றீகனும் ஜே.ஆரும் குட்டி யானையும்!!(கட்டுரை)
வௌ்ளை மாளிகையின் விருந்தினராக ஜே.ஆர்
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில், இனப்பிரச்சினை தொடர்பில், மிக முக்கியமான வருடம் என்று, ஒரு வருடம் குறிப்பிடப்பட வேண்டுமானால், நிச்சயம் அது 1984 தான்.
தமிழர் அரசியல்பாதை முழுமையாக மாறிய வருடம். ‘ஈழத்து காந்தி’ என்று பகட்டாரவாரம் செய்யப்பட்ட அரசியல்பாதையிலிருந்து, தமிழர் அரசியலின் பிரதான மையவோட்டம், ஆயுத வழிக்குத் திரும்பிய அல்லது திரும்பச் செய்யப்பட்ட வருடம் இது.
எந்தவித முன்னேற்றமுமின்றி, அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள், நட்டாற்றில் விடப்பட்ட நிலையில்தான், சர்வகட்சி மாநாடு பயணித்துக் கொண்டிருந்தது. சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான விஜயத்தைத் தனக்குச் சாதகமான முறையில் முடித்துத் திரும்பியிருந்த ஜே.ஆர், 1984 ஜூன் மாதம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
வௌ்ளைமாளிகையின் (அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகம் மற்றும் இல்லம்) விருந்தினராக, இலங்கை அரசாங்கத்தின் தலைவரொருவர் அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டார் என்பது, வரலாற்றில் முதற்தடவை.
1984 ஜூன் 18ஆம் திகதி, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனை, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, வௌ்ளை மாளிகையில் சந்தித்தார். பிரத்தியேக சந்திப்புகள் கலந்துரையாடல்களின் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி றொனல்ட் றீகன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தில், இருவரும் ஆற்றிய உரைகள், இரு நாடுகளின் பரஸ்பர உறவுகள் பற்றியே அமைந்திருந்தன.
இலங்கையின் இனப்பிரச்சினை பற்றித் தனது பேச்சில், றொனல்ட் றீகன் எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. அது, ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையிலான அபிவிருத்தித் திட்டங்கள், இலங்கையின் அணிசேராக் கொள்கை என்பவை பற்றியே அமைந்திருந்தது.
இந்த விஜயத்தின்போது, ஜே.ஆர் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஒரு யானைக் குட்டியை, அமெரிக்க ஜனாதிபதி றீகனுக்குப் பரிசளித்திருந்தார். அந்தப் பரிசுக்கு நன்றி கூறிய றீகன், ஜே.ஆருடைய கட்சியின் சின்னமும் யானை, என்னுடையதும் அதுவே என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கப் பத்திரிகைகளில், ‘கறுப்பு ஜூலை’ பற்றி ஞாபகமூட்டும் விளம்பரங்கள் வந்திருப்பதைத் தனது பேச்சில் குறிப்பிட்டுக் காட்டிய ஜே.ஆர், “இலங்கையின் நீண்ட வரலாற்றில், கடினமான காலகட்டங்கள் இருந்துள்ளன. கொலைகள் நடந்துள்ளன; படுகொலைகள் நடந்துள்ளன; கலவரங்கள் நடந்துள்ளன; நல்லவைகளும், தீயவைகளும் நடந்துள்ளன. கடந்த ஜூலை மாதம், அதுபோன்ற ஒரு கெட்ட காலத்தை, நாம் சந்தித்திருந்தோம். ஆனால், எதிர்காலத்தில் அது மறக்கப்பட்டுவிடும். அந்த நாளை, எமக்கு ஞாபகப்படுத்தும் விளம்பரமொன்றை உங்களுடைய பத்திரிகையில் பார்த்தேன். அது கொடுமையான நாள். பல மக்களும் கொல்லப்பட்டார்கள். அது அரசாங்கத்தால் செய்யப்படவில்லை. அது காடையர் குழுவால் செய்யப்பட்டது. அதற்காக நாம் மிகவும், மிகவும் வருந்துகிறோம். நான், அதை மறக்க நினைக்கிறேன். நாம், என்னுடைய மக்கள் – மக்களில் சிலர் – இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் செய்யாதிருக்க வைக்கவே முயற்சிக்கிறேன். அதில் நான் வெற்றிபெறுவேன் என்று நம்புகிறேன்” என்று பேசியிருந்தார்.
