தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!!
தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வாலின் ஜாமீன் மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைமை செயலரை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. தலைமை செயலர் அளித்த புகாரின் பேரில் ஏஏபி எம்எல்ஏக்கள் அமனதுல்லா கான், மற்றும் பிரகாஷ் ஜர்வால் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த இருவரைது மனுவையும் மாஜிஸ்திரேட் நிதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் ஜர்வால் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், ஜர்வால் ஜாமீன் விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்வதோடு, தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப கடந்த மார்ச் 1ம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், ஜர்வால் மற்றும் அமனதுலலா கானின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஜர்வாலின் ஜாமீன் மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெல்லி போலீசார் நிலை அறிக்கையை அவர்களது சார்பில் வக்கீல் சஞ்சய் லாலு தாக்கல் செய்தனர். ஜர்வாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அவர், ‘தாக்குதல் காரணமாக தலைமை செயலருக்கு ஏற்பட்டுள்ள காயம் சிறியது தான் என மருத்துவஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஜர்வால் மீது ஜாமீனில் வெளிவர முடியாத இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, தாக்குதல் சம்பவம் தொடர்பாக முதல்வர் வீட்டில் இருந்து போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றியுள்ளனர்’ என தெரிவித்தார். மேலும், தாக்குதலுக்கு உள்ளானபோது, தாக்கியவரின் பெயர் குறித்து தலைமை செயலருக்கு தெரியாததால் ஆரம்பகட்ட எப்ஐஆரில் ஜர்வாலின் பெயர் இடம் பெறவில்லை என்பதையும் நீதிபதி முன்பாக தெரிவித்தார்.
இதனிடையே, தலைமை செயலர் சார்பில் ஆஜரான வக்கீல் சித்தார்த் லுத்ரா இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்மதார். அதில், சம்பவம் நடந்த அன்று வேண்டுமென்றே சிசிடிவி கேமரா இல்லாத அறைக்குள் தலைமை செயலரை அழைத்து இரண்டுபேருக்க நடுவில் அமர வைக்கப்பட்டார் என தெரிவித்தார். அதேசமயத்தில் ஜர்வாலின் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடுகையில், ஜர்வால் எந்தவொரு நிபந்தனையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார். நிபந்தனைகளை மீறி செயல்பட்டால் ஜாமீனை ரத்து செய்யலாம் என அபிடவிட் தாக்கல் செய்கிறோம் என தெரிவித்தார்.
வாதங்களுக்கு இடையே குறுக்கிட்ட நீதிபதி முக்தா குப்தா கூறுகையில், “முதல்வர், துணைமுதல்வர் முன்பாகவே ஒருவர் மீது தாக்கல் நடத்த முடியும் என்றால், மற்ற இடங்களில் நிலைமை என்னவாக இருக்கும்? சட்டம் ஒழுங்கு என்ன இருக்கிறது. இந்த விவகாரத்தில் நயார் தாக்கப்பட்டார் என்கிற தனிப்பட்ட நபர் பற்றி போகவிரும்பவில்லை. ஆனால், இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
பின்னர், ஜர்வாலின் முந்தைய கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கூறி ஜாமீன் மனு மீததான தீர்ப்பை ஒத்தி வைத்தார். இதனிடையே, நேற்று முன்தினம் மற்றொரு எம்எல்ஏ அமனதுல்லா கானும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது வரும் 12ம் தேதியன்று பதில் மனு தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating