யார் ஆட்சி அமைத்தாலும் வரப்போவது நல்ல காலமல்ல!!

Read Time:18 Minute, 41 Second

கடந்த 10 ஆம் திகதி, முதன் முறையாக (ஓரு சபையைத் தவிர) நாடளாவிய ரீதியில் 340 சபைகளுக்கு, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகளை அடுத்து, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. பல்வேறுபட்ட குழுக்கள் புதிய கூட்டணிகளை அமைத்து, புதிய அரசாங்கமொன்றை அமைக்க முயற்சி செய்வதாகக் கடந்த சில நாட்களில் வெளிவந்த செய்திகள் கூறின.

ஒரு புறம் ‘நல்லாட்சி’ அரசாங்கம் தொடரும் என, குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் சிலர் கூறினர். மற்றும் சிலர், ஐ.தே.க தனியாக ஆட்சி அமைக்கப் போகிறது எனக் கூறினர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் செய்திகள் பரவின.

மைத்திரியின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, சிறுபான்மை அரசாங்கமொன்றை அமைக்க, அமைச்சுப் பொறுப்பு எதையும் ஏற்காது, மஹிந்த அணி உதவி செய்வதாக உடன்பாடு காணப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி கூறியது. அந்த அரசாங்கத்தின் பிரதமராகப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படப் போகிறார் எனவும் கூறப்பட்டது.

அதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மைத்திரி, ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுக் கொண்டதாகச் சிலர் கூறுகின்றனர். பிரதமர் ரணிலைப் பதவி நீக்கம் செய்வதற்காகச் சட்டத்தில் இடம் இருக்கிறதா என ஜனாதிபதி சட்டமா அதிபரின் கருத்தைக் கேட்டதாகவும் செய்திகள் அடிபட்டன.

அத்தோடு, ஜனாதிபதி, பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியுமா, முடியாதா என்று பலர் அவரவரது அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ப, அரசியல் விமர்சனங்களை வெளியிட்டார்கள்.

சில ஊடக நிறுவனங்கள் உட்பட, ரணில் விரோதிகளின் சட்ட விளக்கங்களின் படி, ஜனாதிபதி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால், ரணில் ஆதரவாளர்கள், 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் சுட்டிக் காட்டி, பிரதமரை எவ்வகையிலும் பதவி நீக்கம் செய்ய, ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினர்.

தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என மஹிந்த ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். 2015 ஆம் ஆண்டு, அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை, அரசாங்கம் இந்தத் தேர்தல் முடிவுகளோடு இழந்துவிட்டதாக அவர்கள் வாதிட்டனர்.

ஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்தில் உள்ள இரு பிரதான கட்சிகள், அதாவது, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ ல.சு.க ஆகிய இரண்டு கட்சிகளும் மஹிந்த தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட, அதிகப்படியான வாக்குகளை பெற்றுள்ளமையாகும்.

ஐ.தே.க இந்தத் தேர்தலில் பாரிய பின்னடைவை அடைந்துள்ளமை உண்மை தான். ஆனால், அரசாங்கம் என்பது ஐ.தே.க அல்ல. கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், ஐ.தே.க மற்றும் ஸ்ரீ ல.சு.க ஆகிய இரண்டுமே இன்னமும் அரசாங்கமாகக் கருதப்படுகின்றன.

இந்த இரண்டு கட்சிகளும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளன. பொதுஜன பெரமுன 49 இலட்சம் வாக்குகளையே பெற்றுள்ளது. அவ்வாறு இருக்க, பொதுஜன பெரமுன அரசாங்கம் பதவி விலக வேண்டும் எனக் கூறுவது அபத்தமாகும். அதை அவர்கள் உணர்ந்ததனாலோ என்னவோ, இப்போது அரசாங்கம் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற கோஷம் கேட்பதில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற புதிய தேர்தல் முறையின் காரணமாகவே, பொதுஜன பெரமு​னவை விட வாக்குகளைப் பெற்ற அரசாங்கத்தின் கட்சிகள் படுதோல்வியடைந்தவை போலவும் பொதுஜன பெரமுன மகத்தான வெற்றியைப் பெற்ற கட்சியைப் போலவும் காட்சியளிக்கின்றன.

ஏனெனில், இறுதியில் விகிதாசார முறையில், உள்ளூராட்சி மன்றங்களின் ஆசனங்களைப் பகிர்ந்தளிப்பதைப் பற்றித்தான், புதிய தேர்தல் முறையை வகுத்தவர்கள் சிந்தித்து இருக்கிறார்களேயல்லாமல், சபைகளும் விகிதாசாரப்படி கட்சிகளிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை.

அவ்வாறு நினைத்து இருந்தாலும், சகல பிரச்சினைகளையும் தீர்க்கும் வகையிலான தேர்தல் முறையொன்றை வகுப்பதானது முடியாத விடயமாகும்.

அவ்வாறான குறையே இல்லாத தேர்தல் முறையொன்று உலகில் இல்லை. இருந்த போதிலும், இம்முறை தேர்தல் முறையில் காணப்படும் குளறுபடிகள் சாதாரணமானவையல்ல.

முதலாவதாக கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் சபைகளுக்கும் இடையே விகிதாசார ரீதியில் காணப்படும் வேறுபாடு, தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக மாற்றிக் காட்டுகிறது. 49 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன, 239 சபைகளின் கட்டுப்பாட்டை பெறும்போது, 36 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க வெறும் 41 சபைகளையே பெற்றுள்ளது.

விகிதாசாரப்படி, ஐ.தே.க சுமார் 175 சபைகளை பெற்றிருக்க வேண்டும். 15 இலட்சம் வாக்குகளைப் பெற்ற, ஸ்ரீ ல.சு.க மற்றும் ஐ.ம.சு.மு 70 சபைகளைப் பெற வேண்டும். ஆனால், 10 சபைகளையே அவ்விரண்டு கட்சிகளும் பெற்றுள்ளன.

இவ்வளவு சபைகள், நாட்டில் இல்லையே எனச் சிலர் கேட்கலாம். உண்மைதான். ஆனால், விகிதாசாரத் தேர்தல் முறையென்றால், அவ்வாறு விகிதாசாரப்படி சபைகள் பிரிந்து செல்ல வேண்டும் என ஒருவர் எதிர்ப்பார்ப்பது நியாயமே.

ஆனால், கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் விகிதாசாரப்படி, அக்கட்சிகள் பெற்ற ஆசனங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, இந்தத் தேர்தல்களில் வெற்றியீட்டிய கட்சியாகக் கருதப்படும் பொதுஜன பெரமுனவைவிடக் கூடுதலாக, அரசாங்கத்தில் உள்ள இரு பிரதான கட்சிகளும் ஆசனங்களைப் பெற்றுள்ளன.

அதாவது, பொதுஜன பெரமுன 3,369 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அரசாங்கத்திலுள்ள ஐ.தே.கவும் ஸ்ரீ ல.சு.க மற்றும் ஐ.ம.சு.மு ஆகிய கட்சிகள் மொத்தமாக 3,417 ஆசனங்களைப் பெற்றுள்ளன. ஆனால், ஒவ்வொரு கட்சியும் பெற்ற சபைகளின் எண்ணிக்கையே பொது மக்களின் பார்வையில் வெற்றியாகக் கருதப்படுகிறது. அதனாலேயே தற்போது அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது.

பொதுஜன பெரமு​னவை விட வாக்குகளையும் ஆசனங்களையும் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பெற்ற போதிலும், ஐ.தே.க அடைந்துள்ள பின்னடைவை மூடி மறைக்க முடியாது. அக்கட்சி, கடந்த பொதுத் தேர்தலின் போது, 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், இம்முறை அது 36 இலட்சமாகக் குறைந்துள்ளது.

