பலியாகும் பெண்கள் கொலைக்களமாகும் தமிழ்நாடு!!(மகளிர் பக்கம்)

Read Time:24 Minute, 19 Second

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. ஒரு புறம் தமிழக அமைச்சர் இந்தியாவிலே தமிழகம்தான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அறிக்கை விடுகிறார். ஆனால் தொடர்ந்து தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், தாக்குதல்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்கிற முதல்வரின் பேச்சு நமக்கு சில சம்பவங்களால் பொய்யாகிவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளாம்பத்தூர் கிராமத்தில் தலித் குடும்பத்தை சேர்ந்த ஆராயி, தனம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நெஞ்சை பதற வைக்கிறது. அந்த சம்பவத்தின் தாக்கம் அடங்குவதற்குள் திருச்சியில் போக்குவரத்து காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் உஷா என்கிற கர்ப்பிணி பெண் மரணம், பட்டப்பகலில் கல்லூரி வாசலிலே 19 வயது இளம் பெண் காதல் விவகாரத்தால் வெட்டிக் கொலை என பட்டியல் நீள்கிறது. இதைப் பார்க்கும்போது முதல்வர் எந்த மாநிலத்தை அமைதிப்பூங்கா எனச் சொல்கிறார் என்கிற கேள்வி எழுகிறது. இந்த வன்கொடுமைகள் குறித்து சிலரிடம் கருத்து கேட்டோம்.

ஆராயி, தனம் ஆகியோருக்கு நிகழ்ந்த வன்கொடுமை குறித்துப் பேசிய அனைத்திந்திய மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுகந்தி, “ஆராயி வழக்கின் உண்மை நிலவரம் அறிய எங்களைப் போன்ற பல அமைப்புகள் உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து விசாரித்தோம்.இந்த வழக்கை பொறுத்தவரை இந்தக் கோணத்தில்தான் இந்தக் குற்றம் நடந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிகழ்வை மட்டும் பார்ப்பதைவிட இதற்கு முன்பு அந்தப் பகுதியில் நடந்த சம்பவங்களோடு தொடர்புப்படுத்தி பார்க்கவேண்டியிருக்கிறது. இந்த சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை மட்டும்தான் குற்றவாளியின் குறிக்கோளாக இருக்கிறது.

காவல் துறை இந்த வழக்கில் இரண்டு மூன்று குழுக்கள் அமைத்து விசாரித்து வருவதாக கூறுகிறார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் நவீன முறை விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். நம்முடைய சமூகம் ஒரு சாதிய சமூகமாக இருக்கிறது. ஆகவேதான் நிர்பயா வழக்கிலும், ஸ்வாதி வழக்கிற்கு போராடிய சமூகம் நந்தினி, ஆராயிக்கு நிகழ்ந்ததை பெரிதுபடுத்தாமல் இருக்கிறது. எங்கள் அமைப்பு எல்லா பெண்களுக்கும் குரல் கொடுத்தாலும் நீங்கள் தலித்துகளுக்கு மட்டும்தான் போராடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

இங்குதான் சாதி ஆதிக்கம் தன்னை முதன்மை படுத்திக்கொள்கிறது. நாங்கள் எல்லா பெண்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தலித் பெண்கள் அடிப்படையில் ஒடுக்கப் பட்ட ஒரு சமூகம் என்பதால் கூடுதல் முக் கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பகுதியில் இது முதல் சம்பவம் கிடையாது. இதே போன்ற மூன்று சம்பவங்கள் ஒரே மாதிரி நடந்திருக்கின்றன. 2016ம் ஆண்டு உளுந்தூர்பேட்டையில் நாங்கள் கண்டன போராட்டம் ஒன்று நடத்தினோம். 13 பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து எங்கள் போராட்டம் நடந்தது.

கடந்த ஆண்டிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமே பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடந்திருக்கின்றன. மதனூர்கிராமம், திருவாங்கூர், சின்னலம், கள்ளக்குறிச்சி, தென்கீரனூர், திருக்கோவிலூர், செங்கனாங்கொல்லை கிராமம் இப்படி பல்வேறு இடங்களில் பெண்கள் அதிகமாக பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதில் தலித் பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமை கள்தான் அதிகம்.

2016ம் ஆண்டு நாங்கள் நடத்திய இயக்கத்தின் வாயிலாக இது போன்று 16 வழக்குகளை சந்தித்தோம். அதில் 12 வழக்குகள் தலித் பெண்கள் மீதான வன்முறைகள். இந்த வழக்குகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆராயி, தனம் வழக்கைப்பொறுத்தவரை இன்னமும் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்காத நிலைதான் இருக்கிறது. தொடர்ந்து இத்தனை வன்முறைகள் நடந்தும் காவல் துறை இதனுடைய தாக்கத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகிறது. இந்தச் சூழலில் தான் தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் இந்தியாவிலே பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லியிருக்கிறார். இந்த சம்பவங்கள் எல்லாம் அவர்களுக்கு தெரியாமல் இல்லை.

இருந்தாலும் தங்களது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று பொய் உரைப்பதினாலே பெண்கள் பாதுகாப்பாக வாழ்ந்திட முடியாது. ஆண்டிற்கு ஒரு முறை குற்றப்பிரிவு ஆவணம் வெளியிடப்படுகிறது. அதில் இந்தியாவில் 2016 குற்றப் பிரிவு ஆவணப்படி 3.4 லட்சம் பெண்கள் மீதான வன்முறைகள் பதியப்பட்டிருக்கிறது என்று வெளியிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதற்கு சமமாக காவல் துறைக்கு போகாத வழக்குகள் உள்ளன என்பது வேதனைக்குரிய ஒன்று. எவ்வளவு கொடூரமான பாலியல் வன்கொடுமை நடந்தாலும் பெண்கள் வெளியில் சொல்ல அச்சப்படுகிறார்கள். இந்த நிலையில் பாலியல் சீண்டல்களை பொதுவாக பெண்கள் வெளியில் சொல்லமாட்டார்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் நாங்கள் தலையிடும்போது பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை புகார் கொடுக்க வைக்கவே சிரமப்படுகிறோம். அவர்களாக புகார் கொடுக்க சென்றால், காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் “குழந்தைக்கு சின்ன வயசுதான் ஆகுது. வழக்கு முடிவதற்கு 6, 7 ஆண்டு ஆகும். கல்யாண வயசுல உங்க பொண்ண நீதிமன்றத்திற்கு எப்படி கூட்டிட்டு போவீங்க” எனக் கேட்டு புகார் அளிக்கவிடாமல் செய்கிறார்கள். காவல் துறையும் புகார் பெற்றுக்கொள்ளாமல் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் 5 வருடங்களுக்கு முன்பு 11ம் வகுப்பு படிக்கும் போது வேதியியல் ஆய்வுக் கூடத்தில் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான இரண்டு பெண்கள் குறித்த வழக்கில் ஆசிரியர் குற்றவாளி இல்லை என்பது போல் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் நாங்கள் தலையிட்டபோது பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்களிடம் பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும், ஊர் பேர் கெட்டுப் போய்விடும் என்று பலரும் பணம் கொடுத்து சமாதானம் செய்து பார்த்தார்கள். ஆனால் அந்த இரண்டு பிள்ளைகளும் எங்களோடு உறுதியாக இருந்தார்கள். பள்ளி நிர்வாகம் எங்களுக்கு எதிராக இருந்தது. இந்த நிலையில் தீர்ப்பு இப்படி வந்தது எங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துள்ளது.இப்படி வெளியில் வரக்கூடிய பெண்கள் மிகக்குறைவு. வெளியில் வராத பெண்கள் ஏராளமாக உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பள்ளி தலைமை ஆசிரியரால் தலித் மாணவிகள் பாதிக்கப்பட்ட சம்பவம் அறிந்து நாங்கள் தலையிட்டு போரா டினோம், அந்த குழந்தைகளின் தந்தை ஒரு குடிகாரர். எதிர் தரப்பினர் அவரிடம் பணம் கொடுத்து அந்த விஷயத்தை மூடி மறைத்துவிட்டனர். அந்தக் குழந்தைகளின் அம்மாவை சந்தித்த போது “இவரை எதிர்த்து என்னால் எப்படி போராட முடியும்?” என்று வருத்தப்பட்டார். 3 லட்சம் வழக்குகள் காவல் நிலையத்தில் பதியப் படுகின்றன என்றால், காவல் நிலையத்தில் வழக்கு பதியப்படாமல் காவல் துறையினரால் பஞ்சாயத்து செய்து வைக்கப்படும் வழக்குகள் 5 லட்சத்தை தாண்டும். இந்த மாதிரி சூழ்நிலை தொடரும்போது காவல் நிலையம் சென்றால் நமக்கு நீதி கிடைக்காது என்கிற மனநிலைதான் மக்களுக்கு ஏற்படும்.

