காசநோயை கட்டுப்படுத்தும் வழி !(மருத்துவம்)
காசநோய்க்கான சிகிச்சை முறைகளை கண்டுபிடித்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆன பிறகும் கூட உலக அளவில் இந்த நோயின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. காரணம், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இன்னமும் பொதுமக்களுக்கு முழுமையாக ஏற்படவில்லை. இந்த நோயைத் தடுக்க உதவுகிற சுற்றுப்புற சுத்தம் இந்தியா உள்பட இன்னும் பல நாடுகளில் மேம்படவில்லை. இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். நீரிழிவு மற்றும் எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு இது வருகிற வாய்ப்பு மிக அதிகம்.
காசநோய் கிருமிகள்
‘மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் காசநோய் வருகிறது. வழக்கத்தில், காற்றோட்டம் சரியில்லாத வீடுகளிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களிலும், பஞ்சாலை, நூற்பாலை, சிமென்ட் ஆலை, பீடித்தொழில் இடங்கள், சுரங்கங்கள், ரப்பர் தோட்டம் போன்றவற்றில் இந்தக் கிருமிகள் அதிக அளவில் வசிக்கும். அப்போது அங்கு வாழும் மக்களைத் தாக்கி காசநோயை ஏற்படுத்தும்.
யாருக்கு வாய்ப்பு அதிகம்?
புகைப்பிடிப்பவர்கள், ஊட்டச்சத்துக்குறைவு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், காசநோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது.
எப்படி பரவுகிறது?
காசநோய் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைத் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும்.
நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போது கூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.
அறிகுறிகள்
காசநோய்க் கிருமிகள் உடலில் எந்த உறுப்பைப் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் அமையும். பொதுவாக, இந்த நோய் நுரையீரல்களையே அதிக அளவில் பாதிப்பதால் நுரையீரல் காசநோய்க்குரிய (Pulmonary tuberculosis) அறிகுறிகளைப் பார்ப்போம். 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கிற இருமல், சளி, சளியில் ரத்தம், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைவது, களைப்பு, சுவாசிக்க சிரமம்
ஆகியவை இதன் பிரதான அறிகுறிகள்.
பரிசோதனை வகைகள்
ஒருவருக்குக் காசநோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்றவை உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கியமானது. சளியில் காசநோய்க் கிருமிகள் இருக்குமானால் அது காசநோயை 100 சதவிகிதம் உறுதி செய்யும்.
சிகிச்சை என்ன?
நவீன மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியால் இன்றைக்கு காசநோயைக் குணப்படுத்த பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி மருந்து ஆகியவை முதல்நிலை காசநோயைக் குணப்படுத்துகின்றன. இவற்றை நோயின் ஆரம்பநிலையிலேயே மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு முறைப்படி ஒருநாள்கூட நிறுத்தாமல் சாப்பிட வேண்டியது முக்கியம்.
இந்தியாவில் 1993-ல் உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன், ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம்’
அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ‘டாட்ஸ்’ (DOTS Directly observed treatment short course) என்று அழைக்கப்படும் ‘கூட்டு மருந்துச் சிகிச்சை’ அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சையை மொத்தம் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், காசநோய் முற்றிலும் குணமாகிவிடும். என்றாலும், இறுதியாக ஒருமுறை சளிப் பரிசோதனையைச் செய்து அதில் காசநோய்க் கிருமிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகே சிகிச்சையை நிறுத்த வேண்டும்.
கவனம் தேவை
காசநோய்க்கு சிகிச்சை பெறத் தவறினால் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும். உணவு சாப்பிட முடியாமல், சுவாசிக்க முடியாமல், ரத்த வாந்தி வந்து மரணம் நெருங்கும். மருந்தை நிறுத்தக்கூடாது. காசநோய்க்கு மருந்து சாப்பிடாதது எவ்வளவு ஆபத்தானதோ, அதற்கு நிகரான ஆபத்தை உடையது மருந்தைப் பாதியில் நிறுத்திவிடுவது. இந்தியாவில் காசநோயை
இன்னமும் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதற்கு முக்கியக் காரணம் இதுதான். காசநோய் முற்றிலும் குணமாகக் குறைந்தது ஆறு மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும். ஆனால், மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த 2 மாதங்களுக்குள் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது என்று நினைத்துப் பெரும்பாலோர் மருந்து சாப்பிடுவதைப் பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள்.
மேலும், காசநோய்க்குத் தரப்படுகிற மாத்திரைகளுக்கு வாந்தி, கிறுகிறுப்பு, சோர்வு போன்ற பக்கவிளைவுகள் சிகிச்சை ஆரம்பித்த சில வாரங்களுக்குத் தொல்லை கொடுக்கும். இவற்றுக்குப் பயந்து மருத்துவர்களை ஆலோசிக்காமலேயே மருந்துகளை நிறுத்திவிடுபவர்கள் அதிகம் பேர். இன்னொன்று, ‘காசநோய் இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால் சமூகத்தில் மரியாதை குறைந்துவிடும்… மற்றவர்கள் நம்மை ஒதுக்கிவிடுவார்கள்’ என்று பயந்தே பலர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வருவதில்லை. காசநோயாளிகளில் 60 % முதல் 70 % பேர் வரை தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள்.
இவர்களில் பலருக்குத் தொடர்ந்து மாத்திரை வாங்குவதற்கு பண வசதி இல்லாததாலும், அடிக்கடி வெளியூர்களுக்குப் பயணம் செய்வது, வேலைப்பளு, வேலையின்மை போன்ற காரணங்களாலும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளத் தவறிவிடுகின்றனர். இவை அனைத்துமே காசநோயை ஒழிப்பதற்குத் தடையாக நிற்கின்றன.
உணவும் மருந்துதான்!
காசநோயைப் பொறுத்தவரை சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டியதும் அவசியம். குறிப்பாக, புரத உணவு களை அதிகம் சாப்பிட வேண்டும். பால், முட்டை, பருப்பு, பயறு, ஆட்டுக்கறி, எலும்பு சூப் போன்றவற்றைத் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
காசநோயாளிகள் பின்பற்ற வேண்டியவை
பொது இடம் என்றுகூட பார்க்காமல் எச்சில் துப்புவதும் மூக்கைச் சிந்துவதும் தவிர்க்க முடியாத பழக்கமாக காச
நோயாளிகளுக்கு மாறிவிடும். அதனால், இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மறைத்துக்கொள்ள வேண்டும். பீடி, சிகரெட், சுருட்டு உள்ளிட்ட புகைப்பழக்கமும் காசநோய் பரவுவதற்குத் துணைபோகிறது. அதனால் அவற்றை ஆரம்ப நிலையிலேயே இளைஞர்கள் நிறுத்த வேண்டும்.
காசநோயாளிகள் அனைவரும் சரியான காலத்துக்கு முறையான சிகிச்சைபெற்றுக்கொள்வதை ஊக்கமளிப்பதற்கு சமூக அக்கறை உள்ள பொதுநிறுவனங்கள் இப்பணியில் ஈடுபட வேண்டும். மருத்துவர்கள், பொதுமக்கள், ரோட்டரி, லயன் போன்ற சமூகநல அமைப்புகள் அரசு இயந்திரத்துடன் இணைந்து செயல்பட்டால் காசநோயை 100 சதவிகிதம் ஒழித்துவிட முடியும். இதற்குத்தேவை சமூக விழிப்புணர்வு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு!
Average Rating