பொதுத் தேர்தலின் போது, மஹிந்தவின் ஆட்களோடு இணைந்து போட்டியிட்ட மைத்திரியின் ஆட்கள், இம்முறை தனியாகப் போட்டியிட்டுப் பெற்ற 15 இலட்சம் வாக்குகளாலேயே ஆளும் கட்சியின் மானம் காப்பாற்றப்பட்டது.

பெண் உறுப்பினர்கள் பற்றிய சட்டமும் இம்முறை பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. அதற்குக் காரணம், சட்டத்தின்படி கட்சிகள், பெண் வேட்பாளர்களைப் போட்டியில் நிறுத்திய போதிலும், வாக்காளர்கள் அவர்களைத் தெரிவு செய்வதில், அவ்வளவு ஆர்வம் காட்டாமையாகும். இதன் காரணமாகப் பல உள்ளூராட்சி சபைகளுக்குப் போட்டியிட்டு வெற்றியீட்டிய கட்சிகள் சார்பாக அனேகமாக ஆண்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், ஒவ்வொரு சபையிலும் பெண்கள் 25 சதவீதத்தினர் இருக்க வேண்டும் என்பது சட்டம். பல சபைகளில் வெற்றி பெற்ற கட்சிகள், வட்டாரங்கள் வாரியாகவே தமக்கு விகிதாசாரப்படி கிடைக்க வேண்டிய ஆசனங்களைப் பெற்றுள்ளன.

எனவே, 25 சதவீதப் பெண் பிரதிநிதித்துவத்துக்காக, அக்கட்சிகளின் இரண்டாம் பட்டியலில் இருந்து உறுப்பினர்களை நியமிக்க முடியாது. இதன் காரணமாகத் தோல்வியடைந்த கட்சிகளே, 25 சதவீதம் நிறைவேறும் வரை, பெண் உறுப்பினர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

ஒரு சபையில், வட்டாரங்களுக்கான தேர்தலில், தோல்வியடைந்த ஒரு கட்சிக்கு, இரண்டாவது பட்டியல் மூலமாக, ஏழு ஆசனங்கள் கிடைத்த போதிலும், அந்த அத்தனை ஆசனங்களுக்கும் பெண்களையே நியமிக்க வேண்டியுள்ளது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார். இது நியாயம் இல்லை என்றும், எனவே தேர்தல் முறை திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.

அதேவேளை, அவ்வாறு இரண்டாவது பட்டியல் மூலம் நியமிக்கப்படும் பெண்கள் யார் என்பதைக் கட்சித் தலைவர்களும் அந்தந்தச் சபைகளுக்குக் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட குழுக்களின் தலைவர்களு​மே முடிவு செய்வர்.

இது பல ஊழல்களுக்கு மட்டுமல்லாது பல கலாசார சீர்கேடுகளுக்கும் காரணமாகலாம். எனவே, தேசப்பிரிய கூறுவதைப் போல், சட்டம் திருத்தப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு சட்டம் திருத்தப்பட்டாலும் அது எதிர்காலத் தேர்தலுக்குத்தான் பொருந்தும். ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலுக்குப் பொருந்தாது.

எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் முடிவுகள், நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளதே இப்போது நாடு எதிர்நோக்கியிருக்கும் பெரும் பிரச்சினையாகும்.

ஜனாதிபதி, ஐ.தே.கவுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தை நடத்திச் செல்ல விரும்புவதாக இருந்தால், எவரும் புதிய பிரதமர்களைத் தேடவோ, ஐ.தே.க தனியாக ஆட்சி நடத்துவதாகக் கூறவோ தேவையில்லை.

ஜனாதிபதியும் பிரதமரும் பழையபடி ஆட்சியை நடத்திச் செல்லலாம். ஆனால், ஜனாதிபதி அதை, ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

கடந்த காலங்களில், ஐ.தே.க ஜனாதிபதியைப் புறக்கணித்துப் பல முடிவுகளை எடுத்திருந்தது. அதுவே, ஜனாதிபதி தம்மைப் பதவியில் அமர்த்திய, ஐ.தே.கவை வெறுக்கக் காரணமாகும் எனக் கூறப்படுகிறது.

இது, ஐ.தே.க இதற்கு முன்னர், சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலத்திலும் நடந்து கொண்ட முறையாகும். அக்காலத்தில் புலிகளுடனான போர் நிறுத்த உடன்பாட்டையும் அரசமைப்பின் பிரகாரம் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஜனாதிபதியைப் புறக்கணித்தே செய்து கொள்ளப்பட்டது.

அக்காலத்திலும், ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டு, ரவி கருணாநாயக்க போன்ற சில ஐ.தே.க தலைவர்கள் ஒருவித மமதையுடனேயே செயற்பட்டனர். அன்று, சந்திரிகா, ஐ.தே.க அரசாங்கத்தை அதன் பதவிக் காலம் முடிவடையும் முன் கலைக்க, அதுவே காரணமாக அமைந்தது.

அண்மையிலும் ஓரினச் சேர்க்கைக்கு இடமளிக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயற்சித்தமை, மனித உரிமைப் பிரச்சினைகளை விசாரிக்கச் சர்வதேச நீதிபதிகளை அழைப்பதென சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்தமை போன்ற பல விடயங்களுக்கு ஜனாதிபதி தமது அதிருப்தியைத் தெரிவித்து இருந்தார்.

பிரித்தானியாவில் இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு அதிகாரி, அங்கு புலிகளுக்கு ஆதரவாக நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, கழுத்தை அறுப்பதைப் போல், சைகை காட்டியதற்காக, வெளிநாட்டு அமைச்சு அவரது சேவையை இடைநிறுத்தியது.

ஆனால், அவர் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் கீழ் செயற்படும் அதிகாரியாக இருந்தும், ஜனாதிபதி அந்த விடயத்தின் போது புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான இந்த முறுகல் நிலை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரட்டிப்பு வெற்றியாக அமைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வரை, மைத்திரி ஆதரவாளர்கள் மஹிந்தவின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியுமா என்றும் ஆராய்ந்து வந்தார்கள்.

இந்த விடயத்தில், மஹிந்த ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதில்லை என்றும் அவர்கள் அரசாங்கத்துக்கு வெளியில் இருந்தே ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அவர்களது ஆதரவுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டு இருந்தால், அவர்களின் சொல்படியே மைத்திரி நடந்து கொள்ள வேண்டியிருக்கும்.

மைத்திரியைப் பொறுத்தவரை, அது இப்போதைய நிலைக்கு சமமான நிலைமையையே தோற்றுவிக்கும். அப்போது, ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட அரசமைப்புச் சீரத்திருத்தப் பணிகள் நின்றுவிடும். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் அந்த விடயத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளும் அத்தோடு முடிவுக்கு வந்துவிடும்.

தற்போதைய நிலையில், ஐ.தே.கவுடனேயே ஆட்சி அமைக்க ஜனாதிபதி விரும்பினாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்த் தோல்வியால் கலக்கமடைந்திருக்கும் ஐ.தே.கவும் நல்லிணக்கம், அரசமைப்பு மாற்றம் போன்றவற்றைக் கைவிட்டு, சிங்கள பௌத்த தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்த முயற்சிக்கலாம்.

எனவே இன்றைய நிலையில், யார் ஆட்சி அமைத்தாலும் நாட்டுக்கு, குறிப்பாக சிறுபான்மை மக்களுக்குத் தோல்வியே கிடைக்கப் போகிறது என்றும் ஊகிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2 ஆண்டுகளில் 20 முட்டைகள் இட்ட சிறுவன்!!
Next post அவசியம் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்!!