இந்தப் பகிரங்கப் பேச்சுக்கு முன்னதாக, ஜனாதிபதி றீகனுடனான பிரத்தியேக சந்திப்பின் போது, இலங்கையின் இனப்பிரச்சினையின் நிலை பற்றிக் கூறி, இராணுவ உதவிகளை ஜே.ஆர் வேண்டியிருந்தார்.
இராணுவ உதவி குறித்த விடயங்கள் பற்றி, உபஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் (சீனியர்) உடன் கலந்துரையாடுமாறு, றீகன் சொன்னதற்கிணங்க, ஜோர்ஜ் புஷ் (சீனியர்), வௌியுறவுச் செயலாளர் ஜோர்ஜ் ஷல்ட்ஸ், கருவூலச் செயலாளர் பீற்றர் மக்பேர்ஸன் உள்ளிட்டவர்களைச் சந்தித்த ஜே.ஆர், இலங்கையின் இனப்பிரச்சினை பற்றியும் அதன் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்திருந்தார்.
அத்துடன், இந்திய தலையீடு பற்றியும் அவர்களுடன் பகிர்ந்திருந்தார். “திருமதி காந்தி (இந்திரா காந்தி) பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். ஏனென்றால், எதிர்வரும் பொதுத்தேர்தலில், தமிழ் நாட்டில் வெற்றிபெற வேண்டும் என்பதில், அவர் அக்கறை கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சினை என்னவென்றால், அங்கு இரண்டு தலைமைகள் உள்ளன. ஒன்று கருணாநிதி, மற்றையவர் எம்.ஜி.இராமச்சந்திரன். இவர்களின் எம்.ஜி.இராமச்சந்திரன், முதலில் இலங்கையின் நண்பராகத்தான் இருந்தார். ஆனால், இலங்கை விடயம், அவர்கள் மாநிலத்தில், முக்கிய அரசியல் பிரச்சினையாக உருவெடுத்த பின்னர், அவரும் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். நான் பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு, திருமதி காந்தியை உடனழைக்கவே விரும்புகிறேன். அவர் பயங்கரவாதிகளுக்கான ஆதரவை நிறுத்துவாரானால், என்னால் இலங்கையில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியும்” என்று ஜே.ஆர் குறிப்பிட்டிருந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில், ரவி பிரசாத் ஹேரத் மேற்கோள் காட்டுகிறார்.
இதைத் தொடர்ந்து, ஜே.ஆர் பயங்கரவாத ஒழிப்புக்காக இராணுவ உதவிகளை வேண்டியதாகச் சில ஆய்வாளர்கள் பதிவு செய்கிறார்கள். உத்தியோகபூர்வமான வகையில், அமெரிக்கா எந்தவித இராணுவ உதவிகளையும் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளூடாக, இலங்கைக்கு இராணுவ உதவிகளை அமெரிக்கா செய்தது எனச் சில ஆய்வாளர்கள் கருத்துரைக்கிறார்கள். இந்தியாவுடன் நேரடியான முரண்பாட்டுக்கு, அமெரிக்கா தயாராக இல்லாதது, இதற்குக் காரணமாக இருக்கலாம்.
