கற்றாழையின் மருத்துவ முக்கியத்துவங்கள்!!(மருத்துவம்)

Read Time:14 Minute, 0 Second

கற்றாழையின் மேலும் பல முக்கியமான பயன்கள், மருத்துவ முக்கியத்துவங்கள், பயன்படுத்தும் முறை, சமீபத்திய ஆய்வுகள் பற்றி இந்த இதழில் அறிந்துகொள்வோம்…வற்றாக் குமரிதன்னை வற்றலென உண்ணிவஞ்சீர்முற்றாக் குமரியென மூளுமே – நற்றாக்குந்திண்மையு மல்லாத் தெரிவையமே யானாலுமுண்மைமிகு நூறாம் ஆயுள்.

– தேரன் வெண்பா

என்றைக்கும் வற்றாத தன்மையுடைய சோற்றுக் கற்றாழையை உலர்த்தி முறையாகப் பொடித்து வைத்துக்கொண்டு உண்டுவந்தால், எப்போதும் இளமையும் உடல் வலிவும் பெற்று விளங்குவதோடு நூறாண்டு காலம் வாழலாம். இது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை என்பது மேற்கூறிய பாடலின் பொருளாகும்.கற்றாழையில் அடங்கியிருக்கும் சத்துக்கள் சோற்றுக் கற்றாழையில் நீர்ச்சத்து 98.5% மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் 0.3% அடங்கியுள்ளது. மேலும் Pectin, Amino acids, Lipids, Sterols, Tannins, Enzymes ஆகிய சத்துக்களும், முக்கிய சர்க்கரை சத்தான Mannose 6 phosphate-ம் சோற்றுக் கற்றாழையில் உள்ளது.

கற்றாழையின் சிறப்புகள்
சோற்றுக் கற்றாழையை எடுத்து சுத்திகரித்து மேல் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சோற்றை மட்டும் எடுத்து ஏழு முறை நன்றாக நீர்விட்டு கைகளால் தேய்த்து கழுவ சுத்தமாகும். அதனுடைய வாடையும் நீங்கிவிடும். பின்னர் அதை புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துமிக்க காய்களைப் போல கூட்டு செய்து உணவாகச் சாப்பிட சுவையும் சுகமும் தரும். வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு, Irritable bowel syndrome பிரச்னைகளுக்கு அளவோடு சாப்பிட அருமருந்தாகவும் பயன்படுகிறது. ராயல் லண்டன் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வயிற்றுப்புண்னைப் போக்குவதற்காகக் கொடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் 38% பேருக்கு முழு குணம் தந்ததாக செய்தி வந்துள்ளது.

சோற்றுக் கற்றாழையை சுத்திகரித்து சிறிது இனிப்பு சேர்த்து பானமாகக் குடிப்பதால் மலச்சிக்கல் உடையும். மேலும் வயிற்றுப்புண், வாய்ப்புண், நீரிழிவு, தலைவலி, மூட்டுவலி, இருமல் ஆகியவையும் குணமாகும். சோற்றுக் கற்றாழைச்சாறு மூலநோய்களுக்கு நன்மருந்தாகிறது. கற்றாழையில் மிகுந்துள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணம் அளிப்பதாக இருக்கிறது. சோற்றுக் கற்றாழைச் சாற்றை மூட்டுகளின் மேல் தடவிக் கொள்வதோடு சுத்திகரித்த சாற்றை உள்ளுக்கும் சாப்பிடுவதால் உடலில் குறைவுபடும் சத்துக்களை ஈடுசெய்து மூட்டுகள் சரியானபடி இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவப்பொருள் உற்பத்தியாவதற்கு உதவுகிறது. மேலும் இறந்துபோன செல்களை ஈடுகட்டும் வகையில் புதிதாக செல்களை உற்பத்தி செய்கிறது.

கற்றாழை பயன்பாட்டில் கவனம் தேவை
இத்தகைய அருங்குணங்கள் கொண்ட குமரிச்சாறு சிறந்த மருத்துவ குணம் உடையது என்றாலும் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் பெருந்தகை சொன்னதற்
கிணங்க அளவோடு பயன்படுத்துவது பாதுகாப்பானது ஆகும். வயிற்றுப்போக்கோடு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படவும் செய்யலாம். மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது கவனம் தேவை. முதலில் சிறிய அளவில் சோதனையாகக் கொடுத்துப் பின் சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம். கூடுமான வரையில் கர்ப்பிணிகள் சோற்றுக் கற்றாழையை உள்ளுக்கு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதுபோலவே பால் புகட்டும் தாய்மார்களும்குழந்தைகள் நலம் கருதி உள்ளுக்கு உபயோகப்படுத்துவதைத் தவிர்ப்பது நலமாகும்.

கற்றாழையின் மருத்துவப் பயன்கள்
* சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப் பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.
* சோற்றுக் கற்றாழையை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.
* சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லெட் அளவு வில்லைகளாக்கி, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் தணிந்து ஆரோக்கியம் கிடைக்கிறது.

* சோற்றுக் கற்றாழைச் சாற்றோடு சிறிது வெண்ணெய், வெருகடி வால் மிளகுத்தூள், போதிய அளவு சுவைக்காக கற்கண்டுத்தூள் சேர்த்து சாப்பிட நீர்ச்சுருக்கு, உடல் அரிப்பு, உடல் உள்ளுறுப்புகளின் அனல் குணமாகும்.
* சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.
* 100 கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்துக்கொண்டு அத்தோடு 10 கிராம் ஊற வைத்த வெந்தயத்தையும், சிறிதாக அரிந்த ஒரு வெள்ளை வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350 கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி, வடித்து பத்திரப்படுத்திக் கொண்டு அந்தி, சந்தி என இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் ஏற்படும்.

* சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பிரித்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்றுவலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த்தாரைப் புண் ஆகியன குணமாகும்.
* கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்துவர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.
* சோற்றுக்கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறு துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால் ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து வெயிலிலிட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினமும் இரவு படுக்கப் போகும்முன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டுவர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.
* கற்றாழைச் சோற்றுடன் இஞ்சியும், சீரகமும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி ஆகியன குணமாகும்.

* சோற்றுக்கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். சிறு நீர்த்தாரை எரிச்சல் தணியும்.
* சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒரு கப் அளவு எடுத்து இத்தோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய்விட்டு வதக்கிச் சேர்த்து கடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்திருந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து, வடிந்து, தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித்துளிகளில் சிறுநீர்க்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

சோற்றுக்கற்றாழை பற்றிய சில ஆய்வுகள்
* சோற்றுக்கற்றாழைச் சாறு தினம் 2 அவுன்ஸ் உள்ளுக்குக் கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிந்து உண்டாக்கும் Coronary heart disease ஆகிய அச்சம் தரும் உயிர் போக்கி இதய நோய்களைத் தணிக்கிறது என்பது ஒரு மிக முக்கியமான ஆய்வு ஆகும். இதனால் சீரம் கொலஸ்ட்ரால், சீரம் டிரைகிளிசைரைட்ஸ், சீரம் பாஸ்போ லிபிட்ஸ் ஆகியன ரத்தத்தில் மிகுதியாவது தடுக்கப்படுகிறது.
* சோற்றுக் கற்றாழையில் உள்ள கார்போஹைட்ரேட் மெட்டபாலிஸம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும் உணவுக்குப்பின் ஆன சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதயத்துக்கு போதிய பிராண வாயு கிடைக்க வழி செய்கிறது. பிராண வாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காதபோது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச்சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.
* சோற்றுக்கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் Phagocytes மற்றும் Antibodies என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
* சோற்றுக் கற்றாழையில் இருக்கும் Polysaccharides என்னும் மருந்துப் பொருள், பால்வினை நோயான எய்ட்ஸ் எனும் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. நோய்க்கிருமிகளை முற்றிலுமாக அழித்து ஆரோக்கியம் தருகிறது. 8 நோயாளிகளுக்கு தினமும் 250 mg Polysaccharides 6 மணி நேரத்துக்கு ஒருமுறை தந்ததில் 90 நாட்களில் அனைவருக்கும் எய்ட்ஸ் நோய் குணமானது தெரிய வருகிறது. மேற்கூறியவை எல்லாம் சமீபகால ஆய்வுகள் என்றாலும், நம் முன்னோர்களும், முனிவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பயன்படுத்திக் கண்ட பலன்கள் நமக்கும் பெருமை தருவதாக அமைகிறது!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜித்தை காப்பாற்றிய ரஜினி!!(வீடியோ)
Next post அமெரிக்காவில் யூடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு : தாக்குதல் நடத்திய பெண் தற்கொலை….3 பேர் படுகாயம்!!