பிரிட்டனில் இளம் வயதில் டாக்டரான இந்தியப் பெண்
பிரிட்டனில் மிக இளம் வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் இந்தியப் பெண் ஹீனல் ரெய்சுரா (22). நலின் மற்றும் ஷோபனா ரெய்சுரா தம்பதியரின் மகளான ஹீனல், 22 வயதில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் குறைந்த வயதில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமைக்குரியவராகிறார் ஹீனல். இவர் தற்போது லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். அறுவைச் சிகிச்சை நிபுணராக வருவதே தனது லட்சியம் என்று கூறுகிறார் ஹீனல். கடந்த 2002ம் ஆண்டு 16 வயதாக இருந்தபோது அவருக்கு லண்டனில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு அனுமதி கிடைத்தது. பிரிட்டனில் மருத்துவம் படிக்க குறைந்தது பதினேழரை வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் சிறப்பு அனுமதி பெற்று 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை முடித்த அவர் மேற்கொண்டு ஓராண்டு சிறப்பு மருத்துவத்தை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். கடந்த மாதம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பிரிட்டனில் இளம் வயதில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற பெருமைக்குரியவரானார் ஹீனல். இவருடைய பெற்றோர் லண்டனில் மொத்த வியாபாரம் செய்துவருகின்றனர்.
Average Rating