ஆசிய கோப்பை: இலங்கை அணி மீண்டும் சாம்பியன்
மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையைக் கோட்டை விட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று கராச்சியில் நடந்த ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றது இந்திய அணி. இந்தியாவை நான்காவது முறை ஆசியக் கோப்பை இறுதியில் இலங்கை அணி தோற்கடித்துள்ளது. இந்திய அணியின் 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை இலங்கை தக்க வைத்துக் கொள்ள உதவினார் சுழற்பந்து வீச்சாளர் மெண்டிஸ். டாஸில் வென்ற இந்திய கேப்டன் டோணி முதலில் இலங்கையை பேட் செய்யச் சொன்னார். ஜெயசூர்யாவும், சங்கர்க்கராவும் இலங்கையின் இன்னிங்ஸைத் துவக்கினர். இரண்டாவது ஓவரில் சங்கர்க்கரா ரன் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஆனால் ஜெயசூர்யா மட்டும் அசரவில்லை. வெளுத்துக் கட்டினார். 56 ரன்களை அவர் எடுத்திருந்தபோது, ஒரு கடினமான கேட்சை கோட்டை விட்டார் ஆர்பி சிங். அதன் விளைவு, அவரது அடுத்த ஓவரிலேயே 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் என விளாசித் தள்ளினார் ஜெயசூர்யா. 76 பந்துகளில் தனது 27-வது சத்த்தைப் பூர்த்தி செய்தார் ஜெயசூர்யா.
ஆனால் அதன்பிறகு அவரால் அதே பாணியில் ஆட முடியவில்லை. களைத்துப் போன ஜெயசூர்யா, 125 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஷேவாக் பந்தில் இஷாந்துக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரையடுத்து தில்ஷன் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இருவரும்தான் இலங்கை அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர்.
டெய்ல் எண்டர்ஸ் எனப்படும் வாஸ் மற்றும் குலசேகரா இருவரும் அதிரடியாக 60 ரன்களுக்கு மேல் குவித்தனர்.
இந்தியத் தரப்பில் ஆர்பிசிங், இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பதான் இரு விக்கெட்களை வீழ்த்தினார்.
மிரட்டலான துவக்கம்
இந்திய அணியின் துவக்கம் மிரட்டலாக இருந்த்து. ஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாய் அமைந்த்து. வெறும் 26 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ஷேவாக். ஆனால் மறுமுனையிமல் கம்பீர் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அஜந்தா மெண்டிஸ் பந்து வீச்சைத் துவக்கியதுமே ஆட்டத்தின் போக்கு அடியோடு மாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகதளைப் பறிகொடுத்த இந்திய அணி, 50 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாமல் 39.3 வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி மீண்டும் ஆசியக் கோப்பை சாம்பியனானது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகள் அஜந்தா மெண்டிஸூக்கு வழங்கப்பட்டன.
இந்திய அணி 4 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் அதெல்லாம் பதிமூன்று வருடங்களுக்கு முந்தைய கதை. அதன்பிறகு தொடர்ந்து இலங்கை, பாகிஸ்தான் அணிகள்தான் இந்தக் கோப்பையை வென்று வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக இலங்கைக்கு எதிரான ஒரு இறுதிப் போட்டியில் கூட இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating