வானவில் சந்தை(மகளிர் பக்கம்)..!

Read Time:9 Minute, 1 Second

டிஜிட்டல் சேமிப்புக் கிடங்குகள்

2007 வாக்கில், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா N-73 மொபைல் போனை வாங்கினேன். அது ஒரு 3ஜி மொபைல். பின்பக்கம் ஒரு பிரமாதமான கார்ல் செய்ஸ் லென்ஸ் கொண்ட 3.2 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமராவும் அதில் இருந்தன. அதை கிட்டத்தட்ட 2013 வரை பயன்படுத்தினேன். அந்த அருமையான கேமராவில், நான் அந்தக் காலகட்ட வாழ்வைப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான தருணங்களை படம் பிடித்திருக்கிறேன். சிக்கல் என்னவென்றால், முக்கியமான தருணங்கள், படம் பிடிக்கப் பிடிக்கக் கூடிக்கொண்டே போயின. ஆனால் போனில் இருந்த 2 ஜிபி (1 ஜிகாபைட் = 1024 மெகாபைட்) கொள்ளளவு போதவில்லை. படங்கள் கூடக் கூட, போனில் இருந்த படங்களை எனது மேசைக் கணினிக்கு மாற்றினேன். மேசைக் கணினியின் மெமரி அப்போது 80 ஜிபி தான். பிறகு, டிவிடிக்களை வாங்கித் தகவல்களைப் பதிந்து வைத்தேன். அது பல டிவிடிக்களாகப் பெருகின. இதற்கு ஒரு முடிவில்லை என்று உணர்ந்தேன்.

ஒரு தனிநபரின் வாழ்க்கைத் தருணங்கள், வரலாற்றில் முன்பு எப்போதையும் விட அதிகமாக படம்பிடிக்கப்படுகின்ற (ஒளிப்படமாக, காணொளியாக) காலம் இது. முன்பு போல, அவற்றை யாரும் பேப்பரில் அச்செடுத்து வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதே அதற்குக் காரணம். அவை, வெறும் மின்திரையிலேயே (மொபைல், டேப், கணினி மற்றும் தொலைக்காட்சித் திரைகளில்) இனி பார்க்கப்படும். அந்தத் தகவல்களை பாதுகாக்க டிஜிட்டல் சேமிப்புக் கலன்கள் தேவை. முன்பு ஃபிளாப்பி டிஸ்க்குகள் இருந்தன.

பிறகு குறுவட்டுகள் (சிடி) வந்தன. இப்போது யூ எஸ் பி பென் டிரைவ்கள் (ஃப்ளாஷ் டிரைவ்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) உள்ளன. இந்தத் தொழில்நுட்பமே இப்போது மிகப் பரவலாகக் காணப்படுவது. ஆனால், இவற்றில் அதிகபட்ச தகவல் சேமிப்புக்கான சாத்தியம் குறைவுதான். அதிகபட்சம் 512 ஜிபி தான் பென் டிரைவ்கள் தரும் கொள்ளளவு. இதைத் தாண்டிய தேவையுள்ளவர்களுக்கு ஹார்ட் டிஸ்க்குகள் தான் தீர்வு. இவை அதிகபட்சம் 16 டிபி (டெராபைட், ஒரு டெராபைட்= 1000 ஜிபி) அளவில் கிடைக்கின்றன.

பென்டிரைவ்கள், 4 ஜிபி அளவிலிருந்து அதிகபட்சம் 512 ஜிபி வரை கிடைக்கின்றன. இவற்றில், மிகப் பிரபலமான பிராண்டுகள் என கிங்ஸ்டன்(Kingston), சான்டிஸ்க் (Sandisk), ட்ரான்செண்ட் (Transcend), சோனி (Sony), ஹெச்.பி,(H.P) ஆகியவற்றைச் சொல்லலாம். 4 ஜிபி இருநூற்றைம்பது ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. 512 ஜிபி கொள்ளளவு கொண்ட கோர்சேர் (Corsair Pen Voyager) பென்டிரைவ் தோராயமாகப் பதினெட்டாயிரம் விலையில் கிடைக்கிறது. இப்படிக் கொள்ளளவுக்குத் தக்கவாறு விலையில் மாற்றமிருக்கும்.

கூடுதல் கொள்ளளவு தேவைப்படுவோர் ஹார்டு டிரைவ் (External Hard Disk -HD) தான் வாங்க வேண்டியிருக்கும். ஒரு டெராபைட் அளவு கொண்ட ஹார்டு டிரைவ் தோராயமாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்கும். பல லட்ச ரூபாய் விலையுள்ள பல டெராபைட்கள் கொள்ளளவு கொண்ட டிரைவ்கள் உள்ளன. ஆனால் அதெல்லாம் தனிநபர் பயன்பாட்டுக்கானதல்ல. நிறுவனங்களின் பயன்பாட்டுக்கானவை. வெஸ்டன் டிஜிட்டல் (Western Digital), அடாடா (Adata), சீகேட் (Seagate), தோஷிபா (Toshiba), சாம்சங் (Samsung) போன்றவை இவற்றில் பிரபலமானவை.

சாதக பாதகங்கள்
பென்டிரைவ்கள் அளவில் சிறியவை என்பதால், எளிதாகக் கையாளத் தோதானவை. கணினியிலிருந்து தகவல்களை இவற்றுக்கு இடமாற்றுவது மிகச் சுலபமானது. வேகமானதும் கூட. அசையும் பகுதிகள் கொண்டிராததால் எடுத்துச் செல்லத் தோதானவை. அதனாலேயே நீடித்துழைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதுவே அதன் பாதகமான அம்சமும் ஆகிறது. சிறிய அளவிலானவை என்பதால் எளிதில் தொலைந்து போகவோ, திருடப்படவோ சாத்தியமுள்ளவையாக இருக்கின்றன. பெரும் தகவல்களைத் தாங்கும் கொள்ளளவுத் திறன் கொண்டவையும் அல்ல இவை. அத்தோடு, எளிதாக வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும் தன்மை கொண்டவை என்பதும் இவற்றின் பாதக
அம்சங்களாகும்.

பென்டிரைவ்களோடு ஒப்பிடுகையில், ஹார்ட் டிரைவ்கள் அளவில் பெரியவை. அதிக கொள்ளளவுத் திறன் கொண்டவை. கடவுச் சொல் மூலம் கோப்புகளைகாத்துக் கொள்ள முடிவதால், அவற்றை விட அதிக பாதுகாப்பானவையும் கூட. அதனாலேயே விலையும் அதிகம். ஹார்ட் டிரைவ்கள் பென்டிரைவ்களை விடக் கூடுதல் வாழ்நாள் கொண்டவை.

பொதுவாக, இவற்றை மின்சாதனக் கருவிகள் விற்கும் கடைகளிலும் கணினிப் பொருட்களை விற்கும் கடைகளிலும் வாங்கலாம். இணையம் வழியாக அமேசான் (amazon.in), ஃப்ளிப்கார்ட் (flipkart.com), டாடா க்ளிக் (tatacliq.com), ஷாப்க்ளூஸ் (shopclues.com) போன்றவற்றின் மூலமும் வாங்கலாம். இந்த இணையதளங்கள் சில நேரங்களில் நடத்தும்.‘திருவிழாக் காலங்களில்’, இது போன்ற மின் கருவிகள்
மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

ஆனால் இந்தத் தகவல் சேமிப்புத் தொழில்நுட்பக் கருவிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் குறைபாடுகளைக் கொண்டிருப்பவையே (உதாரணத்திற்கு, பென் டிரைவ்கள் எளிதாக வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும்). தொழில்நுட்பம் அதற்கான தீர்வைக் கொண்டுவரும்போது, புதிய கருவிகள் வரும். நாம் அப்போது அந்தப் புதிய கொள்கலன்களை வாங்கி நமது தகவல்களை இடம்பெயர்த்து வைக்க வேண்டியதுதான்.

ஆனால், இப்படிப் போய்க்கொண்டேயிருக்கும் இந்தத் தகவல் தொகுப்பை, ஒரு தனி நபர் எப்படி நிர்வகிக்கப் போகிறார் என்பது ஒரு புதிய சவால். அதுவும் வாழ்வுமுறைச் சவால். ஏனென்றால், என்னுடைய நண்பர் ஒருவர், நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே புகைப்படங்கள் எடுக்கும் பழக்கம் உடையவர். இத்தனைக்கும் அவர் ஒரு உயர்தரமான மொபைல் போன் வைத்திருக்கிறார்.

கேட்டால்,கேமராவை உபயோகிக்கவே தோன்றவில்லை என்கிறார். இப்படி நூற்றில் ஒருவர் இருக்கக்கூடும். மற்றவர்கள், தாங்கள் உருவாக்கிப் பெருக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தகவல் பெருந்தொகுப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில், வீட்டிற்கு வாடகை கொடுப்பது போல, நமது தகவல்களை சேமித்து வைக்கும் டிஜிட்டல் கிடங்குகளுக்கு நாம் வாடகை செலுத்த வேண்டியிருக்கும். எப்படிப் பார்த்தாலும், இதற்கு ஒரு முடிவில்லை என்றே தோன்றுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனசுக்கும் தேவை டீட்டாக்ஸ்(மருத்துவம்)..!!
Next post ஹெல்த் காலண்டர் (மருத்துவம்)..!!