குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள்(கட்டுரை)!!

Read Time:20 Minute, 56 Second

சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும் அது திடீரென்று கவனம் பெறுவது ஏன்? இவை இன்றைய சூழலில் பதிலை வேண்டும் கேள்விகள்.

கடந்த சில வாரங்களாக உலகத்தின் கவனம், சிரியா மீது மீண்டுள்ளது. சிரியாவில், குழந்தைகள் சாகும் படங்கள் வெளியிடப்பட்டு, அங்கு ஒரு மனிதப் பேரவலம் நடந்தேறுவது போல, ஊடகங்களும் சமூக ஊடாட்டத் தளங்களும் சொல்கின்றன.

திடீரென்று சிரியா மீது என்றுமில்லாத கவனம் தெரிகிறது. அமைதிப்பூங்காவாக உள்ள உலகில், சிரியாவில் மட்டும் போர் நிகழ்வது போன்று காட்டப்படுகிறது. சிரியாவைப் போன்று யெமனில் பெரும் போர் நடக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான சிறுவர்கள், குழந்தைகள் அமெரிக்க-சவூதி அராபியக் கூட்டுப்படைத் தாக்குதல்களில் இறந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானக் குண்டுவீச்சுகளால் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் அங்கவீனமாகினர். அப்போது மனிதாபிமானம் எங்கே போனது?

என்றும் இல்லாத அக்கறை திடீரென்று குழந்தைகளின் பெயரில் உருவெடுத்துள்ளது. சிரியாவின் மனித உரிமைக் காவலர்களாக உலாவருபவர்கள் இவ்வளவு காலமும் எங்கே போனார்கள்? சிரியாவில் இனவழிப்பு நடைபெறுவதாகக் கூவும் இவர்களுக்கு, சிரியாவில் நடப்பதென்ன என்றோ, இனவழிப்பு என்றால் என்ன என்றோ தெரியுமா? விடயங்களை அறியும் அக்கறையோ, பாதிக்கப்படும் மக்கள் மீது நேர்மையான கரிசனையோ அற்று வெற்றுக் கூச்சல்களால் ஊடக வெளியை நிரப்புகிறார்கள்.

வசதியாக மறக்கப்படும் சில செய்திகளை இங்கு சொல்ல வேண்டும். சிரியாவில் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவரக் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்கா முயல்கிறது. 2005ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, சிரியாவின் வலதுசாரி எதிர்க்கட்சிக்கு நிதியுதவி வழங்கிவருகிறது. இதை அமெரிக்காவும் அக்கட்சியும் வெளிப்பட ஏற்கின்றன.

சிரியத் தலைநகர் டமஸ்கஸில், அமெரிக்கா 2011 ஜனவரியில் தனது தூதரகத்தைத் மீண்டும் திறந்து, ரோபேட் ஃபோர்ட் என்பவரைத் தூதராக நியமித்தது. இவர் 1970களில் எல் சல்வடோரில் எதிர்ப்புரட்சிச் சக்திகளை ஒன்றிணைத்து, ஆட்சியைக் கவிழ்த்த ஜோன் நெக்ரோபொண்ட் என்ற அமெரிக்க இராஜதந்திரியின் கீழ்ப் பணியாற்றியிருந்தார்.

ஃபோர்ட், சிரிய அரசுக்கு எதிரான குழுக்களை ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தைகளை நேரடியாக நடத்தி, அவற்றை ஒரேயணியில் கொண்டு வந்தார். அவர் பதவியேற்று இரண்டே மாதங்களில், சிரிய அரசுக்கெதிரான கிளர்ச்சி தொடங்கியது.

அரசுக்கெதிரான மக்கள் எழுச்சிகள் பொதுவாகப் பெருநகரங்களில் தொடங்குவது வழமை. சிரிய அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டமோ, ஜோர்தானுடனான எல்லையை அண்டிய, டாரா என்ற சிறிய நகரில் 2011 மார்ச்சில் தொடங்கியது.

ஜோர்டானூடாக, சிரிய விரோதக் குழுக்களுக்கு ஆயுதம் அனுப்பியதை சவூதி அராபியா சில காலத்துக்குப் பின்னர் ஒப்புக் கொண்டது.

அமெரிக்காவும் அதன் நேட்டோக் கூட்டாளிகளும் தன்னெழுச்சியான மக்கள் எழுச்சிகளைத் தங்கள் தேவைகட்குப் பயன்படுத்தினர். சிரியாவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு, சிரிய அரசாங்கம் பதிலளித்த வேளை, அரபு லீக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் சிரிய அரசாங்கம், மக்கள் எழுச்சிக்கெதிராக வன்முறையைப் பிரயோகிக்கிறது என்று குற்றஞ்சாட்டிப் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இவ்வாறே சிரிய யுத்தம் உருப்பெற்றது.

மத்திய கிழக்கில், அமெரிக்க நலன்களுக்கு முரணான அரசுகளில் ஈரானை அடுத்து முக்கியமானது சிரியா. இதனால், மத்திய கிழக்கை, அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் இலக்குக்கு முட்டுக்கட்டையாகவுள்ள சிரியாவின் அல் அசாத் ஆட்சியை அகற்றி, அமெரிக்க நலன்களுக்கு அடிபணியும் ஒரு கைப்பாவை அரசாங்கத்தைக் கொண்டுவரும் முயற்சியின் வெளிப்பாடான சிரிய நெருக்கடி, இன்று அமெரிக்க உலக மேலாதிக்கத்தை, நேரடியாகச் சவால் விடுகிறது.

ஊடகங்கள் காட்டுவது போலன்றி, சிரியா, மதச் சகிப்புடைய மதச்சார்பற்ற பல்லின நாடாக நீண்ட காலமாக இருந்துள்ளது. அதன் ஜனாதிபதி அசாத் ஷியா, பிரிவுகளில் சிறியதான அலவ்வி மதப் பிரிவினர்; அவரது மனைவி சுன்னி பிரிவினர். சிரியாவில் கணிசமான எண்ணிக்கையில் குர்தியர்களும் ஆமேனிய கிறிஸ்தவர்கயளும் உள்ளனர். இவை நமக்கு ஊடகங்கள் சொல்லாத தகவல்கள்.

சிரிய ஆட்சி மாற்றத்துக்கு ஏங்கும் அமெரிக்கக் கூட்டாளிகளில் பிரதானமானது சவுதி அராபியா. சவூதி அராபியாவின் பிராந்திய அதிகாரத்துக்குச் சவால் விடும் ஒரு நாடாக, சிரியா இருப்பதும், சவூதிக்குக் கீழ்ப்படிய மறுக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் இயக்கங்களுக்கு சிரியா வழங்கிவந்த ஆதரவும் ஈரானுடன் சிரியாவின் நெருக்கமும் சவூதி அராபியாவுக்கு எரிச்சலூட்டுகின்றன.

சிரியப் போரை அமெரிக்கா தொடக்கி நடத்தும் காரணத்தை, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப். கெனடியின் சகோதர் ரொபெட் கெனடியின் மகன் ரொபெட் கெனடி (ஜூனியர்) சில ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார்.

அவரது கருத்தில், “அரபு வசந்தத்துக்குப் பலகாலத்துக்கு முன்பு, 2000ஆம் ஆண்டளவில், அமெரிக்கா தனக்கு நட்பான மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், சவூதி அராபியா, ஜோர்டான், சிரியா, துருக்கி ஆகியவற்றூடாகத் தனது எண்ணெயைக் கொண்டுபோகும் எண்ணெய்க் குழாய்வழித் திட்டமொன்றை முன்மொழிந்தது.

இது ஐரோப்பியச் சந்தையில் கட்டாரின் எண்ணெயை விற்கும் நோக்கிலானது. சிரியா அத் திட்டத்துக்கு உடன்படவில்லை. சிரியா மறுத்ததால் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உருவாகவிருந்த திட்டம் கைவிடப்பட்டது. எனவே ஜிகாதிகளை உருவாக்கி, சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர அமெரிக்க நினைத்தது” என்று ரொபேட் கென்னடி தெரிவிக்கிறார்.

