தூங்க வைப்பதும் நானே… தூக்கம் கெடுப்பதும் நானே(மருத்துவம் )…!!
‘‘மூளையின் மையத்தில் இருக்கும் பினியல் சுரப்பியின் ஒரு வகை புரதமே மெலட்டோனின். இதுதான் நம்முடைய தூக்கத்தைத் தீர்மானிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மெலட்டோனின் சுரப்பை சீர் செய்தால் ஒருவர் நன்றாகத் தூங்க முடியும். மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்பட்டால் ஒருவரின் தூக்கம் கெடும். இதுதான் அடிப்படை. இது நம்முடைய சுற்றுப்புறச் சூழலின் வெளிச்சத்தைப் பொருத்து தூக்கத்தை சீர்படுத்த உதவுகிறது’’ என்கிறார் நாளமில்லா சுரப்பிகள் மருத்துவர் ரவிகிரண் முத்துசாமி.
‘‘சூரியன் மறையும் நேரத்தில் மெலட்டோனின்(Melatonin) மூளையில் சுரக்கத் தொடங்கும். வெளிச்சம் குறையும்போது மெலட்டோனின் மேலும் அதிகம் சுரக்கிறது. இந்த மெலட்டோனின் சுரப்பு மேலும் மேலும் அதிகரிக்கும்போது தூக்க உணர்வு தூண்டப்படும். உடலையும் அதற்கேற்பத் தயார் செய்கிறது.
இதனால் ஆழ்ந்த தூக்கத்தின்போது, உடலில் பல பயனுள்ள மாற்றங்கள் நடைபெற செய்கிறது. குறிப்பாக, டி.என்.ஏவிலுள்ள சிறு இழப்புகள் சரிசெய்யப்படுகின்றன, திசுக்கள் புத்துயிர் பெறுகின்றன. செல்களின் சிதைவுகளை சரி செய்யவும் உதவுகிறது.
மெலட்டோனினை பற்றி பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் பல ஆச்சரியகரமான முடிவுகள் கிடைத்திருக்கின்றன. மன அழுத்தம் குறைப்பு, டி.என்.ஏ பாதிப்புகளை சரி செய்தல், இளமையைத் தக்க வைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கல், ஞாபகசக்தி, சீரான ரத்த ஓட்டம், நீரிழிவு பாதிப்பு இல்லாமை போன்ற பல நன்மைகளை மெலட்டோனின் செய்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஆழமான தூக்கத்தின்போது சுரக்கும் மெலட்டோனின் மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் பெரிய பங்களிப்பினை செய்கிறது. தூக்கத்தின்போது நடக்கும் அனைத்து நன்மையான மாற்றங்களுக்கும் மெலட்டோனின் மையப்புள்ளியாக இருக்கிறது.’’
சரி… மெலட்டோனின் எப்படி தூக்கத்துக்குக் காரணமாகிறது?
‘‘வெளிச்சம் குறையும்போது கண்களின் வழியாக மூளைக்கு சிக்னல் அனுப்பப்படுகிறது. அப்போது நம் நடு மூளையில் மெலட்டோனின் சுரப்பி சுரக்கத் தொடங்குகிறது. அதன்பிறகே நமக்கு தூக்கம் வருகிறது. இது இரவு நேரங்களில் நடைபெறுகிறது. பொதுவாக, மெலட்டோனின் சுரப்பி இரவு 7 முதல் 8 மணிக்கு சுரக்கத் தொடங்கிவிடுகிறது. அதனால் இருள் நிறைந்த அறையில் தூங்கிப் பழக வேண்டும்.
அதனால் நாம் இரவில் தூங்கும்போது தூங்குகிற அறை வெளிச்சம் இல்லாதவாறு பார்த்துகொள்வது அவசியம். இரவு பணிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்கள் பகலில் தூங்கும் சூழல் இருந்தால், பகலில் தூங்கும் அறையை நல்ல இருட்டாக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.
இரவு தொடங்கியவுடன் நம்மைத் தூங்குவதற்குத் தயார் செய்ய வேண்டும். சீரான உணவு எடுத்துவிட்டு செல்போன், டிவி, கணினி பயன்பாடுகளைக் குறைத்துவிட்டு தூங்கச் செல்ல வேண்டும். ஷிஃப்ட் முறையில் வேலை செய்பவர்கள் ஷிஃப்ட் மாறி தூங்கச் செல்வதால் தூக்கமின்மை பிரச்னை, மெலட்டோனின் சுரப்பதில் பிரச்னை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மெலட்டோனின் மருந்துகள், மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.’’
Average Rating