சுமைக்கு மேல் சுமை!(மகளிர் பக்கம்)
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டு தொடக்கமும் போராட்டத்தோடு தொடங்கியிருக்கிறது. மாநில அரசு கொண்டு வந்த பேருந்து கட்டண உயர்வு தமிழக மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிவிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு களை புறக்கணித்து வீதிக்கு வந்து போராடி வருகின்றனர்.
மாணவர்களின் இந்தப் போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பனிடம் பேசினோம். “தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். அவ்வப்போது கட்டணத்தை உயர்த்துவதற்கு அமைக்கப்பட்ட கமிட்டியை கலைக்க வேண்டும். அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கு பதிலாக, போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
போராட்டம் வலுப்பெறும் போது கல்வித் துறை மூலமாக கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பது, காவல்துறையை ஏவி அடிப்பதும், கைது செய்து சிறையில் அடைப்பதுமாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 35 மாணவர்கள் தற்போது சிறைக்கு சென்று வந்துள்ளனர். சில இடங்களில் நீதிபதிகளே, மாணவர்களை காலை 4 மணிக்கெல்லாம் ஆஜர்படுத்தும் அளவிற்கு மாணவர்கள் ஒன்றும் கொலை குற்றம் செய்யவில்லையே என்று கூறினாலும் கூட, அரசு கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய காவல்துறை மாணவர்களை சிறைபடுத்துவதிலே அதிக கவனம் செலுத்தி வருகிறது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது.
பேருந்து கட்டணம் குறித்து சென்னையில் படிக்கும் மாணவர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட போது, ‘‘நான் சென்னையில் வாடகை வீடு எடுத்து தங்கியிருக்கிறேன். தினமும் காலையில் 5 தோசை சாப்பிடுவேன். பஸ் கட்டண உயர்வுக்கு பிறகு 4 தோசைதான் சாப்பிட முடிகிறது. வயிற்றை சுருக்கிக்கொண்டு பஸ் கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது” என்றார். இப்படி ஆயிரக்கணக்கான மாணவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2, 3 மாணவர்கள் ஆளுக்கு 10 ரூபாய் கொடுத்து கல்லூரிக்கு சென்று வந்தார்கள். இன்று ஒரு நபருக்கு 25 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கிறது.
மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வரை செல்வதற்கு 20 ரூபாய் ஆகிறது. பேருந்து கட்டணமாக சரிபாதி பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. பொது மக்களுக்கும் கட்டண உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. கூலி வேலை செய்கிறவர்கள் மாத வருமானத்தில் பாதியை போக்குவரத்துக்கு செலவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தங்களுக்கான பிரச்சனையாக பார்க்காமல் மக்களுக்கான பிரச்சனையாக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
கட்டணத்தை மலை அளவு உயர்த்திவிட்டு, 1 வார மாணவர்களின் போராட்டத்திற்கு பிறகு கடுகளவு குறைப்பது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதாக இருக்காது. மாணவர்களின் போராட்டத்திற்கு மரியாதை கொடுக்கும் விதமாக கூட விலை குறைப்பு செய்யவில்லை இந்த அரசு. அமைச்சர் சொல்கிறார், ‘1 ரூபாயை பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டான். அதனால் தான் இவ்வளவு விலையை உயர்த்த வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம்’ என்று. ஆனால் அவரே 1 ரூபாய் குறைத்துவிட்டோம் என்று அறிவிக்கிறார்.
பேருந்து கட்டண உயர்விற்கு இவர்கள் சொல்லும் காரணம் மக்களை ஏமாற்றும் விதமாக இருக்கிறது. போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தை கூட்ட வேண்டியிருக்கிறது. பேருந்து உதிரி பாகங்கள் வாங்க வேண்டும் என்றும் புதிய பேருந்துகளின் விலை உயர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் காப்பீட்டு தொகை மற்றும் பி.எப். தொகையான 7 ஆயிரம் கோடியை அரசு தனது சொந்த செலவுக்கு பயன்படுத்தியது தவறு. 22 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கான பஸ் பாஸ் தொகையை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு இன்னும் கொடுக்கவில்லை. முறையாக எல்லா பணத்தையும் கொடுத்திருந்தால் அவர்கள் கூறும் காரணங்களுக்கு தீர்வு கிடைத்திருக்கும். போக்குவரத்து துறையை லாபத்துறையாக பார்க்காமல் சேவைத்துறையாக பார்க்கும் போது, போக்கு வரத்து கழகங்களுக்கு நிதியை கொடுப்பதுதான் நியாயமாக இருக்கும். அதை கொடுக்காமல் நிதி இல்லை என்று சொல்லி விட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு மட்டும் எப்படி கொடுக்கமுடிகிறது என்ற கேள்வி எழுகிறது.
கழிப்பறை வசதி கொண்ட புதிய பேருந்துகளை இயக்க போவதாக சொல்கிறார்கள். அதற்கு நிதி எங்கிருந்து வருகிறது? இதற்கெல்லாம் நிதி இருக்கும் போது சேவைத்துறையான போக்குவரத்து துறைக்கு மானியமாக நிதி வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை. இந்திய மாணவர் சங்கம் கூட்டம் நடத்தி, ஆலோசித்த பிறகு அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்க உள்ளோம்” என்கிறார் இந்திய மாணவர் சங்க தலைவர் மாரியப்பன்.
பேருந்து கட்டணம் உயர்வு குறித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் சண்முகம் கூறுகையில்…“தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட பேருந்து கட்டண உயர்வு என்பது நியாயமற்ற செயல். எங்களுடைய போராட்டத்திற்கு மாணவர்கள் ஆதரவு தெரிவித்தது போலவே நாங்களும் போராட்டங்கள் நடத்தி ஆதரவு தெரிவித்து வருகிறோம். உணவுத்துறைக்கு 5 ஆயிரத்து 11 கோடி ரூபாய் மானியமும், மின்சாரத் துறைக்கு 22 ஆயிரம் கோடி நிதியும் கொடுக்கிறார்கள். மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி இருந்தால் போதுமானது.
ஆனால் அதிக அளவு நிதி ஒதுக்கி மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளனர். போக்குவரத்து துறை என்பது சேவைத்துறை. இதை லாபத்தின் நோக்கத்தோடு நடத்துவது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் போராட்டத்தை அலட்சியப்படுத்துவது இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை என்பதை காட்டுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் ஒரே முறை தி.மு.க ஆட்சியில் 4 பைசா விலை உயர்த்தப்பட்டது. தற்போது 22 பைசாவில் இருந்து 60 பைசா வரை அதிகப்படியான விலை உயர்வை இந்த அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டது,புதிய பேருந்துகள் விடப்பட்டது, இவர்கள் எதையும் செய்யாமல் கட்டண உயர்வு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” என்றார்.
Average Rating