நம்பிக்கை பற்றிய கேள்விகள்!!(கட்டுரை)
நம்பிக்கை என்பது அரசியலில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களுக்கும் மிக முக்கியமான கூறாகும்.
அரசியலில் அசட்டுத் துணிச்சலுடன் மேற்கொள்ளப்படும் நகர்வுகளுக்கு, அளவுகடந்த நம்பிக்கையே காரணமாக அமைகின்றது. அதேபோல், அரசியலைப் பொறுத்தமட்டில் எந்த ஆட்சியாளர் அல்லது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல்வாதி மீதான நம்பிக்கையும் ஒரே சீராக எக்காலத்திலும் தொடர்ச்சியாக இருப்பதில்லை என்பதே மக்களின் அனுபவமாகும்.
ஆனால் முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள், – ஆட்சியாளர் ஒருவர் மீதான நம்பிக்கையை, வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் தீர்மானிப்பதில்லை. அதற்குப் பின்னால், அவர்களுடனான இவர்களின் உறவும் விசுவாசமும் ஒப்பீட்டுத் தெரிவும், அரசியல் ஸ்திரத்தன்மை குறித்த எதிர்வுகூறல்களும், வேறு வரப்பிரசாதங்களும் காரணமாக அமைந்திருப்பதை அவதானிக்க முடியும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் எடுக்கின்ற ஒரு நிலைப்பாடு, ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது, முழுமொத்தமான முஸ்லிம்களினதும் கூட்டு அபிப்பிராயம் அல்ல என்பதுதான் யதார்த்தம் ஆகும்.
சிறுபான்மை மக்களுக்கு, எல்லாப் பெருந்தேசிய அரசியல் சக்திகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால், சில வருடங்களுக்கு, அந்தச் சக்திகளுள் ‘கொஞ்சம் பரவாயில்லை’ என்று கருதப்படும் சக்திக்கு பின்னால் நிற்பதை, முஸ்லிம் அரசியல்வாதிகள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
அத்துடன், வெல்கின்ற பக்கம் தாமிருக்க வேண்டுமென்ற எண்ணமும் அவர்களுக்கு உள்ளது. இந்தச் சிந்தனை ஓட்டங்களையே,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பில், முஸ்லிம் அரசியல்வாதிகள் வெளிப்படுத்திய நிலைப்பாடும், குறிப்பால் உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம்.
பெரும் எதிர்பார்ப்புகளும் ஆட்சியைப் புரட்டிப் போடும் அதீத கற்பனைகளோடும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம், இனக் கலவரங்கள் மற்றும் அண்மைய நாட்களில் உருவான பல காரணங்களின் அடிப்படையிலேயே இந்தப் பிரேரணை கொண்டு வரப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறிய போதும், இதற்குப் பின்னால், வேறு ஒரு திட்டமும் நிகழ்ச்சி நிரலும் இருப்பதாக, ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறினர்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்று, நேற்று முன்தினம் இரவு 8.30 மணியிலிருந்து சுமார் ஒரு மணிநேரத்துக்கு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பகிரங்கமாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணையைத் தோற்கடித்து, ரணிலுக்கு ஆதரவளிக்கும் விதத்திலும் 76 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. இதன் பிரகாரம், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
தோற்கடிக்கப்பட்ட அல்லது பிரதமரால் வெற்றிகொள்ளப்பட்ட இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பிறகு, இலங்கையின் தேசிய அரசியல் கட்டமைப்பில், திடீர் மாற்றங்கள் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள், அதிலும் விசேடமாக முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் எடுத்த நிலைப்பாடு குறித்து அலச வேண்டியிருக்கின்றது.
முஸ்லிம்கள் எதற்காக இந்த அரசாங்கத்தைக் கொண்டுவரக் காரணமாக இருந்தார்களோ, எதைச் செய்வதாக 2015 தேர்தல் காலத்தில் மைத்திரியும் ரணிலும் வாக்குறுதி அளித்தார்களோ, அவற்றை இன்னும் திருப்திப்படும் விதத்தில், இந்த அரசாங்கம் செய்து முடிக்கவில்லை.
மிகமுக்கியமாக, இனவாதத்தை இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை. அத்துடன்,அம்பாறை, திகண மற்றும் கண்டிக் கலவரங்களின்போது, பாதுகாப்புத் தரப்பு எவ்வாறு நடந்து கொண்டது என்று உலகறியும்.
அப்போது பிரதமரே, சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சராகவும் இருந்தார். இது விடயத்தில், காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதில் அவர் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்தார் என்று, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் விசனமடைந்திருந்தனர்.
அதுமாத்திரமல்லாமல், உள்ளூராட்சி மன்ற ஆட்சியமைப்பு விடயத்தில் ஐ.தே.கட்சிக்கும் இரு பிரதான முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையில், பெரிய நல்லுறவுகள் தென்படவில்லை.
ஹக்கீம் பகிரங்கமாகவே, ஐ.தே.கட்சியை விமர்சித்தார். ரிஷாட் அம்பலத்தில் விமர்சிக்கவில்லை என்றாலும் அறையில் விமர்சித்தார். அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து பல இடங்களில் ‘யானைச் சவாரி’ செய்திருந்த போதிலும், சபைகளின் ஆட்சியமைப்புக்காக மஹிந்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுனவின் ஆதரவை, ஹக்கீம் பெற்றிருந்ததுடன் அதுகுறித்துச் சிலாகித்தும் பேசியிருந்தார். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன், பல சபைகளில் தமது கட்சியின் ஆட்சியை, ரிஷாட் நிறுவியிருந்தார்.
எனவே, இதை நோக்கியபோது, இதில் இருக்கின்ற அரசியல் சூட்சுமங்கள், தெரியாத ஒரு முஸ்லிம் பொதுமகன், இரு பிரதான முஸ்லிம் கட்சிகளும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்றே கருதியிருப்பான்.
ஆனால், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த எல்லா முஸ்லிம் எம்.பிக்களும் பிரேரணைக்கு எதிராகவும், பிரதமருக்கு ஆதரவாகவுமே வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இதன் உள்ளரங்கங்களை அறிந்த பொதுமக்களுக்கு, முஸ்லிம் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு ஆச்சரியமானதல்ல. இவ்வாறே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதமரைக் காப்பாற்றும் பாங்கில் வாக்களித்திருந்தது. இதற்குக் காரணமும் உள்ளது.
நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, வெறும் நம்பிக்கையை மட்டும் உரசிப் பார்க்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல. எனவே, இந்தப் பிரேரணைக்குச் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆதரவளித்திருந்தாலும் நிஜத்தில் இது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நடவடிக்கையாகும்.
எனவே, இதற்கு ஆதரவளிப்பது மஹிந்த தரப்பை, மேலும் பலப்படுத்துவதாக அமையும் என்ற ஒரு விடயம் இதிலிருந்தது. எனவே, ஒப்பீட்டுத் தெரிவுகளில், ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்வதற்கு ஒப்பான ஒரு நடவடிக்கையாகவும் பிரேரணைக்கு எதிரான முஸ்லிம்
எம்.பி.க்களின் வாக்களிப்பை கருத முடிகின்றது.
ஆனால், இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்குரிய நிறையக் காரணங்களும் முஸ்லிம்களிடத்தில் இருந்தன. அதையும் தாண்டி, அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு, முஸ்லிம் கட்சிகளும் எம்.பிக்களும் முடிவெடுத்திருக்கின்றன. ஒப்பீட்டுத் தெரிவின் அடிப்படையிலும் வேறு காரணங்களின் அடிப்படையில் முஸ்லிம் எம்.பிக்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம்.
ஆனால், ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சில விடயங்களை உணர்த்த வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது, முஸ்லிம்கள் இந்தப் பிரேரணையை ஆதரிக்கவும் காரணங்கள் இருக்கின்றன என்பதைக்கூட குறைந்தபட்சமாகச் சுட்டிக்காட்டாமல், வழக்கமான பாணியில் முஸ்லிம் கட்சித்தலைவர்களும் எம்.பிக்களும் வாய்மொழிந்து, தமது நம்பிக்கையை வெளிக்காட்டியுள்ளனர். இதை ஒரு, விவேகமான முடிவு என்றும் அவர்கள் கூறுவார்கள்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குச் சில கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்திருக்கின்றது. முஸ்லிம்கள் மீதான வன்முறைகளைச் சுட்டிக்காட்டியிருந்த மக்கள் விடுதலை முன்னணி, எதிர்த்து வாக்களிக்காமல் விட்டிருக்கின்றது.
ஆனால், இரு முஸ்லிம் கட்சிகளும் சபைக்கு வந்திருந்த ஏனைய முஸ்லிம்
எம்.பிக்களும் எவ்வித எதிர்ப்புக் காட்டாமல் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்கள் எந்தவொரு நிபந்தனையையும் முன்வைத்து வாக்களித்திருக்கவில்லை.
ஒரு காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியது போலவே, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இப்போது நம்பிக்கையை வெளிப்படுத்தும் நற்சான்றுப் பத்திரத்தை முஸ்லிம் எம்.பிக்கள் வழங்கியிருக்கின்றனர். இச்சந்தர்ப்பத்தில், ‘நம்பிக்கை’ பற்றிய வேறுசில கேள்விகள் எழுகின்றன.
அதாவது,மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் ரணிலுக்கும் மாறிமாறி ஆதரவளித்து, தமது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தி வருகின்ற எல்லா முஸ்லிம் கட்சி தலைவர்களும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கு வாக்களித்த முஸ்லிம் மக்கள், தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை எங்ஙனம் காப்பாற்றி வருகின்றார்கள் என்பதே, இவ்வகையான கேள்விகளின் பிரதான கேள்வியாகும்.
இலங்கை முஸ்லிம்கள், 21 பேரை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கின்றனர். இருமுஸ்லிம் கட்சிகளின் ஊடாக, மொத்தமாக 12 பேரும் பெரும்பான்மைக் கட்சிகளில் போட்டியிட்டும் தேசியப்பட்டியல் ஊடாகவும் ஒன்பது உறுப்பினர்களும் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருக்கின்றனர்.
இதற்குப் புறம்பாக, செயற்படுநிலையில் மூன்று, நான்கு அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு உள்ளன. இப்படியிருக்க, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ்,தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளுக்கும் சு.கவிலும் ஐ.தே.கவிலும் போட்டியிடும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குமே, முஸ்லிம் மக்கள் காலங்காலமாக வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். சில முஸ்லிம் அரசியல்வாதிகள், தமக்கிருக்கின்ற வாக்குகளைத் தமது பிள்ளையின் குடும்பத்தினரின் அரசியலுக்காகவும் பயன்படுத்துவதையும் காண முடிகின்றது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு, அரசியல் என்பது கிட்டத்தட்ட ஒரு முழுநேரத் தொழில் என்றே கூறவேண்டியுள்ளது. வேறு தொழில்கள், வர்த்தகங்களை மேற்கொண்டாலும் பலருக்கு அதற்கான முதலீடு அரசியலில் இருந்து கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
அவர்கள் எல்லோரும் தாம் சார்ந்த மக்களுக்கு எதுவும் சேவை செய்யவில்லை என்றோ, ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்றோ எடுத்த எடுப்பில் கூறி விடுவது அபாண்டமாகிவிடும். ஆனால், எந்தளவுக்கு முஸ்லிம் சமூகத்துக்கு நன்றி, விசுவாசத்துடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்திருக்கின்றார்கள் என்பதை, அவர்கள் சுய விசாரணை செய்து கொள்ள வேண்டும்.
ஆட்சியதிகாரத்தில் பங்காளி எனச் சொல்லிக் கொண்டு, பதவிகளை அனுபவிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களது நம்பிக்கையை அத்தாட்சிப்படுத்துவதிலும் காட்டுகின்ற அக்கறையை, தமது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதில், அந்த மக்கள் வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நடந்து கொள்வதில் எந்தளவுக்கு முனைப்புக் காட்டியிருக்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் அவ்வளவு சிரமமானதல்ல.
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்தவர்களோ, தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களோ அல்லர். ஆனால், சிலர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுவதுண்டு.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம், தமது தலைவனின் தவறுகளும் தாம் வாக்களித்த அரசியல்வாதியின் சுத்துமாத்து வேலைகளும் நன்றாகத் தெரிந்திருந்தும், தமது பிரதிநிதி, சமூகம்சார் அரசியலுக்குப் பொருத்தமில்லை என்ற எண்ணம் தோன்றினாலும் அதனையெல்லாம் கடந்து, தமது ஆஸ்தான அரசியல்வாதியையும் கட்சியையும் குருட்டுத்தனமாக நம்பி, முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக முஸ்லிம் அரசியல்வாதிகள் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்ட பிரதியுபகார நடவடிக்கை என்ன?
எனவே, முஸ்லிம் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு எப்படியிருந்தாலும், என்னவிதமான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு,சமுதாயத்தின் நலனுக்கான கோரிக்கையை முன்வைத்து, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பிக்களும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருக்கின்றார்கள் என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டும்.
அத்துடன், இதற்கு முன்னைய காலங்களில், சுதந்திரக் கட்சியுடனும் ஐக்கிய தேசியக் கட்சியுடனும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை முன்வைத்து, உடன்பாடு கண்டதாகக் கூறிய மூன்று ‘காங்கிரஸ்காரர்களும்’, அதில் என்னென்ன கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திருக்கின்றார்கள் என்பதைப் பட்டியலிட்டுச் சொல்ல வேண்டும்.
மிக முக்கியமாக, ஆட்சியாளர்கள் மீதும் பெரும்பான்மைக் கட்சி தலைவர்கள் மீதும் முழு நம்பிக்கை வைத்து நடப்பதுபோல், தமக்கு வாக்களித்து வாழவைக்கும் முஸ்லிம் மக்கள், தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு அருகதையுடையவர்களாகவும் நடந்துகொள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள் பழகிக் கொள்ள வேண்டும்.
Average Rating