“நடிப்பு, எழுத்து இரண்டும் எனக்கு முக்கியம்”!! (மகளிர் பக்கம்)
கலைத்துறையின் பல்வேறு தளங்களில் மும்முரமாக இயங்கி வருகிறார் திரைக்கலைஞர் வினோதினி. நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். தன் திறனை வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ள கதாப்பாத்திரத்தையே தேர்வு செய்கிறார்.
சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் நாடக இயக்கம், விளம்பரப் படங்கள் மற்றும் இணையத் தொடருக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியையும் மேற்கொள்கிறார். ‘ஊமை விழிகள்’ படப்பிடிப்பின் இடைவேளையில் அவரிடம் பேசினேன்.
க்ரியேட்டிவ் துறையில் இருப்பவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்திக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். உங்கள் வாழ்க்கை முறை எப்படி? உங்கள் தினசரி வழக்கம் பற்றிச் சொல்லுங்கள். ‘‘சினிமாவில் நடிக்க வந்தப் புறம் என்னோட தினசரி வழக் கங்கள்ல சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு.
ஷூட்டிங் இருக்கிற நாட்களில் அவங்க கால அட்டவணைப்படி நேரத்தை ஒதுக்கிடுவேன். எல்லா நாட்களும் ஷூட்டிங் இருக்காது. அப்படி வீட்டில் இருக்கும்போதும் என்னை பிஸியாவே வெச்சிக்குவேன். வீடுதான் நமக்கான எல்லாமுமே.
அதனால வீட்டை சுத்தமாக வெச்சிக்குறதுல எப்பவும் கவனமா இருப்பேன். என் கதை, கட்டுரைகள், நாடகங்கள் எல்லாம் உருவாகிற இடம் என் வீடுதான். அப்படியா க்ரியேட்டிவிட்டியைத் தூண்டுறபடியா வீட்டின் சூழலையும் அமைச்சுக்குவேன்.
ஜென் மன நிலையிலிருந்து பார்த்தோம்னா நாம வாழறதுக்கு அதிக அளவிலான பொருட்கள் தேவையில்லைன்னு தான் சொல்லணும்.
நமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுற பொருட்களை ஒரு சூட்கேஸுக்குள்ள அடைச்சிட முடியும். மற்றபடி இருக்கிறதெல்லாம் ஆடம்பரம்தான். நுகர்வுக் கலாசாரத்துக்கு நாமும் ஆட்பட்டிருக்கோம். அதனால பயன்பாடு இருக்கோ இல்லையோ பொருட்களை மட்டும் வாங்கிக்கிட்டே இருக்கோம்.
புறச்சூழல்களும் நம்மை நுகர்வோர் ஆக்குற மாதிரிதான் இருக்கு. ஆறு மாதத்துக்கும் மேல் ஒரு பொருளைப் பயன்படுத்தாம இருக்கோம்னா அதை நாம் எப்போதும் பயன்படுத்தப் போறதில்லைன்னுதான் அர்த்தம். இருந்தாலும் அதை நுகர்ந்துகிட்டேதான் இருப்போம்.
எனக்கு இந்த நுகர்வுக் கலாச்சாரத்துல விருப்பம் இல்லை. தேவையான பொருட்களை மட்டும் கொண்டு வாழுற மினிமலிஸ்டிக் லைஃப் ஸ்டைல்தான் எனக்குப் பிடிச்சிருக்கு.
முன்னாடி எங்க வீட்டுல பத்து சோஃபாக்கள் இருக்கும். இப்ப அதை நான்கா குறைச்சிட்டேன். வெறும் தரையில் பாய் விரிச்சுக்கூட வந்தவங்களை உட்கார வெச்சுப் பேசலாம். அடுத்த கட்டமா நான் அதைத்தான் பண்ணலாம்னு இருக்கேன்.
என்னுடைய தேவைகளை குறைச்சுக்கிட்டே வர்றேன். நிறைய துணி எடுத்துக்கணும்னு ஆசையெல்லாம் இல்லை. தேவைக்காக மட்டும் ஷாப்பிங் போவேன். அதை ஒரு வழக்கமாக்கிக்க விரும்பலை.
பருவ நிலை மாற்றம், புவி வெப்பமடைதல்னு இன்னைக்கு நாம சந்திச்சுக்கிட்டிருக்கிற சூழலியல் பிரச்னைகளுக்கு நுகர்வுக் கலாச்சாரம் பெருகினதுதான் காரணம். இந்நிலை மாறணும்னா அந்த மாற்றம் நம்ம வீடுகளிலிருந்து தொடங்கணும்.
