(மருத்துவம்)ஈஸி எக்ஸர்சைஸ்!!
ஃபிட்னஸுக்கான சில உடற்பயிற்சிகளை ஜிம்முக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து உடலை தகுதியாக்கிக் கொள்ள முடியும். நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய உடற்பயிற்சிகள் இவை…இந்த உடற்பயிற்சிக்கு எந்தக் கருவிகளும் தேவையில்லை என்பதால் இவற்றை Own body exercise என்றே பயிற்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
உடல் ஃபிட்டாக இருந்தால் அது வாழ்க்கைக்குக் கிடைத்த கூடுதல் போனஸ். உங்களை மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மனிதனாக அந்த ஃபிட்னஸ் மாற்றிவிடும். தோற்றத்திலும், எண்ணத்திலும் தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு, நோய்களுக்காக மருத்துவமனைக்குச் செல்வதையே குறைத்துவிடும்.
அப்படிப்பட்ட உடல் தகுதிக்கு இதய வலிமை, உடல்வலிமை மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மை இந்த மூன்றும் அடிப்படையான அம்சங்கள். இதற்கான பயிற்சிகளை வீட்டில் தொடங்கி பின்னர் சில சிறப்பு பயிற்சிகளை ஜிம்மில் செய்ய ஆரம்பிக்கலாம்.
ஏரோபிக் பயிற்சிகள் (Aerobic Excercises)
நடைப்பயிற்சி, ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற பயிற்சிகளை வேகமாகத்தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. உங்களால் எவ்வளவு முடிகிறதோ அந்த வேகத்தில் ஆரம்பிக்கலாம். இந்தப் பயிற்சிகளை செய்வதால் உடல் தசைகளை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மூட்டு எலும்புகளை வலுவாக்கவும் அல்லது ஏற்கனவே மூட்டு இணைப்புகளில் வலி, உடல் வலி இருப்பவர்கள் சைக்கிளிங் பயிற்சியை தாராளமாக செய்யலாம். எல்லா வயதினரும் எளிதாக செய்யக்கூடிய மற்றும் அடிப்படையான உடற்பயிற்சிகள் இவை.
வலிமை பயிற்சிகள் (Strength Exercises)
எல்லோருக்குமே ஜிம்முக்குப் போக நேரமோ, பொருளாதார சூழலோ இருக்காது. ஆனால், உடலை வலுவாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் எந்தவொரு சிறப்பு உபகரணங்கள் இல்லாமல் வீட்டிலேயே செய்யக் கூடிய Squats, Push-Ups, Sit-Ups, யோகா போன்ற Own Body பயிற்சிகளை சுவரை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து, எழுவது, பந்துகளை வைத்துச் செய்யும் பயிற்சிகள், நாற்காலியில் செய்யும் பயிற்சிகள் போன்றவற்றை செய்யலாம். உடல் தசைகளையும், நரம்புகளையும் ஒருங்கிணைப்பதால் முழு உடலுக்கும் வலு கிடைக்கும்.
நெகிழ்வுப் பயிற்சிகள் (Flexibility exercises)
இடுப்பு, தொடைப் பகுதிகள்தான் மேல் மற்றும் கீழ் உடலை இணைக்கும் பாலமாக இருப்பவை. இவை இறுக்கமடையும்போது முதுகுவலி, இடுப்புவலி, கீழ் இடுப்பு வலிகள் தோன்றும். உடலின் மேல், கீழ் பாகங்களின் நெகிழ்வுத் தன்மைக்காக தரையில் உட்கார்ந்து கால்களை நீட்டி மடக்கி செய்யும் Plank, மல்லாந்து படுத்து கால்களை மடக்கி செய்யும் யோகா பயிற்சிகள் போன்றவற்றைச் செய்யலாம். தோள் பட்டை, கழுத்து, கை, கால், விரல்கள் என அனைத்து இணைப்புகளுக்கும் நெகிழ்வு தரக்கூடிய பயிற்சிகளைச் செய்யலாம்.
தீவிரப் பயிற்சிகள் (Core Exercises)
அடிவயிற்றுத் தசைகள் இறுக்கம், புஜ வலிமைக்காக தம்பிள்ஸ், பளு தூக்குதல், க்ரஞ்சஸ் போன்ற கடுமையான பயிற்சிகளை இளைஞர்கள் வீட்டில் செய்யலாம். மேற்சொன்ன பயிற்சிகளை குறைந்த எண்ணிக்கைகளில் செய்ய ஆரம்பித்து போகப்போக எண்ணிக்கைகளை கூட்டி செய்ய வேண்டும். எடுத்த எடுப்பில் அதிகமாக செய்ய ஆரம்பித்தால் அதுவே உடல் வலியை உண்டாக்கக் கூடும்!
Average Rating