அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது : அமெரிக்கா கருத்து!! (உலக செய்தி)
அமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு அதன் 60 அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவை நியாயப்படுத்த முடியாது’ என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உளவுத்துறை முன்னாள் அதிகாரி செர்கே ஸ்கிரிபல், அவரது மகள் யூலியா மீது இங்கிலாந்தில் ரசாயன விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அவர்கள் 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதன் செயலை கண்டித்து இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்ய தூதர்களையும், அதிகாரிகளையும் திரும்பி அனுப்பின. அமெரிக்காவும் சியாட்டில் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடி, அதில் பணியாற்றி வந்த 60 அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவும் தனது நாட்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு, அங்கிருந்த 60 அமெரிக்க அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நியூவர்ட் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. பிரிட்டனில் ரஷ்யா நடத்திய ரசாயன தாக்குதலை கண்டித்தே, அமெரிக்காவில் இருந்து ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளை 7 நாட்களில் வெளியேறும்டியும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை 48 மணி நேரத்தில் மூடும்படியும் ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்காவின் முடிவுடன் 28 நாடுகள் கைகோர்த்துள்ளன. உலகம் முழுவதும் 153 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். ரஷ்யாவின் எதிர் நடவடிக்கையை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள போவதில்லை இதேபோன்ற நியாயமற்ற நடவடிக்கையை பிரிட்டனுடன் ஒத்துழைக்கும் 28 நாடுகளின் மீதும் ரஷ்யா எடுக்கப் போகிறதா? ரசாயன தாக்குதலால் தனிமைப்பட்டுள்ள ரஷ்யா, தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் முடிவால் மேலும் தனிமைப்பட விரும்புகிறதா? ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பது பற்றி அமெரிக்கா ஆலோசித்து வருகிறது’’ என்றார்.
ஐரோப்பிய தூதர்களுக்கு சம்மன்: பிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவாளி மீது ரசாயன விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் தூதர்களின் வெளியேற்றம் குறித்து அறிவிக்க ஐரோப்பிய தூதர்களுக்கு ரஷ்ய வெளியுறவுத் துறை நேற்று சம்மன் அனுப்பியது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லத்வியா, லிதுவேனியா, போலந்து, கிசெச் ரிபப்ளிக், ஸ்லோவாக்கியா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பில் இல்லாத சில நாடுகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்நாட்டு தூதர்கள் வெளியுறவுத்துறைக்கு நேற்று வந்திருந்தனர்.
‘தூதரக போரை நடத்தவில்லை’
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் நேற்று அளித்த பேட்டியில், “உளவாளி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரிட்டன் மற்றும் தோழமை நாடுகளின் கூட்டு நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், எந்தவிதமான தூதரக ரீதியிலான போரையும் ரஷ்யா கட்டவிழ்த்து விடவில்லை’’ என்றார்.
உறவு மேலும் பாதிக்கும்
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், “ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகத்தை மூடிவிட்டு தூதரக அதிகாரிகள் 60 பேரை வெளியேற உத்தரவிட்டுள்ள ரஷ்யாவின் முடிவு, இருநாட்டு உறவை மேலும் மோசமாக்கும். தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவு எதிர்பாராதது.” என்றார்.
Average Rating