என்ன வேலைல இருந்தாலும் சரி சாப்பாடு, தூக்கம் இந்த இரண்டு விசயத்துலயும் ரொம்ப கவனமாக இருப்பேன். சரியான நேரத்துக்கு சாப்பிடலைன்னா உடல் நலம் கெட்டுப் போகும். நல்லா தூங்கலைன்னா நம்ம முகமே அதைக் காட்டிக் கொடுத்திடும்.
நடிப்புத் துறையில் இருக்கவங்களோட ஆயுதம் அவங்க உடல்தான். அதை சரியாக பராமரிச்சுக்கலைன்னா என்ன திறமையிருந்தாலும் அது வீண்தான்.
அதனால உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். பேக்கேஜ் உணவுகள், பீட்சா, பர்க்கர் போன்ற ஜங்க் உணவுகளை தவிர்த்துடுவேன். நான் முன்னாடி அசைவ உணவுகள் சாப்பிட்டுக்கிட்டிருந்தேன்.
அம்மாவுடைய இறப்புக்குப் பின் முழுசா சைவ உணவுகள்தான் சாப்பிடுறேன். மூச்சுப்பயிற்சி, ஆசனப்பயிற்சி ஆகியவற்றை கற்றிருக்கேன். வாரத்துக்கு நான்கு முறையாவது யோகா பண்ணிடுவேன்.
நடிகர் தம்பிராமையா சார்கூட சில படங்கள்ல நடிச்சிருக்கேன். அவர் எப்போதும் தன்னை உற்சாகமாக வெச்சுக்குவார். அவங்ககூட பேசுறவங்களையும் கலகலப்பாக்கிடுவார்.
அவர் தினமும் பத்து வகையான உடற்பயிற்சிகள் பண்ணுவார். அதன் மூலமா உடலையும் மனதையும் மகிழ்ச்சியாக வெச்சிக்குறார். கலைத்துறையில் இருக்கவங்களுக்கு நிச்சயமாக உடல்நலத்தின் மேல அக்கறை இருக்கணும்.
பல்வேறு தளங்களில் வேலை செய்யும்போது நேரத்தை எப்படி பிரிச்சிக்கிறீங்க?
நேர மேலாண்மை அவசியமான ஒன்று. நேரத்தை நாம மேலாண்மை செய்யலைன்னா நேரம் நம்மளை தூக்கி சாப்பிட்டுட்டுப் போயிடும். நாடகம் எழுதுறது, விளம்பரப்பட ஸ்கிரிப்ட் எழுதுறது, வெப் சீரீஸ் எழுதுறதுன்னு நடிப்பு தாண்டியும் பல பணிகள்ல ஈடுபட்டுக்கிட்டிருக்கேன்.
ஒவ்வொரு நாளும் விதவிதமான மனிதர்களை சந்திக்கிறேன். கிட்டத்தட்ட நாடோடித்தனமான வாழ்க்கைதான் இது. இதை ஒரு முறைக்குள்ள கொண்டு வரணும்னா நம்ம நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தணும். எதுக்காக நேரம் ஒதுக்குறமோ அந்த நேரத்துல அந்த வேலையை செஞ்சு முடிச்சிடுவேன்.
பொதுவாகவே இந்திய சினிமாவில் நாயகிகள் தொக்கு போலவே பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் இருந்தது. ஆனால் இன்றைக்கு பெண்ணை மையப்படுத்தும் திரைப்படங்கள் இந்தியாவின் அனைத்து திரைத்துறைகளிலிருந்து வர ஆரம்பித்திருக்கின்றன.
இச்சூழலில் நடிகைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?
உண்மைதான். முன்னைக்காட்டிலும் இப்போது பெண் மையப் படங்கள் அதிகம் வர ஆரம்பித்திருக்கின்றன. ஆணுக்கான தேவைகள் சார்ந்தே பெண் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்ட சூழல் முற்றிலுமாக மாறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஒரு பெண்ணை துரத்தி துரத்தி லவ்ங்கிற பேர்ல டார்ச்சர் பண்றதையே பெரும்பாலான சினிமாக்கள்ல பார்த்திருப்போம்.
இன்னைக்கு அப்படியான படங்கள் வரும்போது அதுக்கான கண்டனங்கள் அதிகரிக்குது. பெண்ணின் உரிமை, சமூக அங்கீகாரம் சார்ந்து இன்னைக்கு நிறைய பேசப்படுது. சமூகத்தில் பெண்ணுக்கான வலுவான இடம் உருவாகிக்கிட்டிருக்கு.
அது கலையிலும் பிரதிபலிக்கிறதாத்தான் இது மாதிரியான படங்களை பார்க்க முடியும். பெண்ணை சரியாகப் புரிந்துகொண்டு படம் இயக்க வருபவர்களே அழுத்தமான பெண் கதாபாத்திரங்களை வடிக்கிறாங்க. நடிகைகளுக்கான நல்ல கதாபாத்திரம் இனி அதிகம் கிடைக்கும்னு நம்பலாம்.
சினிமாவில் மூத்த கலைஞர்களுடன் வேலை செய்தபோது அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது என்ன?
ஒவ்வொரு படமும் பல அனுபவங்களைக் கொடுக்குறதோடு நிறைய விசயங்களைக் கற்றும் கொடுக்குது. ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துல கார்த்திக் சார்கூட நடிச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்ல அவர் யார் மேலயும் கோபப்பட்டு பார்த்தது கிடையாது.
சின்ன முகச்சுளிப்புகூட இல்லாம எல்லோர்கிட்டயும் சமமா பழகுவார். வேலையை ரொம்ப டெடிகேட்டடா பண்ணுவார். ‘வேலைக்காரன்’ படத்தில் மன்சூர் அலிகான் சாருடன் நடிச்சேன்.
என் சின்ன வயசுல அவரை படங்களில் பார்த்து பயந்திருக்கேன். அவரைப் பத்தி பொதுவாக இருக்கிற பிம்பம் வேற. அவர் சர்ச்சையாக ஏதாவது பேசுவாரே தவிர உண்மையிலும் அவர் ஒரு குழந்தை. அவர்கிட்டப் பழகும்போதுதான் அதைப் புரிஞ்சுக்க முடியும். ஆனால் அறிவார்த்தமானவர்.
அரசியல், சினிமா, உலக வரலாறுன்னு எதைப்பத்தி வேணும்னாலும் அவரிடம் பேச முடியும். அதே மாதிரி நம்மளைப் பத்தியும் தெரிஞ்சுக்க ஆர்வப்படுவார். நான் எழுதின கட்டுரைகளைப் பத்தி அவர்கிட்ட சொன்னதும், லிங்க் அனுப்ப சொல்லிக் கேட்டார். அதைப் படிச்சுப் பார்க்கணும்னு ஆர்வப்பட்டார்.
இது மாதிரியான பண்புகளைத்தான் நான் கத்துக்கிட்டிருக்கேன்.
உங்கள் நாடகச் செயல்பாடுகள் பற்றி…
தியேட்டர் ஜீரோவில் இமையத்தின் ‘நிஜமும் பொய்யும்’ சிறுகதையை இயக்கினேன். ‘நாகர்கோவில் எக்ஸ்பிரஸும் நாடகக் கம்பெனியும்’ என்று இரண்டு குறு நாடகங்களை இணைத்து ஒரு நாடகமாக அரங்கேற்றினேன்.
‘ஆயிரத்தோரு இரவுகள்’ எனும் நாடகத்தையும் எழுதி இயக்கியிருக்கேன். லிவிங் ஸ்மைல் வித்யா, ஏஞ்சல் கிளாடி மற்றும் நான், ‘கலர் ஆஃப் ட்ரான்ஸ்’ நாடகத்தை எழுதி இயக்கினோம்.
என்னென்ன படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அடுத்தக் கட்ட வேலை திட்டங்கள் என்ன?
‘களவாணி 2’, ‘ஊமை விழிகள்’, ‘காட்டேரி’, ‘கறிச் சோறு’ மற்றும் சில பெயர் வைக்காத படங்களிலும் நடிச்சுக்கிட்டிருக்கேன். ‘ராட்சசன்’, ‘யார் இவர்கள்’, ‘எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடம்’, ‘செயல்’ ஆகிய படங்களில் நடிச்சிருக்கேன்.
அவை ரிலீசுக்குத் தயாராகிக்கிட்டிருக்கு. இரண்டு விளம்பரப் படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதினேன். நாடகத்துக்கு எழுதுறதைவிட சவாலாக இருந்துச்சு. 30 நொடிக்குள் சொல்லியாக வேண்டிய கட்டாயம் இருக்கு. ஒரு வெப் சீரீஸ்க்கான ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டிருக்கேன்.
தொடர் பயிற்சியால்தான் நாம் எதிலும் தேர்ச்சி பெற முடியும். தினமும் எதாவது எழுதிடுவேன். எழுத்தையே ஒரு பயிற்சியா வெச்சுக்கிட்டிருக்கேன். நடிப்பும் கூட அப்படிப்பட்டதுதான்.
தொடர் பயிற்சியில் இல்லைன்னா ஃபார்ம் அவுட் ஆக வேண்டியதுதான். அதனால எழுத்திலும், நடிப்பிலும் தொடர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.”
Average Rating