பேரம் பேசும் சக்தி இல்லாமல்போகும் தமிழர் அரசியல்(கட்டுரை)!!
சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமையே அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ளது என்பதைத் தற்கால அரசியல் நகர்வுகளில் அவதானிக்க முடிகின்றது.
கடந்து வந்த கடினமான பாதைகளைப் பொறுத்தாண்ட தமிழினம், தமக்கான நல்ல தீர்வு ஏற்படும் என்ற எண்ணவோட்டத்தில் இருந்த நிலையிலேயே, அண்மைய அரசியல் சலசலப்புகள், ஏமாற்றம் நிறைந்த களச் சூழலைப் பிரதிபலிக்கின்றன.
நல்லாட்சி அரசாங்கத்துக்காக இதயபூர்வமான ஒத்துழைப்பை வழங்கியிருந்த தமிழர்களின் அரசியல் பலமாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு விடயத்தில், இன்று அடுத்தகட்ட நகர்வைக் கொண்டு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதற்கான காரணங்களாக, இருவழித் தடைகளைப் பார்க்க முடிகின்றது. கடந்த உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் இனிவரும் காலங்களில், தமிழர்களுக்கான அரசியல் களம் அல்ல என்பதைத் தமிழ் மக்கள் எடுத்துக்காட்டியுள்ளதுடன், கூட்டமைப்புக்கான எச்சரிக்கையையும் விடுத்திருந்தமை கண்கூடு.
அத்துடன், யாரை நம்பி தென்னிலங்கை அரசாங்கத்துக்கு அதாவது, நல்லாட்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்திருந்ததோ, அந்த அரசாங்கம் ஆட்டம் காணும் நிலையிலுள்ளது. ஆட்சி அமைத்துள்ள கட்சிகளுக்கிடையிலான பூசல்கள், உருப்பெருத்து வருவது, பெரும் தடையாக உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள உட்பூசல்களும் சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நல்லாட்சிக்கான ஒத்துழைத்தல் என்ற கருத்தியலும் பெரும் விடயங்களாகக் காணப்படும் நிலையில், அரசியல் தீர்வுக்கான நகர்வு ஆமைவேகத்திலும் குறைவாகவே உள்ளது.
உள்ளூர் அதிகாரசபைக்கான தேர்தலில், சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஷவைத் தாம் மறந்துவிடவில்லை என எடுத்தியம்பி இருப்பதானது, இந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு அவரே சரியான நபர் அல்லது ஆட்சியாளர் என்ற கருத்தியலையும் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தமது வாக்கினால் நிரூபித்துள்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வென்பது, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏட்டுச் சுரைக்காயாகக் காணப்படும் நிலையில், தமிழர்கள் கோரும் அதி உச்ச அதிகாரப்பரவலாக்கல் கூட, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாலேயே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், தென்பகுதி மக்கள் அல்லது சிங்கள மக்கள் உள்ளனர்.
எனினும், தனக்கு ஆதரவான பெரும் தொகையான மக்களின் வெறுப்பைச் சம்பாதித்து, மஹிந்த ராஜபக்ஷ அந்தத் தீர்வை வழங்குவார் என நம்புவது ஏற்புடையதல்ல.
இந்நிலையில் பல தளங்களில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ள தற்போதைய அரசாங்கம், ஐ. நா வலியுறுத்திய நிலைமாறுகாலப் பொறிமுறையை, நடைமுறைப்படுத்துவதில் கூட, பெரும் இடையூறுகளையே எதிர்கொண்டுள்ளது.
நல்லிணக்கம் என்ற பெயரில் ஆரம்பித்த அத்தனை விடயங்களும் அதன் இலக்கைச் சென்றடைய முன்னரே முட்டி மோதி, சின்னாபின்னமாகி வருகின்றது.
அண்மைய காலங்களில் எற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கும் சிங்கள இனவாதிகளுக்கும் இடையிலான மோதல் சம்பவங்கள், இலங்கை தேசத்தில் மற்றுமோர் அசம்பாவிதங்களை பாரிய அளவில் தோற்றுவித்து விடுமோ என்பது தொடர்பில் பலரும் ஐயங்கொண்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்துக்குப் பின்னராக மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் எவ்வாறான பலனை அளித்துள்ளன என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைக்கு அப்பால், வவுனியா மாவட்டத்துக்குத் தொடர்ச்சியாகப் பெரும்பான்மை இனத்தவர்கள் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு வரும் நிலையில், சிங்களக் குடியேற்றங்கள் உக்கிரம் பெற்றுள்ளன.
இவ்வாறு குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்குத் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே மேடையேறி, காணி உறுதிப்பத்திரங்களையும் வழங்கியிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, மாவட்ட செயலகத்தில் பௌத்த விகாரை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முப்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்துக்கு இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித எதிர்ப்பையும் காட்டாமை நல்லாட்சிக்கான அதிகப்படியான விட்டுக்கொடுப்பையே காட்டி நிற்கின்றது.
இவ்வாறான நிலையிலேயே, அரசியல் தீர்வு விடயத்தில் தமிழர் தரப்பின் நியாயப்பாடுகளை எடுத்துச்செல்லக்கூடிய காலச்சூழலை, உருவாக்க முனைவது எவ்வாறு என்பது பெரும் வெற்றிடமாகவே உள்ளது.
