தாய்நாட்டுக்கு திரும்ப மாட்டேன் என்ற சபதத்துடன் நேபாளத்தை விட்டு வெளியேறினார் முன்னாள் இளவரசர்
நேபாளத்தின் முன்னாள் முடிக்குரிய இளவரசர் பாரஸ் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இங்கு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளமையால் கோபமடைந்த பாரஸ், என்னையும் என் குடும்பத்தையும் அவமதித்த நாட்டுக்கு இனிமேல் திரும்ப மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் 240 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த மன்னராட்சியை அந்த நாட்டு பாராளுமன்றம் அகற்றியது. மன்னரும் அவரது குடும்பத்தினரும் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால், பட்டத்து இளவரசராக இருந்த பாரஸ், (மன்னர் கயனேந்திராவின் மகன்) ஆட்சியாளர்கள் மீது கோபமும் ஆத்திரமும் கொண்டார். அந்த ஆத்திரத்தில் தாய்நாட்டின் மீதே கோபம் கொண்ட பாரஸ் நாட்டை விட்டு வெளியேறினார். 37 வயதான அவர் நேற்று முன்தினம் சிங்கப்பூருக்கு புறப்பட்டார். அவரது தந்தையும் முடிஇழந்த மன்னருமான கயனேந்திரா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ஆனால், அதை பாரஸ் செவிமடுக்கவில்லை. அவருக்கு தந்தை கஜனேந்திரா, மற்றும் அரசியல் கட்சிகள் மீது மட்டும் அல்லாமல் தன் குடும்பத்தினர் மீதே வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அந்த வெறுப்பில் தான் அவர் நாட்டை விட்டு வெளியேறினார். அவரையும் அவர் குடும்பத்தையும் அவமானப் படுத்திய அந்த நாட்டுக்கு இனி திரும்ப மாட்டேன் என்று அவர் சபதம் எடுத்துள்ளார். ஆத்திரத்தில் என்ன செய்வது என்பது தெரியாமல், செயற்படக்கூடிய குணம் கொண்ட அவர், குணத்தினாலேயே மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தவர். கடந்த 2001 இல் அரண்மனையில் நடந்த படுகொலையில் உயிர் தப்பியவர்.
2005 ஆம் ஆண்டு இராணுவத்தின் உதவியுடன் மன்னர் கயனேந்திரா ஆட்சியை கைப்பற்றியது தான் மன்னராட்சி மீது வெறுப்பு ஏற்படக்காரணமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தான் மன்னராட்சி இரத்துச் செய்யப்பட்டது. இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்து தனக்குரிய ஆளும் உரிமையை கயனேந்திரா பறித்து விட்டார் என்று தந்தை மீது பாரஸ் ஆத்திரம் கொண்டுள்ளார்.
நான் மன்னரானால், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். எனவே என்னிடம் ஆட்சியை ஒப்படையுங்கள் என்று தந்தையிடம் கெஞ்சினார். இதற்கு சம்மதிக்காத மன்னர், நிர்வாகத்தை இடைக்கால அரசிடம் ஒப்படைத்தார். அது தான் இப்போது மன்னராட்சியை ஒழிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டது என்று அவர் நினைக்கிறார்.
அத்துடன் இடைக்கால பிரதமர் கொய்ராலா கூறிய யோசனையையும் அவர் ஏற்க மறுத்து விட்டார். பாரஸின் 6 வயது மகன் இருதஜேந்திராவை மன்னராக்கி விடுங்கள். மன்னராட்சி தப்பித்து விடும் என்பது தான் கொய்ராலா கொடுத்த யோசனையாகும். இதையும் கஜனேந்திரா ஏற்றுக்கொள்ளவில்லை.
அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கயனேந்திரா அடிபணிந்து சென்றதும் பாரஸுக்கு பிடிக்கவில்லை. அதோடு அரண்மனையை விட்டு வெளியேறியதும் அவருக்கு பிடிக்கவில்லை. இப்போது குடியேறி இருக்கும் நாகார்ஜுனா கோடைக்கால அரண்மனை வசதி குறைவானதாக அவர் கருதுகிறார். எங்கள் வசதிக்கு இதை விட வசதியான மாளிகையில் எம்மால் தாங்கமுடியும் என்று பாரஸ் தன் நண்பர்களிடம் கூறினார்.
இந்நிலையில், கயனேந்திராவின் மகள் பிரேரானா, மருமகன் ராஜ் பகதூர் சிங் ஆகியோரும் நேபாளத்தில் தங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என நினைக்கிறார்கள். இதனால், அவர்களும் சிங்கப்பூரில் குடியேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating