இளையராஜா இசையமைத்த முதல் பாட்டு!(சினிமா செய்தி)

Read Time:4 Minute, 7 Second

அப்போது இளையராஜா, சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கவில்லை. இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகத்தான் பணியாற்றிக் கொண்டிருந்தார். வெங்கடேஷ் இசையில் இரட்டை இயக்குநர்களான தேவராஜ் – மோகன் இயக்கத்தில் சிவகுமார் – ஜெயசித்ரா நடித்த ‘பொண்ணுக்கு தங்க மனசு’ (1973) படத்துக்கான இசையமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.

வெங்கடேஷ் இசையமைத்துக் காட்டிய டியூன் ஒன்று, இசையமைப்பாளர்களை திருப்திப்படுத்தவில்லை. அவர் வேறு வேறு டியூன்கள் போட்டுக் கொடுத்தும் தேவராஜும், மோகனும் “இன்னும் கொஞ்சம்…. இன்னும் கொஞ்சம்” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நேரம் கடந்துகொண்டே இருந்தது.

ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு ஜி.கே.வெங்கடேஷ் ‘ரிலாக்ஸ்’ ஆக வெளியே சென்றார். உடனே இயக்குநர்கள், “தம்பி ராஜா, அதுவரை நீ ஏதாவது டியூனை எடுத்து விடப்பா” என்று கேட்டுக் கொண்டார்கள். ராஜா, ஹார்மோனியத்தில் இசையமைக்க இயக்குநர்கள் ஹேப்பி.ஜி.கே.வெங்கடேஷ் உள்ளே வந்தவுடனேயே, “நம்ம தம்பி ஒரு டியூன் வாசிச்சார். பிரமாதமா இருந்தது” என்று சொல்லியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.

ராஜாவுக்கு அப்படியே ‘பக்’கென்று ஆகிவிட்டது. வெங்கடேஷ் பெருந்தன்மையானவர். “நான் போட்ட டியூனா இருந்தா என்ன, என் தம்பி போட்ட டியூனா இருந்தா என்ன…. அதையே வெச்சுக்கலாம்” என்றார். ராஜாவை வாசிக்கச் சொல்லி கேட்டு அவரும் அகமகிழ்ந்து, “ரொம்ப பிரமாதம்…. ரொம்ப பிரமாதம்” என்று பாராட்டினார்.

பாடலை யார் எழுதுவது என்று பேச்சு வந்தது. கவிஞர் முத்துலிங்கத்தை வைத்து எழுதலாம் என்று இயக்குநர்கள் முடிவெடுத்தார்கள். உடனே ராஜாவையே முத்துலிங்கம் வீட்டுக்கு அனுப்பினார்கள். ராஜா, டியூனை வாசித்துக் காட்ட முத்துலிங்கம் ஸ்பாட்டிலேயே எழுதிக் கொடுத்துவிட்டார். ராஜாவுக்கு வரிகள் திருப்தியாக இருந்தன. கவிஞர் முத்துலிங்கத்துக்கும் சினிமாவில் அதுதான் முதல் பாட்டு.

கிராமத்து மெட்டை அடிப்படையாகக் கொண்ட அந்தப் பாட்டு, பல்வேறு ராகங்களில் பயணப்பட்டு ராகமாலிகையாக ஒலிக்கும். ‘தஞ்சாவூரு சீமையிலே நான் தாவி வந்த பொன்னியம்மா’ என்கிற அந்தப் பாட்டு காவிரியாற்றின் பயணம் குடகில் தொடங்கி, கடைமடைக்கு வந்து கடலில் சேருவதை அடிப்படையாகக் கொண்டது. சினிமாவுக்கு இசைஞானி கொடுத்த முதல் பாட்டு அதுதான். எனினும் டைட்டிலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

அதனால் என்ன?

இளையராஜா பெற்ற முதல் இசைக்குழந்தையை அவருடைய அண்ணன் பாவலர் வரதராசன் கொண்டாடித் தீர்த்துவிட்டார். ‘பொண்ணுக்கு தங்க மனசு’ படம், மதுரை, தேனி வட்டாரங்களில் வெளியான திரையரங்குகளில் எல்லாம் தன்னுடைய தோழர்களோடு பேனர், கொடியெல்லாம் கட்டி அமர்க்களப்படுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் : 18 பேர் பலி!!(உலக செய்தி)
Next post கழற்சிக்காய்!(மருத்துவம்)