சிரிய ஆட்சி மாற்றத்துக்காக உருவாக்கிய ‘சிரிய விடுதலை இராணுவம்’ தனது தேவைக்குப் போதாது என்று, அமெரிக்காவுக்குச் சில ஆண்டுகளில் விளங்கியது. சிரிய யுத்தத்தில் 2013வரை மறைமுகமாக அல் கைடாவுக்கு உதவிய அமெரிக்கா, 2013 நவம்பர் முதல் புதிய இஸ்லாமிய முன்னணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை உருவாக்கி அதற்கு நேரடியாக உதவியது. இம் முன்ணணியில் எல்லாரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். மிதவாத ஆட்சி நடத்துவதோடு, சிரியாவில் பல்லினச் சமூகங்களின் இருப்பை உறுதிப்படுத்துவதான தற்போதைய சிரிய அரசை எதிர்ப்பவர்கள். இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் அடியொற்றி ஷரியாச் சட்டங்களின் அடிப்படையில் சிரியாவை ஆளவேண்டும் என்று வாதிப்பவர்கள். இவர்களுடன் அமெரிக்கா கூட்டணி வைத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் 12 கன்னியாஸ்திரியர், சிரியத் தலைநகரான டமாஸ்கஸின் வடக்கிலுள்ள நகரொன்றின் தேவாலயத்திலிருந்து சிரிய அரசுக்கெதிரான இஸ்லாமியப் படையினரால் கடத்தப்பட்டனர். இன்றுவரை அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

2013 செப்டெம்பர் மாதம், கிறிஸ்தவர்கள் வாழும் கிராமமொன்றைக் கைப்பற்றிய அரசுக்கெதிரான போராளிகள், அங்கிருந்த கிறிஸ்தவர்களைக் கொன்றதோடு, கட்டடங்களைத் தரைமட்டமாக்கினர். இவ்வாறான சம்பவங்கள் பல, கடந்த இரு ஆண்டுகளில் நடந்தன. இந்தக் கொடுஞ்செயல்கள், ஊடகக் கவனம் பெறாது அமெரிக்கா பார்த்துக் கொண்டது.

இந்தப் பின்னணியில் சிரியா மீதான இப்போதைய கவனத்துக்கு வருவோம். சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியை சிரிய இராணுவம் தாக்குவதாகவும் அதிற் குழந்தைகள் கொல்லப்படுவதாகவும் வரும் செய்திகளுடன் படங்களும் வெளியாகின. அழும், அஞ்சும், அல்லற்படும் குழந்தைகளின் படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தன. இதன் விளைவாக, சிரிய இராணுவத்தின் வெறிச்செயலை உடன் நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டங்களும் கண்டனக் கூட்டங்களும் நடந்தன. இது ஓர் அலை போல் எழுந்துள்ளது.

கிழக்கு கூட்டாவில் எடுத்த படங்களாகச் சொல்லிப் பகிர்ந்த படங்களில் சில, காசா மீதான இஸ்‌ரேலிய குண்டுத்தாக்குதலின் போது எடுக்கப்பட்டவை எனவும் வேறு சில, மோசுல் தாக்குதலின் போது எடுக்கப்பட்டவை எனவும் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டுள்ளது.

கிழக்குக் கூட்டா சிரியத் தலைநகர் டமாஸ்கஸை அண்டிய புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி இப்போது பல்வேறு போராளிக் குழுக்களின் வசமுள்ளது. 2015ஆம் ஆண்டு இப்பகுதியில் இருந்த ஷஹ்ரான் அலூஷ் என்கிற சலாபி பிரிவைச் சேர்ந்த போர்ப் பிரபுவின் சாவைத் தொடர்ந்து, இப் பகுதியைக் கட்டுப்படுத்த மூன்று குழுக்கள் போட்டியிடுகின்றன.

கிழக்கு கூட்டாவில் ‘இஸ்லாமிய சொர்க்கத்தை’க் கட்டவிருப்பதாக அலூஷ் அறிவித்தார். சவூதி அராபிய, குவைத் நாடுகளின் சலாபி போதகர்களின் கிழக்குக் கூட்டா நோக்கிய 2013ஆம் ஆண்டு வந்ததையடுத்து இரு நாடுகளில் இருந்தும் இவருக்குப் பணம் குவிந்தது.

சிரிய அரசுக்கெதிரான போரில் பங்கெடுத்த இக் குழு, ஏனைய மதப்பிரிவினரைக் கொன்று குவித்தது. அலவ்வி மதப்பிரிவைச் சேர்ந்த மக்களைக் கைதுசெய்து, சிறையில் அடைத்து, சிரியப் படையினர் குண்டு வீசும் இடங்களில் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது. இவ்வாறான கூண்டுகள் ஆயிரம் பயன்படுத்தப்பட்டதாகப் படங்களுடன் ஆதாரங்கள் வெளிவந்தன. ஆனால், அவை எவரது மனச்சாட்சியையும் உலுக்கவில்லை.

இப்போது கிழக்கு கூட்டா மீதான கட்டுப்பாட்டுக்கு ஜயிஸ்-அல் இஸ்லாம், அல் கைடா (அல்-நுஸ்ரா), ஃபய்லக் அல்-ரஹ்மா ஆகியன போட்டியிடுகின்றன. அவை அங்குள்ள மக்களை வெளியேறவிடாது மனிதக் கேடயங்களாக வைத்துள்ளன. கிழக்குக் கூட்டாவை விடுவித்தால் டமாஸ்கஸும் அதை அண்டியுள்ள பகுதிகளும் முற்றாக சிரிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், சிரிய அரசு, சுயமாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து, மக்களை வெளியேறும்படி கேட்டபோதும், இக் குழுக்கள் மக்களை மனிதக் கேடயங்களாகச் சிறைப்பிடித்து வைத்திருந்தன. இது குறித்து யாருக்கும் அக்கறையில்லை.

ஐ.நாவோ ஏனைய மனித உரிமைக் காவலர்களோ மக்களை விடுவிக்குமாறு அக் குழுக்களிடம் கோரவில்லை. எனினும், அப்பாவி மக்கள் மீது, சிரிய அரசுப்படைகளின் தாக்குதல் ஏற்கவியலாதது என்பதையும் இங்கு பதிவு செய்யவேண்டும்.

கிழக்கு கூட்டா பற்றிய பிரசாரத்தைப் படங்களுடன் முன்னெடுப்பதில் பிரதான பாத்திரம் வகிப்போர் ‘வெள்ளைத் தொப்பிக்காரர்கள்’ என்ற குழுவினராவர். இன்றும் சிரியாவின் பிரதான மனிதாபிமான மனித உரிமை நிறுவனமாக இக் குழு கொள்ளப்படுகிறது. ஆனால் இக்குழுவின் தோற்றுவாய் சிக்கலானது. பிரித்தானிய முன்னாள் இராணுவப் புலனாய்வாளனால் இது ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வேளை, 2015ஆம் ஆண்டு நவம்பரில் வட அலெப்போவில், அல் நுஸ்ரா மனிதர்களைச் சுட்டுக்கொன்றபோது, அதில் வெள்ளைத் தொப்பிகாரர்கள் பங்கெடுத்தமை படங்களுடன் வெளியாகி உறுதியானது.

இப்போதையது போன்ற முயற்சி 2016ஆம் ஆண்டு ‘அலெப்போவைக் காப்பாற்றுதல்’ என்ற போர்வையில் இடம்பெற்றமை சிலருக்கு நினைவிருக்கும். அப்போது வெளியான தவறான படங்களும் பொய்ப் பிரசாரங்களும் முற்றிலும் பொய் என்று நிறுவப்பட்டன.

அவ்வாறே 2013ஆம் ஆண்டு அசாத் அரசு மக்கள் மீது, குளோரின், சரின் நச்சுவாயுகளைப் பாவித்தது என்று பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை விசாரித்த ஐ.நா விசாரணைக் குழுத் தலைவர், சுவிற்ஸலாந்தின் முன்னாள் சட்டமா அதிபர் கார்லா டெல் பொன்டே, இரசாயனத் தாக்குதல்களை நடாத்தியது போராளிக் குழுக்கள் என்று தெரிவித்ததோடு, உண்மையை மறைத்து பொய்யை நிறுவ உதவும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நாவினதும் செயற்பாடுகள் குறித்து விசனம் தெரிவித்திருந்தார்.

சிரியாவில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற அமெரிக்காவுக்கு முடியவில்லை. ரஷ்யத் தலையீடு அமெரிக்க நலன்களுக்குப் பெரிய சவாலாக உள்ளது. இப்போது இவ்வகையான மனிதாபிமான நெருக்கடியை ஊடகங்களின் உதவியோடு உருவாக்கி, ‘மனிதாபிமானத் தலையீடு’ மூலம் நேரடி இராணுவத் தலையீட்டுக்கும் ஆட்சி மாற்றத்திற்கும் அமெரிக்கா முயல்கிறது.

அலெப்போவைக் காப்பாற்றும் பிரசாரத்தின் போது, அலெப்போ அவலங்கள் பனா அல்-அபிட் என்ற ஏழு வயதுச் சிறுமியால் டுவீட்டர் வழியாகப் பதியப்படுகிறது. இதன் வழியே உலகம் அலெப்போவைப் பார்ப்பதாகச் சொல்லப்படுகிறது. இறுதியில் அது திட்டமிட்டு நடத்திய டுவிட்டர் கணக்கு என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இப்போது கூட்டாவில் இருந்து இரண்டு சிறுமிகளின் பிரசாரம் டுவீட்டுகளின் வழியே நிகழ்கிறது. விந்தை என்னவென்றால், மின்சாரமோ இணைய வசதியோ அற்ற போர்ச் சூழலில் வாழும் இச் சிறுமிகள், நியூயோர்க் டைம்ஸில் வெளியாகும் கட்டுரைகளுக்கு விருப்பக்குறி இடுகிறார்கள்; மீள்பதிகிறார்கள். இவை இக் கணக்குகளின் பொய்மையை வெளிப்படுத்தியுள்ளன.

ஊடகங்கள், போர்கட்கு அங்கிகாரம் பெற்றுத் தரும் பிரதம கருவிகள். இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலை மீண்டும் மீண்டும் காட்டியமை ஆப்கானிஸ்தான் மீது சட்டவிரோதத் தாக்குதலுக்கு அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது.

அதேபோல, பேரழிவு ஆயுதங்களை ஈராக் கொண்டுள்ளது என்ற பொய்யின் இடைவிடாத பிரசாரம், ஈராக் மீது இராணுவ ஆக்கிரமிப்புக்கு வழிவகுத்தது. ஈராக்கில் இன்றுவரை பேரழிவு ஆயுதமேதும் அகப்படவில்லை. அதுபற்றி யாரும் வாய்திறக்கவுமில்லை. ஈராக் பாணியிலேயே லிபியாவிலும் பொய்கள் பரப்பப்பட்டு ஆட்சி மாற்றப்பட்டது.

உண்மைகளைத் தேடியறியும் அக்கறை இல்லையெனின் இத்தகைய பொய்ப் பிரசாரங்கட்குப் பின்னால் அலையாதிருப்பது நல்லது.

எல்லாக் கொலைகளும் இனப் படுகொலைகள் அல்ல. மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு, இனப் படுகொலை ஆகிய நான்கும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை.

இவ் வேறுபாடுகளை முதலில் அறிய வேண்டும். அதன்பின்னர் சிரியாவில் நடப்பது என்ன என்ற முடிவுக்கு வரலாம். எடுத்த எடுப்பிலேயே முடிந்த முடிவுக்கு வருவது நம்கே அழிவு தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post என் தம்பி விஜய் செஞ்சத ரஜினி செஞ்சாரா(வீடியோ) !!
Next post ஈராக்கில் ஹெலிகாப்டர் விபத்து அமெரிக்க வீரர்கள் 7 பேர் பலி(உலக செய்தி)!!