பெண்களை பாதுகாக்க எத்தனையோ சட்டங்கள் இருக்கின்றன. அவை அனைத் தும் நடைமுறைப்படுத்தியிருந்தால் எவ்வ ளவோ குற்றங்கள் குறைந்திருக்கும். காவல் துறையை நம்பாமல் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவேண்டும். அடிப்படை சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும். இன்றைக்கு குற்றங்கள் நடைபெறுவதற்கு மக்கள் தொடர்பு சாதனங்கள் பெரும் பங்கு வகிக்கிறது. முன்பெல்லாம் கிராமப்புறங்களுக்கு சென்றால் இளைஞர்கள் கபடி, கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

இன்றைக்கு ஒரு குழுவாக அமர்ந்து செல்போன் பயன்படுத்துவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் நல்ல விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் தவறானவற்றை முன்உதாரணமாக எடுத்துக்கொள்வதால் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. மதுரையில் நரிக்குறவர்கள் வாழும் பகுதி ஒன்று உள்ளது. அந்த கிராமத்தில் வாழும் மக்களுக்கு குளியல் அறை வசதி கிடையாது. சிறிய கூரை அமைத்து பயன்படுத்தி வருகிறார்கள். அந்த கூரையில் இளைஞர்கள் சிலர் இரவு நேரங்களில் செல்போனின் கேமராவை ஆன் செய்து வைத்து, இளம் பெண்கள் குளிப்பதை படம் பிடித்து அந்தப் பெண்களை மிரட்டி இருக்கிறார்கள்.

நுகர்வு கலாச்சாரம், வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற எண்ணமும் தவறு நடப்பதற்கு காரணமாக இருக்கிறது. சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்றாலும் இன்றைய இளைஞர்களை எளிதில் சென்றடையும் சாதனமாக இருக்கிறது. இன்றைய சினிமாவில் கதாநாயகர்கள் ரவுடியாக வருவதும், மது குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்று சித்தரிப்பதும், நாமும் இப்படி இருந்தால் தான் இந்த சமூகம் நம்மை ஹீரோவாக மதிக்கும் என்கிற மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அடிப்படை சமூக மாற்றத்தை பள்ளி பாடத்திட்டத்திலிருந்தே கொண்டுவரவேண்டும். ஆண் – பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் பாடத்திட்டங்கள் நம்மிடத்தில் இல்லை. இன்றைய கல்வி என்பது நன்றாக படித்தால் நல்ல வேலைக்கு சென்று நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற பாடத்தைதான் கற்றுக்கொடுக்கிறது. மனிதனை மனிதனாக பார்க்கும் பண்புகளை இன்றைய பள்ளிகள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது இல்லை” என்கிறார் சுகந்தி.

திருச்சியில் நடைபெற்ற கர்ப்பிணிப் பெண் உஷாவின் மரணம் குறித்து வழக் குரைஞர் அருள் மொழி பேசுகையில், “திருச்சியில் உஷா என்கிற கர்ப்பிணிப் பெண் இறந்து போன சோகத்திற்கு முன்னால் எதுவுமே ஆராயப்பட முடியாததாக இருக்கிறது. உடனடியாக நம்முடைய அரசு நிர்வாகத்திற்கு, சமூகத்திற்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. காவல் துறையில் தலைவிரித்து ஆடுகிற படிநிலை ஆதிக்கத்தால் கடைநிலையில் இருக்கும் காவலர்கள் தவறாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் 8 மணிநேரம் வேலை, 10 மணிநேரம் வேலை என்றெல்லாம் பேச முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கிறது.

