நிலவேம்புவின் மகிமை !!(மருத்துவம்)

Read Time:17 Minute, 36 Second

சமீபகாலமாக பரவலாகப் பெயர் பெற்றிருக்கும் நிலவேம்பு அரிதான பல மருத்துவ குணங்களைத் தன்னகத்தே கொண்ட ஓர் அபூர்வ மூலிகை ஆகும். நிலவேம்பு புதராக விளையக் கூடிய ஒரு தாவரம் ஆகும். இது ஒரு வருடத்துக்குள் அடிக்கடி பயிராகும் பூண்டு இனத்தைச் சார்ந்தது ஆகும்.

இதன் அடித்தண்டு 6 அங்குல நீளமும், 4 பட்டைகளை உடையதாகவும் இருக்கும். இலைகள் இரு பக்கங்களில் நேர்நேராகவும் முனையில் கூர்மையுடனும் பூக்கள் சற்று இடைவெளி விட்டு ரோசாப்பூ நிறத்தில் அல்லது வெண்மை நிறத்தோடும் இடையே ஊதா நிறக் கோடுகளைப் பெற்றதாயும் விளங்கும்.

Andrographis Paniculata என்பது நிலவேம்புவின் தாவரப் பெயர் ஆகும். இது Acanthaceae என்னும் தாவர இனத்தைச் சார்ந்தது ஆகும். ஆங்கிலத்தில் இதை Green chiretta, Swertia chirata என்றெல்லாம் குறிப்பிடுவர். வடமொழியில் இதை பூமிநிம்பா, பூமிநிம்பகா, விஷ்வாம்பரா, யவதிக்தா, கல்பநாதா, கிராத திக்தா என்கிற பெயர்களால் குறிப்பிடுவது வழக்கம்.இதன் விதைகள் 3 முதல் 4 அங்குல நீளமுடையது. இது வங்காள தேசத்தில் அதிகம் விளையக் கூடியது. மேலும் இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மிசோரம் போன்ற பகுதிகளிலும் மிகுதியாகக் கிடைக்கக் கூடியது.

நிலவேம்பு பொதுவாக ஈரமில்லாத நிழற்பகுதியில் நன்கு விளையக் கூடியது. மேலும் திருநெல்வேலி, தென் தமிழ் மாவட்டங்கள், ஆந்திர தேசத்தின் வடபகுதி ஆகிய இடங்களில் மிகுந்து காணப்படுகிறது. இது ஐப்பசி மாதத்தில் பூக்கும் தன்மையது.

நிலவேம்புவை சமூலமாக (இலை, பூ, தண்டு, காய்கள், வேர் அனைத்தும் சேர்ந்தது) நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுவது. இது கடுமையான கசப்புடைய மூலிகை ஆகும். நிலவேம்பில் இன்னொரு வகையும் உண்டு.

அது சூரத்து நிலவேம்பு அல்லது சீமை நிலவேம்பு என்று சொல்லப்பெறும். சீமை நிலவேம்புச்செடி சுமார் மூன்றடி நீளமான தண்டுப் பகுதியினை உடையது. இதன் தண்டு உருண்ட வடிவில் பழுப்பு நிறம் உடையதாயும் கிளைகள் உடையதாயும் இருக்கும்.

நிலவேம்பின் மருத்துவ குணங்கள்

நிலவேம்புவின் மருத்துவ குணங்கள் பற்றிய ஒரு பாடல் அகத்தியர் குணபாட நூலில் காணப்பெறுகிறது.

வாதசுரம் நீரேற்றம் மாற்றுஞ் சுரத்தோடே காதமென ஓடக் கடியுங்காண் – மாதரசேபித்த மயக்கறுக்கும் பின்புதெளி வைக்கொடுக்கும் சுத்த நிலவேம்பின் தொழில் – அகத்தியர் குணபாடம்.

வாத மிகுதியால் ஏற்பட்ட காய்ச்சல், தலை நீரேற்றம், உடல்வலி ஆகியன போகும். பல்வேறு வகையான காய்ச்சலோடு அது தொடர்பான தொல்லை
களையும் காத தூரம் ஓட்டிவிடும்.

மேலும் பித்த மேலீட்டால் உண்டான மயக்கம் அகன்று தெளிவு ஏற்படும். அறிவுக்கூர்மை உண்டாகும் என்பதே மேற்கூறிய பாடலின் பொருளாகும்.

நிலவேம்பு இலைத் தீநீர் குழந்தைகளின் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாதக் குடைச்சல், குளிர்காய்ச்சல், பித்த மயக்கம் ஆகிய துன்பங்களுக்குத் தீர்வளிப்பதாக அமையும். நாள்பட்ட சீதபேதி, காய்ச்சல், நீர்க்கோர்வை, மூட்டு வலிகள் ஆகியனவற்றை எளிதில் போக்கும் தன்மையுடையது.

நிலவேம்பு உடலுக்கும் உடல் உள்ளுறுப்புகளுக்கும் பலமளிக்கும் ஊட்டச்சத்து மிக்க டானிக், சிறப்பான பசிதூண்டி, கல்லீரலுக்கு பலம் தரவல்லது, நரம்பு மண்டலங்களுக்கும் குடல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான மென் திசுக்களுக்கும் பலம் தரவல்லது.

விட்டுவிட்டு வந்து தொல்லை தருகிற கடுமையான வயிற்று வலி மற்றும் சிறுநீரகம் தொடர்பான வலியைக் கண்டிக்கவல்லது, குடலில் தங்கி நமக்குச் சேர வேண்டிய சத்துக்களை உறிஞ்சித் தம்மையும் தம் இனத்தையும் வளர்த்துக் கொள்ளும் ஒட்டுண்ணிகள் என்னும் கிருமிகளையும் இதை ஒத்த வேறு கிருமிகளையும் வெளியேற்ற வல்லது.

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றிருந்தோருக்கு உடல் தேற்றியாக விளங்குவது. குருதியைச் சுத்திகரிக்கவல்லது. நிலவேம்பு வியர்வையைத் தூண்டி உடலின் உஷ்ணத்தைத் தணிவித்துக் காய்ச்சலைப் போக்கக் கூடியது. கல்லீரலின் செயல்பாட்டைத் துண்டுவித்துப் பித்தத்தைச் சமன் செய்யவல்லது.

நிலவேம்பு மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகிறது. கல்லீரல் கெடுவதாலும் பித்த நீர், மஞ்சள் நிறமுடன் வெளியேறுதல், முறை தவறி மலம் கழித்தல், சுவையின்மை, நாக்கின் நிறம் மஞ்சளாகத் தோன்றுதல் மற்றும் நாக்கில் வெடிப்புகள் காணப்படுதல், பசியின்மை, தோலில் சுருக்கம் மற்றும் வண்ண மாற்றம், கண்கள் மஞ்சள் நிறமுடன் காணப்படுதல், வயிற்று உப்புசம் அல்லது வயிற்று வீக்கம், தலைவலி, உடல் மந்தமாகவும், கனமாகவும் தோன்றுதல், உணவு உண்டதும் சோர்வு ஏற்படுதல், மன உளைச்சல், சிறுநீர் மஞ்சளாகவும் கலங்கலாகவும் வெளியேறுதல், தலை கிறுகிறுப்பு, காதுகளில் இரைச்சல், இடை இடையினில் தூக்கம் கலைந்து தடைபடுதல் ஆகிய தொல்லைகள் தோன்றும். இவை அத்தனைக்கும் நிலவேம்பு அணை போடும் மருந்தாகிறது.

நிலவேம்பு குழந்தைகளின் வயிற்று மந்தம், வயிற்று உப்புசம், வயிற்றுக் கழிவு, வயிற்றுக் கடுப்பு, குடலை முறுக்குவது போன்ற கடும் வலி, மண்ணீரல் வீக்கம் மற்றும் சீதளம் மேல் சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்றுநோய்கள் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாக விளங்குகிறது.

நிலவேம்பை மற்றக் கடைச் சரக்குகளுடன் சேர்த்துக் கொடுக்க எவ்வித நுண்கிருமிகளால் ஏற்படும் காய்ச்சலையும் கண்டிக்கத்தக்கது ஆகும். பொதுவாக நிலவேம்பைத் தனியாகப் பயன்படுத்துவதை விட நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சைவேர், பற்படாகம், சீந்தில் கொடி, கோரைக்கிழங்கு, கண்டங்கத்திரிவேர், கோஷ்டம், சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், சந்தனத்தூள் ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து இடித்து தீநீராகக் காய்ச்சிக் கொடுப்பது மருத்துவத்தில் நடைமுறையில் உள்ளது.