பாம்புக்குத் தலை; மீனுக்கு வால்
1984 ஜூன் 19ஆம் திகதி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘த வொஷிங்டன் போஸ்ட்’ இன் தலைவராக இருந்த கதரீன் க்ரஹம்மின் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.ஆர், “தமிழ் பேசும் பிரதேசங்களில், எம்மால் ஓர் அரசியல் பிரசாரக் கூட்டத்தைக் கூட நடத்த முடியாத நிலைதான் இலங்கையில் உள்ளது. ஆகவே, நாம் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும். இந்தியா என்ன நினைக்கிறது என்பதைப் பற்றி, எனக்குக் கவலையில்லை. எமது ஒற்றுமையையும் இருப்பையும் நாம் பேணிக்கொள்ள வேண்டும். திருமதி காந்திக்குப் பிடிக்காத, தகுதியிழந்த ஓர் அரசியல்வாதியான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை ஊடாக, மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சிக்கிறார். எங்கள் குற்றச்சாட்டு என்னவென்றால், தமிழ்நாடு அரசாங்கம், பயங்கரவாதிகளுக்கு உதவிசெய்கிறது. அது, அவர்களுக்கு உள்ளக அரசியல் பிரச்சினையாக உள்ளது. இந்தப் பயங்கரவாதிகள், ஒரு மாக்ஸிஸ அரசை ஸ்தாபிக்க விளைகிறார்கள். இதில், சோவியத்தின் தலையீடு இருப்பதற்கான ஆதாரமெதுவும் என்னிடம் இல்லை. ஆனால், இந்தியா ஏன் (எமக்கு) உதவிகரமான நிலைப்பாட்டை எடுக்காதிருக்கிறது? நான், திருமதி காந்திக்குச் சொல்வது, இரகசியமாக தென்னிந்தியாவிலிருந்தே, இலங்கைக்குப் பயங்கரவாதிகள் வருகிறார்கள். திருமதி காந்தியிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை, ஒன்றுபட உந்துதலளிக்காதீர்கள். அத்தோடு அவற்றுக்கு உதவிகளையும் வழங்காதீர்கள் என்பதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் ஒரு வகை இராஜதந்திரம் என்று கூட இதைச் சொல்லலாம்.
இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அதிகம் பேசாது, அதற்கான காரணகாரியங்கள், அரசியல் தீர்வுக் கோரிக்கைகள் இவற்றையெல்லாம் வசதியாகத் தவிர்த்துவிட்டு, இலங்கையிலுள்ள பிரச்சினையைப் பயங்கரவாதப் பிரச்சினையாகவும் அதுவும் அந்தப் பயங்கரவாதிகள் மாக்ஸிஸவாதிகள் எனவும், மாக்ஸிஸ அரசைக் கட்டியெழுப்பவே எத்தனிக்கிறார்கள் என்றும், இந்தியாவின் நிலைப்பாடு என்பது கூட வெறும் அற்ப தேர்தல் அரசியல் இலாபத்துக்காக மட்டும்தான் என்பதும் போன்ற விம்பத்தை ஜே.ஆர், அமெரிக்காவில் சமர்ப்பித்தார்.
இதற்குக் காரணம், ஜனாதிபதி றீகனால் அன்று முன்னெடுக்கப்பட்டு வந்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர், மற்றும் அமெரிக்கர்களிடையே இயல்பாகவுள்ள கொம்னியூஸ விரோதம் ஆகியவற்றைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தி எனலாம்.
அத்தோடு, தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் தலையிடுவது, தமிழக மக்களின் அழுத்தத்தால் என்பதை, அது வெறும் அரசியல் தந்திரோபாயமே என்று நிறுவுவதன் ஊடாக, நீர்த்துப்போகச் செய்யலாம் என்றும் எண்ணியிருக்கலாம்.
பிரித்தானியாவில் ஜே.ஆர்
அமெரிக்காவைத் தொடர்ந்து ஜே.ஆர் பிரித்தானியாவுக்கான விஜயத்தையும் மேற்கொண்டிருந்தார்.
பிரித்தானியாவுடன், ஜே.ஆர் காலத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமான உறவு இருந்தது. ஏனென்றால், 1982இல் ஆர்ஜென்டீனாவுக்கு அருகில் அமைந்துள்ள ‘போக்லண்ட் தீவு’களின் இறைமை தொடர்பில், ஆர்ஜென்டீனாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் போரைத் தொடர்ந்து, பிரித்தானியாவை ஆதரித்த வெகு சில நாடுகளில் இலங்கையும் ஒன்று.
1982 நவம்பரில், ‘போக்லண்ட் தீவுகள்’ பிரச்சினை தொடர்பான, ஐ.நா பொதுச் சபைத் தீர்மானம் ஒன்றில், பிரித்தானியாவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த, வெறும் 12 நாடுகளில் இலங்கையும் ஒன்று.
பிரித்தானியா உடனான இந்த நெருக்கமான உறவு, இலங்கைக்கு ‘விக்டோரியா நீர்த்தேக்கம்’ உள்ளிட்ட பொருளாதார ரீதியிலான உதவிகள் பலதையும் பெற்றுத் தந்திருந்தது.
இதன் அடிப்படையில், சில இராணுவ உதவிகளையும் ஜே.ஆர் வேண்டியிருந்தார். ஆனால், ஜே.ஆர் எதிர்பார்த்தபடி, இராணுவ உதவிகளை அன்று பிரித்தானியா, நேரடியாக வழங்க முன்வரவில்லை.
