நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!(சினிமா செய்தி)
பத்திரிகையாளர்களுக்கும் சினிமாத் துறைக்கும் நெருங்கிய உறவுண்டு. அதனடிப்படையிலேயே பத்திரிகையாளர்கள் திடீர் திடீரென இயக்குநர் அவதாரம் எடுப்பது நிகழும். லேட்டஸ்டாக இந்தப் பட்டியலில் இணைந்திருப்பவர் மு.மாறன். பிரபல பத்திரிகைகளில் பணிபுரிந்து, பின்னர் நீண்டகாலம் சினிமாத்துறையில் பெரிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக அனுபவம் பெற்று, இப்போது அருள்நிதி நடிக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மூலம் இயக்குநராக பிரமோஷன் பெற்றிருக்கிறார்.
நீங்க விட்டது டிரெய்லர் இல்லை…
த்ரில்லர்..படமே த்ரில்லர் ஜானர்தான் பாஸ். உலகத்தில் மொத்தமே ஏழு கதைதான் இருக்குன்னு சொல்வாங்க. திரும்பத் திரும்ப அந்த கதைகளையேதான் வேற வேற ஆட்களை வெச்சு வேற வேற மாதிரியா திருப்பித் திருப்பி எடுத்துக்கிட்டிருக்கோம். என் படம் எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடும்னுலாம் சொல்லமாட்டேன். ஆனா, ட்ரீட்மென்ட் புதுசா இருக்கும். இருபத்து நாலு மணி நேரத்தில் நடக்கிற கதை. திரைக்கதை சம்பவங்கள் ஏன் நடக்குதுன்னு ப்ளாஷ்பேக்கில் புரியும். விறுவிறு திரைக்கதை, எதிர்பாராத ட்விஸ்ட்டுன்னு ஆடியன்ஸ் நிச்சயம் என்ஜாய் பண்ணுவாங்க.
அருள்நிதி இப்போவெல்லாம் ஆக்ஷனில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டாரா?
இதுலே அவரோட வேற டைமன்ஷனை நீங்க பார்க்கலாம். அவர் கேரக்டர் பேரு பரத். கால்டாக்ஸி டிரைவர். பாடிலேங்குவேஜ், டயலாக் மாடுலேஷன்னு நாம அன்றாடம் சந்திக்கிற கால்டாக்ஸி டிரைவர்களை அப்படியே ஸ்க்ரீனுக்கு கொண்டு வந்திருக்காரு. அவரை மாதிரி ஒரு ஹீரோ கிடைச்சிட்டா, எந்த புதுமுக இயக்குநரும் கொஞ்சம்கூட பதட்டமே இல்லாம வேலை பார்க்கலாம். இயக்குநரோட விருப்பத்தை உணர்ந்து வேலை செய்யுற நடிகர் அவர். நம்ம கிட்டே என்ன நேர்மையை எதிர்பார்க்கிறாரோ, அதே நேர்மையை அவரும் நமக்குத் தருவார்.
ஹீரோயின் மகிமா?
நர்ஸா வர்றாங்க. ஏற்கனவே இந்த கேரக்டர் செய்தவங்க என்பதால் திரும்பவும் இவங்களை இதே கேரக்டர்லே நடிக்க வைக்கலாமான்னு ஆரம்பத்துலே தயங்கினோம். ஆனா, அவங்க உள்ளே வந்தப்புறம் வேற யாரும் இவங்களவுக்கு சுசீலாங்கிற இந்த கேரக்டரை செஞ்சிருக்க முடியுமான்னு சந்தேகம் வந்துடிச்சி. கேரக்டருக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு நடிக்கிற நடிகை. இந்தப் படத்துக்குப் பிறகு அவங்க ஒரு பெரிய ரவுண்டு வருவாங்க.
மற்ற நட்சத்திரங்கள்?
படத்துலே காமெடி ஏரியாவை ஆனந்தராஜ் சார் குத்தகைக்கு எடுத்துக்கிட்டாரு. வில்லத்தனம் கலந்த காமெடிக்கு அவரை விட்டா வேற யாரை யோசிக்க முடியும்? ‘திருடா திருடி’ சாயாசிங், ‘ஆடுகளம்’ நரேன், அஜ்மல், முருகதாஸ், ஜான்விஜய்னு எல்லாருமே பெரிய நட்சத்திரங்கள். அவங்கவங்களுக்கு உரிய முக்கியத்துவத்தோடு பயன்படுத்தியிருக்கோம்.
படத்தோட ஸ்பெஷல் என்ன?
சஸ்பென்ஸா வெச்சிருந்தேன். நீங்க கேட்குறதாலே சொல்ல வேண்டியிருக்கு. படத்துலே வர்ற கதாபாத்திரங்களின் பெயர்கள் எல்லாமே இதுவரை சுஜாதா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ஆர்னிகா நாசர், சுபா, ராஜேந்திரகுமார்னு நம்ப தமிழ் கிரைம் எழுத்தாளர்கள் படைத்த கேரக்டர்களா இருக்கும். ஹீரோவோட பேரு பரத். ஹீரோயினோட பேரு சுசிலா. பட்டுக்கோட்டை பிரபாகரோட பரத் – சுசிலாவை பிரதிநிதித்துவப்படுத்தித்தான் இந்தப் பெயர்களை வெச்சோம்.
பாட்டு?
ரெண்டே பாட்டுதான் படத்துலே. ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். அவரே இசையமைச்சி, அவரே எழுதியிருக்கிறார். அப்புறம் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு. ஏற்கனவே ‘டிமாண்டி காலனி’, ‘ஆறாது சினம்’னு அவருக்கு அருள்நிதியோட நல்ல கெமிஸ்ட்ரி. அரவிந்த் சிங்கோட ஹெல்ப் இல்லைன்னா என்னாலே இவ்வளவு வேகமா படப்பிடிப்பை நடத்தி முடிச்சிருக்க முடியாது. எடிட்டர் ஷான் லோகேஷ், செமத்தியா எங்க படத்தை ட்ரிம் பண்ணியிருக்காரு. டிரைலரிலேயே அவரோட உழைப்பை நீங்க பார்த்திருப்பீங்க. அப்புறம் எங்க தயாரிப்பாளரைப் பத்தி சொல்லியே ஆகணும். டில்லிபாபு சாருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். நிறைய பேருகிட்டே இந்தக் கதையை சொன்னேன். இவர்தான் ஆர்வமா இந்தப் படத்தை எடுத்தே ஆகணும்னு முயற்சியெடுத்து கேட்டதையெல்லாம் செஞ்சு கொடுத்தாரு.
நீங்க பத்திரிகையாளர்னு மட்டும்தான் தெரியும். உங்க மற்ற பின்னணி?
பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில். கெமிக்கல் டெக்னாலாஜி படித்தேன். சின்ன வயதிலேயே சினிமா மீது காதல் இருந்தது. அதன் ஒரு பகுதியாக பாக்கெட் நாவல்களை வெறித்தனமாக வாசிப்பேன். க்ரைம் நாவல் ஒண்ணு விடமாட்டேன். சொன்னா நம்பமாட்டீங்க! படிப்பு முடிந்து நான் வேலை தேடிப் போய் நின்ற இடம் ‘சூப்பர் நாவல்’ ஆபீஸ். பதிப்பாளர் எஸ்.பி.ராமு சாரைச் சந்தித்து வேலை கேட்டேன். விளம்பரப் பிரிவில் சேரச் சொன்னார். நான் எடிட்டோரியல் வேலை கேட்டேன். வேலைக்கு ஆள் தேவைப்படும் போது தகவல் கொடுக்கிறேன் என்றார். ஒரு மாதம் கழித்து வேலை இருக்கு வாங்க என்று சொல்லி உதவி ஆசிரியர் வேலை கொடுத்தார்கள்.
பத்திரிகைப் பணி எதுவும் தெரியாது. ஆர்வத்தின் மிகுதியால் கற்றுக்கொண்டேன். எழுத்தாளர் படுதலம் சுகுமாரன், பத்திரிகை பற்றிய நுட்பங்களை சொல்லிக் கொடுத்தார். ‘உங்கள் ஜூனியர்’, ‘உல்லாச ஊஞ்சல்’ போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாவல்களில் வேலை பார்த்தேன். ஒரு கட்டத்தில் மிகப்பெரிய நிறுவன பத்திரிகையில் வேலை பார்க்கணும் என்று முடிவு செய்து குமுதம், விகடன், கல்கி பத்திரிகைகளில் வேலை பார்த்தேன்.
நான் சினிமாவுக்கு வருவதற்கு கிரேஸி மோகன் முக்கியமான காரணம். அவர்தான் என்னை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சாரிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார். ‘ஜக்குபாய்’ டிஸ்கஷன் வரை அவரிடம் இருந்தேன். சுரேஷ் கிருஷ்ணா, கே.வி.ஆனந்த், லாரன்ஸ், சுந்தர்.சி, முருகானந்தம் ஆகியோரிடம் இருந்தேன். என் முதல் படைப்பு என் குருநாதர்களுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Average Rating