சர்வகட்சி மாநாட்டில் தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு!!

Read Time:18 Minute, 13 Second

அமிர்தலிங்கத்தின் அழுத்தமான நிலைப்பாடு

சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய அமிர்தலிங்கம், முதலில், இந்நாட்டிலிலுள்ள தமிழர்கள், ஒரு தனித்தேசம் என்பதை நிறுவினார்.

அதைத் தொடர்ந்து, இனப்பிரச்சினையின் வரலாறு, அதன் திருப்புமுனைகள், அதன் சமகால அமைவு என்பவற்றை மேற்கோள்காட்டி, தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுற எடுத்துரைக்கும், முழுமையான உரையொன்றை ஆற்றியிருந்தார்.

ஆயுதப் போராட்டம் பற்றிய அவரது நிலைப்பாடு, அறுதித் தெளிவுடன் இல்லாத போதும், அதைத் தடுப்பது அரசாங்கத்தினதும், பெரும்பான்மையினக் கட்சிகளினதும் கையில்தான் இருக்கிறது என்பதை, அவர் எடுத்துரைத்திருந்தார்.

அதேவேளை, 1976ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் படியான, தன்னுடைய கட்சியின் நிலைப்பாட்டுக்கும், அதனடிப்படையில் தமிழ் மக்கள், 1977இல் தந்திருந்த மாபெரும் மக்களாணைக்கும் குந்தகம் வரமுடியாதபடி, தனது பேச்சின் இறுதியை வடிவமைத்திருந்த அமிர்தலிங்கம், அதைப் பின்வருமாறு பதிவு செய்தார்.

“அதிமேதகு ஜனாதிபதி அவர்கள், தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது போல, இந்த முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படுமானால், வன்முறை நடவடிக்கைகளும் அதற்கான ஆதரவும் அடங்கிப்போய்விடும். வன்முறையைத் தடுப்பதற்கு வேறு வழிகளில்லை. வணக்கத்துக்குரிய மதகுருமார் மற்றும் சிலர் தங்களுடைய பேச்சுகளில் குறிப்பிட்ட, இன்னும் பல்வேறு விடயங்கள் பற்றிக் கருத்துரைக்க, எனக்கு நேரம் போதாதுள்ளது; என்னுடைய சகாக்கள் சிலர், அந்த விடயங்கள் பற்றிக் கருத்துரைக்கக்கூடும். இறுதியாக நான் சொல்ல வருவது இதைத்தான்: இந்த நாடு, மேலும் வன்முறையில் மூழ்கடிக்கப்படப் போகிறதா, இல்லையா; இந்த நாடு, தன்னுடைய ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்ளப் போகிறதா, இல்லையா; இந்த நாடு, பொருளாதார ரீதியில் முன்னகரப் போகிறதா, இல்லையா என்பதெல்லாம், மாநாட்டின் கலந்துரையாடல்களின் முடிவில்தான் தங்கியுள்ளது. நீதி மற்றும் நியாயத்தின் அடிப்படையில், தீர்வொன்றை எட்டுவதற்குப் பணியாற்றுமாறு, நான் அனைவரிடத்திலும் வேண்டிக் கொள்கிறேன்” என்று, தனது பேச்சை அமிர்தலிங்கம் நிறைவு செய்தார்.

இதன் மூலம், அவர் சொன்ன விடயமானது, தமிழர் தரப்பு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதும் கொள்ளாததும் அரசாங்கத்தினதும் பெரும்பான்மையினக் கட்சிகளினதும் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தரப்போகும் தீர்வில்தான், பிரிவினையை விட்டுத் தமிழர் தரப்பு இறங்கி வருவது தங்கியிருக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி.

இலங்கை நாடும் அதற்குட்பட்ட தேசங்களும்

1956இல் தனிச்சிங்களச் சட்டத்தின் விளைவாக எழுந்தது, ஒரு மொழிப்பிரச்சினை; ஆகவே, தமிழ்மொழிக்குச் சம அந்தஸ்து வழங்குவதன் மூலம், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்று கருதும் சிலர், இன்றும் இருக்கவே செய்கிறார்கள்.

முதலாவது விடயம், 1956இலிருந்து இன்று ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னும், அரசமைப்பில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழி என்று குறிப்பிட்ட பின்னரும், தமிழ்மொழியின் அமுலாக்கம் என்பதில், யதார்த்தத்தில் எப்படியிருக்கிறது என்று அனைவரும் அறிவர்.

அதுநிற்க, 1956இல் தனிச்சிங்களச் சட்டத்தினூடாக ஏற்பட்டது, மொழிப்பிரச்சினை என்ற பொருள்கோடலே அடிப்படையில் தவறானது. ஏனென்றால், சிங்கள மொழியை மட்டும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாக்கியதன் அடிப்படை, இலங்கைத் தேசமானது ‘சிங்களத் தேசம்’ என்ற கருத்தியல்தான்.

1972இல் உருவான முதலாவது குடியரசு அரசமைப்பில், சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டதுடன், பௌத்த மதத்துக்கு, முன்னுரிமை வழங்கியமையுடன், இலங்கைத் தேசமானது ‘சிங்கள-பௌத்த தேசம்’ என்ற கருத்தியலாக உருப்பெறுகிறது.

அப்படியானால், இந்த அடையாளங்களுக்கு உட்படாது வேறுபட்டு, வரலாற்றுக் காலத்திலிருந்து இந்த நாட்டில் வாழ்கிற மக்கள், எந்தத் தேசத்துக்கு உரியவர்கள் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
ஆகவே, தனித்த ‘தமிழ்த்தேசம்’ என்ற கருத்தியலின் உருவாக்கம், எவ்வாறு இருப்பினும், அதற்கு அங்கிகாரமும் பலமும் ‘சிங்கள-பௌத்த தேச’ கருத்தியலால்தான் வழங்கப்பட்டது என்பதை மறுக்கமுடியாது.

சுருங்கக் கூறின், இலங்கை என்ற பூகோள நிலப்பரப்பினுள் வாழும் மக்களில் பெரும்பான்மையினர், தம்மை ஒரு தனித்த அடையாளத்தின் கீழ் ஒன்றுபடுத்தி, அதைத் தமது தேசத்தின் அடையாளமாகப் பிரகடனப்படுத்தியதன் ஊடாக, அந்த அடையாளத்துக்கு உட்படாத சிறுபான்மையினரை, அவர்கள் வேறானவர்கள் என்று ஒதுக்கியுள்ளனர்.

இந்நாட்டில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரின் தேசத்தவர்கள் இல்லாதவர்களாயின், அவர்கள் வேறொரு தேசத்தவர்கள் என்றே பொருளாகிறது. (இங்கு அரசு, தேசம், நாடு என்பவை, அவற்றின் தொழில்நுட்ப அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்க).

மேற்கின் மறுமலர்ச்சியைத் தொடர்ந்து, எழுந்த ‘தேசிய அரசுகளின்’ அடிப்படையை,கொலனித்துவ விடுதலையில் பின்னர், இலங்கை சுவீகரிக்க விரும்பியிருந்தால், அதன்படி ‘இலங்கைத் தேசம்’ என்ற புதிய கருத்தியலானது, இலங்கை என்ற நிலப்பரப்பில் வாழ்கின்ற அனைவரையும் உள்ளிணைத்து, சமத்துவத்துடன் பிரான்ஸ் தேசத்தைப் போல, கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாறாக, தமது தேச அடையாளங்கள் ஆதிக்கம் செலுத்தும் ‘இலங்கைத் தேசம்’ என்ற கருத்தியலை பெரும்பான்மையினர் நிறுவுவதானது, அந்த அடையாளங்களுக்கு உட்படாதவர்களை விலக்கி வைப்பதாகிறது.

ஆகவே, ‘இலங்கைத் தேசம்’ அல்லது ‘ஒரு தேசம்’ என்ற கருத்தியல், எண்ணுவதற்கு அற்புதமாக இருந்தாலும், இலங்கையின் வரலாறு மற்றும் நடைமுறை அரசியலுடன் அது இணைவொத்தது அற்றதாகவே இருக்கின்றது.