நீண்டு செல்லும் தமிழர்களின் போராட்டங்களுக்கு எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் கேப்பாபிலவு மக்களும் ஒரு வருடம் கழிந்தும் வீதியோரத்தில் போராடும் நிலையே உள்ளது.
இவர்களுக்கான தீர்வை வழங்கும் எண்ணப்பாடு, சிங்களப் பெரும்பான்மை ஆட்சியாளர்களுக்கு உண்டா என்பதைப் பரிசீலனை செய்யவேண்டிய பொறுப்பு தமிழ் மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளது.
உள்ளூரதிகார சபைகளில் ஆட்சியமைப்பதில் இன்றுவரை இழுபறி நிலையை எதிர்கொண்டுள்ள தமிழ்க் கட்சிகள் வடக்கு, கிழக்கில் ஆக்கபூர்வமாக, ஒழுங்குநெறிமுறைகளுடன் சபைகளின் நிர்வாகத்தைக் கொண்டு செல்வார்களா என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
ஏனெனில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ள சபைகளில் தலைவர், உபதலைவர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்கள், கூட்டமைப்பின் தலைமையால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 51 சதவீதத்துக்கும் குறைவாகவே அக்கட்சி ஆசனங்களை பெற்றுள்ளமையால் அமர்வின் முதலாவது நாளன்று ஆட்சேபனையைத் தெரிவித்து இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத் தலைவர் உபதலைவர்களைத் தெரிவு செய்ய ஏனைய கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன.
இந்நிலையில் வலிகளைத் தாங்கிய மக்களின் நிலையுணர்ந்து செயற்படும் தன்மை, இதுவரை ஏற்படாத தமிழ்த் தலைமைகளாக எம்முன் அரசியல் செய்கின்றனர் என்ற ஆதங்கம் நிறைந்த சமூகமாகவே தமிழர்கள் உள்ளனர்.
பலவீனப்பட்ட தமிழ் அரசியலுக்குள் சிக்குண்டுள்ள தமிழர்கள், கடந்து வரப்போகும் நாட்களில் தாமாகவே மத்திய அரசாங்கத்துக்கான அதிகப்படியான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போராட்டங்களை முன்னெடுக்கும் வாய்ப்புகளே அதிகரித்துச் செல்கின்றன.
ஏனெனில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், ஐ. நா மனித உரிமை பேரவை அமர்வுகள் சூடுபிடித்துள்ள தருணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதைவெறும் கண் துடைப்புக்கான செயற்பாடாகவே பாதிக்கப்பட்ட தரப்பினர் பார்க்கும் நிலையில், அதற்குள், கடற்படையின் முக்கிய பொறுப்பிலிருந்த ஒருவரும் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இந்த அலுவலகம் தொடர்பான நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரைத் தலைவராகவும் அவர்களையே பெருமளவு அங்கத்தவர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்ட இந்த அலுவலகமானது நீண்ட இழுபறிக்கு பின்னர், அவசர அவசரமாகத் திறக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பிலும் சிந்திக்க வைக்கின்றது.
இது தொடர்பாக, தமிழ் அரசியலாளர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பதானது மக்களைத் தாமாகப் போராட்டத்துக்குத் தூண்டும் செயற்படாகவே பார்க்கத்தோன்றுகின்றது.
அவ்வாறான நிலையொன்று ஏற்படும் பட்சத்தில், வடக்கு, கிழக்கில் ஸ்திரமற்றுப்போகும் தமிர்களுக்கான அரசியல் தளமானது, மேலும் வலுவிழந்து செல்லும் என்பதில் ஐயப்பாடு இல்லை. அத்துடன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பயணம், பெரும் இடர்களைச் சந்திக்க நேரிடும்.
இச்சூழலில் கருத்தியலால் மோதுண்டு காலத்தை வீணடிக்கும் செயன்முறைகள் சிக்கண்டு போகும் அரசியலாளர்களாக அல்லாமல், இறுக்கமானதும் நம்பிக்கைக்குரியதுமான ஒன்றுமையினூடான பயணத்தை மேற்கொள்ளும் அரசியல் பாதையொன்றை தமிழ் அரசியலாளர்களும் அரசியல் கட்சிகளும் ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறில்லாத போது, எதிர்வரும் காலங்களில் தமிழர் தரப்பிலான பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்துவிடும்.
அதற்குமப்பால் இந்நிலை தொடருமானால், தேசியக்கட்சிகளின் ஆதிக்கம் வடக்கு, கிழக்கில் செல்வாக்கு செலுத்த தொடங்கும்.
இந்நிலையில், மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்குள் சிக்குண்டு, எதிர்காலம் தொடர்பில் ஏக்கத்துடன் இருக்கும் சிறுபான்மையினருக்கு ஏதுவான வழிவகைகளைத் தொலைத்தவர்களாகக் கூடாது.
தமிழ் அரசியலாளர்கள் அந்தச் சிக்கலுக்குள் சிக்குப்படாது தமது தந்திரோபாய அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ளும் பட்சத்திலேயே, அரசியல் தீர்வுக்கான அடுத்த நகர்வு சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
Average Rating