அமைச்சர் வந்தாலும் சரி அமைச்சருடைய கார் சும்மா வந்தாலும் அந்தப் பகுதியில் காவலர்கள் வேறு எந்த பாதுகாப்பு பணியிலும் ஈடுபட முடியாது. குறிப்பாக பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்கள் வந்தால் 5 அடுக்கு பாதுகாப்பு 7 அடுக்கு பாதுகாப்பு என்று குவிக்கப்படும் காவலர்கள் கொட்டும் மழையானாலும், கொளுத்தும் வெயிலானாலும் குடிக்க பச்சை தண்ணீர்கூட இல்லாமல் வெட்ட வெளியில் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் சம்பளத்தில் மட்டும் வாழ்பவர்களாக இருந்தாலும் அல்லது அவ்வப்போது வாகனங்களை மறித்து பணம் பறித்தாலும் 12 மணிநேரம், 14 மணிநேரம் ஒரு இடத்தில் நிற்கும்போது உணவு வாங்கி சாப்பிடுவதற்கு கூட கைகளில் பணம் இருக்காது.

அவர்களின் பக்கத்தில் இருக்கும் தள்ளு வண்டியில் உணவு விற்பவரிடமோ பணம் இல்லை என்பதை சொல்வதற்கு பதிலாக அதி காரத்தை பயன்படுத்தி மிரட்டி வாங்கிக் கொள்கிறார்கள். அந்த இடத்தில் வியாபார நஷ்டத்தை நினைத்து “சார் பணம்” என்று கேட்கும் ஏழை வியாபாரிக்கு ஓர் அறை… அதற்குப் பின்னால் இத்தனை விதமான கொடுமைகளும் நடைபெறுகின்றன. திருக்குறளில் சொல்வது போல் “செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்” என்பது போல் உங்கள் கோபம் எங்கு செல்லுபடியாகுமே அங்கு அதை கட்டுப்படுத்துவதுதான் வீரம். நமது காவல் துறைக்கு அது பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

அதைப்போலவே மக்களும் முடிந்தவரை சாலை விதிகளையும், சட்ட முறைகளையும் நம்முடைய நன்மைக்காக என்று புரிந்துகொண்டு அதை பின்பற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும். சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படவேண்டும். நம் அத்தனைப்பேரின் புலம்பல்களும் உஷாவின் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியுமே தவிர இழப்பை ஈடுசெய்ய முடியாது” என்கிறார் அருள்மொழி சென்னையில் பட்டப்பகலில் கல்லூரி முடித்து வீடு திரும்பும் போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அஸ்வினிக்கு நிகழ்ந்த கொடூரம் குறித்து பேசிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மணிமேகலை கூறுகையில்…

“பொதுவாகவே பள்ளி முடித்து வெளிவரும் வளர் இளம் பருவ காலங்களில் ஒருசில மாற்றம் ஏற்படும். அங்கு இயல்பாக இருக்கக்கூடிய பார்வை கல்லூரிக்கு வரும்போது மாறுபடும். எதிர்பாலினத்தின் ஈர்ப்பு ஏற்படும். இதை எல்லாம் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான அறிவை பாடத்திட்டமாக கொடுக்க நாம் தவறி இருக்கிறோம். அவை பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டாலும்கூட வகுப்பு ஆசிரியர்கள் வெளிப்படையாக பாடம் நடத்த ஒரு தயக்கம் இருக்கிறது. பாலியல் கல்வி கட்டாயமாக்கப்படவேண்டும். இளம் பருவங்களில் ஏற்படும் மாற்றங்களின் போது எதிர்பாலின ஈர்ப்பை கட்டுப்பாட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சமூகத்தில் ஆண்-பெண் உறவுகளில், ஆண்தான் ஆதிக்கம் செலுத்துகிறான். இந்த சமூகத்தில் பெண்களும், ஆணுக்கு பெண் அடிமை என்கிற எண்ணத்திலேயே வளர்கிறார்கள். ஆண்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்கிற பார்வையிலே அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஆண்களும் பெண்கள் நமக்கு அடிமை என்கிற கோட்பாட்டு அடிப்படையிலே அவர்களுக்கு இந்த சமூகம் பயிற்சி அளிக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்கிற சமத்துவ பார்வை வந்துவிட்டால் இந்த சமூகம் அடியோடு மாற்றம்பெறும். இந்த சமத்துவப்பார்வை வருவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியாது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய நாட்டைப் பொறுத்தவரை இளைஞர்கள் அதிகமாக வாழும் ஒரு சமூகம் என்பது பெருமைக்குரிய ஒன்று. அதை ஒரு மனித வளமாக பார்க்கக்கூடிய பார்வையை இது போன்ற இடையூறுகள் சிக்கலாக்குகின்றன. இந்த ஆண் இப்படி செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. தனி மனித உறவுகளில் மன நிறைவு இல்லாதபோது அதை மேலும் கொண்டு செல்லும்போது எதிர் காலத்தில் அந்த உறவு ஆரோக்கியமாக இருக்காது. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே ஏதோ ஒரு காரணத்தால் அந்த ஆண் இது போன்ற தவறான செயலில் ஈடுபட்டிருக்கிறார். அவர்களுக்குள் அப்போதே உறவு சரியில்லை என்பது தெரிந்திருக்கிறது.

அதை வளரவிடாமல் இருப்பதுதான் நல்லது. அதைத்தான் அந்தப் பெண்ணும் செய்திருக்கிறார். வாழ்க்கையை தகவமைத்துக் கொள்ளும் வயதும் அவர்களுக்குக் கிடையாது. ஆண்களிடத்தில் பொதுவாகவே பெண்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. “பெண்கள் பழகுவாங்க. ஏமாத்திட்டு போயிடுவாங்க” எனச் சொல்வதுண்டு. அதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஏமாற்றிவிட்டு போவது என்பதை தாண்டி, இரண்டு பேரும் நல்ல குணத்தை மட்டுமே பார்த்திருப்பார்கள் அந்த உறவு சுமுகமாக இருந்திருக்கும்.

அவர்களின் இன்னொரு குணம் தெரியும்போது அவர்களுக்குள் இடைவெளி ஏற்படும், அந்த இடைவெளியில் இரண்டு பேருக்கும் ஒத்துப்போகவில்லை என்று தெரியும்போது ஆரம்ப காலகட்டத்திலே விலகுவது என்பது சாலச் சிறந்தது. அஸ்வினியும் அதைத்தான் செய்திருக்கிறார். திருமண வயது 18 என்றாலும் மனதளவில் அவர்கள் எந்தளவுக்கு முதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும். நம்முடைய சமூகம் பெண்களின் உடலை கலாசாரத்தின் அடையாளமாகவும், கலாசாரத்தின் ஓர்அங்கமாகவும் பார்க்கிறது. அதன் விளைவுதான் ஆண் எத்தனை பெண்ணிடம் உறவு கொண்டாலும் அதை ஒரு பிரச்சனையாக பார்ப்பதில்லை. ஆனால் பெண்ணுக்கு அது அவமானமாக பார்க்கப் படுகிறது.

அதுதான் இந்த விஷயத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கழுத்து அறுத்து கொலை செய்வது என்பது வெறிச்செயல். அது எதன் தூண்டுதலில் நடந்தாலும் கண்டிக் கத்தக்கது. பெண்கள் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக வலுவாக போராடுவதுதான் இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வாக இருக்கும்’’ என்கிறார் பேராசிரியர் மணிமேகலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காசநோயை கட்டுப்படுத்தும் வழி !(மருத்துவம்)
Next post சமையலறையா? விஷக்கூடமா?(மகளிர் பக்கம்)