பலம் தரும் பனங்கற்கண்டு(மருத்துவம்)!!

Read Time:7 Minute, 50 Second

நினைத்தாலே இனிக்கும்

‘‘தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று என பெருமை பெற்ற பனை மரத்தின் பாகங்கள் அனைத்துமே மருத்துவ சிறப்புகள் நிறைந்தது. அதில் அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய பனங்கற்கண்டின் மருத்துவப் பயன்கள் அளப்பறியது. சமீபகாலமாக பனங்கற்கண்டு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன், அதனுடைய பெருமைகள் பற்றி விரிவாகக் கூறுகிறார்.

‘‘பனங்கற்கண்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஆண், பெண் என்று இருபாலருக்கும் உகந்த உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் உள்ளது. பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற பனை சார்ந்த பொருட்களை உணவில் எடுத்துக் கொள்பவர்கள் யானையைப் போன்ற உடல்பலம் பெறுவதோடு நீண்ட காலம் நோய் நொடிகளின்றி வாழலாம் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.

குளிர்ச்சி தன்மையுடைய பனங்கற்கண்டு ரத்தப்போக்கு நோய், சுவாசம், உடல் இளைப்பு, விந்தணுக்கள் குறைவு, மாதவிடாய் கோளாறுகள், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய நோய்கள், உடலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் புண் போன்றவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

பனங்கற்கண்டில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Anti oxidants) நீரிழிவு நோய், அழற்சி போன்றவற்றை எதிர்த்து செயல்படுவதோடு உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உறுதுணையாக இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது, நாம் அன்றாட வாழ்வில் உற்சாகமாக செயல்படுவதற்கும் உதவி செய்கிறது. இரும்புச்சத்து, பொட்டாசியம், சிங்க், வைட்டமின் B1, B2, B3 மற்றும் Low Glycemic Index உடையதாகவும் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கிறது.

பல்வேறு மருத்துவ சிறப்புகளைப் பெற்றுள்ள பனங்கற்கண்டை பின்வரும் நோயாளிகள் கட்டாயம் உணவிலும், பானத்திலும் சேர்த்துக்கொள்வது
நல்லது.

* நீண்ட நாட்களாக வயிற்றுப் புண் நோயால் அவதியுற்று வருபவர்கள், வாயிலிருந்து புகை வருவது போன்ற உணர்வு மற்றும் நெஞ்சுக்கரிப்பு போன்ற தொந்தரவுகளால் அவதியுறும் நோயாளிகள் போன்றோர் கொத்தமல்லி கஷாயத்தில் பனங்கற்கண்டை கலந்து பருகலாம்.

* நீண்ட நாட்களாக சளி தொந்தரவுகள், நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திரிகடுகு கஷாயத்தில் பனங்கற்கண்டு கலந்து பருகலாம். ஆனால், இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* மாதவிடாய் சீராக வராத இளம்பெண்களுக்கு பனங்கற்கண்டு ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்கிறது. எள்ளு கஷாயத்தில் திரிகடுகு சூரணத்தோடு தேவைக்கேற்ப சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து பயன்படுத்தி வந்தால் மாதவிடாய் சீராகும்.

* நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனைப்படி நெல்லிச் சாற்றுடன் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் அந்த நோயை கட்டுக்குள்
வைக்கலாம்.

* சுவாசம் மற்றும் சைனஸ் பிரச்னை உடையவர்கள் நீர்த்து இருக்கிற பாலில் பனங்கற்கண்டு, சிறிதளவு சுக்குப்பொடி, மஞ்சள்பொடி கலந்து பயன்படுத்தலாம்.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகள் சாப்பிட்ட பின்பு நமது வாயில் கசப்புத்தன்மை தோன்றினால், வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக சிறிதளவு பனங்கற்கண்டை சாப்பிடலாம். அதேபோல் அந்த மருந்துகளை பாலில் கலந்து குடிக்குமாறு மருத்துவர் பரிந்துரைக்கும்போதும் வெள்ளைச் சீனிக்கு பதிலாக பனங்கற்கண்டை சேர்ப்பது நல்லது.

இதனால் மருந்தின் வீரியம் குறையாமல் இருப்பதோடு உடலின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அயல் நாட்டிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள், பழங்கள் அல்லது நம் நாட்டில் கிடைக்கிற பொருட்களிலிருந்து அயல் நாட்டினரைப் பின்பற்றி தயாரிக்கக்கூடிய உணவுப் பொருட்கள் போன்றவை எப்பொழுதும் நம் உடல் நலனுக்கு சிரத்தை தரக்கூடியவைகளாகவே இருக்கிறது. இதற்கு நாம் தற்போது பயன்படுத்திவரும் சீனி என்கிற வெள்ளைச் சர்க்கரையே மிகச் சிறந்த உதாரணம்.

பல்வேறு படிநிலைகளில் வேதிவினைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயார் செய்யப்படும் சீனியை தவிர்ப்பதோடு அதற்கு பதிலாக நம்மைச் சுற்றி வளரும் பனையிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு, பனைவெல்லம் போன்றவற்றை உணவிலும், பானத்திலும் பயன்படுத்துவது நல்லது. இதனால் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக தொந்தரவு செய்யும் நீரிழிவு நோயிலிருந்து நமது உடலைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

தமிழகத்தின் பாரம்பரிய முறைகளின்படி தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு, வெள்ளை சர்க்கரையைவிட மிகவும் சிறந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற நமது பாரம்பரிய உணவுப் பொருட்களை நாமும் நம் சந்ததியினரும் பயன்படுத்தும் வண்ணம் செய்தால் அனைவரும் நோய் நொடிகளின்றி வளமோடு வாழலாம்’’ என்கிறார் மருத்துவர் பாலமுருகன்.

பனங்கற்கண்டு பால்நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தேவையான அளவு பனங்கற்கண்டு, சிறிதளவு ஏலக்காய் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வருவதால் உடலுக்கு உற்சாகமும் நிறைவான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இந்தப் பால் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, நல்ல தூக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பருகி வருவதால் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீசால் பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்(வீடியோ)!
Next post போலீசால் கொல்லப்பட்ட உஷாவின் இறுதி ஊர்வலம்(வீடியோ)!!