸ்கூப் பண்ணி நடிப்போம். வார வாரம் அந்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி சிறந்த வெற்றிப்பெற்றது. அதற்குப் பிறகு நடனப் போட்டி நிகழ்ச்சியில் ஜோடியாக இணைந்து பங்கு பெற்றோம். கலா அக்கா அப்போது ஆர்த்தி கணேஷ்கர் என்று பெயர் போட்டார்கள். அதில் இருந்து எங்கள் ஜோடி ரொம்ப ஃபேமஸ் ஆச்சு. அந்த நிகழ்ச்சி முடியும் தருவாயில் கணேஷ்கரின் அம்மாவும், பாட்டியும் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அப்பதான் அவருக்கு பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க.
ரிகர்சல் சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடும் போது அம்மா இறந்த துக்கத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்வார். அந்த சமயத்தில்தான் அவர் அப்பா வந்து எங்கள் வீட்டில் என்னை கணேஷ்கருக்கு பெண் கேட்டார். நாங்கள் இருவரும் குடும்ப நண்பர்களும் கூட. எனக்கு அப்போது கல்யாணம் பண்ணிக்கணும்கிற ஐடியா எல்லாம் இல்லை. ஆனால் அம்மாவுக்கு அப்போது உடம்பு முடியாமல் இருந்தது. அதனால் அம்மா உடனடியாக என் கல்யாணத்தைப் பார்க்க ஆசைப்பட்டார். இரண்டு பேரும் ஒரே துறை. அதனால் யாரோ ஒருவரை திருமணம் செய்வதைவிடவும் நம்மையும், நம் தொழிலையும் நன்கு புரிந்துகொண்ட நண்பரான கணேஷ்கரை திருமணம் செய்து கொள்வது நல்லது என்று தோன்றியது.
ஒரு நல்ல ஃப்ரெண்ட் ஒரு நல்ல லைஃப் பார்ட்னராகவும் இருப்பார் என எனக்குப்பட்டது. அதனால் நானும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். நாங்க மத்த கணவன் – மனைவி மாதிரி கிடையாது. ஹனிமூன் போகலை. இரண்டு பேர் மட்டும் சினிமா போறதுன்னு மத்தவங்க மாதிரி நாங்க இல்லை. அதில் எல்லாம் நம்பிக்கையும் இல்லை. அவர் அவருடைய நண்பர்களோடு படத்துக்குப் போவார். நான் என் தோழிகளோடு போவேன். தியேட்டருக்கு டைம் கிடைக்கும்போது சேர்ந்து போவோம். ப்ரீவ்யூ ஷோ இருந்தா போவோம்.
ப்ளான் பண்ணி எல்லாம் நாங்க இருவரும் தனியா சினிமா போகமாட்டோம். மற்றபடி கேரியருக்காக, ஷோக்களுக்காக துபாய், மலேசியா, பஹ்ரைன் போன்ற பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறோம். கல்யாணம் பண்ணதை கல்யாணம் ஆன அன்றைய தினத்தில் இருந்தே நாங்கள் மறந்து விட்டோம். உண்மையா நாங்கள் எங்கள் கல்யாண நாளை கொண்டாடியதே இல்லை. காதலர் தினத்தைத்தான் கொண்டாடுவோம். கணவன் – மனைவி என்று எண்ணம் இருந்தால் தான் நீ பெரியவனா, நான் பெரியவளா என்ற போட்டி இருக்கும். நீ எனக்கு அடிமை.
நான் உனக்கு அடிமை, யார் மேலே யார் கீழே என்ற பஞ்சாயத்து எல்லாம் வரும். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதுதான் விஷயம். நாங்கள் எப்போதும் நண்பர்களாகவே இருக்கிறோம். அவர் எனக்காக மாறணும்னு நீங்க இப்படித்தான் இருக்கணும்னு நான் நினைக்கமாட்டேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். நான் என் விருப்பப்படி இருக்கணும். அவர் அவர் விருப்பப்படி இருக்கணும். யாரும் யாருக்காகவும் மாத்திக்கறது அன்பு இல்லை. அவருக்கு பிடிக்காததை நான் செய்யக்கூடாது. எனக்குப் பிடிக்காததை அவர் செய்யக்கூடாது.
அவ்வளவுதானே தவிர நீ மாறித்தான் ஆகணும்னு எப்ப எதிர்பார்க்கிறமோ அப்பதான் ஏமாற்றம் ஆரம்பிக்கும். என் கேரியர் ரீதியாக அவர் என்னை சப்போர்ட் பண்ண வேண்டும் என்று நான் எப்போதும் நினைப்பதில்லை. என்னை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று நினைப்பேன். அவரும் என்னை எதுவும் சொல்லமாட்டார். அவர் என் கேரியரை புரிந்திருக்கிறார். நானும் அவருக்குக் கண்டிஷன் போட மாட்டேன்.
அவரைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். அவர் கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய நேரம் நண்பர்களுடன் செலவழிப்பார்னு எனக்குத் தெரியும். அவர் திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்தாரோ இப்பவும் அப்படித்தான் அவர் நண்பர்களுடன் இருக்கிறார். கல்யாணத்திற்கு பின்பு என்ன ஒரே வித்தியாசம்னா 9 மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவார். இல்லைன்னா நான் வீட்டைப் பூட்டிடுவேன். நான் வளர்ந்த விதம் அப்படி. சண்டையெல்லாம் போடமாட்டேன். நான் வீட்டைப் பூட்டப்போறேன்னு இல்ல, பூட்டமாட்டேன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனா 9 மணிக்கு சரியா வீட்டைப் பூட்டிடுவேன்…” சிரிக்கிறார்.
‘‘சோஷியல் மீடியாக்களில், இணையதளங்களில் எல்லாம் எங்கள் இருவரை பற்றி நிறைய கிசுகிசு வரும். விவாகரத்து பண்ணிட்டோம் என்றெல்லாம் தகவல்கள் வரும். அவர் அந்த செய்திகளை முதலில் பார்த்தால் எனக்கு போன் செய்து சொல்வார். நான் முதலில் அந்த தகவல்களை பார்த்தால் அவருக்குச் சொல்வேன். நடிகர், நடிகைகள் என்றாலே கிசுகிசுக்கள் வரத்தானே செய்யும்? உண்மையில் வாழ்க்கை ரொம்ப சிறியது.
அதில் சண்டை போடறது எல்லாம் ரொம்ப முட்டாள்தனம். ‘விவாகரத்து பண்ணலாம். நீ இப்படி போ நான் அப்படி போறேன்’னு சொல்றது எல்லாம் முட்டாள்தனம். எங்கள் இரண்டு பேருக்கும் நாங்கள் எப்படி என்று எங்களுக்குத் தெரிந்தால் போதும். மத்தவங்க என்ன சொன்னா நமக்கு என்ன? இப்படி ஒரு புரிதல் இருப்பதால்தான் எங்க இரண்டு பேருக்குள்ளும் இந்த ஆறு வருடங்களில் பெரிதாக எந்த சண்டையும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்ப சந்தானம் படத்திற்காக கணேஷ் வெளியூர் போய் இருக்கிறார்” என்கிறார் ஆர்த்தி.
Average Rating