கழற்சிக்காய்!(மருத்துவம்)
நம் நாட்டு வேலிகளிலும், சாலையோரங்களிலும், புதர்களிலும் பயிராகும் ஒரு கொடி கழற்சிக்கொடி ஆகும். இது இறைவனைப் போலத் தானாய் வந்து தயை செய்யும் ஒரு மூலிகை ஆகும். ஊமத்தங்காய் போல காய்களின் மேல் முட்கள் போன்ற அமைப்பைக் கொண்டது. ஆனால், சற்று சிறியதும் முட்டை வடிவினதுமான காய்களைக் கொண்டது. இதன் விதைகள் மிகவும் கடினமானவை. உள்ளிருக்கும் பருப்புகள் முந்திரியைப் போல மென்மையும், வண்ணமும் பெற்றிருந்தாலும் கடுமையான கசப்பு குணம் கொண்டவை ஆகும். கல்லுக்குள் ஈரம் என்று சொல்வார்கள். அது போல தன்மையில் தடினமானதாகத் தோன்றினாலும் பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியவையாக விளங்குகின்றன.
Caesalpinia bonducella என்பது கழற்சிக்காயின் தாவரப் பெயர் ஆகும். Fever nut, Bonduc nut, Molucca Bean என்பவை ஆங்கிலப் பெயர்களாகும். குபேராக்ஷி, வஜ்ஜிர பீஜம் என்பவை கழற்சிக்காயின் வடமொழிப் பெயர்களாகும். கச்சக்காய், களிச்சக்காய் என்றெல்லாம் தமிழில் குறிப்பிடுவ துண்டு. இதன் இலை, வேர், பட்டை, விதைகள், விதைகளின் மேலோடு ஆகியன மருத்துவத்துக்கு பயன்படுகின்றன.
கழற்சிக்காயும் மருத்துவப் பயனும்
கழற்சிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிப் பலன் தருகிறது. விதைகள் வயிற்றுப்போக்கைக் நிறுத்தக் கூடியது, தொற்றுக் கிருமிகளுக்கு எதிரானது, நோய்த் தடுப்பு மருந்தாவது, நுண்கிருமிகளை அழிக்கவல்லது, பூஞ்சைக் காளான்களைப் போக்கவல்லது, சர்க்கரை நோயைப் போக்கவல்லது, கட்டிகளைக் கரைக்கவல்லது, காய்ச்சலைத் தணிக்கக்கூடியது, சிறந்த வலி நிவாரணியாவது, யானைக்கால் காய்ச்சல் மற்றும் வீக்கத்தைத் தணிக்கக்கூடியது, மனப் பதற்றத்தைப் போக்கக்கூடியது, வீக்கத்தைக் கரைக்கக் கூடியது, சோர்வைப் போக்கக்கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது, வலிப்பைத் தவிர்க்கவல்லது, கடுப்பைத் தவிர்க்கக்கூடியது, சிறுநீரைப் பெருக்கவல்லது, பூச்சிகளைக் கொல்லவல்லது, உடல் நோயுறுந் தன்மையில் அதை சமன் செய்யவல்லது, ஞாபக சக்தியையும், உடல் பலத்தையும் பெருக்கவல்லது, பூச்சிகளைத் தடுக்கவல்லது, நரம்புகளுக்கு பலத்தைத் தரவல்லது.
கழற்சிக்காயின் மருத்துவ குணம் பற்றி அகத்தியர் பாடல்
‘விரை வாதஞ் சூலையறும் வெட்டையன் லேகும்
நிரை சேர்ந்த குன்மம் நிலையா – துரை சேர்
அழற்சி விலகும் அருந்திற் கசப்பாங்
கழற்சியிலை யென்றுரைக்குங் கால்.’
– அகத்தியர் குணபாடம்
மிகவும் கசப்பு நிறைந்த கழற்சி இலையை உள்ளுக்கு மருந்தாகக் கொள்வதால் அண்ட வாதம் என்னும் விரை வாதம் குணமாகும். வயிற்றுவலி போகும். வெள்ளை ெவட்டை என்னும் உஷ்ணப் பிணிகள் ஓடும். மிகுதிப்பட்டு துன்பம் தரும் வயிற்றுப்புண்(அல்சர்) குணமாகும். வீக்கம் எதுவாயினும் கரையும் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும். இவை மட்டுமின்றி முறை வைத்து வந்து துன்புறுத்தும்(Anti periodic) நோய்கள் விலகியோடும். டானிக் போல ஊட்டச் சத்தினைத் தரும், ருது உண்டாக்கி மற்றும் பால் பெருக்கி என்கிற வகையில் மருந்தாகியும் பயன் தருவதாகும்.
நாட்டு மருத்துவத்தில் கழற்சிக்காய்
* பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் விதைகளை வயிற்றுக்கோளாறுகளைப் போக்கவும், இலகு மலமிளக்கியாகவும், சோர்வைப் போக்கவும், ஊட்டச்
சத்துக்காகவும் பயன்படுத்துகின்றனர்.
* நீண்ட நாட்பட்ட வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண்கள், புரையோடிய கட்டிகள் ஆகியவை குணமாகவும்
கழற்சிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
* புதிதாக தூளாக்கப்பட்ட கழற்சி சூரணம் ஆறாத கட்டிகளையும் புரையோடிய புண்களையும் ஆற்ற மேல்பற்றிடும் மருந்தாகப் பயன்படுகிறது.
* கழற்சி இலைகள் மற்றும் விதைகள் வீக்கத்தைக் கரைக்க மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
* காம்புகளும் இலைகளும் வயிற்றுப்பூச்சிகளை அகற்றுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் மாதவிலக்கை ஊக்குவிப்பதற்கும் பால் சுரப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
* கழற்சிக் கொடியின் துளிர்கள் ஈரல் நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
* விளக்கெண்ணெயோடு கழற்சிச் சூரணத்தைப் போட்டுக் காய்ச்சிய தைலத்தை விதை வீக்கத்துக்கு மேல்பூச்சு மருந்தாகவும், விதைப்பை வலிக்காகவும், சுரப்பிகளின் வீக்கங்களைக் கரைப்பதற்கும் மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
* விதைகளை கடாயில் இட்டு ேலசாக பச்சை வாடை போகும்படி வறுத்து எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு வெருகடி அளவு(1000 மி.கி.) உள்ளுக்குக் கொடுப்பதால் விரைவாதம் மற்றும் ெதாழுநோய் ஆகியன குணமாகின்றன.
* வறுத்த கழற்சிக்காய் பொடியை தீநீர் இட்டு உள்ளுக்குக் கொடுப்பதால் மூச்சுத் திணறல் மற்றும் ஆஸ்துமா ஆகியன குணமாகின்றன.
* ஆயுர்வேத மருத்துவத்தில் இளந்தளிர்கள், வேர்ப்பட்டை ஆகியவற்றை கட்டிகளைக் கரைக்க உபயோகப்படுத்துகின்றனர்.
* இலைச்சாற்றினை யானைக்கால் நோயைப் போக்குவதற்கும், வயிற்றுப்பூச்சிகளை அகற்றுவதற்கும் உள் மருந்தாக உபயோகப்படுத்துகின்றனர்.
* இலையை விழுதாக்கி மேல் பற்றிட வலி மற்றும் வீக்கம் தணிகிறது.
* இலையை விழுதாக்கி உள்மருந்தாகக் கொடுப்பதால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு ஆகியவை குணமாகின்றன.
* அஸ்ஸாம் மாநிலத்தில் விதைகளைச் சூரணித்து சர்க்கரை நோயைத் தணிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
* மலேசிய மக்கள் இளந்தளிர்களை விழுதாக்கி விட்டு விட்டு வருகிற முறைக்காய்ச்சலைப் போக்கவும், வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கவும் உள்ளுக்குத் தரும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
* இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் கழற்சிக்காயை காய்ச்சலைப் போக்குவதற்கும், முறை நோய்களைப் போக்குவதற்கும், வலிப்பைத் தணிப்பதற்கும், பாரிச வாயுவை குணப்படுத்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.
* சில இடங்களில் கழற்சிக் கொட்டையின் கடுமையான தோல் பகுதியை ஞாபக மறதியைப் போக்கி மூளைக்கு பலத்தைத் தரப் பயன்படுத்துகின்றனர்.
* பிரான்ஸ் நாட்டு கயானா பகுதி மக்கள் வேர்ப்பகுதியை குடிநீரிட்டுக் கொடுப்பதின் மூலம் உடல் வெப்பத்தைத் தணிக்கவும் வேர்ச் சூரணத்தைப் பால்வினை நோயைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.
* தென் ஆப்பிரிக்காவில் விதைச் சூரணத்தை வயிற்றுப்போக்கைத் தணிக்கவும், இலை விழுதை உள்ளுக்குத் தருவதால் மூளைப்பகுதியில் ஏற்படும் ரத்தக்கசிவைக் கட்டுப்படுத்தவும், குழந்தைகளின் வலிப்பு நோயைப் போக்கவும், இலை விழுதை மேல்பூச்சு மருந்தாகப் பயன்படுத்துவதன் மூலம் சரும நோய்களைப் போக்கவும் பயன்படுத்துகின்றனர்.
* இலங்கை மக்கள் கழற்சிக்காயின் இளந்தளிர்களைக் கொண்டு பல் துலக்குவதின் மூலம் அல்லது வலி கண்ட இடத்தில் மேல் சிறிது நேரம் வைத்திருப்பதின் மூலம் பல் வலியைப் போக்கப் பயன்படுத்துகின்றனர். குழந்தைகளின் வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றவும் இது பயன்படுத்தப்படுகிறது. இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்த தீநீரை தொண்டைக்கட்டு நீங்க வாய் கொப்புளிக்கப் பயன்படுத்துகின்றனர்.
* கழற்சிக்காயினின்று தயாரிக்கப்படும் ‘பன்டுசின்’ என்னும் வேதிப்பொருளை மருந்தாக்கி மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
* கழற்சி விதைகள் கருப்பையைத் தூண்டக்கூடியதாகவும், மாதவிலக்கு சரியான வகையில் நடைபெறுவதற்கும் அடிவயிற்றில் ஏற்படும் வலியைத் தணிப்பதற்கும் சூரணித்துப் பயன்படுத்தப்படுகிறது.
* கழற்சி விதைச் சூரணம் வாத நோய்களைத் தணிப்பதற்கும், முத்தோஷ சமனியாகவும், மூட்டு வலிகளைப் போக்குவதற்கும் வீக்கங்களைக் கரைப்பதற்கும், விரைவாதம், இருமல், ஆஸ்துமா, வெண்குட்டம், குட்டம் மற்றும் தோல் நோய்கள், பசியின்மை, சீதபேதி, வயிற்றுக்
கடுப்பு, ரத்தக்கசிவு ஆகியன குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் வெளியேறவும், ஈரல் பலப்படவும், மண்ணீரல் பலப்படவும், சர்க்கரை நோயைத் தணிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
* கழற்சிப்பருப்பு ஒன்றோடு ஐந்து மிளகு சேர்த்து அந்திசந்தி என இருவேளை உள்ளுக்குக் கொடுப்பதால் வாதக்காய்ச்சல், விட்டு விட்டு வரும் முறைக்காய்ச்சல், கர்ப்பப்பை வலி, கண்ட மாலை, அண்ட வாதம் ஆகியன குணமாகும்.
* ஒரு கழற்சிக்காய்ப் பருப்புடன் சிறு அளவு பெருங்காயம் சேர்த்து மோருடன் குடிக்க வயிற்றுவலி, வயிற்றுப்புண் ஆகியன குணமாகும்.
* கழற்சிக்காயைத் தீயிலிட்டுக் கொளுத்திச் சூரணித்து அத்துடன் படிகாரம், கொட்டைப்பாக்கு, கட்ட கரி ஆகியவற்றைச் சேர்த்து பல் துலக்கி வர ஈறு நோய்கள் போகும், ஈறுகள் பலப்படும், பல் சொத்தை குணமாகும்.
* கழற்சிப்பருப்பு ‘சின்கோனா’ எனப்படும் கொயினா மாத்திரைக்குப் பதில் மலேரியா காய்ச்சலைப் போக்க உள்ளுக்குத் தர விரைவில் குணமாகும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கழற்சிக்காய் நாட்டு மருந்துக்கடைகளில் தாராளமாகக் கிடைக்கக்கூடியது. உபயோகிக்கப் பாதுகாப்பானது. உச்சி முதல் பாதம் வரை உன்னதப் பயன் தரவல்லது என்பதை மனதில் நிறுத்துவோம். ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்!
Average Rating