மாறாக, இராணுவ வழியைத் தவிர்த்து, இந்திய அனுசரணையுடன், அரசியல் தீர்வு எட்டுவதற்கு முயற்சிக்குமாறு, அன்றைய பிரித்தானிய பிரதமர் மார்க்றட் தட்சர், ஜே.ஆருக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும், இதற்குப் பிரித்தானியா, இந்தியாவுடன் முரண்பட விரும்பாததுதான் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்கா போலவே, பிரித்தானியா நேரடியாக இராணுவ உதவிகளை வழங்காவிட்டாலும், மறைமுகமான உதவிகளை வழங்கியிருக்கிறது என்றும் சிலர் கருத்துரைக்கிறார்கள்.
குறிப்பாக, இலங்கையில் விசேட அதிரடிப் படைக்கான பயிற்சியை, பிரித்தானிய தனியார் இராணுவ நிறுவனம் ஒன்று வழங்கியிருக்கிறது என்பதுடன், பயங்கரவாத முறியடிப்புப் பயிற்சிகளையும் வழங்கியிருக்கிறது என்று தனது நூலொன்றில் ஃபில் மில்லர் குறிப்பிடுகிறார்.
இந்தியா அறிந்திருந்தது
அண்மையில், பகிரங்கமாக்கப்பட்ட சில இரகசிய ஆவணங்களின்படி, 1984இல், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பிரித்தானியப் பிரதமர் மார்க்றட் தட்சருக்கு, “நீங்கள், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி,
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை சர்வ கட்சி மாநாட்டில் ஆக்கபூர்வமான முன்மொழிகளைச் செய்து, நேர்மறையான தலைமைத்துவத்தை வழங்க அறிவுறுத்துவீர்கள் என்று நாம் நம்புகிறோம். இராணுவ உதவிகளும், கிளர்ச்சி முறியடிப்பு உதவிகளும் அரசியல் பிரச்சினையைத் தீர்க்காது. அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அதை எதிர்கொண்டே தீர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்ததாக அறியக் கிடைக்கிறது.
ஆகவே, ஜே.ஆரின் விஜயங்களையும் அதன் பின்னால் நடப்பவற்றையும் இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டே இருந்தது எனலாம்.
மீண்டும் இந்திராவுடன் ஜே.ஆர் சந்திப்பு
சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, பிரித்தானியா என்ற முக்கிய நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டுவிட்டு, இந்தியாவைத் தவிர்த்துவிட்டால், அது மிகப்பெரும் இராஜதந்திரப் பிசகாகிவிடும்.
அதுவும் குறிப்பாக, இந்தியாவைப் பகைக்க, ஜே.ஆர் அதிகம் நம்பிக்கை கொண்ட, அமெரிக்காவே தயாராக இல்லாத நிலையில், இந்தியாவையும் சமாளித்துப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஜே.ஆருக்கு இருந்தது.
ஆகவே ஜே.ஆர், இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு, டெல்லி சென்று, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்தார்.
ஜே.ஆரிடம், பிராந்திய சபைகளை, உங்களால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று, இந்தரா காந்தி மிகுந்த அதிருப்தியுடன் வினாவினார். ஏனென்றால், சில மாதங்களுக்கு முன்புதான், இதே இந்திரா காந்தியிடம் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளுக்கு, ஜே.ஆர் தனது, சம்மதத்தை வழங்கியிருந்தார்.
இந்தமுறை ஜே.ஆரின் பதில் வேறானதாக இருந்தது. “அந்த விடயத்தில் என்னால், மக்களை என்னோடு இணங்கச் செய்ய முடியாதுள்ளது. இதை நாங்கள் வழங்கினால், ஒரு கட்சியாக, எங்களுடைய அத்திபாரத்தையே நாம் இழந்துவிடுவோம்” என்று சொன்னார்.
அத்தோடு, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள், சிங்கள மக்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது என்றும், அதுவே, சிங்கள மக்களைக் கடுமையான நிலைப்பாடெடுக்க வைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஜே.ஆரின் இந்தப் பதிலும், அவர் முன்னர் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியிருந்ததும் இந்திரா காந்திக்குக் கடும் அதிருப்தியை அளித்திருந்தது.
Average Rating