இது சகல விதமான காய்ச்சலையும் கண்டிக்கத் தக்க மருந்தாகச் சொல்லப் பெற்று இருக்கிறது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற விஷக்காய்ச்சல் கண்டு ரத்த வட்டணுக்கள் குறைபாடு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலையில் கூட நிலவேம்புக் குடிநீர் அற்புத பலனைத் தருகிறது. இதைக் கஷாயமாக தயாரித்துப் பல்வேறு குன்ம நோய்களுக்கும், உணவுப் பாதை சோர்வுற்ற நிலையிலும் கொடுப்பதால் நலம் பயக்கும்.நிலவேம்பு ஒரு கசப்புப் பொருட்களின் அரசன் என்று சொல்லப் பெறும்.

நிலவேம்பில் நிறைந்து இருக்கும் ஆன்ட்ரோ கிராப்போலைட் என்று சொல்லப் பெறும் மருத்துவ வேதிப்பொருள். மிகப்பெரும் வீக்கம் கரைச்சி என்னும் மருத்துவ குணத்தைப் பெற்றுள்ளது. மேலும் இது சுவாசப் பாதை அழற்சியைப் போக்கி ஆஸ்துமா என்னும் மூச்சுமுட்டல் நோயினின்று விடுதலை தரவல்லது.

நிலவேம்பிலுள்ள மருத்துவ சத்துவங்கள் நுண் நோய்க்கிருமிகளை நீக்கவல்லது. கட்டிகளைக் கரைக்கும் தன்மையது. ரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் குணமுடையது.

நிலவேம்பு மனித சமூகத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் எச்.ஐ.வி. என்ற மூன்றெழுத்தால் குறிப்பிடப் பெறும் மிக மோசமான உடலையும் உள்ளத்தையும் கெடுத்து உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பால்வினை நோய்க்கு பலமான எதிரியாகச் செயல்பட்டு எதிர்த்து நின்று போராடி குணம் தரவல்லது.

மேலும் தாவரங்களையும் உணவுப் பொருட்களையும் அழிக்கவல்ல ஒட்டுண்ணிகள் மற்றும் கிருமிகளைத் துரத்தி பாதுகாப்பு தரவல்லது. தொற்று நோய்க் கிருமிகளைத் துரத்தவல்லது. நோய் எதிர்ப்பு சத்துக் குறைபாடு காரணமாக அடிக்கடி சளி பிடித்தல் எனும்போது அதற்கு ஒவ்வாமை ஒரு காரணமாக சொல்லப் படுகிறது. ஒவ்வாமைக்கும் நிலவேம்பு மருந்தாகிறது.

நிலவேம்பு மருந்தாகும் விதம்

* எண்ணிக்கையில் பத்து நிலவேம்பு இலை பசுமையாக அல்லது உலர்ந்த நிலையில், ஐந்து மிளகு, வெருகடி அளவு மஞ்சள் தூள், ஒரு பப்பாளி இலை போதிய அளவு இனிப்புக்கென வெல்லம் அல்லது பனை வெல்லம் இவற்றோடு ஒரு டம்ளர் நீர்விட்டு அடுப்பிலேற்றிக் காய்ச்சி அரை டம்ளர் வருமளவுக்கு சுருக்கி மூன்று நாட்களுக்கு தினம் காலையில் வெறும் வயிற்றில் பருகிவர டெங்கு, சிக்குன் குனியா போன்ற விஷக் காய்ச்சல்கள் விலகும்.

* 12 வயதுக்கு உட்பட்ட மூன்று வயதுக்கு மேற்பட்ட இளஞ்சிறார்களுக்கு மேற்சொன்ன அளவில் பாதி அளவு கொடுக்கலாம். அதற்கும் சிறிய வயதினருக்கு ஒரு தேக்கரண்டி அளவு தர நன்மை பயக்கும்.

* நிலவேம்பு, கண்டங்கத்திரி, சுக்கு, மிளகு இவை அனைத்தும் சுமார் 10 கிராம் அளவு எடுத்து 500 மிலி நீரில் விட்டு 200 மிலி அளவுக்குச் சுண்டும் வகையில் காய்ச்சி இதை மூன்று பங்காகப் பிரித்து தினமும் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகள் கொடுத்து வர மலேரியா போன்ற குளிர்காய்ச்சல் போகும்.

* நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில்கொடி ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து அரை லிட்டர் நீர் விட்டு 200 மிலி அளவுக்கு காய்ச்சி வடித்து வேளைக்கு மூன்றில் ஒரு பங்கு என தேன் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளின் சகலவிதமான காய்ச்சல்களும் குணமாகும்.

* நிலவேம்பு இலைகளை 15 முதல் 20 என்கிற எண்ணிக்கையில் எடுத்து 200 மிலி நீர்விட்டு தீநீராகக் குடிப்பதால் சர்க்கரை நோய், மூட்டுவலிகள் ஆகியன
குணமாகும்.

* நிலவேம்பு இலை புதிதாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு விழுதை மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் காலையில் உண்டு வர ஒவ்வாமை என்னும் நோய் ஓடிப்போகும்.

* நிலவேம்பு இலைகள் பத்து எடுத்து வெருகடி அளவு மஞ்சள் தூள் சேர்த்து, நான்கைந்து மிளகு கூட்டி ஒரு டம்ளர் நீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டும் படிக் காய்ச்சி ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவு குழந்தைகளுக்கும் பெரியவர்களாயின் மூன்று முதல் நான்கு தேக்கரண்டி அளவு வரையிலும் கொடுத்துவர பல்வேறு வகையான விஷக்காய்ச்சல்களையும் போக்கி ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும்.

* நிலவேம்பு இலைகள் 10, பற்பாடகம் 10, விஷ்ணுகிரந்தி 10, பூண்டு இரண்டு முதல் மூன்று பற்கள், வெருகடி அளவு சுக்கு, மிளகு பத்து, திப்பிலி மூன்று முதல் நான்கு எண்ணிக்கை என இவை அனைத்தையும் 250 மிலி நீரிலிட்டு 100 மிலி அளவுக்கு வற்றும்படிக் காய்ச்சி வடித்து எடுத்துக் கொண்டு போதிய இனிப்பு சேர்த்து காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்கள் கொடுத்து வர சகலவிதமான விஷக்காய்ச்சலும் விலகிப் போகும்.

* நிலவேம்பு 15 கிராம், கிச்சிலிப் பழத்தோல் இரண்டு கிராம், கொத்தமல்லி விதை இரண்டு கிராம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு கொதித்த வெந்நீரை ஒரு டம்ளர் அளவுக்கு ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைத்துப் பின் வடிகட்டி போதிய தேனோ, கற்கண்டோ சேர்த்து 15 முதல் 30 மிலி வீதம் தினம் அந்தி, சந்தி என இரண்டு வேளைகள் கொடுத்துவர வாதக் குடைச்சல், பித்த மயக்கம், கடுங்குளிரோடு கூடிய காய்ச்சல், ஈரலைப் பற்றிய நோய்கள் ஆகியன விரைவில் விட்டு விலகிப் போகும்.

* நிலவேம்பு 10 கிராம், வசம்புத் தூள் மூன்று கிராம், சதகுப்பை மூன்று கிராம், கோரைக்கிழங்கு 10 கிராம் என இவை அத்தனையும் ஒரு பாத்திரத்தில் இட்டு 200 மிலி வெந்நீர் விட்டு ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து எடுத்து வடிகட்டி வேளைக்கு 15 முதல் 20 மிலி வரை என தினமும் இரு வேளைகள் கொடுத்து வர சில நாட்களில் விஷக்காய்ச்சல்கள், வயிற்றுப் போக்கு ஆகியன விலகிப்போகும்.

* நிலவேம்பு 35 கிராம் அளவு எடுத்து பொடித்து 700 மிலி வெந்நீர் விட்டு கிராம்புத்தூள் அல்லது ஏலக்காய்ப் பொடி இவற்றில் ஏதேனும் ஒன்றில் 4 கிராம் அளவு எடுத்து சேர்த்து அரைநாள் முழுவதும் ஊறவைத்தப் பின் வடித்து 15 முதல் 30 மிலி வரை தினமும் இரண்டு மூன்று முறை கொடுத்து வர முறைக் காய்ச்சல், குளிர்காய்ச்சல், கீல் நோய்கள், செரியாமை, ஈரல் நோய்கள் ஆகியன போகும்.

* அதிகமான கசப்புச் சுவையுடைய நிலவேம்பில் அருமையான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன என்று நம் ஆன்றோர்கள் மட்டுமல்ல நவீன அறிவியல் வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிஸ் ஸ்மைலுக்கு வந்த சோதனை!(சினிமா செய்தி)
Next post பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)