ஆகவே, ஒரு பன்மைத் தேச அரசு என்பதுதான் இலங்கைக்கு யதார்த்தம். தமிழ்மக்கள், சுயநிர்ணய உரிமையுள்ள தனித்த தேசம் என்று, அமிர்தலிங்கம் நிறுவியதன் முக்கியத்துவம் இதுதான். தொழில்நுட்ப ரீதியில் இது, பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் என்ற பிரச்சினை அல்ல; இது பெரும்பான்மைத் தேசம், சிறுபான்மைத் தேசத்தை அடக்குமுறைக்குள்ளாக்கும் பிரச்சினை.

இதை, அமைதி வழியில் தீர்க்க முயலாதுவிட்டால், சுயநிர்ணய உரிமையுள்ள சிறுபான்மைத் தேசத்துக்கு, அந்தச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், பிரிவினையைக் கோரமுடியும் என்பதுதான் அமிர்தலிங்கத்தின் உரையினுள் உட்பொதிந்துள்ள சூட்சுமமாகக் கருதலாம்.

குமாரின் தெளிவான நிலைப்பாடு

அமிர்தலிங்கத்தின் உரையைத் தொடர்ந்து, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளரான குமார் பொன்னம்பலம், தனது உரையை ஆற்றினார்.

சர்வகட்சி மாநாட்டில் உரையாற்றிய பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், மாவட்ட அபிவிருத்திச் சபைகளைவிட, மேம்பட்ட தீர்வு வழங்க முடியாது என்ற கருத்தையே பதிவு செய்திருந்தார்கள்.குறிப்பாக, ஆரம்பத்திலிருந்தே பௌத்த பிக்குகளின் உறுதியான நிலைப்பாடாக இது இருந்தது.

குமார் பொன்னம்பலமும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. “மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின்போது, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை ஆதரிப்பதானது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அரசாங்கம் தீர்க்க முயற்சி எடுக்கிறது என்ற மாயத்தோற்றத்தையே உருவாக்கும்” என்று குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அதேதேர்தல் காலத்தில், தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த
ஆர்.ஈ. ஆனந்தராஜா, “மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம், தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையுமில்லை” என்று பேசியிருந்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, மாவட்ட அபிவிருத்திச் சபைகளைத் தீர்வுக்கு அடிப்படையாக ஏற்றுக்கொண்டு, முயலத் தயாராக இருந்தநிலை இருந்தது.

ஆனால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தீர்வல்ல என்பதில் உறுதியாக இருந்தது. இதன் அடிப்படையில்தான், சர்வகட்சி மாநாட்டில் குமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையும் இருந்தது. சொல்ல வேண்டியதை, குமார் பொன்னம்பலம் நேரடியாகவே சொன்னார்.

“தமிழ் மக்களின் கோரிக்கை என்பது தனி அரசுதான்; ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் இந்தக் கோரிக்கையின் பின்னால்தான் நிற்கிறார்கள்” என்று, சர்வகட்சி மாநாட்டில் பதிவு செய்த குமார் பொன்னம்பலம், “ஆனால், தமிழ் மக்களைச் சமமான பங்காளிகளாக ஏற்றுக் கொண்டு, அவர்கள் பாதுகாப்புடனும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்படுமானால், தமிழ் மக்கள், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழத் தயார்” என்றார்.

அனெக்ஷர் ‘சி’ க்கான ஆதரவு

இதைத் தொடர்ந்து உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், ஜே.ஆர் அமைச்சரவையின் அங்கத்தவருமான சௌமியமூர்த்தி தொண்டமான், இனப்பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்ததுடன், ஜே.ஆருக்கும் – பார்த்தசாரதிக்கும் பிறந்து, ஜே.ஆரினால் அநாதையாக்கப்பட்டு, தன்னால் தத்தெடுக்கப்பட்ட அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வாக முன்வைத்தார்.

இதையொத்த கருத்தையே, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அப்துல் அஸீஸும் பதிவு செய்திருந்தார்.

அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளைச் சிறுபான்மையினக் கட்சிகள் ஆதரித்து நின்ற அதேநேரத்தில், லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளிடமும் அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகள் தொடர்பில் ஆதரவான போக்குக் காணக்கிடைத்தது.

அகில இலங்கை முஸ்லிம் லீக்கும் பிராந்தியச் சபைகள் அமைக்கப்படுவதற்கு ஆதரவாகவே இருந்தது. பார்த்தசாரதியோடு இணங்கிய அனெக்ஷர் ‘சி’ முன்மொழிவுகளை, ஜே.ஆர் நிறைவேற்ற எண்ணியிருந்தால், இதைவிட ஏதுவான சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.

ஆனால், ஜே.ஆரின் எண்ணம் அதுவாக இருக்கவில்லை என்பதை அவரது நடவடிக்கைகளே எடுத்துரைப்பதாக இருந்தன. ஜே.ஆர், மதகுருக்களை, குறிப்பாக பௌத்த பிக்குகளை, சர்வ கட்சி மாநாட்டுக்குள் உள்ளீர்த்தது, தீர்வை எட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கத்தான் என்ற விமர்சனங்களை வலுப்படுத்தும் வகையில்தான், வல்பொல ராஹுல தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகளின், அனெக்ஷர் ‘சி’ க்கான எதிர்ப்புக் காணப்பட்டது.

ஜே.ஆரின் அடுத்த நடவடிக்கை

பேராசிரியர் ஏ.ஜே.வில்சன் எழுதிய, ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு பற்றிய நூலொன்றில், ‘சர்வகட்சி மாநாட்டை, ஜே.ஆர் தாமதப்படுத்தும் கருவியாகவே பயன்படுத்தினார்’ என்று பதிவுசெய்கிறார்.

அதாவது, இராணுவ ரீதியாகத் தன்னைப் பலமாக்கும் வரை, காலம்கடத்தும் ஒரு வழியாக, சர்வகட்சி மாநாட்டைக் கையாண்டார் என்கிறார் பேராசிரியர் வில்சன். ஜே.ஆரின் அடுத்த காய்நகர்த்தல், இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்தது.

1984 ஜனவரி 20ஆம் திகதி, மாநாட்டின் ஏழாவது நாளன்று, “மாநாடு இரண்டு குழுக்களாகப் பிரிந்து, ஒரு குழு அரசாங்க முறைமை பற்றியும், மற்றைய குழு பயங்கரவாத ஒழிப்புப் பற்றியும் ஆராயும்” என்று ஜே.ஆர் அறிவித்ததுடன், குறித்த குழுக்கள் எவ்வாறு இயங்கும் என்று, சர்வகட்சி மாநாட்டின் அங்கத்தவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சர்வகட்சி மாநாடு, இரு குழுக்களாகப் பிரிந்து, கலந்துரையாடலில் ஈடுபட்டது. சில நாட்கள், இந்தக் குழுக்களின் கலந்துரையாடல் தொடர்ந்த பின்னர், இரண்டு குழுக்களும் இணைந்து கலந்துரையாட வேண்டும் என்று ஜே.ஆர் அறிவித்தார்.

இந்த இணைந்த குழுவில், கட்சிப் பிரதிநிதிகள், மதகுருமார்கள் ஆகியோருக்கு மேலதிகமாக அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்த இணைந்த குழுவானது, தன்னுடைய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அரசாங்க முறை மற்றும் பயங்கரவாத ஒழிப்புப் பற்றிய தமது பார்வையை, அறிக்கையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதோடு, அறிக்கையிடுவதற்கான வழிகாட்டும் வரைமுறைகளும் வழங்கப்பட்டன.

இந்தக் குழுக்களும், அதன் அறிக்கைகளுக்கு வழங்கப்பட்ட வரைமுறைகளும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றிய வாதத்தை நீர்த்துப்போகச் செய்ததுடன், இந்தச் சர்வகட்சி மாநாடு பற்றிய ஐயத்தையும் நம்பிக்கையீனத்தையும் தமிழ் மக்களிடையேயும் தமிழ்த் தலைமைகளிடையேயும் ஏற்படுத்துவதாக அமைந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!!
Next post வீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்!